தேவனுக்கே மகிமையுண்டாவதாக

யோவான் 6:33

வானத்திலிருந்திறங்கி, உலகத்துக்கு ஜீவனைக் கொடுக்கிற அப்பமே தேவன் அருளிய அப்பம் என்றார்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.  அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் தினமும் இரவில் சபைகூடி தேவனை ஆராதிக்கும்போது கர்த்தர் அவருடைய மன்னாவினால் போஷிப்பார்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நம்முடைய விசுவாச யாத்திரையில் அவருடைய கட்டளைகளுக்கு கீழ்படிவோமானால் வாக்குதத்தம் தந்த அந்த தேசத்தின் நன்மையை காணும்படி செய்வார் என்றும், நாம் அந்த வாக்குதத்தம் தந்த அந்த தேசத்தை நாம் சுதந்தரிக்க, கர்த்தரின் சமூகம், நாம் விசுவாச யாத்திரை செய்துக்கொண்டிருக்கும் போது, நாம் நம்முடைய பகைஞனாகிய சத்துருவின் கிரியைகளினால் விழுந்து போகாதபடி பாதுக்காக்க அவர் மேகத்திற்குள்ளாக நம்மை மறைத்து வைக்கிறார் என்பதை திருஷ்டாந்தங்களோடு விளக்கி காட்டி இஸ்ரவேலரை நடத்தி செல்கிறார். அப்போது கர்த்தர் சத்துருக்களை சிதற செய்து பகைஞனை துரத்துகிறார்.  

இவ்விதம் தான்  நம்முடைய உள்ளான மனுஷனில் கரத்தர்  கிரியை நடப்பித்து  நம்மை பரிசுத்தப்படுத்தி இரட்சிக்கிறார் என்பதையும், வாக்குதத்த தேசம் கானான், அது நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை நாம் சொந்த இரட்சகராக முழுமையாக ஏற்றுக்கொள்வோம் என்பதையும், அவ்விதம் நாம் அவரை ஏற்றுக்கொள்ளும் போது கர்த்தர் நம்மிடமாக திரும்புகிறார் என்பதையும் தியானித்தோம்.  

ஆனால் இந்த நாளில் நாம் சிந்திக்கிற பகுதி 

எண்ணாகமம்  11:1-9   

பின்பு, ஜனங்கள் முறையிட்டுக்கொண்டிருந்தார்கள்; அது கர்த்தருடைய செவிகளில் பொல்லாப்பாயிருந்தது; கர்த்தர் அதைக் கேட்டபோது, அவருடைய கோபம் மூண்டது; கர்த்தருடைய அக்கினி அவர்களுக்குள்ளே பற்றியெரிந்து, பாளயத்தின் கடைசியிலிருந்த சிலரைப் பட்சித்தது.

அப்பொழுது ஜனங்கள் மோசேயை நோக்கிக் கூப்பிட்டார்கள்; மோசே கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணினான்; உடனே அக்கினி அவிந்துபோயிற்று.

கர்த்தருடைய அக்கினி அவர்களுக்குள்ளே பற்றியெரிந்ததினால், அவ்விடத்துக்குத் தபேரா என்று பேரிட்டான்.

பின்பு அவர்களுக்குள் இருந்த பலஜாதியான அந்நிய ஜனங்கள் மிகுந்த இச்சையுள்ளவர்களானார்கள்; இஸ்ரவேல் புத்திரரும் திரும்ப அழுது, நமக்கு இறைச்சியைப் புசிக்கக்கொடுப்பவர் யார்?

நாம் எகிப்திலே கிரயமில்லாமல் சாப்பிட்ட மச்சங்களையும், வெள்ளரிக்காய்களையும், கொம்மட்டிக்காய்களையும், கீரைகளையும், வெண்காயங்களையும், வெள்ளைப்பூண்டுகளையும் நினைக்கிறோம்.

இப்பொழுது நம்முடைய உள்ளம் வாடிப்போகிறது; இந்த மன்னாவைத்தவிர, நம்முடைய கண்களுக்கு முன்பாக வேறொன்றும் இல்லையே என்று சொன்னார்கள்.

அந்த மன்னா கொத்துமல்லி விதையம்மாத்திரமும், அதின் நிறம் முத்துப்போலவும் இருந்தது.

ஜனங்கள் போய் அதைப் பொறுக்கிக்கொண்டுவந்து, ஏந்திரங்களில் அரைத்தாவது உரல்களில் இடித்தாவது, பானைகளில் சமைப்பார்கள்; அதை அப்பங்களுமாகச் சுடுவார்கள்; அதின் ருசி புது ஒலிவ எண்ணெயின் ருசிபோலிருந்தது.

இரவிலே பாளயத்தின்மேல் பனிபெய்யும்போது, மன்னாவும் அதின்மேல் விழும்.

மேற்க்கூறிய வசனங்களை நாம் தியானிக்கும் போது இஸ்ரவேல் புத்திரருடைய யாத்திரையில் உடன்படிக்கை பெட்டி அவர்களுக்கு முன்பாக செல்லும்போது மோசே கர்த்தரிடத்தில்  எழுந்தருளும் அநேக ஆயிரவர்களாகிய இஸ்ரவேலரிடத்தில் திரும்பும் என்று சொல்ல, ஜனங்கள் முறையிட்டுக்கொண்டிருந்தார்கள்.  அவ்விதம் முறையிடும் போது அது கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பாயிருந்தது.  கர்த்தருக்கு அவர்களிடத்தில் கடும் கோபம் மூண்டது. அப்போது கர்த்தருடைய அக்கினி அவர்களுக்குள் பற்றியெரிந்து பாளயத்தின் கடைசியிலிருந்த சிலரை பட்சித்தது.   

பிரியமானவர்களே நாம் நன்றாக தியானித்து விசுவாசயாத்திரையில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.  ஏனென்றால் அவருடைய சித்தத்திற்கு மாறாக ஒருபோதும் கர்த்தரிடத்தில் முறையிடக்கூடாது.  அவ்விதம் முறையிட்டால் கர்த்தரின் கோபம் நமக்குள் பற்றியெரியும்.  இஸ்ரவேலருக்குள் இவைகள் நடந்தது, அதனால் மோசே கர்த்தரிடத்தில் விண்ணப்பம் பண்ணுகிறான், அப்போது அக்கினி அவிந்து போகிறது. அக்கினி பற்றியெரிந்த இடத்திற்கு தபேரா என்று பெயரிடப்படுகிறது.  இவ்விதம் நம்மளிலும் அநேகர் கர்த்தர் நம்மை நன்மையாக நடத்தி சென்றாலும் கர்த்தருக்கு விரோதமாக முறையிடுகிறதினால் தங்களுக்குள்ளே வாழ்க்கையில் எந்த சமாதானமும் இல்லாமல் அக்கினியால் வேதனை அனுபவித்தாலும் உணராமல் இருக்கிறார்கள்.  

எப்படியென்றால் இஸ்ரவேலர் எதற்கு முறையிட்டார்களென்றால், அவர்கள் உள்ளத்தில் இருந்த அந்நிய ஜனங்களினால் மிகுந்த இச்சையுள்ளவர்களாகி இறைச்சிப் புசிக்கும்படியாக முறையிடுகிறார்கள். அவர்கள் என்ன சொல்லி முறையிடுகிறார்களென்றால் 

எண்ணாகமம் 11: 5,6

நாம் எகிப்திலே கிரயமில்லாமல் சாப்பிட்ட மச்சங்களையும், வெள்ளரிக்காய்களையும், கொம்மட்டிக்காய்களையும், கீரைகளையும், வெண்காயங்களையும், வெள்ளைப்பூண்டுகளையும் நினைக்கிறோம்.

இப்பொழுது நம்முடைய உள்ளம் வாடிப்போகிறது; இந்த மன்னாவைத்தவிர, நம்முடைய கண்களுக்கு முன்பாக வேறொன்றும் இல்லையே என்று சொன்னார்கள்.

வசனங்கள் பிரகாரம் முறையிடுகிறார்கள்.   கர்த்தர் அவர்களை மன்னாவினால் போஷிக்கிறார்.  அது தேவ வசனத்திற்கு திருஷ்டாந்தம்.  அந்த மன்னா கொத்துமல்லி விதையை போலவும், அதன் நிறம் முத்து போலவும் இருந்தது. ஜனங்கள் போய் அதனை பொறுக்கி கொண்டு வந்து ஏந்திரங்களில் அரைத்தாவது, உரல்களில் இடித்தாவது பானைகளில் சமைப்பார்கள்; அதனை அப்பங்களாக சுடுவார்கள்.  அதன் ருசி புது ஒலிவ எண்ணெயின் ருசிப்போலிருக்கும்.   இரவிலே பாளயத்தின் மேல் பனி பெய்யும் போது மன்னாவும் அதின் மேல் விழும்.   

பிரியமானவர்களே இதனை நாம் தியானிக்கும் போது அப்பம் என்பது கிறிஸ்து.  அவர் சொல்வது 

யோவான் 6:48 

 ஜீவ அப்பம் நானே.  

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவும்,  அங்கு  விழுந்த மன்னா தேவனுடைய வார்த்தை.   ஜனங்கள் அதனை அப்பங்களாக சுடுகிறார்கள் என்றால்  ஜனங்களுக்குள் அந்த  வார்த்தயானது மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய் நமக்குள்ளே வாசம்பண்ணுகிறார் என்பதனை  கர்த்தர் திருஷ்டாந்தபடுத்தி, 

யோவான் 1:14-ல் கூறப்பட்டிருக்கிறது

அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்பண்ணினார்; அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவுக்கு ஒரே பேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது.

ஆனால் அது இரவில் பாளயத்தில் பனி பெய்யும்  போது மன்னாவும் அதின் மேல் விழும் என்று எழுதபட்டிருக்கிறது.  என்னவென்றல் இரவில் சபை கூடுவது முக்கியமான காரியம் என்றும், அப்போது கிறிஸ்துவின் அபிஷேகத்தினால் வசனமாகிய உபதேசம் நம்மில் பொழியும் என்றும் தெளிவுபடுத்தப்பட்டிருக்கிறது.  

இதனை தியானிக்கிறவர்களே இவ்வித ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ள ஒப்புக்கொடுப்போம்.

கர்த்தர் ஆசீர்வதிப்பார். கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.