தேவனுக்கே மகிமையுண்டாவதாக
எபிரெயர் 10:38,39
விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான், பின்வாங்கிப்போவானானால் அவன்மேல் என் ஆத்துமா பிரியமாயிராது என்கிறார்.
நாமோ கெட்டுப்போகப் பின்வாங்குகிறவர்களாயிராமல், ஆத்துமா ஈடேற விசுவாசிக்கிறவர்களாயிருக்கிறோம்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நம்முடைய ஆத்துமா பின்வாங்கி போகாமல் ஜாக்கிரதையாய் காத்துக்கொள்ள வேண்டும்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதபகுதியில் மணவாட்டி சபையாகிய நம்மை கர்த்தர் எப்பொதும் சேர்த்துக்கொள்ளுகிறவராயிருக்கிறார்.
அல்லாமலும் அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்
நியாயாதிபதிகள் 19: 5- 8
நாலாம்நாள் காலமே அவர்கள் எழுந்திருந்தபோது, அவன் பிரயாணப்படுகையில், ஸ்திரீயின் தகப்பன் தன் மருமகனை நோக்கி: கொஞ்சம் அப்பம் புசித்து, உன் மனதைத் தேற்றிக்கொள்; பிற்பாடு நீங்கள் போகலாம் என்றான்.
அவர்கள் உட்கார்ந்து, இருவரும்கூடப் புசித்துக் குடித்தார்கள்; ஸ்திரீயின் தகப்பன் அந்த மனுஷனைப் பார்த்து: நீ தயவுசெய்து, உன் இருதயம் மகிழ்ச்சியடைய இராத்திரிக்கும் இரு என்றான்.
அப்படியே போகிறதற்கு அந்த மனுஷன் எழுந்தபோது, அவனுடைய மாமன் அவனை வருந்திக்கொண்டதினால், அவன் அன்று இராத்திரியும் அங்கே இருந்தான்.
ஐந்தாம் நாளிலே அவன் போகிறதற்கு அதிகாலமே எழுந்திருந்தபோது, ஸ்திரீயின் தகப்பன்: இருந்து உன் இருதயத்தைத் தேற்றிக்கொள் என்றான்; அப்படியே அந்திநேரமட்டும் தாமதித்திருந்து, இருவரும் போஜனம்பண்ணினார்கள்.
பரதேசியாய் தங்கின அந்த லேவியன், அந்த மாமன் வீட்டில் மூன்று நாள் தங்கியிருந்து அங்கே புசித்து, குடித்து இராதங்கின பின்பு, நான்காம் நாள் காலையில் அவன் எழுந்திருந்தின பின்பு அவன் பிரயாணம் தொடங்குகையில், ஸ்திரீயின் தகப்பன் தன் மருமகனை நோக்கி; கொஞ்சம் அப்பம் புசித்து உன் மனதை தேற்றிக்கொள்; பிற்பாடு போகலாம் என்றான். அப்போது அவர்கள் இருவரும் உட்கார்ந்து புசித்து, குடித்தார்கள். பின்பு ஸ்திரியின் தகப்பன் அந்த மனுஷனை பார்த்து, நீ தயவு செய்து, உன் இருதயம் மகிழ்ச்சியடைய இராத்திருக்கும் இரு என்றான். ஆனால் அப்படியே போக அந்த மனுஷன் எழும்பின போது, அந்த மாமனானவன் வருந்திக்கொண்டதினால் அவன் அன்று இரவும் அங்கு இருந்தான். ஐந்தாம் நாளிலே அவன் எழுந்திருந்து போகிறபோது,அந்த ஸ்திரீயின் தகப்பன் இன்றைக்கும் இருந்து இருதயத்தை தேற்றிக்கொள் என்றான்; அப்படியே அந்தி நேரமட்டும் தாமதித்து, இருவரும் போஜனம்பண்ணினார்கள்.
பின்பு நியாயாதிபதிகள் 19:9
பின்பு அவனும், அவன் மறுமனையாட்டியும், அவன் வேலைக்காரனும் போகிறதற்கு எழுந்திருந்தபோது, ஸ்திரீயின் தகப்பனாகிய அவனுடைய மாமன்: இதோ, பொழுது அஸ்தமிக்கப்போகிறது, சாயங்காலமுமாயிற்று; இங்கே இராத்திரிக்கு இருங்கள்; பார், மாலைமயங்குகிற வேளையாயிற்று: உன் இருதயம் சந்தோஷமாயிருக்கும்படி, இங்கே இராத்தங்கி நாளை இருட்டோடே எழுந்திருந்து, உன் வீட்டுக்குப் போகலாம் என்றான்.
மேற்க்கூறிய வசனங்களில் எழுதப்பட்டுள்ள பிரகாரம் அந்த மனுஷனோ இராத்திரிக்கு இருக்க மனதில்லாமல், இரண்டு கழுதைகளின் மேல் சேணம் வைத்து, தன் மறுமனையாட்டியைக் கூட்டிக்கொண்டு எழுந்து புறப்பட்டு எருசலேமாகிய எபூசுக்கு நேராக வந்தான். அவ்விதம் எபூசுக்கு நேராக வரும்போது பொழுது போகிறதாயிருந்தது. அப்பொழுது வேலைக்காரன் தன் எஜமானை நோக்கி, எபூசியர் இருக்கிற இடத்திற்கு போய் அங்கே இராதங்குவோம் என்றான். அதற்கு எஜமான் நாம் வழியை விட்டு மறுஜாதியார் இருக்கிற பட்டணத்திற்கு போகப்படாது; அப்பாலே கிபியா மட்டும் போவோம் என்று சொல்லி, தன் வேலைக்காரனை நோக்கி கிபியாவிலாகிலும், ராமாவிலாகிலும் இராதங்கும்படிக்கு,அவைகளில் ஒரு இடத்திற்கு போய் சேரும்படி நடந்து போவோம் என்றான். அப்படி நடந்து போகையில் பென்யமீன் நாட்டை சேர்ந்த கிபியாவின் கிட்ட வருகையில் சூரியன் அஸ்தமனமாயிற்று.
மேற்க்கூறிய கருத்துக்கள் நம்முடைய ஆத்துமா பாவ மோக பாரம்பரியங்களினால் சிக்குண்டு பின்வாங்குகிற அனுபவத்தை கர்த்தர் திருஷ்டாந்தத்தோடு விளக்குகிறார். என்னவெனில் மறுமனையாட்டி என்கிற போது, மாம்ச கிரியைகளோடு காணப்படுகிற நம்முடைய ஆத்துமா, விட்டுவந்த இடத்திற்கு நம்மைக்கொண்டு செல்கிறது என்றால், பாரம்பரிய சபையை நோக்கிப் போகிறோம். அப்படிப் போகிறவர்களை அது இழுத்து வைத்து, இராத்திரியும் தங்க வைத்து அங்குள்ள போஜனமும் புசிக்க வைக்கிறது என்பதனை தியானிக்கிறோம். அதனைக்குறித்து நாம் தியானிக்கும் போது, அநேக கர்த்தரின் ஊழியக்காரர்கள், தாங்கள் இரட்சிக்கப்பட்டபிறகு, பலவித காரணங்களை, அவர்கள் இருதயங்களுக்கேற்றபடி சிந்தித்துக்கொண்டு, சத்தியத்தில் உணர்வில்லாதவர்களாய், அதனை மாற்றி, சத்தியத்திற்கு தூரமாகி பாரம்பரியமாய் அவர்கள் கைக்கொண்டு வந்த நிலமையிலே தள்ளபட்டு, தாங்கள் பெற்றிருந்த கிருபைகளை போக்கடிக்கிறார்கள்.
அதனை குறித்து ஏசாயா 1:21, 22
உண்மையுள்ள நகரம் எப்படி வேசியாய்ப்போயிற்று! அது நியாயத்தால் நிறைந்திருந்தது, நீதி அதில் குடிகொண்டிருந்தது; இப்பொழுதோ அதின் குடிகள் கொலைபாதகர்.
உன் வெள்ளி களிம்பாயிற்று; உன் திராட்சரசம் தண்ணீர்க்கலப்பானது.
ஆனாலோ அவர்கள் சொல்வது, அங்குள்ளவர்களுக்கு இரட்சிப்பை குறித்து பேசுவதற்கு போனேன் என்று சொல்லி, தங்கள் காரியங்களுக்காக போகிறவர்கள் அநேகம்பேர் உண்டு. எப்படியாயினும் அவர்கள் கிருபையை இழந்து விடுவார்கள். ஆனால் இதனை வாசிக்கிற அன்பானவர்களே, இவை எல்லாவற்றையும் கருத்தில் கொண்டு ஞானமாய் நடக்க முன்வரவேண்டும். இல்லாவிட்டால் அந்த மனுஷனும், மறுமனையாட்டியும் வேலைக்காரனும் இடறியது போல் எபூசியர் பட்டணமாகிய மறு ஜாதியாரண்டைக்கு போகலாம் என்று உள்ளத்தில் தோன்றும். எப்படியாயினும் அவர்கள் யாத்திரை கிபியாவுக்கு நேராக வந்தாலும் சூரியன் அஸ்தமனமாயிற்று.
ஆதலால் பிரியமானர்களே நாம் இருளில் நடவாமல் வெளிச்சத்தில் நடக்கும்படியாக ஒப்புக்கொடுப்போம்.
ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.