தேவனுக்கே மகிமையுண்டாவதாக
ஏசாயா 4: 5
அப்பொழுது கர்த்தர் சீயோன் மலையிலுள்ள எல்லா வாசஸ்தலங்களிலும், அதின் சபைகளின்மேலும், பகலில் மேகத்தையும் புகையையும், இரவில் கொழுந்துவிட்டு எரியும் அக்கினிப்பிரகாசத்தையும் உண்டாக்குவார்; மகிமையானவைகளின்மேலெல்லாம் காவல் உண்டாயிருக்கும்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நம்மை தேவன் பாதகாக்கும் விதம்
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் கர்த்தரின் பணிவிடைகளை செய்யும் போது, அவருடைய கட்டளைகள் பிரகாரம் நாம் கர்த்தருக்கு கீழ்படிந்து செய்வோமானால், கர்த்தர் நம்மளில் பரிசுத்த ஸ்தலத்தை ஆயத்தபடுத்தி எந்த வாதைகளோ நம்முடைய வாழ்வில் வராமல் பாதுகாப்பார் என்று தியானித்தோம்.
அல்லாமலும் இந்த நாளில் நாம் தியானிக்கிற வேதப்பபகுதி
எண்ணாகமம் 9:1-23
அவர்கள் எகிப்துதேசத்திலிருந்து புறப்பட்ட இரண்டாம் வருஷம் முதலாம் மாதத்தில் கர்த்தர் சீனாய் வனாந்தரத்தில் மோசேயை நோக்கி:
குறித்த காலத்தில் இஸ்ரவேல் புத்திரர் பஸ்காவை ஆசரிக்கக்கடவர்கள்.
இந்த மாதம் பதினாலாந்தேதி அந்திநேரமான வேளையாகிய குறித்த காலத்தில் அதை ஆசரிக்கக்கடவீர்கள்; அதற்குரிய எல்லாக் கட்டளையின்படியேயும் முறைமைகளின்படியேயும் அதை ஆசரிக்கக்கடவீர்கள் என்றார்.
அப்படியே பஸ்காவை ஆசரிக்கும்படி மோசே இஸ்ரவேல் புத்திரருக்குக் கட்டளையிட்டான்.
அதினால் முதலாம் மாதம் பதினான்காம் தேதி அந்திநேரமான வேளையில், சீனாய் வனாந்தரத்தில் பஸ்காவை ஆசரித்தார்கள்; கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் இஸ்ரவேல் புத்திரர் செய்தார்கள்.
அந்நாளில் சிலர் மனித பிரேதத்தினால் தீட்டுப்பட்டபடியினால் பஸ்காவை ஆசரிக்கத்தகாதவர்களாயிருந்தார்கள்; அவர்கள் அந்நாளிலே மோசேக்கும் ஆரோனுக்கும் முன்பாக வந்து:
நாங்கள் மனித பிரேதத்தினால் தீட்டுப்பட்டவர்கள்; குறித்த காலத்தில் இஸ்ரவேல் புத்திரரோடேகூடக் கர்த்தருக்குக் காணிக்கையைச் செலுத்தாதபடிக்கு, நாங்கள் விலக்கப்பட்டிருக்கவேண்டியது என்ன என்றார்கள்.
மோசே அவர்களை நோக்கி: பொறுங்கள்; கர்த்தர் உங்களைக்குறித்துக் கட்டளையிடுவது என்ன என்று கேட்பேன் என்றான்.
கர்த்தர் மோசேயை நோக்கி:
நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: உங்களிலாகிலும் உங்கள் சந்ததியாரிலாகிலும் ஒருவன் பிரேதத்தினால் தீட்டுப்பட்டாலும், பிரயாணமாய்த் தூரம்போயிருந்தாலும், கர்த்தருக்குப் பஸ்காவை ஆசரிக்கவேண்டும்.
அவர்கள் அதை இரண்டாம் மாதம் பதினாலாந்தேதி அந்திநேரமான வேளையில் ஆசரித்து, அதைப் புளிப்பில்லாத அப்பங்களோடும் கசப்பான கீரைகளோடும் புசித்து,
விடியற்காலம்மட்டும் அதில் ஒன்றும் மீதியாக வைக்காமலும், அதில் ஒரு எலும்பையும் முறிக்காமலும், பஸ்காவினுடைய சகல முறைமைகளின்படியும் அதை ஆசரிக்கக்கடவர்கள்.
ஒருவன் சுத்தமுள்ளவனுமாய்ப் பிரயாணம் போகாதவனுமாயிருந்தும், பஸ்காவை ஆசரிக்காதேபோனால், அந்த ஆத்துமா குறித்த காலத்தில் கர்த்தரின் பலியைச் செலுத்தாதபடியினால் தன் ஜனத்தாரில் இராமல் அறுப்புண்டுபோவான்; அந்த மனிதன் தன் பாவத்தைச் சுமப்பான்.
ஒரு பரதேசி உங்களிடத்திலே தங்கி, கர்த்தருக்குப் பஸ்காவை ஆசரிக்கவேண்டுமானால், அவன் அதைப் பஸ்காவின் கட்டளைப்படியும் அதின் முறைமையின்படியும் ஆசரிக்கக்கடவன்; பரதேசிக்கும் சுதேசிக்கும் ஒரே கட்டளை இருக்கவேண்டும் என்று சொல் என்றார்.
வாசஸ்தலம் ஸ்தாபனஞ்செய்யப்பட்ட நாளிலே, மேகமானது சாட்சியின் கூடாரமாகிய வாசஸ்தலத்தை மூடிற்று; சாயங்காலமானபோது, வாசஸ்தலத்தின்மேல் அக்கினிமயமான ஒரு தோற்றம் உண்டாயிற்று; அது விடியற்காலமட்டும் இருந்தது.
இப்படி நித்தமும் இருந்தது; பகலில் மேகமும், இரவில் அக்கினித்தோற்றமும் அதை மூடிக்கொண்டிருந்தது.
மேகம் கூடாரத்திலிருந்து மேலே எழும்பும்போது இஸ்ரவேல் புத்திரர் பிரயாணம்பண்ணுவார்கள்; மேகம் தங்குமிடத்தில் இஸ்ரவேல் புத்திரர் பாளயமிறங்குவார்கள்.
கர்த்தருடைய கட்டளையின்படியே இஸ்ரவேல் புத்திரர் பிரயாணப்படுவார்கள்; கர்த்தருடைய கட்டளையின்படியே பாளயமிறங்குவார்கள்; மேகம் வாசஸ்தலத்தின்மேல் தங்கியிருக்கும் நாளெல்லாம் அவர்கள் பாளயத்தில் தங்கியிருப்பார்கள்.
மேகம் நெடுநாள் வாசஸ்தலத்தின்மேல் தங்கியிருக்கும்போது, இஸ்ரவேல் புத்திரர் பிரயாணப்படாமல் கர்த்தரின் காவலைக் காத்துக்கொண்டிருப்பார்கள்.
மேகம் சிலநாள் மாத்திரம் வாசஸ்தலத்தின்மேல் தங்கியிருக்கும்போது, கர்த்தருடைய கட்டளையின்படியே பாளயமிறங்கியிருந்து, கர்த்தருடைய கட்டளையின்படியே பிரயாணப்படுவார்கள்.
மேகம் சாயங்காலந்தொடங்கி விடியற்காலமட்டும் இருந்து, விடியற்காலத்தில் உயர எழும்பும்போது, உடனே பிரயாணப்படுவார்கள்; பகலிலாகிலும் இரவிலாகிலும் மேகம் எழும்பும்போது பிரயாணப்படுவார்கள்.
மேகமானது இரண்டுநாளாவது ஒரு மாதமாவது ஒரு வருஷமாவது வாசஸ்தலத்தின்மேல் தங்கியிருக்கும்போது, இஸ்ரவேல் புத்திரர் பிரயாணம்பண்ணாமல் பாளயமிறங்கியிருப்பார்கள்; அது உயர எழும்பும்போதோ பிரயாணப்படுவார்கள்.
கர்த்தருடைய கட்டளையின்படியே பாளயமிறங்குவார்கள்; கர்த்தருடைய கட்டளையின்படியே பிரயாணம்பண்ணுவார்கள்; கர்த்தர் மோசேயைக்கொண்டு கட்டளையிடுகிறபடியே கர்த்தருடைய காவலைக் காத்துக்கொள்வார்கள்.
மேற்க்கூறிய வசனங்களை நாம் தியானிக்கையில் இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்திலிருந்து புறப்பட்ட இரண்டாம் வருஷத்தின் முதலாம் மாதத்தில் கர்த்தர் சீனாய் வனாந்தரத்தில் வைத்து மோசேயிடம் சொல்லச்சொன்னது என்னவென்றால் இஸ்ரவேல் புத்திரர் குறித்த காலத்தில் பஸ்காவை ஆசரிக்க கடவர்கள் என்று சொல்ல, மோசே அவ்விதம் இஸ்ரவேல் புத்திரரிடம் சொல்ல, இஸ்ரவேல் புத்திரர் கர்த்தர் சொன்னபடி முதலாம் மாதம் பதினாலாந் தேதி அந்தி நேரமான வேளையில் சீனாய் மலையில் வைத்து பஸ்காவை ஆசரித்தார்கள்.
இதில் நமக்கு தெரிய வருவது, சீனாய் மலை கிறிஸ்துவுக்கு திருஷ்டாந்தம் என்றும் பஸ்கா என்பது ஆட்டுகுட்டியானவர் அடிக்கப்பட்டு, அவருடைய மாம்சமும், இரத்தமும் புசிப்பதற்கு திருஷ்டாந்தம் என்றும், ஆனால் அது அந்தி நேரத்தில் தான் புசிக்க வேண்டும் என்றும், நாம் ஒவ்வொருவரும் கிறிஸ்துவின் சரீரத்தின் அவயவங்களாய் இருந்து இதனை புசிக்க வேண்டும் என்பதற்கு சீனாய் மலையில் வைத்து இஸ்ரவேல் புத்திரர் இதனை பஸ்கா பண்டிகையாக ஆசரித்தார்கள் என்று கர்த்தர் திருஷ்டாந்தப்படுத்துகிறார்.
ஆனால் அந்நாளில் பிரேதத்தினால் தீட்டுபட்டவர்கள் யாரும் பஸ்காவை ஆசரிக்க தகாதவர்களாயிருந்தார்கள். ஆதலால் அவர்கள் மோசே, ஆரோன் என்பவர்களை நோக்கி மனித பிரேதத்தினால் தீட்டுபட்டவர்கள் யாரும் இஸ்ரவேல் புத்திரரோடு கூட குறித்த காலத்தில் காணிக்கை செலுத்தமுடியாமல் விலக்கப்பட்டிருக்க வேண்டியது என்ன என்ற போது, மோசே இஸ்ரவேல் புத்திரரிடம், பொறுங்கள் அது என்ன என்று கர்த்தரிடத்தில் கேட்பேன் என்றான்.
அவ்விதம் மோசே கர்த்தரிடத்தில் கேட்டதற்கு உங்களிலாகிலும், உங்கள் சந்ததியாராகிலும் பிரேதத்தினால் தீட்டுபட்டாலும், அல்லது தூர பிரயாணமாய் போயிருந்தாலும் கட்டாயம் பஸ்காவை ஆசரிக்கவேண்டும், அதனை ஒருமாதம் கழித்து அவர்கள் தவறினதான அதே தேதியில் இரண்டாம் மாதத்தில் அந்திநேரமான வேளையில் ஆசரிக்க வேண்டும். அவ்விதம் ஆசரிக்கும் போது, புளிப்பில்லாத அப்பங்களோடும், கசப்பான கீரையோடும் புசித்து, விடியற்காலமட்டும் ஒன்றும் மீதி வைக்காமல், அதின் எலும்பை முறிக்காமலும் பஸ்காவினுடைய சகல முறைமைகளின் படியும் அதனை ஆசரிக்க வேண்டும் என்றார்.
அதனால் பிரியமானவர்களே நாம் நிச்சயமாக பஸ்காவை தள்ளிவிடாமல் புசிக்க வேண்டும். அதற்காக தான் நம்முடைய கர்த்தராகிய இயேசு பஸ்கா ஆட்டுகுட்டியாக பலியானார். அதனால் அவருடைய மாம்சமும், இரத்தமும் நாம் புசித்து என்றென்றும் மரியாமல் பிழைத்திருக்கும்படியாக, அவர் நமக்கு கற்று தந்து, மாதிரியும் மேல் வீட்டில் வைத்து காட்டினது அப்பமும், திராட்சரசமும் எடுத்து தன்னுடைய சீஷர்களுக்கு ஆசீர்வதித்து கொடுத்து, இதனை வாங்கி புசியுங்கள். இது என்னுடைய சரீரமும், என்னுடைய இரத்தமுமாயிருக்கிறது. இதனை புசிக்கிறவன் என்றன்றைக்கும் மரணத்தை காண்பதில்லை, அவனை கடைசி நாளில் எழுப்புவேன் என்றார். மேலும் அவன் என்னோடுகூட என்றன்றைக்கும் பிழைத்திருப்பான் என்றார்.
மேலும் ஒருவன் சுத்தமுள்ளவனாய் இருந்தும், எந்த பிரயாணம் போகாதவனாய் இருந்தும் பஸ்காவை ஆசரிக்காதே போனால் அவன் ஆத்துமா குறித்த காலத்தில் பலியை செலுத்தாதபடியினால் தன் ஜனத்தில் இராதபடி அறுப்புண்டு போவான். அந்த மனிதன் தன் பாவத்தை சுமப்பான். மேலும் பரதேசிக்கும், சுதேசிக்கும் ஒரே கட்டளை இருக்க வேண்டும். என்னவென்றால் பரதேசி யாராவது நம்மிடத்தில் தங்கியிருப்பதற்கு வந்தால் அவர்கள் கட்டாயமாக பஸ்கா முறைமையின்படி ஆசரிக்கவேண்டும்.
அல்லாமலும் வாசஸ்தலம் ஸ்தாபனம் பண்ணபட்ட நாளில் மேகமானது சாட்சியின் கூடாரமான வாசஸ்தலத்தை மூடிற்று. அந்த வாசஸ்தலம் தான் கிறிஸ்துவின் சரீரம். அந்த வாசஸ்தலத்தின் மேல் அக்கினிமயமான ஒரு தோற்றம் உண்டாயிருந்தது. அது விடியற்காலம்மட்டும் இருந்தது. அது தான் சர்வ வல்லமையுள்ள தேவன். இவை எல்லாம் நம்முடைய விசுவாச வாழ்க்கையின் அனுதின பரிசுத்த பாதைக்கு நம்முடைய தேவன் நமக்கு திருஷ்டாந்தப்படுத்தினது இஸ்ரவேல் புத்திரரை வைத்து நடத்தி காட்டுகிறார். இது நாம் ஒழுங்காக செய்து கடைபிடிக்கவேண்டிய காரியங்கள். இதில் ஒன்றும் தவற விடக்கூடாது என்பதை நாம் உணர்ந்துக்கொள்ள வேண்டும்.
இப்படி நித்தமும் பகலில் மேகமும், இரவில் அக்கினி தோற்றமும் உண்டாயிருக்கும். இவ்விதம் கிறிஸ்துவின் சரீரமாகிய நம்முடைய உள்ளான மனுஷன் புதுபிக்கப்பட்டு, தேவ சாயலை தரித்துக்கொண்டு கிறுஸ்துவோடுகூட விசுவாச யாத்திரை செய்யும் போது தேவன் நித்தமும் நமக்கு பாதுகாப்பாக காணப்படுகிறார் .
அதனால் நாம் யாவரும் கர்த்தரின் கட்டளை பிரகாரம் நடப்போம். ஒப்புக்கொடுப்போம்.
கர்த்தர் ஆசீர்வதிப்பார். கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.