தேவனுக்கே மகிமையுண்டாவதாக

யோசுவா 13: 33

லேவிகோத்திரத்திற்கு மோசே சுதந்தரம் கொடுக்கவில்லை, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் அவர்களுக்குச் சொல்லியிருக்கிறபடி, அவரே அவர்களுடைய சுதந்தரம்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.  அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் கிறிஸ்துவின் நித்திய சுதந்தரத்தில் பங்குக்கொள்ள வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் நம்மையும், நமக்குள்ள சகலத்தையும் கர்த்தர்த்தருக்கென்று பரிசுத்தம் என்று பொருத்தனையோடு ஒப்புக்கொடுத்து கர்த்தருக்கு ஆராதனை செலுத்தினால் அந்த ஆராதனையை கர்த்தர் பிரியமாய் ஏற்றுக்கொள்வார் என்று நாம் தியானித்தோம்.  

ஆனால் இந்த நாளில் நாம் தியானிக்க போகிற காரியங்கள் என்னவென்றால் 

எண்ணாகமம் 1:1- 4

இஸ்ரவேலர் எகிப்துதேசத்திலிருந்து புறப்பட்ட இரண்டாம் வருஷம் இரண்டாம் மாதம் முதல் தேதியில், கர்த்தர் சீனாய் வனாந்தரத்திலிருக்கிற ஆசரிப்புக் கூடாரத்திலே மோசேயை நோக்கி:

நீங்கள் இஸ்ரவேல் புத்திரரின் முழுச்சபையாயிருக்கிற அவர்கள் பிதாக்களுடைய வீட்டு வம்சங்களிலுள்ள புருஷர்களாகிய சகல தலைகளையும் பேர்பேராக எண்ணித் தொகையேற்றுங்கள்.

இஸ்ரவேலிலே இருபது வயதுள்ளவர்கள்முதல் யுத்தத்துக்குப் புறப்படத்தக்கவர்கள் எல்லாரையும் அவர்கள் சேனைகளின்படி நீயும் ஆரோனும் எண்ணிப் பார்ப்பீர்களாக.

ஒவ்வொரு கோத்திரத்துக்கு ஒவ்வொரு மனிதன் உங்களோடே இருப்பானாக; அவன் தன் பிதாக்களின் வம்சத்துக்குத் தலைவனாயிருக்கவேண்டும்.

இதன் கருத்துக்கள் இஸ்ரவேல் புத்திரர் எகிப்திலிருந்து புறப்பட்ட இரண்டாம் வருஷம் இரண்டாம் மாதம் முதல் தேதியிலே, கர்த்தர் சீனாய் வனாந்தரத்திலிருக்கிற ஆசரிப்புக் கூடாரத்திலே மோசையை நோக்கி; இஸ்ரவேல் புத்திரரின் முழு சபையாயிருக்கிற பிதாக்களுடைய வீட்டு வம்சங்களிலிருக்கிற புருஷர்களாகிய சகல தலைவர்களையும், பேர் பேராக தொகையிட்டு , இஸ்ரவேலிலே இருபது வயது முதல் யுத்தத்துக்கு புறப்படதக்கவர்கள் எல்லாரையும் நீயும் ஆரோனும் எண்ணுங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். ஆனால் எண்ணுவதற்கு ஒவ்வொரு கோத்திரத்திற்கு ஒருவன் உண்டாயிருக்க வேண்டும் என்றும், அவர்கள் யார்யாரோ அவர்கள் தன் பிதாக்களின் வம்சத்திற்கு தலைவனாயிருக்க வேண்டும் என்று கர்த்தர் கட்டளையிடுகிறதை பார்க்கிறோம்.  

எண்ணினவர்களின் பேர்களும் மற்றும் ஒவ்வொரு கோத்திரத்திற்கும் எண்ணபட்டவர்களின் எண்ணிக்கையும் குறிக்கப்படுகிறது.  என்னவெனில்  எண்ணாகமம் 1:46-ம் வசனம் ஆறுலட்சத்து மூவாயிரத்து ஐந்நூற்று ஐம்பது பேராயிருந்தார்கள்.  ஆனால் லேவியர் பிதாக்களின் கோத்திரங்களின் படி எண்ணபடவில்லை.  ஏனென்றால் லேவியரை கர்த்தர் பிரத்தியேக தம்முடைய வேலைக்கு என்று தெரிந்து வைத்திருந்தார்.  மேலும் லேவியரை கர்த்தர் அழைத்த வேலை என்னவென்றால் 

எண்ணாகமம் 1:50-54  

லேவியரைச் சாட்சியின் வாசஸ்தலத்திற்கும், அதினுடைய சகல பணிமுட்டுகளுக்கும், அதிலுள்ள சமஸ்த பொருள்களுக்கும் விசாரிப்புக்காரராக ஏற்படுத்து; அவர்கள் வாசஸ்தலத்தையும் அதின் சகல பணிமுட்டுகளையும் சுமப்பார்களாக; அதினிடத்தில் ஊழியம்செய்து, வாசஸ்தலத்தைச் சுற்றிலும் பாளயமிறங்கக்கடவர்கள்.

வாசஸ்தலம் புறப்படும்போது, லேவியர் அதை இறக்கிவைத்து, அது ஸ்தாபனம் பண்ணப்படும்போது, லேவியர் அதை எடுத்து நிறுத்தக்கடவர்கள்; அந்நியன் அதற்குச் சமீபத்தில் வந்தால் கொலைசெய்யப்படக்கடவன்.

இஸ்ரவேல் புத்திரர் தங்கள் தங்கள் பாளயத்தோடும், தங்கள் தங்கள் சேனையின் கொடியோடும் கூடாரம் போடக்கடவர்கள்.

இஸ்ரவேல் புத்திரராகிய சபையின்மேல் கடுங்கோபம் வராதபடிக்கு லேவியர் சாட்சியின் வாசஸ்தலத்தைச் சுற்றிலும் பாளயமிறங்கி, லேவியர் சாட்சியின் வாசஸ்தலத்தைக் காவல்காப்பார்களாக என்றார்.

கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடி எல்லாவற்றையும் இஸ்ரவேல் புத்திரர் செய்தார்கள்.

இதனை நாம் தியானிக்கும் போது சாட்சியின் வாசஸ்தலத்துக்கும், அதின் எல்லா பணிமுட்டுகளுக்கும்,  சமஸ்த எல்லா பொருட்களுக்கும் விசாரிப்புகாரராகவும், வாசஸ்தலத்தையும், அதின் சகல பணிமுட்டுகளை சுமப்பதற்கும்,  அதினிடத்தில் ஊழியஞ் செய்து , வாசஸ்தலத்தை சுற்றிலும் பாளயமிறங்க கடவர்கள் என்றார். இந்த கோத்திரத்தாருடைய உள்ளமானது தேவனுடைய வாசஸ்தலமாகவும், மணவாட்டியாகிய பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்பட்ட உள்ளமாகவும், கர்த்தரை கிறிஸ்துவின் ஆவியால் நிரப்பப்பட்டு ஆராதிக்கிறவர்களாகவும், கிறிஸ்துவின் வல்லமை பெற்றவர்களாகவும், கர்த்தருடைய வேலையை  உண்மையாக எடுத்து செய்கிறவர்களாகவும் இருப்பார்கள்.   

மேலும் வாசஸ்தலம் புறப்படும் போதும், அதனை இறக்கி வைத்து ஸ்தாபனம் பண்ணபடும் போதும் லேவியர் அதனை எடுத்து நிறுத்துவார்கள்.  அந்நியன் அதற்கு சமீபத்தில் வந்தால் கொலைசெய்யபடகடவன். இஸ்ரவேல் புத்திரர் தங்கள் தங்கள் பாளயத்தோடும், தங்கள் தங்கள் சேனைகளின் கொடிகளோடும் கூடாரம் போடும்படி கர்த்தர் சொல்லுகிறார்.  இதனை கர்த்தர் நமக்கு திருஷ்டாந்தபடுத்துகிறதென்றால்  நாம் ஒவ்வொருவரும் தேவனுடைய ஆலயமாகிய கிறிஸ்துவின் சரீரமாக கர்த்தருக்குள் கிருபை பெற்று தேவனுக்கு சபையாக ஆராதிப்பதில் தேவன் பிரியப்படுகிறார்.   

அல்லாமலும் லேவி கோத்திரத்தை பற்றி நாம் அறிந்து கொள்வது என்னவென்றால் இஸ்ரவேல் புத்திரர் தங்கள் ஆபரணங்களை கழற்றி ஆரோனிடம் கொடுத்து கன்று குட்டி செய்து, தங்கள் நிர்வாணிகளாயிருந்த போது 

யாத்திராகமம் 32:26-28 

பாளயத்தின் வாசலில் நின்று: கர்த்தருடைய பட்சத்தில் இருக்கிறவர்கள் யார்? அவர்கள் என்னிடத்தில் சேரக்கடவர்கள் என்றான். அப்பொழுது லேவியின் புத்திரர் எல்லாரும் அவனிடத்தில் கூடிவந்தார்கள்.

அவன் அவர்களை நோக்கி: உங்களில் ஒவ்வொருவனும் தன் பட்டயத்தைத் தன் அரையிலே கட்டிக்கொண்டு, பாளயமெங்கும் உள்ளும் புறம்பும் வாசலுக்கு வாசல் போய், ஒவ்வொருவனும் தன்தன் சகோதரனையும் ஒவ்வொருவனும் தன்தன் சிநேகிதனையும் ஒவ்வொருவனும் தன்தன் அயலானையும் கொன்றுபோடக்கடவன் என்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.

லேவியின் புத்திரர் மோசே சொன்னபடியே செய்தார்கள்; அந்நாளில் ஜனங்களில் ஏறக்குறைய மூவாயிரம்பேர் விழுந்தார்கள்.

இதனை நாம் தியானிக்கும் போது மோசே பாளயத்தின் வாசலில் நின்று கர்த்தரின் பட்சத்தில் நிற்பவர்கள் யார் என்று கேட்ட போது, லேவிபுத்திரர் எல்லாரும் அவனிடத்தில் கூடி வந்தார்கள்.  இதனை நாம் பார்க்கும் போது ஆபரணங்களில்  எந்த தர்க்கமும் இல்லாமல் கர்த்தருக்காய் முழுமையும் மாற்றுகிறவர்களாயிருந்தார்கள்.  மற்றும் இவர்களில் பொருளாசையில்லாதிருந்தது.  ஆனால் நம்மளில் அநேகர் அதனை குறித்து மிகவும் வாதிடுவார்கள்.  அப்படி வாதிட்டு, தங்கள் சரீரத்தை கறைப்படுத்திக்கொண்டிருப்பார்கள்.  ஆனால் சிலர் ஏதோ விடுதலை வேண்டும் என்று சொல்லி அதனை கழற்றுவார்கள்.  அவர்கள் உள்ளம் அதனை பற்றியிருக்கும்.  முழுமையும் தங்களை விட்டு விலக்கமாட்டார்கள்.  ஏதோ லாக்கரிலோ, பாங்க்லோ வைத்து அது ஆத்திரத்துக்கு உதவும் என்பார்கள்.  அதனை ஒரு சாத்தான் என்று நினைக்கமாட்டார்கள்.  அது எங்கு வைத்திருந்தாலும் நம் உள்ளத்தைவிட்டு மாறாமல் இருக்கிறதால் உள்ளான மனுஷன் கறைபடுகிறான் என்று நமக்கு தெரிய வேண்டும்.  

அதனால் கர்த்தர் லேவி கோத்திரத்துக்கு காணியாட்சி நிலம் கொடுக்கவில்லை.  காரணம் என்னவென்றால் அவர்கள் கர்த்தரின் சுதந்தரம் என்று சொல்கிறார்.  மேலும் கழிந்த நாளில் நாம் தியானித்து போல் தங்களுக்குள்ள எல்லா நிலபுலன்கள் எல்லாம் கர்த்தருக்காய் பரிசுத்தம் என்று நேர்ந்து கொடுத்தாலே நாம் கர்த்தரிடத்தில் நித்திய சுதந்தரம் பெற்றுகொள்வோம்.  அதற்கு திருஷ்டாந்தம் 

எண்ணாகமம் 1:53-54  

இஸ்ரவேல் புத்திரராகிய சபையின்மேல் கடுங்கோபம் வராதபடிக்கு லேவியர் சாட்சியின் வாசஸ்தலத்தைச் சுற்றிலும் பாளயமிறங்கி, லேவியர் சாட்சியின் வாசஸ்தலத்தைக் காவல்காப்பார்களாக என்றார்.

கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடி எல்லாவற்றையும் இஸ்ரவேல் புத்திரர் செய்தார்கள்.

இவ்விதம் கர்த்தரின் கோபம் நமக்கு வராதபடி கர்த்தரின் கட்டளைகளை காத்து நடக்க ஒப்புக்கொடுப்போம்.                                                                     

கர்த்தர் ஆசீர்வதிப்பார். கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.