மணவாட்டி சபை ஆகுதல்

சகோதரி. பி.கிறிஸ்டோபர் வாசினி
May 22, 2020


கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே!

 முந்தின நாட்களில் நாம் வாசித்த பகுதிகளில் கர்த்தருடைய சபை எப்படியிருக்க வேண்டும் என்பதை தேவன் திரிஷ்டாந்தபடுத்தி விளக்கி காட்டுகிறதை  பார்த்தோம்.

மேலும் ஆபிரகாமின் ஊழியக்காரன் ரெபெக்காளிடம்,  உன் தகப்பன் வீட்டில் இராத்  தங்க இடம் உண்டோ  என்று கேட்டபோது,  எங்களிடத்தில் வேண்டியமட்டும் வைக்கோலும்,  தீவனமும் இருக்கிறது. இராத்தங்க இடமும் உண்டு என்று சொல்கிறாள்.

அப்பொழுது அந்த ஊழியக்காரன் கர்த்தரைப் பணிந்துக்கொண்டு

ஆதியாகமம் 24:27

என் எஜமானாகிய ஆபிரகாமின் தேவனாயிருக்கிற கர்த்தருக்கு ஸ்தோத்திரம்;அவர் தம்முடைய கிருபையையும், தம்முடைய உண்மையையும் என் எஜமானை விட்டு நீக்கவில்லை;நான் பிரயாணம்பண்ணிவருகையில், கர்த்தர் என் எஜமானுடைய சகோதரர் வீட்டுக்கு என்னை அழைத்துக்கொண்டுவந்தார் என்றான்.

உடனே அவள் தன் தாயின் வீட்டில் இந்த காரியத்தை ஓடிப்போய் அதை அறிவிக்கிறாள்.

அப்பொழுது அவளுடைய சகோதரன் ஓடி அந்த துரவண்டையிக்கு போகிறான். அந்நேரத்தில் அவள் அணிந்திருந்த காதணியையும்,  கடகங்களையும் பார்த்தான்.

அப்பொழுது ரெபெக்காள்  ஊழியக்காரன் சொன்ன காரியங்களை சகோதரனிடத்தில் சொன்ன மாத்திரத்தில் அவன் அங்கே துரவண்டையில் வந்தான். அப்போது அந்த ஊழியக்காரன் அங்கு நின்று கொண்டிருந்தான்.

அப்பொழுது அவன் கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டவரே,  உள்ளே வாரும் ; நீர்  வெளியே நிற்பானேன்?  உமக்கு வீடும் ஒட்டகங்களுக்கு இடமும் ஆயத்தம் பண்ணியிருக்கிறேன் என்றான்.

இதிலிருந்து நமக்கு புரிய வருகிறது என்னவென்றால்,  முதலில் தேவன் ஒரு    வீட்டில் ஒருவரை அழைக்கிறார். பின் அவர்கள் பரிசுத்த ஆவியானவரால்  நிரப்பப்பட்டு,  தேவ வசனத்தை கைக் கொள்ளும் போது அவர்கள் கிருபையும் சத்தியத்தால் நிரப்பப்படும் போது அவர்கள் பெற்றிருக்கிற தேவனுடைய அலங்காரத்தால் அந்த வீட்டில் உள்ள அனைவரும் அந்த சபையை ஏற்றுக்கொண்டு கிறிஸ்துவின் அன்பை அவர்களால்  ருசிக்க முடியும்.

பின் அந்த ஊழியக்காரனுடைய ஒட்டகங்களை லாபான் அவிழ்த்து வைக்கோலும் தீவனமும் போட்டு அவனும் அவனோடே  வந்தவர்களும் தங்கள் கால்களை கழுவிக் கொள்ளத் தண்ணீர் கொடுத்தான்.

ஆதியாகமம் 24:33

பின்பு, அவனுக்கு முன்பாக போஜனம் வைக்கப்பட்டது. அப்பொழுது அவன்: நான் வந்த காரியத்தைச் சொல்லுமுன்னே புசிக்கமாட்டேன் என்றான். அதற்கு அவன், சொல்லும் என்றான்.

இதிலிருந்து நாம் தெரிந்து கொள்கிறது  என்னவென்றால் லாபான்  சபையின்  எல்லா ஜனங்களையும் தன் வீட்டுக்குள் ஏற்றுக்கொள்கிறான். அதுமட்டுமல்ல அவளுடைய வீட்டுக்குள் எல்லாருடைய வாழ்விலும் ஒரு மாற்றம் தேவன் கொடுக்கிறார்.

அப்பொழுது ஆபிரகாமின் ஊழியக்காரன் நடந்த எல்லா காரியங்களையும் துவக்கத்தில் இருந்து விளக்கிச் சொல்லுகிறான்.  ஆபிரகாம் சொல்லியனுப்பின காரியத்தையும், தான் தேவனிடத்தில் விண்ணப்பித்ததையும்,  தேவன் கொடுத்த மறுபடியையும், ரெபெக்காள் துரவண்டைக்கு  வந்ததையும்,  தண்ணீர் கொடுத்து ஒட்டகங்களுக்கு வார்த்ததையும் மேலும் அவள் யாருடைய மகள் என்று விளக்கிக் காட்டினதையும், ரெபெக்காளுக்கு  காதணியையும், கடகங்களை கொடுத்ததையும்

 மேலும் தேவனுக்கு அவன்  ஸ்தோத்திரம் செலுத்தினதையும் விளக்கிச் சொன்னப்  பிறகு அவன் சொல்கிறான்.

ஆதியாகமம் 24:49

இப்பொழுது நீங்களும் என் எஜமானுக்குத் தயையும் உண்மையும் உடையவர்களாய் நடக்க மனதுள்ளவர்களானால், எனக்குச் சொல்லுங்கள்; இல்லையென்றால் அதையும் எனக்குச் சொல்லுங்கள், அப்பொழுது நான் வலதுபுறத்தையாகிலும் இடதுபுறத்தையாகிலும் நோக்கிப் போவேன் என்றான்.

ஆதியாகமம் 24:50

அப்பொழுது லாபானும் பெத்துவேலும் பிரதியுத்தரமாக: இந்தக் காரியம் கர்த்தரால் வந்தது, உமக்கு நாங்கள் நலம்பொலம் ஒன்றும் சொல்லக்கூடாது.

ஆதியாகமம் 24:51

இதோ, ரெபெக்காள் உமக்கு முன்பாக இருக்கிறாள். கர்த்தர் சொன்னபடியே அவள் உமது எஜமானுடைய குமாரனுக்கு மனைவியாகும்படிக்கு, அவளை அழைத்துக்கொண்டுபோம் என்றார்கள்.

 

ஆபிரகாமின் ஊழியக்காரன் மீண்டும் கர்த்தரைப் பணிந்துகொண்டு அவளுக்கு வெள்ளியுடைமைகளையும், பொன்னுடைமைகளையும்,  வஸ்திரங்களையும் கொடுத்ததுமன்றி அவளுடைய சகோதரனுக்கும், தாய்க்கும் சில உச்சித்தங்களையும் கொடுத்தான்.

இவற்றிலிருந்து நமக்கு தெரியவருகிறது என்னவென்றால் கர்த்தர் நம்மை மனைவியாகிய மணவாட்டி சபை ஆக்கி விட்டால் பரிசுத்த அலங்காரத்தாலும்,    வசனத்தாலும்,  தேவ கிருபையினாலும்,  தேவ மகிமையினாலும் அலங்கரிப்பார்.   அது மட்டுமல்ல நம் வீட்டார் யாவரையும் உச்சிதமான கோதுமையினால் நிரப்புவார். அதைத்தான் நானும் என் வீட்டாருமோவென்றால் கர்த்தரையே சேவிப்போம் என்று யோசுவா சொல்லுகிறதை வாசிக்கிறோம்.

(ஆனால் அநேக வீடுகளில் ஒருவன் தேவனை ஏற்றுக்கொண்டு அநேக வருஷங்கள் ஆகியும் மற்றவர்கள் தேவனை அறிய மாட்டார்கள்,  காரணமென்னவென்றால் இரட்சிப்பின் அலங்காரம் அவர்களிடத்தில் இல்லாத காரணத்தால் என்று நாம் தெரிந்துகொள்ள வேண்டும்).

பின்பு ஆபிரகாமின் ஊழியக்காரனும் அவனோடிருந்த  மனிதரும் புசித்து குடித்து, இராத்தங்கினார்கள்; காலையிலே எழுந்திருந்து,  அவன்: என் எஜமானிடத்திற்கு என்னை அனுப்பி விடுங்கள் என்றான்.  அவ்வாறு அவன் சொன்னதற்கு அவள் சகோதரனும் அவள் தாயும் பத்து நாளாகிலும் அவள் எங்களோடிருக்கட்டும் என்று சொல்ல அந்த ஊழியக்காரன் கர்த்தர் என் பிரயாணத்தை வாய்க்கப்பண்ணியிருக்க நீங்கள் எனக்குத்  தடை செய்யாதிருங்கள்; நான் என் எஜமானிடத்துக்கு போக என்னை அனுப்பிவிட வேண்டும் என்கிறான்.

            அப்பொழுது அவளுடைய வீட்டார் அவளை அழைத்து அவளிடம் கேட்க,  அவளும் நான் போகிறேன் என்றாள்.

ஆதியாகமம் 24:59, 60

அப்படியே அவர்கள் தங்கள் சகோதரியாகிய ரெபெக்காளையும், அவள் தாதியையும், ஆபிரகாமின் ஊழியக்காரனையும், அவன் மனிதரையும் அனுப்புவித்து,

 

ரெபெக்காளை வாழ்த்தி: எங்கள் சகோதரியே, நீ கோடாகோடியாய்ப் பெருகுவாயாக. உன் சந்ததியார் தங்கள் பகைஞருடைய வாசல்களைச் சுதந்தரித்துக்கொள்வார்களாக என்று ஆசீர்வதித்தார்கள்.

 

அப்படியே அந்த ஊழியக்காரன் அவர்களை அழைத்துக் கொண்டு போனான். போகும் போது ஈசாக்கு லகாய் ரோயீ என்ற துரவின் வழியாக புறப்பட்டு வருகிறான்.

ஆதியாகமம் 24:63

ஈசாக்கு சாயங்காலவேளையிலே தியானம்பண்ண வெளியிலே போயிருந்து, தன் கண்களை ஏறெடுத்துப் பார்த்தபோது, ஒட்டகங்கள் வரக்கண்டான்.

ரெபெக்காளும் தன் கண்களை ஏறெடுத்து ஈசாக்கைக் காண்கிறாள்.

அப்பொழுது ஊழியக்காரனிடம் எதிராக வருவது யார்?  என்று கேட்க ஊழியக்காரன் பதில் சொல்ல அவள் ஒட்டகத்தை விட்டிறங்கி முக்காடிட்டு கொள்கிறாள்.

ஊழியக்காரன் தான் செய்த சகல காரியங்களையும் ஈசாக்குக்கு விவரித்து சொல்ல ஈசாக்கு ரெபெக்காளை தன் தாய் சாராளுடைய கூடாரத்திற்கு அழைத்து கொண்டு போய் அவளை தனக்கு மனைவியாக்கி கொண்டு அவளை நேசித்தான்.

அதனால் தான்,

கலாத்தியர் 4:28

சகோதரரே, நாம்  வாக்குத்தத்தத்துப் பிள்ளைகயாயிருக்கிறோம் என்று எழுதப்பட்டிருக்கிறது. இவ்விதமாக தேவன் ஈசாக்கையும் ரெபெக்காளையும் நமக்கு திருஷ்டாந்தப்படுத்தி,

கலாத்தியர் 3:29

நீங்கள் கிறிஸ்துவினுடையவர்களானால், ஆபிரகாமின் சந்ததியாராயும், வாக்குத்தத்தத்தின்படியே சுதந்தரராயுமிருக்கிறீர்கள்.

இந்தபடியே நம் தேவனாகிய கர்த்தர் கிறிஸ்து மூலமாக நம்மை மணவாட்டி சபையாக அவருடைய நித்திய ராஜ்யத்தில் நம்மை சேர்கிறார்.

ஜெபிப்போம்.

 

கர்த்தர் ஆசீர்வதிப்பார்

 

-தொடர்ச்சி நாளை