தேவனுக்கே மகிமையுண்டாவதாக

2 தீமோத்தேயு 2: 6

பிரயாசப்பட்டுப் பயிரிடுகிறவன் பலனில் முந்திப் பங்கடையவேண்டும்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.  அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் நம்முடைய ஆத்துமாவை பரிசுத்தத்தோடு புதுப்பித்துக் கொள்ளவேண்டும்

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபை கர்த்தருடைய வசனத்தால் நீதியின் விளைச்சலை நமக்குள் விளைய செய்து ஏற்ற காலங்களில் கர்த்தரின் சித்தத்தின் பிரகாரம் நாம் நம்முடைய ஆத்ம பலனாகிய கிருபையை நாம் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று தியானித்தோம்.

 அல்லாமலும் நாம் அடுத்தபடியாக தியானிக்கபோகிற காரியம் என்னவென்றால் 

லேவியராகமம் 25: 9 -13

அப்பொழுதும் ஏழாம் மாதம் பத்தாந்தேதியில் எக்காளச்சத்தம் தொனிக்கும்படி செய்யவேண்டும்; பாவநிவாரணநாளில் உங்கள் தேசமெங்கும் எக்காளச்சத்தம் தொனிக்கும்படி செய்யவேண்டும்.

ஐம்பதாம் வருஷத்தைப் பரிசுத்தமாக்கி, தேசமெங்கும் அதின் குடிகளுக்கெல்லாம் விடுதலை கூறக்கடவீர்கள்; அது உங்களுக்கு யூபிலி வருஷம்; அதிலே உங்களில் ஒவ்வொருவனும் தன் தன் காணியாட்சிக்கும் தன் தன் குடும்பத்துக்கும் திரும்பிப் போகக்கடவன்.

அந்த ஐம்பதாம் வருஷம் உங்களுக்கு யூபிலி வருஷமாயிருப்பதாக; அதிலே விதைக்காமலும், தானாய் விளைந்து பயிரானதை அறுக்காமலும், கிளைகழிக்காமல் விடப்பட்ட திராட்சச்செடியின் பழங்களைச் சேர்க்காமலும் இருப்பீர்களாக.

அது யூபிலி வருஷம்; அது உங்களுக்குப் பரிசுத்தமாயிருக்கவேண்டும்; அந்த வருஷத்தில் வயல்வெளியில் விளைந்தவைகளை நீங்கள் புசிக்கவேண்டும்.

அந்த யூபிலி வருஷத்தில் உங்களில் அவனவன் தன் தன் காணியாட்சிக்குத் திரும்பிப்போகக்கடவன்.

மேறக்கூறிய வசனங்கள் பிரகாரம் நாம் ஆத்மாவின் பலன்களை நாம் ஏழு வருஷங்களுள்ள ஏழு ஏழு வருஷங்கள் எண்ணி தீர்ந்து நாற்பத்தொன்பது வருஷமாம். நாம் ஒவ்வொருவரும் நம்முடைய மீண்டெடுப்பின் வருஷத்திலிருந்து  நாற்பதொன்பது  வருஷத்தின் முடிவில்  மீண்டும் ஏழாம் மாதம் பத்தாம் தியதியிலே எக்காள சத்தம் தொனிக்க  வேண்டும்.  எக்காளம் என்பது தேவ சத்தமாகிய வசனத்தின் தொனி. நம்முடைய உள்ளத்தில் தொனிக்க வேண்டும்.  

அப்போது ஐம்பதாம் வருஷம் பரிசுத்த மாகி தேசத்தின் எல்லா ஜனங்களுக்கும் விடுதலை கூறுகிறவருஷமாக்கி கர்த்தர் அந்த வருஷத்தை நமக்கு யூபிலி வருஷமாக்கி ஆசீர்வதிக்கிறார்.  ஐம்பதாம் வருஷத்தில் தங்களுடைய காணியாட்சிக்கும், தங்கள் குடும்பத்துக்கும் திரும்ப கடவர்கள் என்கிறார். என்னவென்றால் தங்கள் தேசம் என்றும் தங்கள் குடும்பங்கள் என்று சொல்வது பரலோக ராஜ்யமாகிய கிறிஸ்து.  நாம் ஒவ்வொருவரும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை சொந்தமாக்கி கொள்ள வேண்டும். 

மேலும் யூபிலி வருஷத்தில் நாம் விதைக்காததையும் தானாய் விளைந்து பயிரானதை அறுக்காமலும் கிளை கழிக்காமல் விடப்பட்ட திராட்ச செடியின் பழங்களை சேர்க்காமலும் இருக்க வேண்டும்.  இதன் பொருள்  என்னவென்றால் யூபிலி வருஷம் என்பது பெந்தேகொஸ்தே. அதனால் பிரியமானவர்களே அந்த வருஷம் மிகவும்  பரிசுத்தமாயிருக்கும்.  நாம் பெற்ற கிருபைகள் இழந்து போகாமல் காத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே நம்முடைய உள்ளம் அழுக்காகாதபடி இருக்கும்படியாகவே நாம் விதைக்காததையும் தானாய் பயிரானதையும் நாம் அறுக்காமல் ஒதுக்கி விட்டதையும் நாம் புசிக்கக்கூடாது.  

என்னவென்றால் உண்மையுள்ள சத்தியத்தினால் நாம் நிரப்பப்பட்டு பெந்தேகொஸ்தேயின் அனுபவத்தோடு இருக்க வேண்டும் என்பதற்காகவே தேவன் தேவ வசனம் மூலம் திருஷ்டாந்தப்படுத்துகிறார். இவ்விதமாக பிரியமானவர்களே நாம் மேற்க்கூறிய  வசனங்களுக்கு நம்மை ஒப்புக்கொடுத்து பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை பரிசுத்தமாக புதுப்பித்துக்கொள்வோம். ஒப்புக்கொடுப்போம்.

கர்த்தர் ஆசீர்வதிப்பார். கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.