தேவனுக்கே மகிமையுண்டாவதாக
எரேமியா 7:23
என் வாக்குக்குச் செவிகொடுங்கள், அப்பொழுது நான் உங்கள் தேவனாயிருப்பேன், நீங்கள் என் ஜனமாயிருப்பீர்கள்; நான் உங்களுக்குக் கற்பிக்கும் எல்லா வழியிலும், நீங்கள் உங்களுக்கு நன்மையுண்டாகும்படிக்கு நடவுங்கள் என்கிற விசேஷத்தையே அவர்களுக்குச் சொல்லிக் கட்டளையிட்டேன்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நாம் விக்கிரகாராதனையை செய்யாதபடி எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம், சபைகூடி கர்த்தரை ஆராதிக்க வேண்டும் என்று தியானித்தோம்.
நாம் சபைக்கூடி கர்த்தரை பரிசுத்த ஆவியில் நிறைந்து ஆராதிக்கும்போது, நம்முடைய ஆத்துமாவுக்கு விரோதமாக இருக்கிற சத்துருவின் கட்டுகளை கர்த்தர் அவிழ்க்கிறார். அவ்விதமாக கட்டுகளை அறுத்து கர்த்தருடைய ஆவியானவர் நம்மில் வசித்து, நம்மை கிறிஸ்துவோடுகூட வாழ வைப்பது தான் தேசத்தை சொந்தமாக்குவது. அந்த தேசம் பரம தேசமாகிய கானான் தேசம். அதற்கு போகும் பாதையில் தான் கீரியாத்யாரீம் இருக்கிறது; அங்குதான் அவர்கள் பாளயமிறங்குகிறார்கள். பாளயமிறங்குவது என்றால் தேவசபை கூடி ஆராதிப்பது. அவ்விதம் ஆராதிக்கும் போது மகிமையின் தேவன் நம்மில் பிரசன்னமாகுகிறார். அவ்விதம் பிரசன்னமாகும் போது நித்திய ஜீவனுக்குள் பிரவேசிக்கிறோம். இவைகளை பெற்றுக்கொள்ளும்படி திருஷ்டாந்தபடுத்தவே தாண் புத்திரராகிய அறுநூறு பேரும், லாயீசின் நாட்டை உளவு பார்க்க சென்ற ஐந்து மனுஷரும், எப்பிராயீம் மலைக்கு மீகா வீடு மட்டும் வந்தார்கள். அப்போது அந்த ஐந்து மனுஷரும், சகோதரர்களிடம் சொன்னது, மீகா வீட்டில் இருக்கிற ஏபோத்தும், சுரூபங்களும், வெட்டப்பட்ட விக்கிரமும், வார்ப்பிக்கப்பட்ட விக்கிரகமும் இருக்கிறதையும் அறிவித்து, இப்போதும் நீங்கள் செய்யவேண்டியதை யோசித்து கொள்ளுங்கள் என்றார்கள்.
அப்போது மீகாவின் வீட்டிலிருந்த ஆசாரியனிடம் அவர்கள் வந்து சுகசெய்தியை விசாரித்தார்கள். ஆனால் ஆயுதபாணிகளாகிய அறுநூறுபேரும் வாசற்படியிலே நின்றார்கள். அவ்விதம் ஆசாரியனும், ஆயுதபாணிகளுமாகிய அறுநூறு பேரும் வாசற்படியில் நிற்கும் போது, அந்த ஐந்து மனிதரும் வீட்டிற்குள் புகுந்து அங்கிருந்த வெட்டபட்ட விக்கிரகத்தையும், ஏபோத்தையும், சுரூபங்களையும் வார்ப்பிக்கப்பட்ட விக்கிரகத்தையும் எடுத்துக்கொண்டு வந்தார்கள். அப்படி எடுத்துக்கொண்டு வருகிற போது, ஆசாரியன் அவர்களிடம் நீங்கள் செய்கிறது என்ன என்று கேட்கிறான்.
அப்போது அவர்கள் ஆசாரியனிடம் நியாயாதிபதிகள் 18:19,20
அதற்கு அவர்கள்: நீ பேசாதே, உன் வாயை மூடிக்கொண்டு, எங்களோடேகூட வந்து எங்களுக்குத் தகப்பனும் ஆசாரியனுமாயிரு; நீ ஒரே ஒருவன் வீட்டுக்கு ஆசாரியனாயிருக்கிறது நல்லதோ? இஸ்ரவேலில் ஒரு கோத்திரத்திற்கும் வம்சத்திற்கும் ஆசாரியனாயிருக்கிறது நல்லதோ? என்றார்கள்.
அப்பொழுது ஆசாரியனுடைய மனது இதமியப்பட்டு, அவன் ஏபோத்தையும் சுரூபங்களையும் வெட்டப்பட்ட விக்கிரகத்தையும் எடுத்துக்கொண்டு, ஜனங்களுக்குள்ளே புகுந்தான்.
மேற்க்கூறப்பட்ட வசனங்களில் அவர்கள் சொன்னதை கேட்ட ஆசாரியனின் மனது இதமியப்பட்டு, அவர்கள் கொண்டுவந்த ஏபோத், விக்கிரகம், சுரூபம் இவைகளை எடுத்துக்கொண்டு, ஜனங்களுக்குள்ளே புகுந்தான். ஆனால் அவர்கள் திரும்பும்படி புறப்பட்டு பிள்ளைகளையும், ஆடுமாடுகளையும், பண்டம்பாடிகளையும் தங்களுக்கு முன்னே போகும் படி செய்தார்கள்.
பிரியமானவர்களே இஸ்ரவலரில் அநேகர் விக்கிரகராதனை செய்து வந்தார்கள் என்பது புரிகிறது. விக்கிரகாராதனை கர்த்தருக்கு அருவருப்பானது. மேலும் விக்கிரகாராதனைக்கு விலகி ஓடுங்கள் என்று கர்த்தர் சொல்கிறார்.
அல்லாமலும் யாத்திராகமம் 20: 3-5
என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்கவேண்டாம்.
மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின்கீழ்த் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சொரூபத்தையாகிலும் யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்க வேண்டாம்;
நீ அவைகளை நமஸ்கரிக்கவும் சேவிக்கவும் வேண்டாம்; உன் தேவனாகிய கர்த்தராயிருக்கிற நான் எரிச்சலுள்ள தேவனாயிருந்து, என்னைப் பகைக்கிறவர்களைக்குறித்துப் பிதாக்களுடைய அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்தில் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் விசாரிக்கிறவராயிருக்கிறேன்.
இவ்விதம் கர்த்தருடைய கற்பனைகள் இருக்கும்போது, இஸ்ரவேல் புத்திரர் விக்கிரகங்களை பின்பற்றுகிறார்கள். இதனை கர்த்தர் திருஷ்டாந்தபடுத்துகிறது நம்மளிலும் அநேகர் இவ்விதம் நடந்து, தேவனுக்கு பிரியமல்லாததை செய்கிறதால் தேவ கோபம் பற்றியெரிகிறது. ஆனால் அவர்கள் ஆத்மீக கண்கள் திறக்காததால், தங்களுக்கு தெரியாமலே அதனை செய்கிறார்கள். ஏனென்றால் அவர்களில் தேவ ஆவியில்லாதிருந்தது. ஆதலால் அவர்களை குறித்து கர்த்தர் சொல்வது இஸ்ரவேலர் எல்லாரும் இஸ்ரவேலரல்லவே. அவர்களை குறித்து கர்த்தர் சொல்வது
எரேமியா 6: 8-15
எருசலேமே, என் ஆத்துமா உன்னைவிட்டுப் பிரியாதபடிக்கும், நான் உன்னைப் பாழும் குடியற்ற தேசமும் ஆக்காதபடிக்கும் புத்திகேள்.
திராட்சக்குலைகளை அறுக்கிறவனைப்போல உன் கையைத் திரும்பக் கூடைகளின்மேல் போடென்று சொல்லி, அவர்கள் இஸ்ரவேலில் மீதியாயிருந்த கனியைத் திராட்சச்செடியின் கனியைப்போல நன்றாய்ப் பொறுக்கிக்கொண்டுபோவார்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
அவர்கள் கேட்கும்படி நான் யாரோடே பேசி எச்சரிப்பேன்? அவர்களுடைய செவி விருத்தசேதனமில்லாதது; அவர்கள் கேட்கமாட்டார்கள்; கர்த்தருடைய வசனம் அவர்களுக்கு நிந்தையாயிருக்கிறது; அதின்மேல் அவர்களுக்கு விருப்பமில்லை.
ஆகையால் நான் கர்த்தருடைய உக்கிரத்தால் நிறைந்திருக்கிறேன்; அதை அடக்கி இளைத்துப்போனேன்; வீதிகளிலுள்ள பிள்ளைகளின்மேலும், வாலிபருடைய கூட்டத்தின்மேலும் ஏகமாய் அதை ஊற்றிவிடுவேன்; புருஷரும், ஸ்திரீகளும், கிழவரும், பூரணவயதுள்ளவர்களுங்கூடப் பிடிக்கப்படுவார்கள்.
அவர்களுடைய வீடுகளும், அவர்களுடைய காணிபூமிகளும், அவர்களுடைய மனைவிகளோடே ஏகமாய் அந்நியர் வசமாகும்; என் கையை இந்தத் தேசத்தின் குடிகளுக்கு விரோதமாக நீட்டுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
அவர்களில், சிறியோர்முதல் பெரியோர்மட்டும், ஒவ்வொருவரும் பொருளாசைக்காரர்; இதுவுமல்லாமல் தீர்க்கதரிசிகள்முதல் ஆசாரியர்கள்மட்டும் ஒவ்வொருவரும் பொய்யர்.
சமாதானமில்லாதிருந்தும்: சமாதானம் சமாதானம் என்று சொல்லி, என் ஜனத்தின் காயங்களை மேற்பூச்சாய்க் குணமாக்குகிறார்கள்.
அவர்கள் அருவருப்பானதைச் செய்ததினிமித்தம் வெட்கப்படுகிறார்களோ? பரிச்சேதம் வெட்கப்படார்கள், நாணவும் அறியார்கள்; ஆதலால் விழுகிறவர்களுக்குள்ளே விழுவார்கள்; நான் அவர்களை விசாரிக்குங் காலத்தில் இடறுண்டுபோவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
மேற்கூறப்பட்ட வசனங்கள் கர்த்தருக்கு விரோதமாக நாம் செய்கிற அருவருப்புகளினால் கர்த்தர் இவ்விதம் கூறுகிறார். ஆனால் எல்லா அருவருப்புகளையும் நம்மிலிருந்து நீக்கி நம்மை இரட்சிக்கிறவராக கர்த்தர் நம்மில் வெளிப்படுவார். பிரியமானவர்களே நாம் ஒருபோதும் விக்கிரகத்துக்கு அடிமையாகாதபடி காத்துக்கொள்ளும்படியாக ஒபபுக்கொடுப்போம்.
ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.