தேவனுக்கே மகிமையுண்டாவதாக

2 கொரிந்தியர் 5: 2, 3

ஏனெனில், இந்தக் கூடாரத்திலே நாம் தவித்து, நம்முடைய பரம வாசஸ்தலத்தைத் தரித்துக்கொள்ள மிகவும் வாஞ்சையுள்ளவர்களாயிருக்கிறோம்;

தரித்துக்கொண்டவர்களானால், நிர்வாணிகளாய்க் காணப்படமாட்டோம்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.  அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் மனதாழ்மையை அணிந்து கொள்வோமானால் தேவனுடைய கூடாரமாயிருப்போம்


கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபை தினந்தோறும் பாிசுத்த நாள் ஆராதனை செய்வதை குறித்து தியானித்தோம். 

மேலும் இந்த நாளில் நாம் தியானிப்பது என்னவென்றால் லேவியராகமம் 23: 22-25

உங்கள் தேசத்தின் வெள்ளாண்மையை நீங்கள் அறுக்கையில், வயலின் ஓரத்தில் இருக்கிறதை முற்றிலும் அறுக்காமலும், சிந்திக்கிடக்கிற கதிர்களைப் பொறுக்காமலும், எளியவனுக்கும் பரதேசிக்கும் அவைகளை விட்டுவிடவேண்டும்; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர் என்று சொல் என்றார்.

பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:

நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: உங்களுக்கு ஏழாம் மாதம் முதலாந்தேதி எக்காளச் சத்தத்தால் ஞாபகக்குறியாகக் கொண்டாடுகிற பண்டிகை என்கிற சபை கூடும் பரிசுத்த ஓய்வுநாளாயிருப்பதாக.

அதிலே சாதாரணமான யாதொரு வேலையும் செய்யாமல், கர்த்தருக்குத் தகனபலி செலுத்தவேண்டும் என்று சொல் என்றார்.

இந்த வசனங்களை நாம் தியானிக்கும் போது தேசத்தின் வெள்ளாண்மையை அறுக்கையில், வயலின் ஓரத்தில் இருக்கிறதை முற்றிலும் அறுக்காமலும், சிந்திக்கிடக்கிற கதிர்களை பொறுக்காமலும், எளியவனுக்கும் பரதேசிக்கும் அவைகளை விட்டு விட வேண்டும்; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர் என்று சொல்வது  என்னவென்றால், வயலின் ஓரத்தில் இருக்கிறதை முழுமையாக அறுக்கக்கூடாது என்பது, தேவனுடைய சபையில்  எல்லா ஆத்துமாவும் ஒன்றுபோல் ஆத்துமாவின் பலன் பெற்றுக்கொள்ளாது என்பதும், மற்றும் மனம் சிதறி கிடக்கிற ஆத்துமாவை தேவன் சேர்த்துக் கொள்வதில்லை என்பதும், அவர்கள் புதியதாக வருகிற எளியவர்களுக்கும், பரதேசிகளுக்கும் பிரயோஜனமாக்க வேண்டும் என்பது தான் தேவனுடைய நோக்கமாயிருக்கிறது. 

கர்த்தர் மோசேயை நோக்கி சொல்வது என்னவென்றால், இஸ்ரவேல் புத்திரர் ஏழாம் மாதம்  முதலாம் தேதி எக்காள சத்தத்தால் ஞாபகக்குறியாகக் கொண்டாடுகிற  பண்டிகை என்கிற சபைகூடும் பரிசுத்த ஓய்வு நாளாயிருப்பதாக.  இவை நம் உள்ளம் தேவனுடைய வசனத்தினால் பூரணப்பட்டு, ஆத்துமா இரட்சிப்படைகிற நாள்.  அந்த நாள் எப்போதும் நமக்கு பண்டிகையின் நாள். அந்த நாள் கிறிஸ்து, எப்போதும் நம் உள்ளம் கர்த்தருக்காக தகனிக்க வேண்டும்.

அல்லாமலும், நாம் சபைகூடும் நாளில் நம்முடைய ஆத்துமாக்களை தாழ்மைப்படுத்தி கர்த்தருக்கு  தகனபலி செலுத்த வேண்டும். அவ்விதம் தாழ்மைப்படுத்தாத எந்த ஆத்துமாவும் தன் ஜனத்தில் இராதபடி அறுப்புண்டுப் போவான்.  அந்த ஆத்துமாவை  ஜனத்தில் இராதபடி அழிப்பேன் என்று சொல்கிறார்.  அதனால் கர்த்தர் சொல்கிறார் 

யாக்கோபு 4: 10

கர்த்தருக்கு முன்பாகத் தாழ்மைப்படுங்கள், அப்பொழுது அவர் உங்களை உயர்த்துவார். நாம் நம்முடைய ஆத்துமாவை தாழ்மைபடுத்தினால் கர்த்தர் நம்மை உயரத்துவார்.  

அல்லாமலும் யாக்கோபு 4: 6,7

அவர் அதிகமான கிருபையை அளிக்கிறாரே. ஆதலால் தேவன் பெருமையுள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறாரென்று சொல்லியிருக்கிறது.

ஆகையால், தேவனுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள், அப்பொழுது அவன் உங்களைவிட்டு ஓடிப்போவான்.

நம்முடைய ஆத்துமாவை தாழ்த்தி ஒப்புககொடுப்போமானால்  கர்த்தர் நம்மை உயர்த்துகிறவராயிருக்கிறார்.  இதன் காரணமோவெனில் நம் உள்ளத்தில் உயர்ந்த எண்ணங்களாகிய பெருமை வருகிற உள்ளமானது பலவானுடைய ஆசனமாயிருக்கிறது. அவற்றைக்குறித்து  

லூக்கா 1:52  

பலவான்களை ஆசனங்களிலிருந்து தள்ளி, தாழ்மையானவர்களை உயர்த்தினார். 

இதன் பொருள் என்னவெனில் நம்முடைய ஆத்துமாவை கர்த்தருக்கு முன்பாக தகனமாக ஒப்புக்கொடுக்கும் போது நம்முடைய உள்ளத்திலிருந்து பலவான்களை  ஆசனங்களிலிருந்து தள்ளி  தாழ்மையனவர்களை உயர்த்தினார்.  

பிரியமானவர்களே நம்  எல்லோருக்கும் தாழ்மையான உள்ளம் உண்டாயிருக்க வேண்டும். என்னவென்றால் 

1 சாமுவேல் 2: 6-8

கர்த்தர் கொல்லுகிறவரும் உயிர்ப்பிக்கிறவருமாயிருக்கிறார்; அவரே பாதாளத்தில் இறங்கவும் அதிலிருந்து ஏறவும்பண்ணுகிறவர்.

கர்த்தர் தரித்திரம் அடையச்செய்கிறவரும், ஐசுவரியம் அடையப்பண்ணுகிறவருமாயிருக்கிறார்; அவர் தாழ்த்துகிறவரும், உயர்த்துகிறவருமானவர்.

அவர் சிறியவனைப் புழுதியிலிருந்து எடுத்து, எளியவனைக் குப்பையிலிருந்து உயர்த்துகிறார்; அவர்களைப் பிரபுக்களோடே உட்காரவும், மகிமையுள்ள சிங்காசனத்தைச் சுதந்தரிக்கவும் பண்ணுகிறார்; பூமியின் அஸ்திபாரங்கள் கர்த்தருடையவைகள்; அவரே அவைகளின்மேல் பூச்சக்கரத்தை வைத்தார்.

அன்னாள் தன்னுடைய வாழ்க்கையில் ஆத்துமாவில்  இரட்சிப்பை  சுதந்தரித்தபின் அவள் கர்த்தருக்குள் களிகூர்ந்து ஜெபிக்கிறதைப் பார்க்கிறோம்.  கர்த்தர் தாழ்மையானவர்களை நேசிக்கிறவராயிருக்கிறார்.   மேலும் தாழ்மையானவர்களுடைய ஜெபத்தை கேட்டு தேவன் உடனடியாக பதில் தருகிறவராயிருக்கிறார்.  தானியேல் தன்னை தாழ்த்தி சிறுமைப்படுத்தினபோது கர்த்தர் முதல் நாளிலே விண்ணப்பத்தை கேட்டு பதிலளிக்கிறதைப் பார்க்கிறோம். நாம் தாழ்மைப்படுத்திக்கொண்டு  கர்த்தரை ஆராதிக்கும் போது எப்படி ஆசரிக்க வேண்டுமென்றால் 

லேவியராகமம் 23: 40-44

முதல் நாளிலே அலங்காரமான விருட்சங்களின் கனிகளையும் பேரீச்சின் ஓலைகளையும் தழைத்திருக்கிற விருட்சங்களின் கிளைகளையும் ஆற்றலரிகளையும் கொண்டுவந்து, உங்கள் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் ஏழுநாளும் மகிழ்ச்சியாயிருங்கள்.

வருஷந்தோறும் ஏழுநாள் கர்த்தருக்கு இந்தப் பண்டிகையை ஆசரிக்கக்கடவீர்கள்; இது உங்கள் தலைமுறைதோறும் செல்லவேண்டிய நித்திய கட்டளை; ஏழாம் மாதத்தில் அதை ஆசரிக்கவேண்டும்.

நான் இஸ்ரவேல் புத்திரரை எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணினபோது, அவர்களைக் கூடாரங்களில் குடியிருக்கப்பண்ணினதை உங்கள் சந்ததியார் அறியும்படிக்கு,

ஏழுநாள் கூடாரங்களில் குடியிருக்கக்கடவீர்கள்; இஸ்ரவேலில் பிறந்தவர்கள் எல்லாரும் கூடாரங்களில் வாசம்பண்ணவேண்டும்; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர் என்று சொல் என்றார்.

அப்படியே மோசே கர்த்தருடைய பண்டிகைகளை இஸ்ரவேல் புத்திரருக்குத் தெரிவித்தான்.

மேற்க்கூறிய வசனங்களை தியானிக்கையில்   நம் ஆத்துமா நற்கிரியைகள் நிறைந்ததாயும், தீர்க்கதரிசனங்களாலும்,  தேவனுடைய வசனங்களாலும் நிறைந்ததாயும் கர்த்தரின் சமூகத்தில் வந்து ஏழு நாட்கள் தொடர்ந்து கர்த்தருக்கு ஆராதனை செய்ய வேண்டும்.  மேலும் எகிப்திலிருந்து மீட்கப்பட்டவர்கள் ஆனந்த களிப்புடன் பாடி சீயோனுக்கு திரும்புவா்கள்.  அந்த சீயோன் தான் கிறிஸ்துவாகிய கூடாரம். அந்த கூடாரத்தில் தேவன் நம்மைக் குடியிருக்கப்பண்ணுவார். 

அவற்றைக்குறித்து தான் ஏசாயா 65: 21-24

வீடுகளைக் கட்டி, அவைகளில் குடியிருப்பார்கள், திராட்சத்தோட்டங்களை நாட்டி, அவைகளின் கனியைப் புசிப்பார்கள்.

அவர்கள் கட்டுகிறதும், வேறொருவர் குடியிருக்கிறதும், அவர்கள் நாட்டுகிறதும், வேறொருவர் கனி புசிக்கிறதுமாயிருப்பதில்லை; ஏனெனில் விருட்சத்தின் நாட்களைப்போல என் ஜனத்தின் நாட்களிருக்கும்; நான் தெரிந்துகொண்டவர்கள் தங்கள் கைகளின் கிரியைகளை நெடுநாளாய் அநுபவிப்பார்கள்.

அவர்கள் விருதாவாக உழைப்பதில்லை; அவர்கள் துன்பமுண்டாகப் பிள்ளைகளைப் பெறுவதுமில்லை; அவர்களும், அவர்களோடேகூட அவர்கள் சந்தானமும் கர்த்தராலே ஆசீர்வதிக்கப்பட்ட சந்ததியாயிருப்பார்கள்.

அப்பொழுது அவர்கள் கூப்பிடுகிறதற்குமுன்னே நான் மறுஉத்தரவு கொடுப்பேன்; அவர்கள் பேசும்போதே நான் கேட்பேன்.

இந்த வசனங்களை நாம் தியானிக்கையில் தேவனுடைய கூடாரமாகிய அவருடைய வீட்டை நம் உள்ளத்தில் ஸ்தாபித்து பின் அவருடைய ஆத்மீக சந்ததிகளை நம்முடைய கிறிஸ்து பெற்றெடுப்பதும் அதோடு கூட சந்தானங்களும் ஆசீர்வதிக்கப்பட்ட சந்ததியாயிருப்பார்கள். 

அப்படியிருப்போமானால் நாம் கூப்பிடுமுன்னே நமக்கு மறுஉத்தரவு தருவார் நாம் பேசும் போதே கர்த்தர் கேட்பார். இவ்விதமான ஆசீர்வாதங்களுகாக நம்மை தாழ்த்தி ஒப்புக்கொடுப்போம்.

கர்த்தர் ஆசீர்வதிப்பார். கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.