தேவனுக்கே மகிமையுண்டாவதாக

நீதிமொழிகள் 12:28

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.  அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் பரஸ்திரீயினோடு ஐக்கியபடாமல் முழு இருதயமும் கிறிஸ்துவினோடு ஐக்கியம் உள்ளவர்களாக காணப்பட வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில் மணவாட்டி சபையாகிய நம்முடைய ஆத்துமாவை இரட்சிக்க வல்லமையுள்ள தேவன் ஒருவரே, அவரே நம்மை இரட்சிக்கிறவர் என்று தியானித்தோம்.  

அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

நியாயாதிபதிகள் 11:1-6  

கீலேயாத்தியனான யெப்தா பலத்த பராக்கிரமசாலியாயிருந்தான்; அவன் பரஸ்திரீயின் குமாரன்; கிலெயாத் அவனைப் பெற்றான்.

கிலெயாத்தின் மனைவியும் அவனுக்குக் குமாரர்களைப் பெற்றாள்; அவன் மனைவி பெற்ற குமாரர் பெரியவர்களானபின்பு, அவர்கள் யெப்தாவை நோக்கி: உனக்கு எங்கள் தகப்பன் வீட்டிலே சுதந்தரம் இல்லை; நீ அந்நிய ஸ்திரீயின் மகன் என்று சொல்லி அவனைத் துரத்தினார்கள்.

அப்பொழுது யெப்தா: தன் சகோதரரை விட்டு ஓடிப்போய், தோப்தேசத்திலே குடியிருந்தான்; வீணரான மனுஷர் யெப்தாவோடே கூடிக்கொண்டு, அவனோடேகூட யுத்தத்திற்குப் போவார்கள்.

சிலநாளைக்குப்பின்பு, அம்மோன் புத்திரர் இஸ்ரவேலின்மேல் யுத்தம்பண்ணினார்கள்.

அவர்கள் இஸ்ரவேலின்மேல் யுத்தம்பண்ணும்போது கீலேயாத்தின் மூப்பர் யெப்தாவைத் தோப்தேசத்திலிருந்து அழைத்துவரப்போய்,

யெப்தாவை நோக்கி: நீ வந்து, நாங்கள் அம்மோன் புத்திரரோடு யுத்தம்பண்ண எங்கள் சேனாபதியாயிருக்க வேண்டும் என்றார்கள்.

கிலேயாத்தியனான யெப்தா பலத்த பராக்கிரமசாலியாயிருந்தான்;  அவன் பரஸ்திரீயின் குமாரன்; கிலெயாத் அவனை பெற்றான். கிலெயாத்தின் மனைவியும் அவனுக்கு குமாரர்களை பெற்றாள்.  ஆனால் அவர்கள் பெரியவர்களான போது யெப்தாவை நோக்கி உனக்கு எங்கள் தகப்பன் வீட்டில் சுதந்தரம் இல்லை; நீ அந்நிய ஸ்திரீயின் மகன் எனறு சொல்லி அவனை துரத்தினார்கள், அப்போது யெப்தா; தன் சகோதரரை விட்டு ஓடிப்போய், தோப் தேசத்திலே குடியிருந்தான்.  ஆனால் அங்குள்ள வீணரான மனுஷர் யெப்தாவோட கூடிக்கொண்டு யுத்தத்திற்கு போவார்கள்.  அவ்விதம் இருக்கும் போது, சில நாளுக்கு பின்பு அம்மோன் புத்திரர் இஸ்ரவேலின் மேல் யுத்தம் பண்ணினார்கள்.  

அவர்கள் இஸ்ரவேலின் மேல் யுத்தம் பண்ணும் போது கிலேயாத்தின் மனுஷர் யெப்தாவை தோப் தேசத்திலிருந்து அழைத்தனுப்ப போய் : யெப்தாவை நோக்கி, நாங்கள் அம்மோன் புத்திரரோடு யுத்தம் பண்ண நீ எங்கள் சேனாபதியாயிருக்க வேண்டும் என்றபோது; யெப்தா அவர்களிடம்  

நியாயாதிபதிகள் 11:7 

அதற்கு யெப்தா கீலேயாத்தின் மூப்பரைப் பார்த்து: நீங்கள் அல்லவா என்னைப் பகைத்து, என் தகப்பன் வீட்டிலிருந்து என்னைத் துரத்தினவர்கள்? இப்பொழுது உங்களுக்கு ஆபத்து நேரிட்டிருக்கிற சமயத்தில் நீங்கள் என்னிடத்தில் ஏன் வருகிறீர்கள் என்றான்.

மேற்க்கூறப்பட்ட வார்த்தையை சொல்கிறான்.   அதற்கு கிலேயாத்தின் மூப்பர் யெப்தாவை நோக்கி 

நியாயாதிபதிகள் 11:8   

அதற்குக் கீலேயாத்தின் மூப்பர் யெப்தாவை நோக்கி: நீ எங்களுடனேகூட வந்து, அம்மோன் புத்திரரோடு யுத்தம்பண்ணி, கீலேயாத்தின் குடிகளாகிய எங்கள் அனைவர்மேலும் தலைவனாயிருக்க வேண்டும்; இதற்காக இப்பொழுது உன்னிடத்தில் வந்தோம் என்றார்கள்.

மேற்க்கூறப்பட்ட வசனங்கள் பிரகாரம் அவர்கள் சொல்கிறார்கள். அதற்கு யெப்தா சொல்வது 

நியாயாதிபதிகள் 11:9 

அதற்கு யெப்தா: அம்மோன் புத்திரரோடே யுத்தம்பண்ண, நீங்கள் என்னைத் திரும்ப அழைத்துப்போனபின்பு, கர்த்தர் அவர்களை என் முன்னிலையாய் ஒப்புக்கொடுத்தால், என்னை உங்களுக்குத் தலைவனாய் வைப்பீர்களா என்று கீலேயாத்தின் மூப்பரைக் கேட்டான்.

அல்லாமலும் கிலேயாத்தின் மூப்பர் யெப்தாவைப் பார்த்து: நாங்கள் உன் வார்த்தையின்படியே செய்யாவிட்டால்,கர்த்தர் நமக்கு நடுநின்று கேட்பாராக என்றார்கள்.  

பிரியமானவர்களே, மேற்கூறிய வாரத்தைகளின் விளக்கங்கள் என்னவென்றால் யெப்தா என்பவன் ஒரு பரஸ்திரீயின் மகன்.  ஆனால் தகப்பன் கிலேயாத்தியனாக காணப்படுகிறான்.  ஆனால் பரஸ்திரீயின் மகன் என்றால், உலக இன்பங்களுக்குள் வாழ்கிறவன்.  ஆனால் அவன் பலத்த பராக்கிரமசாலியாக இருந்தான்.   அவனுக்கு தன் தகப்பன் வீட்டில் உள்ள சுதந்தரம் கொடுக்கபடாமல் வீட்டை விட்டு துரத்தப்படுகிறான்.  ஆனால் அவன் வீணரான மனுஷரோடு சேர்ந்து யுத்தத்திற்கு போவான்.  இதனை நாம் சிந்திக்கும் போது உலக உல்லாசங்களுக்குள் வாழ்வோமானால் நம்முடைய தகப்பனாகிய கர்த்தரிடத்தில் நமக்கு பங்கில்லை.  ஆனால் நாம் காணப்படுவது சபைக்கு புறம்பாக காணப்படுவோம்.  ஆனால் நாம் போராடி ஜெபிப்பது எல்லாம் கிறிஸ்துவின் சரீரத்திற்கு புறம்பாக இருக்கும்.  இப்படி நாம் பார்க்கும்போது அநேகர் கிறிஸ்துவின் பெயரை சொல்லி உலகமாகிய பரஸ்திரீயோடு  ஐக்கியப்பட்டுக் கர்த்தரை ஆராதிக்கிறார்கள்.  அதனை நாம் உணராதவர்களாக காணப்படுகிறோம்.  அவர்கள் போராடி ஜெபித்து இவ்வுலக ஆசீர்வாதங்களை பெற்றுக்கொள்கிறார்கள். ஆனால் பரஸ்திரீயால் பெற்றெடுத்தவர்களுக்கு பரலோக  ஆசீர்வாதங்களாகிய நித்திய ஜீவனை சுதந்தரிக்க முடியாது என்பதனை திருஷ்டாந்தத்தோடு விளக்குகிறார்.  

ஆனால் அவர்கள்  கீலேயாத் மனுஷர் யெப்தாவின் துணையை நாடினது போல் நாடி தேடுகிறார்கள்.  ஆனால் அவ்விதம் ஓடுகிறவர்கள் கர்ததரை முன்னிலையாக நிறுத்தாமல் யெப்தாவை போலுள்ளவர்களை தங்கள் தலைவர்களாக நிறுத்திக்கொள்வார்கள்.  

பிரியமானவர்களே அந்த இடத்தில் நாம் பார்க்கும் போது யெப்தா தலைவன் பதவி கேட்கிறான்.  ஆனால் இவர்களால் மறுக்க முடியாது.  அப்படிபட்டவர்கள் பரஸ்திரீக்கு அடிமையாகிவிடுவார்கள்.  நாம் அப்படியில்லாமல் உண்மையான சத்தியத்தை கிறிஸ்துவினிடத்திலிருந்து கேட்டறிந்து அவர் சித்தம் செய்து, அவரால் ஜெயம் பெற்று, நாம் அவருக்கு மாத்திரம் அடிமையாக இருந்து நித்திய ஜீவனைப் பெற்று கொள்ளும்படியாக  ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.