தேவனுக்கே மகிமையுண்டாவதாக
1தெசலோனிக்கேயர் 4:7
தேவன் நம்மை அசுத்தத்திற்கல்ல பரிசுத்தத்திற்கே அழைத்திருக்கிறார்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நாம் மாம்சத்திற்கு அடிமையாகாமல் ஜாக்கிரதையாக காணப்பட வேண்டும்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில் மணவாட்டி சபையாகிய நம்முடைய இருதயம் தேவ ஆவியினால் திடப்பட வேண்டும். அவ்விதம் நம்முடைய இருதயம் திடப்படுத்தாமல் இருப்போமானால், நாமும் சீகேமின் மனுஷரை போல, அபிமெலேக் என்னும், மாம்சீக சிந்தையை முதன்மையாக வைப்போமானால், கர்த்தர் நம் நடுவில் பொல்லாப்பு உண்டாக்கும் ஆவியை வரபண்ணுவார்.
இங்கு நாம் தியானிக்கும் போது யெருபாகாலின் எழுபது குமாரருக்கு செய்யப்பட்ட கொடுமை வந்து பலித்து, அவர்களுடைய இரத்தபழி அவர்களைக் கொன்ற அவர்களுடைய சகோதரனாகிய அபிமெலேக்கின் மேலும், தன் சதோதரரை கொல்ல அவன் கைகளை திடப்படுத்தின சீகேம் மனுஷர் மேலும் சுமரும்படியாகச் சீகேமின் பெரிய மனுஷர் அபிமெலேக்குக்கு இரண்டகம் பண்ணினார்கள். சீகேமின் மனுஷர் மலையின் உச்சியில் அவனுக்கு பதிவிருப்பவர்களை வைத்தார்கள்; அவர்கள் தங்கள் அருகே வழி நடந்து போகிற யாவரையும் கொள்ளையிட்டார்கள்; அது அபிமெலேக்குக்கு அறிவிக்கப்பட்டது.
ஏபேதின் குமாரனாகிய காகால் தன் சகோதரர்கள்கூட சீகேமுக்குள் போனான்; சீகேமின் பெரிய மனுஷர் அவனை நம்பி வெளியே புறப்பட்டு, தங்கள் திராட்ச தோட்டங்களின் பழங்களை அறுத்து, ஆலையாட்டி, ஆடிப்பாடி, தங்கள் தேவனின் வீட்டிற்குள் போய், புசித்துக், குடித்து அபிமெலேக்கை சபித்தார்கள். அப்பொழுது ஏபேதின் குமாரனாகிய காகால்; அபிமெலேக்கு யார்? சீகேம் யார்? நாம் அவனை சேவிக்க வேண்டியதென்ன? அவன் பெருபாகாலின் மகனல்லவா? சேபூல் என்பவன் காரியகாரனல்லவா? சீகேமின் தகப்பனாகிய எமோரின் மனுஷரையே சேவிப்பானேன்? இந்த ஜனங்கள் என் கைக்குள் இருக்கட்டும்; நான் அபிமேலேக்கை துரத்தி விடுவேன் என்றான். உன் சேனையை பெருகபண்ணி புறப்பட்டு வா என்று அபிமெலேக்குக்கு சொல்லியனுப்பினான்.
ஆனால் நியாயாதிபதிகள் 9:30-31
பட்டணத்தின் அதிகாரியாகிய சேபூல் ஏபேதின் குமாரனாகிய காகாலின் வார்த்தைகளைக் கேட்டபோது, கோபமூண்டு,
இரகசியமாய் அபிமெலேக்கினிடத்துக்கு ஆட்களை அனுப்பி: இதோ, ஏபேதின் குமாரனாகிய காகாலும் அவனுடைய சகோதரரும் சீகேமுக்கு வந்திருக்கிறார்கள்; பட்டணத்தை உமக்கு விரோதமாக எழுப்புகிறார்கள்.
மேற்க்கூறப்பட்ட வசனங்களை நாம் தியானிக்கையில் பட்டணத்தின் அதிகாரியாகிய சேபூல் ஏபேதின் குமாரனாகிய காகாலின் வார்த்தைகளை கேட்ட போது கோபமடைந்து இரகசியமாய் அபிமேலேக்கினிடத்தில் ஆள் அனுப்பி, காகாலும், அவன் சகோதரர்களும் சீகேமுக்கு வந்திருக்கிறதை அறிவிக்கிறான். எப்படியெனில் பட்டணத்தை உமக்கு விரோதமாக எழுப்புகிறார்கள்.
ஆகையால் நியாயாதிபதிகள் 9:32-34
ஆகையால் நீர் உம்மோடிருக்கும் ஜனங்களோடேகூட இரவில் எழுந்து வந்து வெளியிலே பதிவிருந்து,
காலமே சூரியன் உதிக்கையில் எழும்பி, பட்டணத்தின்மேல் விழுந்து, அவனும் அவனோடிருக்கிற ஜனங்களும் உமக்கு எதிரே புறப்படும்போது, உம்முடைய கைக்கு நேரிடுகிறபடி அவனுக்குச் செய்யும் என்று சொல்லியனுப்பினான்.
அப்படியே அபிமெலேக்கும், அவனோடிருந்த சகல ஜனங்களும், இரவில் எழுந்துபோய், சீகேமுக்கு விரோதமாக நாலு படையாகப் பதிவிருந்தார்கள்.
மேற்கூறப்பட்ட வசனம் சேபூல் அபிமெலேக்குக்கு அறிவித்ததால்,அவன் நாலு படையாக பதிவிருக்கிறான். ஆனால் ஏபேதின் குமாரன் காகால் பட்டணத்தின் ஒலிமுக வாசலில் நின்றான். அபிமெலேக்கு தன்னோடிருந்த ஜனங்களோடே எழும்பி வந்தான். காகால் அவர்கள் மலையின் உச்சியிலிருந்து இறங்கி வருகிறதை கண்டு சேபூலோடே சொன்னதற்கு, சேபூல் நீ மலைகளின் நிழலை கண்டு மனுஷர் என்று நினைக்கிறாய் என்றான். காகாலோ, திரும்பவும் ஒரு படை மெயொனெனீமின் கர்வாலி மரத்தின் வழியாய் வருகிறது என்றான். அதற்கு சேபூல் நாம் சேவிக்கிறதற்கு அவன் யார்? என்று சொன்ன உன் இப்பொழுது எங்கே? நீ புறப்பட்டு அவர்களோடே யுத்தம்பண்ணு என்ற போது, காகால் புறப்பட்டு அவர்களோடே யுத்தம் பண்ணினான். அப்போது அபிமெலேக்கு காகாலை துரத்த அவன் ஓடிப்போனான். அல்லாமலும் பட்டண வாசல் மட்டும் அநேகர் வெட்டுண்டு விழுந்தார்கள். ஆனால் அபிமெலேக்கு அருமாவில் இருந்து விட்டான்; சேபூல் காகாலையும், அவன் சகோதரரையும் சீகேமில் குடியிராதபடி துரத்தி விட்டான்.
பிரியமானவர்களே, இந்த காரியங்களை நாம் தியானிக்கும் போது, நம்முடைய ஆவிக்குரிய வளர்ச்சியை தடை செய்து, நம்முடைய ஆத்துமா மண்ணோடு மண்ணு ஒட்டும்படியாக நமக்குள் கிரியை செய்து வருகிற மாம்சத்தின் கிரியைகளை கர்த்தர் நம்மை விட்டு துரத்தும் படியாக, நமக்குள் எழும்புகிற மாம்சத்தோடு, போராடும் படியாக முதலில் தீய ஆவியை அனுப்புகிறதை பார்க்கிறோம். அப்போது முதலில் அந்த இரண்டும் யுத்தம் செய்கிறதாயிருக்கிறது. என்னவென்றால் அந்த தீய ஆவி பட்டணத்தை ரகசியமாய் தன் வசம் ஆக்கும்படியாக வருகிறது. ஏனென்றால் நாம் அறிந்துக்கொள்ளவேண்டிய காரியம் என்னவென்றால் மாம்சத்தின் சிந்தைகள் பெருகினால் அது பிசாசுகளின் குடியிருப்பாகும். ஆனால் அதனை வளரவிடாதபடி கர்த்தர் எவ்விதம் தடைபண்ணுகிறாரென்றால், தீய ஆவியை அனுப்பும் போது, அது பட்டணத்தை பிடித்து விடும் என்ற எண்ணத்தோடு அங்கு யுத்தம் ஆயத்தமாகிறது. இந்த யுத்தத்தில் தீய ஆவியை அகற்றி விடுவதால், இனி அது அந்த இடத்தில் வராதபடி அங்கு எப்போதும் யுத்த சப்தம் கேட்கிறது. ஆதலால் மாம்சத்தின் கிரியைகளை அழிக்கும் வரையிலும் கர்த்தர் பழிவாங்குகிறார் என்பது புரிகிறது.
ஆதலால் பிரியமானவர்களே நாம் மாம்சத்திற்கு இடம் கொடாமல் ஜாக்கிரதையோடு இருக்க வேண்டும். ஒப்புக்கொடுப்போம்.
ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.