தேவனுக்கே மகிமையுண்டாவதாக

2 கொரிந்தியர் 9: 6

பின்னும் நான் சொல்லுகிறதென்னவெனில், சிறுக விதைக்கிறவன் சிறுக அறுப்பான், பெருக விதைக்கிறவன் பெருக அறுப்பான்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.  அல்லேலுயா.

மணவாட்டி சபை ஆத்தும பலனாகிய நீதியின் விளைச்சலை சேகரிக்கும் விதம்

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபை ஒருபோதும் நியாயப்பிரமாணம் மீறக்கூடாது என்பதும், நியாயபிரமாணம் மீறினால் அது பாவம் என்பதும், நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றும்படியாகவே கர்த்தராகிய இயேசு கிறிஸ்து வந்தாரென்பதும், நாம் தியானித்தோம்.  

மேலும் லேவியராகமம் 25:1-9   

கர்த்தர் சீனாய்மலையில் மோசேயை நோக்கி:

நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: நான் உங்களுக்குக் கொடுக்கும் தேசத்திலே நீங்கள் போய்ச் சேர்ந்திருக்கும்போது, தேசம் கர்த்தருக்கென்று ஓய்வு கொண்டாடவேண்டும்.

ஆறு வருஷம் உன் வயலை விதைத்து, உன் திராட்சத்தோட்டத்தைக் கிளைகழித்து, அதின் பலனைச் சேர்ப்பாயாக.

ஏழாம் வருஷத்திலோ, கர்த்தருக்கென்று ஓய்ந்திருக்கும் ஓய்வு தேசத்திற்கு இருக்கவேண்டும்; அதில் உன் வயலை விதைக்காமலும், உன் திராட்சத்தோட்டத்தைக் கிளைகழிக்காமலும்,

தானாய் விளைந்து பயிரானதை அறுக்காமலும்,கிளைகழிக்காதே விட்ட திராட்சச்செடியின் பழங்களைச் சேர்க்காமலும் இருப்பாயாக; தேசத்துக்கு அது ஓய்வுவருஷமாயிருக்கக்கடவது.

தேசத்தின் ஓய்விலே பயிராகிறது உங்களுக்கு ஆகாரமாயிருப்பதாக; உன் வேலைக்காரனுக்கும், உன் வேலைக்காரிக்கும், உன் கூலிக்காரனுக்கும், உன்னிடத்தில் தங்குகிற அந்நியனுக்கும்,

உன் நாட்டு மிருகத்துக்கும், உன் தேசத்தில் இருக்கிற காட்டு மிருகத்துக்கும் அதில் விளைந்திருப்பதெல்லாம் ஆகாரமாயிருப்பதாக.

அன்றியும், ஏழு ஓய்வு வருஷங்களுள்ள ஏழு ஏழு வருஷங்களை எண்ணுவாயாக; அந்த ஏழு ஓய்வு வருஷங்களும் நாற்பத்தொன்பது வருஷமாகும்.

அப்பொழுதும் ஏழாம் மாதம் பத்தாந்தேதியில் எக்காளச்சத்தம் தொனிக்கும்படி செய்யவேண்டும்; பாவநிவாரணநாளில் உங்கள் தேசமெங்கும் எக்காளச்சத்தம் தொனிக்கும்படி செய்யவேண்டும்.

இந்த வசனங்களை நாம் தியானிக்கையில் கர்த்தர் மோசேயிடம் சொல்ல சொன்னது என்னவென்றால்,  கர்த்தர் நமக்கு தந்த தேசமாகிய கானான் தேசத்தில் நாம் வந்து சேரும் போது என்று எழுதப்பட்டிருப்பது, நாம் கர்த்தராகிய இயேசுவை சொந்த இரட்சகராக  ஏற்றுக் கொண்டப்பிறகு, நம்முடைய உள்ளத்தில் உலக கவலைகளை விட்டு நாம் கர்த்தருக்கென்று   ஓய்வு கொண்டாட வேண்டும் என்று எழுதப்பட்டிருப்பது என்னவென்றால், அவரை நாம் மகிமைப்படுத்தி ஆர்ப்பரிக்க வேண்டும். 

அல்லாமலும் ஆறு வருஷம் வயலை விதைக்க வேண்டும்.  வயல் என்பதும், திராட்ச தோட்டம் என்பதும்  தேவனுடைய சபையை காட்டுகிறது.   ஆனால் ஒரு வயலில் விதையை விதைப்பது ஆறு வருஷம்,அதில் கிழை கழித்து அதின் பலனை சேர்க்க வேண்டும் என்று எழுதப்பட்டிருக்கிறது.  ஏழாம் வருஷத்தில்  கர்த்தருக்கென்று ஓய்ந்திருக்கும் ஓய்வு வருஷம்.   அந்த ஏழாம் வருஷத்தில், விதை விதைக்கக்கூடாது,  திராட்ச தோட்டத்தை கிளை கழிக்கக்கூடாது என்றும், தானாய் விளைந்து பயிராகிறதை அறுக்காமலும், கிளை கழிக்காமல் விட்ட திராட்ச செடியின் பழங்களை சேர்க்காமலும் இருக்க வேண்டும்.  மற்றும் அந்த வருஷம் ஓய்வு வருஷம்.  இவையெல்லாம் சபையையும், அங்குள்ள ஆத்துமாவின் பலன்களையும் குறித்து தேவன் திருஷ்டாந்தப்படுத்துகிறார்.  

மேலும் சபையின் ஊழியர் ஏழாம் வருஷத்தில்  ஓய்ந்து இருக்கும் போது அவருக்கு அங்கு பயிராகிறது ஆகாரமாயிருக்க வேண்டும் என்று எழதப்பட்டிருக்கிறது.  அல்லாமலும் அங்கு தங்குகிற அனைவருமாகிய வேலைக்காரன், வேலைக்காரி, கூலிக்காரன், தங்குகிற அந்நியன்,  மீண்டெடுக்கப்படாதவன்,  மீண்டெடுக்கப்பட்டவர்கள், யாவருக்கும் அங்கு விளைகிறது ஆகாரமாயிருக்கும் என்று கர்த்தர் சொல்கிறார்.  

எப்படியெனில் விளைகிற விளைச்சல் என்பது நீதியின் விளைச்சலை தேவன் திருஷ்டாந்தப்படுத்துகிறார். இவ்விதமாக நீதியின் விளைச்சலை நாம் வர்த்திக்கசெய்து நம்முடைய ஆத்துமாவின் பலனாகிய கிருபையை பெருக செய்யும்படியாக நம்மை தாழ்த்தி ஒப்புக்கொடுப்போம்.

 கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.