தேவனுக்கே மகிமையுண்டாவதாக

நீதிமொழிகள் 3: 26

கர்த்தர் உன் நம்பிக்கையாயிருந்து, உன் கால் சிக்கிக்கொள்ளாதபடி காப்பார்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.  அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் கர்த்தருக்கு கீழ்படியாமல் இருந்தால் வரும் தண்டனைகள்

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நம்முடைய உள்ளத்தில் எப்படி வாசஸ்தலம் அமைக்கிறார் என்றும், அந்த வாசஸ்தலத்தில் கர்த்தரின் செயல்பாடுகளை குறித்தும் தியானித்தோம். 

அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

லேவியராகமம் 26:13-16

நீங்கள் எகிப்தியருக்கு அடிமைகளாயிராதபடிக்கு, நான் அவர்கள் தேசத்திலிருந்து உங்களைப் புறப்படப்பண்ணி, உங்கள் நுகத்தடிகளை முறித்து, உங்களை நிமிர்ந்து நடக்கப்பண்ணின உங்கள் தேவனாகிய கர்த்தர்.

நீங்கள் எனக்குச் செவிகொடாமலும், இந்தக் கற்பனைகள் எல்லாவற்றின்படி செய்யாமலும்,

என் கட்டளைகளை வெறுத்து, உங்கள் ஆத்துமா என் நியாயங்களை அரோசித்து, என் கற்பனைகள் எல்லாவற்றின்படியும் செய்யாதபடிக்கு, என் உடன்படிக்கையை நீங்கள் மீறிப்போடுவீர்களாகில்:

நான் உங்களுக்குச் செய்வது என்னவென்றால், கண்களைப் பூத்துப்போகப்பண்ணுகிறதற்கும், இருதயத்தைத் துயரப்படுத்துகிறதற்கும், திகிலையும் ஈளையையும் காய்ச்சலையும் உங்களுக்கு வரப்பண்ணுவேன்; நீங்கள் விதைக்கும் விதை விருதாவாயிருக்கும்; உங்கள் சத்துருக்கள் அதின் பலனைத் தின்பார்கள்.

மேற்கூறிய வசனங்கள் தியானிக்கும் போது இஸ்ரவேலை கர்த்தர் எகிப்தின் அடிமைகளாயிராதபடி அவர்கள் தேசத்திலிருந்து புறப்படபண்ணி  அவர்கள் நுகத்தடிகளை முறித்து நிமிர்ந்து நடக்க பண்ணினார்  என்பதனை நாம் அறிந்திருக்கிறோமெனில், நம்மையும், எகிப்தாகிய பாவம், சாபம் அக்கிரமம் செய்த காலத்தில் நாம் நிமிர்ந்து நடக்க முடியாத நிலைமையில், அக்கிரமம் பெருகி, துன்மார்க்கமாய் நடந்த காலத்தில், நம் உள்ளமானது விசுவாசத்தினால் நிமிர்ந்து நடக்கபண்ணும்படியாக தம்முடைய ஒரே பேறான குமாரனை நமக்காக தந்து, அவருடைய ஜீவனால் நம்மை மீட்டு, அவருடைய சொந்த பிள்ளைகளாக்கி, அப்பா, பிதாவே என்று கூப்பிடதக்கதான புத்திர சுவிகாரத்தின் ஆவியை நமக்கு தந்து, நம்மை அவருடைய ஆவியினால் அனுதினம் நாம் நடக்கும்படியாக நமக்கு குமாரனுடைய ஆவியை நமக்குள் அனுப்பி நம்மை நிமிர்ந்து நடக்க பண்ணினவர் நம்முடைய தேவனாகிய கர்த்தர். 

அதற்கு விளக்கமாக நம்முடைய கர்த்தர் செய்தது என்னவென்றால் 

லூக்கா 13:10-17

ஒரு ஓய்வுநாளில் அவர் ஜெபஆலயத்தில் போதகம்பண்ணிக்கொண்டிருந்தார்.

அப்பொழுது பதினெட்டுவருஷமாய்ப் பலவீனப்படுத்தும் ஆவியைக்கொண்ட ஒரு ஸ்திரீ அங்கேயிருந்தாள். அவள் எவ்வளவும் நிமிரக்கூடாத கூனியாயிருந்தாள்.

இயேசு அவளைக் கண்டு, தம்மிடத்தில் அழைத்து: ஸ்திரீயே, உன் பலவீனத்தினின்று விடுதலையாக்கப்பட்டாய் என்று சொல்லி,

அவள்மேல் தமது கைகளை வைத்தார்; உடனே அவள் நிமிர்ந்து, தேவனை மகிமைப்படுத்தினாள்.

இயேசு ஓய்வுநாளிலே சொஸ்தமாக்கினபடியால், ஜெபஆலயத்தலைவன் கோபமடைந்து, ஜனங்களை நோக்கி: வேலைசெய்கிறதற்கு ஆறுநாள் உண்டே, அந்த நாட்களிலே நீங்கள் வந்து சொஸ்தமாக்கிக்கொள்ளுங்கள், ஓய்வுநாளிலே அப்படிச் செய்யலாகாது என்றான்.

கர்த்தர் அவனுக்குப் பிரதியுத்தரமாக: மாயக்காரனே, உங்களில் எவனும் ஓய்வுநாளில் தன் எருதையாவது தன் கழுதையையாவது தொழுவத்திலிருந்து அவிழ்த்துக்கொண்டுபோய், அதற்குத் தண்ணீர் காட்டுகிறதில்லையா?

இதோ, சாத்தான் பதினெட்டு வருஷமாய்க் கட்டியிருந்த ஆபிரகாமின் குமாரத்தியாகிய இவளை ஓய்வுநாளில் இந்தக்கட்டிலிருந்து அவிழ்த்துவிடவேண்டியதில்லையா என்றார்.

அவர் அப்படிச் சொன்னபோது, அவரை விரோதித்திருந்த அனைவரும் வெட்கப்பட்டார்கள். ஜனங்களெல்லாரும் அவரால் செய்யப்பட்ட சகல மகிமையான செய்கைகளைக்குறித்தும் சந்தோஷப்பட்டார்கள்.

இதன் கருத்துகளை நாம் தியானிக்கும் போது ஓய்வு நாள் என்பது இயேசு கிறிஸ்துவின் உயிர்தெழுதலுக்கு பின்பு நம்முடைய மீட்கப்பட்ட உள்ளம், அந்த உள்ளத்தில் அவர் எப்போதும் வாசம்பண்ணும்படியாக வாசஸ்தலம் அமைக்கிறார், அதென்னவெனில் அவர் எப்போதும் எந்த வேளையிலும், நம்முடைய ஆத்துமாவுக்கு வேண்டிய ஆகாரத்தை தருகிறவர் என்பதனை இந்த வசனங்கள் நமக்கு விளக்கி காட்டுகிறது.  

மேலும் ஜெப  ஆலயத்துக்குள்  இருந்த கூனியான ஸ்திரீயை கர்த்தர் விடுதலையாக்குகிறார்.  என்னவென்றால் அவள் சாத்தானால் பதினெட்டு வருஷம் கட்டபட்டிருந்தாள்.  எந்த மனுஷனாலும் அவளை கட்டிலிருந்து விடுதலையாக்கமுடியவில்லை, ஆனால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து, அவளை தம்மிடத்தில் அழைத்து ஸ்திரீயே, உன் பலவீனத்தினின்று விடுதலையாக்கப்பட்டாய் என்று சொல்லி, தம்முடைய கைகளை அவள் மேல் வைத்தார், உடனே அவள், நிமிர்ந்து தேவனை மகிமைபடுத்துகிறதை பார்க்கிறோம். 

அதே போல் நம்மையும் சாத்தானுடைய கட்டிலிருந்து அவர் விடுதலை பண்ணும் படியாக நம்முடைய ஆத்துமாவை அவருடைய இரத்தத்தினால் மீட்டார்.  மீட்கப்பட்ட நாமோ அவருடைய கற்பனைகள், கட்டளைகள் பிரகாரம், நடக்க வேண்டும். அவ்விதம் நடக்காமல், அவருடைய உடன்படிக்கையை மீறி நடப்போமானால்  லேவியராகமம் 26:16-ன்படி நான் உங்களுக்குச் செய்வது என்னவென்றால், கண்களைப் பூத்துப்போகப்பண்ணுகிறதற்கும், இருதயத்தைத் துயரப்படுத்துகிறதற்கும், திகிலையும் ஈளையையும் காய்ச்சலையும் உங்களுக்கு வரப்பண்ணுவேன்; நீங்கள் விதைக்கும் விதை விருதாவாயிருக்கும்; உங்கள் சத்துருக்கள் அதின் பலனைத் தின்பார்கள்.

மேலும் கர்த்தர் லேவயராகமம் 26:17,18 -ன் படி நான் உங்களுக்கு விரோதமாக என் முகத்தைத் திருப்புவேன்; உங்கள் சத்துருக்களுக்கு முன்பாக முறிய அடிக்கப்படுவீர்கள்; உங்கள் பகைஞர் உங்களை ஆளுவார்கள்; துரத்துவார் இல்லாதிருந்தும் ஓடுவீர்கள்.

இவ்விதமாய் நான் உங்களுக்குச் செய்தும், இன்னும் நீங்கள் எனக்குச் செவிகொடாதிருந்தால், உங்கள் பாவங்களினிமித்தம் பின்னும் ஏழத்தனையாக உங்களைத் தண்டித்து,

ஏழத்தனையாய் நம்மை தண்டித்து லேவியராகமம் 26:19-ன் படி உங்கள் வல்லமையின் பெருமையை முறித்து, உங்கள் வானத்தை இரும்பைப்போலவும், உங்கள் பூமியை வெண்கலத்தைப்போலவும் ஆக்குவேன் என்று சொல்கிறார். அப்போது லேவியராகமம் 26:20 -ன்படி உங்கள் பெலன் விருதாவிலே செலவழியும்; உங்கள் தேசம் தன் பலனையும், தேசத்தின் மரங்கள் தங்கள் கனிகளையும் கொடுக்கமாட்டாது.

நம்முடைய பெலன் இழந்து கர்த்தருக்காய் கனிக்கொடுக்காதபடி ஆகிவிடுவோம்.  அப்போது கர்த்தருக்கு எதிர்த்து நடப்போமானால், நம்முடைய பாவங்களுக்குத்தக்கதாக ஏழத்தனையான வாதையை நம்மேல் வரபண்ணி 

லேவியராகமம் 26:22-25-ல்

உங்களுக்குள்ளே வெளியின் துஷ்டமிருகங்களை வரவிடுவேன்; அவைகள் உங்களைப் பிள்ளைகளற்றவர்களாக்கி, உங்கள் மிருகஜீவன்களை அழித்து, உங்களைக் குறைந்துபோகப்பண்ணும், உங்கள் வழிகள் பாழாய்க்கிடக்கும்.

நான் செய்யும் தண்டனையினால் நீங்கள் குணப்படாமல், எனக்கு எதிர்த்து நடந்தால்,

நான் உங்களுக்கு எதிர்த்து நடந்து, உங்கள் பாவங்களினிமித்தம் ஏழத்தனையாக வாதித்து,

என் உடன்படிக்கையை மீறினதற்குப் பழிவாங்கும் பட்டயத்தை உங்கள்மேல் வரப்பண்ணி, நீங்கள் உங்கள் பட்டணங்களில் சேர்ந்தபின், கொள்ளைநோயை உங்கள் நடுவிலே அனுப்புவேன்; சத்துருவின் கையில் ஒப்புக்கொடுக்கப்படுவீர்கள்.

எழுதியிருக்கிற கர்த்தருடைய வார்த்தையின்படி சத்துருவின் கையில் கர்த்தரால் ஒப்புக்கொடுக்கபடுவோம்.  மேற்க்கூறிய வசனங்களின் பிரகாரம் சத்துருவின் கையில் ஒப்புக்கொடுக்காதபடி கர்த்தருடைய கட்டளைகள், கற்பனைகள் பிரகாரம் நடக்கும் படி ஒப்புக்கொடுப்போம்.  

மேலும் எந்த சூழ்நிலைகள் வந்தாலும் கர்த்தருடைய உடன்படிக்கை மீறாதபடி ஜாக்கிரதையாக நடக்க கற்றுக்கொண்டு ,   நாம் தியானித்த வசனங்கள் பிரகாரம் ஒப்புக்கோடுப்போம்.  

கர்த்தர் ஆசீர்வதிப்பார். கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.