தேவனுக்கே மகிமையுண்டாவதாக

சங்கீதம் 108: 6

உமது பிரியர் விடுவிக்கப்படும்பொருட்டு, உமது வலதுகரத்தினால் இரட்சித்து, எங்கள் ஜெபத்தைக் கேட்டருளும்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.  அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நம்முடைய ஆத்துமாவில் பெலிஸ்திய கிரியைகளிலிருந்து விடுதலையாகி இரட்சிப்பை சுதந்தரிக்க வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில் மணவாட்டி சபையாகிய நாம் கர்த்தருக்கு எப்போதும் கீழ்படிகிறவர்களாக இருப்போமானால் நாம் செலுத்துகிற பலியை ஏற்றுக்கொள்வார் என்பதனை குறித்து தியானித்தோம்.  

அல்லாமலும் அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

நியாயாதிபதிகள் 13:24,25 

பின்பு அந்த ஸ்திரீ ஒரு குமாரனைப் பெற்று, அவனுக்குச் சிம்சோன் என்று பேரிட்டாள்; அந்தப் பிள்ளை வளர்ந்தது; கர்த்தர் அவனை ஆசீர்வதித்தார்.

அவன் சோராவுக்கும் எஸ்தாவோலுக்கும் நடுவிலுள்ள தாணின் பாளயத்தில் இருக்கையில் கர்த்தருடைய ஆவியானவர் அவனை ஏவத்துவக்கினார்.

இந்த வசனங்களில்  மனோவாவின் மனைவி ஒரு குமாரனை பெற்று அவனுக்கு சிம்சோன் என்று பெயரிட்டாள்.  அந்த பிள்ளை வளர்ந்தது, கர்த்தர் அவனை ஆசீர்வதித்தார். பின்பு  அவன் சோராவுக்கும், எஸ்தாவோலுக்கும் நடுவிலுள்ள தாணின் பாளயத்தில் இருக்கையில் கர்த்தருடைய ஆவியானவர் அவனை ஏவதுவக்கினார். எப்படியென்றால் நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து, நசரேயனாக நம்மில் தோன்றுகிறார் என்பதற்காக திருஷ்டாந்தத்திற்காக சிம்சோனை கர்த்தர் தாயின் வயிற்றிலிருந்து பிறந்தது முதல் தேவனுக்கென்று நசரேயனாயிருப்பான் என்றார்.  ஆனால் தாயானவளுக்கு கர்த்தர் சில நிபந்தனைகள் கொடுக்கிறார்; அதனை ஏற்று கொண்ட அவளும் கர்த்தரின் சித்தம் பிரகாரம் அவனை வளர்க்கிறாள், அப்போது கர்த்தர் அவனை ஆசீர்வதித்தார் என்பதும் அவன் வளர்ந்து வரும் போது கர்த்தருடைய தூதனானவர், அவன் தாணின் பாளயத்தில் இருக்கும் போது, அவனை ஏவத்துவக்கினார்.    கர்த்தர் அவனை ஏவதுவக்கின போது திம்னாத்துக்குப் போய், திம்னாத்திலே பெலிஸ்தரின் குமாரத்திகளில் ஒரு பெண்ணைகண்டு 

நியாயாதிபதிகள் 14:1-4 

சிம்சோன் திம்னாத்துக்குப் போய், திம்னாத்திலே பெலிஸ்தரின் குமாரத்திகளில் ஒரு பெண்ணைக் கண்டு,

திரும்ப வந்து, தன் தாயையும் தகப்பனையும் நோக்கி: திம்னாத்திலே பெலிஸ்தரின் குமாரத்திகளில் ஒரு பெண்ணைக் கண்டேன்; அவளை எனக்குக் கொள்ளவேண்டும் என்றான்.

அப்பொழுது அவன் தாயும் அவன் தகப்பனும் அவனை நோக்கி: நீ போய், விருத்தசேதனமில்லாத பெலிஸ்தரிடத்தில் ஒரு பெண்ணைக் கொள்ளவேண்டியதென்ன? உன் சகோதரரின் குமாரத்திகளிலும், எங்கள் ஜனமனைத்திலும் பெண் இல்லையா என்றார்கள். சிம்சோன் தன் தகப்பனை நோக்கி: அவள் என் கண்ணுக்குப் பிரியமானவள், அவளையே எனக்குக் கொள்ளவேண்டும் என்றான்.

அவன் பெலிஸ்தரிடத்தில் குற்றம் பிடிக்க முகாந்தரம் உண்டாகும்படி, இது கர்த்தரின் செயல் என்று அவன் தாயும் தகப்பனும் அறியாதிருந்தார்கள்; அக்காலத்திலே பெலிஸ்தர் இஸ்ரவேலை ஆண்டார்கள்.

மேற்க்கூறப்பட்ட வசனங்கள் தியானிக்கும் போது பெலிஸ்தரிடத்தல் குற்றம் பிடிக்கும்படியாக, கர்த்தர் முகாந்தரம் உண்டாகும்படி இதனை செய்கிறார் என்பதனை பெற்றோர்கள் அறியாதிருந்தார்கள்.  ஏனென்றால் பெலிஸ்தரின்  கையிலிருந்து இஸ்ரவேலரை விடுவித்து இரட்சிக்கும் படியாக கர்த்தர் சில காரியங்களை செய்கிறார். என்னவெனில் நம் எல்லாருடைய உள்ளத்திலும் பெலிஸ்திய ஆவி வந்து வஞ்சித்து தேவனைவிட்டு தூரப்படுத்தும் என்பதனை அறிந்த நம்முடைய கர்த்தர், நசரேயன் மூலம் தான் பெலிஸ்தரிடத்திலிருந்து விடுதலை பெற்று கொள்ளலாம் என்பதனை திருஷ்டாந்தப்படுத்தி சிம்சோனை நசரேயனாக இருப்பான் என்கிறார்.  ஆனால் மனிதனாக உலகில் பிறந்த யாரும் இதனை செய்யமுடியாது என்பதனையும் சில எடுத்துகாட்டுகள் மூலம் கூறுகிறார்.  எப்படியெனில் இஸ்ரவேலை, பெலிஸ்தரின் கையிலிருந்து இரட்சிக்கும்படியாக நசரேயர் எழும்புகிறார்  என்பதனை விளக்குகிறார்.  

ஏனென்றால் இஸ்ரவேலை பெலிஸ்தர்கள் ஆளாதபடியாக, இருக்கவேண்டுமென்பதே தேவனுடைய செயலாயிருக்கிறது.  அல்லாமல்  சிம்சோனும், அவன் தாயும், தகப்பனும், திம்னாத்துக்குப் போகப் புறப்பட்டார்கள்; அவர்கள் திப்னாத் ஊர் திராட்ச தோட்டங்கள் மட்டும் வந்தபோது, கெர்ச்சிக்கிற பால சிங்கம் ஒன்று அவனுக்கு எதிர்பட்டது.  அப்பொழுது கர்த்தருடைய ஆவி அவன் மேல் பலமாய் இறங்கினதினால், அவன் கையில் ஒன்றும் இல்லாதிருந்தும், அதை ஒரு ஆட்டுக்குட்டியைக் கிழித்துப்போடுகிறது போல் கிழித்து போட்டான்; ஆனாலும் அவன் செய்ததை தன் தாய் தகப்பனுக்கு அறிவிக்கவில்லை.  

ஆனால் நியாயதிபதிகள் 14:7-10  

அவன் போய் அந்தப் பெண்ணோடே பேசினான்; அவள் சிம்சோனின் கண்ணுக்குப் பிரியமாயிருந்தாள்.

சிலநாளைக்குப்பின்பு, அவன் அவளை விவாகம்பண்ணத் திரும்பிவந்து, சிங்கத்தின் உடலைப் பார்க்கிறதற்கு வழிவிலகிப் போனான்; இதோ, சிங்கத்தின் உடலுக்குள்ளே தேனீக்கூட்டமும் தேனும் இருந்தது.

அவன் அதைத் தன் கைகளில் எடுத்து, சாப்பிட்டுக்கொண்டே நடந்து, தன் தாய்தகப்பனிடத்தில் வந்து, அவர்களுக்கும் கொடுத்தான்; அவர்களும் சாப்பிட்டார்கள்; ஆனாலும் தான் அந்தத் தேனைச் சிங்கத்தின் உடலிலே எடுத்ததை அவர்களுக்கு அறிவிக்கவில்லை.

அவன் தகப்பன் அந்தப் பெண் இருக்கும் இடத்தில் போனபோது, சிம்சோன் அங்கே விருந்துசெய்தான்; வாலிபர் அப்படிச் செய்வது வழக்கம்.

இவற்றின் விளக்கம் என்னவென்றால் சிம்சோன், தன் தாய், தகப்பனோடு கூட அந்த இடத்திற்கு வரும் போது, அவன் கையால் கிழித்துக் கொன்ற சிங்கத்தின் உடலில் தேனீக்கூட்டமும், தேனும் இருந்தது.  ஆனால் அவன் தன் கையில் எடுத்து சாப்பிட்டுக்கொண்டே , தன் தாய் தகப்பனுக்கும் கொடுக்கிறதை பார்க்கிறோம்; அவர்களும் சாப்பிட்டார்கள்; ஆனாலும், தான் அந்த தேனை சிங்கத்தின் உடலிலிருந்து எடுத்ததை அவன் அவர்களுக்கு அறிவிக்கவில்லை.  ஆனாலும் அவன் தகப்பன் அந்த பெண் இருக்கும் இடத்தில் போனபோது, சிம்சோன் அங்கே விருந்து செய்தான்; வாலிபர் அப்படி செய்வது வழக்கம்.  அவர்கள் அவனை கண்டபோது, முப்பது தோழர்களை அவனோடுகூட இருக்கும்படி கொண்டு வந்தார்கள்.  

பிரியமானவர்களே மேற்க்கூறப்பட்ட வசனங்களில் நம்முடைய ஆத்துமா எப்படி கண்ணின் இச்சையில் அகப்படும் என்றும், அது பெலிஸ்திய கிரியை என்பதும், இவர்கள் விருத்தசேதனம் இல்லாதவர்களாயிருப்பார்கள் என்றும், இவ்விதமாக இருக்கும் நம்முடைய ஆத்துமா எந்த இச்சையிலும் விழாதபடி,அதிலிருந்து எப்படி நம் ஆத்துமாவை கர்த்தர் பிரித்தெடுக்கிறார் என்பதை  திராட்ச தோட்டமாகிய கிறிஸ்துவின் சபையாகிய அனுபவத்தில் அவர்களை பால சிங்கம் என்றும், ஆனால் கர்த்தருடைய ஆவியானவர் அவர்கள் மேல் பலமாய் இறங்கி, அவர்களில் இருக்கிற துர்உபதேசத்தை கிழித்து விடுவார் என்பதும், அப்படி துர்உபதேசம் மாற்றபடும் போது, அவர்களில் கிறிஸ்து பரிசுத்தவான்களோடுக்கூட, அங்கு வாசம் பண்ணுகிறதும், அங்கு ஜனங்கள் கூடி கர்த்தரை ஆராதிப்பதும் நம்முடைய வழக்கமாயிருக்கும் என்று கர்த்தர் நமக்கு திருஷ்டாந்தப்படுத்துகிறார்.  

ஆதலால் நாம் பெலிஸ்திய கிரியைகளிலிருந்து நாம் விடுதலையாகி இரட்சிப்பை சுதந்தரமாக்கும்படியாக ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.