தேவனுக்கே மகிமையுண்டாவதாக
சங்கீதம் 23: 1
கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார்; நான் தாழ்ச்சியடையேன்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நம்முடைய வாழ்வில் கர்த்தர் நம் மேய்ப்பராயிருக்கிறார்
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதபகுதியில் மணவாட்டி சபையாகிய நம்முடைய ஆத்துமாவில், பன்னிரண்டு கோத்திரத்தாரின் செயல்பாடுகள் ஒன்றோடொன்று சேர்ந்து ஒரே ஆவியில் கிறிஸ்துவுக்குரிய ஆவிக்குரிய சிந்தையோடு மட்டும் கர்த்தரை மகிமைபடுத்தவேண்டும் என்று தியானித்தோம்.
அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்
நியாயாதிபதிகள் 20:1-9
அப்பொழுது தாண்முதல் பெயெர்செபாமட்டுமுள்ள இஸ்ரவேல் புத்திரர் அனைவரும் கீலேயாத் தேசத்தாருடன் மிஸ்பாவிலே கர்த்தருக்கு முன்பாக ஏகோபித்து சபையாகக் கூடினார்கள்.
சகல ஜனங்களின் அதிபதிகளும், இஸ்ரவேலின் சகல கோத்திரத்தாரும் தேவனுடைய ஜனமாகிய சபையாகக் கூடிநின்றார்கள்; அவர்கள் பட்டயம் உருவுகிற நாலு லட்சம் காலாட்கள்.
இஸ்ரவேல் புத்திரர் மிஸ்பாவுக்கு வந்த செய்தியைப் பென்யமீன் புத்திரர் கேள்விப்பட்டார்கள்; அந்த அக்கிரமம் நடந்தது எப்படி, சொல்லுங்கள் என்று இஸ்ரவேல் புத்திரர் கேட்டார்கள்.
அப்பொழுது கொலைசெய்யப்பட்ட ஸ்திரீயின் புருஷனாகிய லேவியன் மாறுத்தரமாக: நானும் என் மறுமனையாட்டியும் பென்யமீன் நாட்டிலுள்ள கிபியாவிலே இராத்தங்க வந்தோம்.
அப்பொழுது கிபியாபட்டணத்தார் எனக்கு விரோதமாய் எழும்பி, என்னைக் கொலைசெய்ய நினைத்து, நான் இருந்த வீட்டை இராத்திரியிலே வளைந்து கொண்டு, என் மறுமனையாட்டியை அவமானப்படுத்தினார்கள்; அதினாலே அவள் செத்துப்போனாள்.
ஆகையால் இஸ்ரவேலிலே அவர்கள் இப்படிப்பட்ட முறைகேட்டையும் மதிகேட்டையும் செய்தபடியினால், நான் என் மறுமனையாட்டியைப் பிடித்துத் துண்டித்து, இஸ்ரவேலின் சுதந்தரமான சகல நாடுகளுக்கும் அனுப்பினேன்.
நீங்கள் எல்லாரும் இஸ்ரவேல் புத்திரராமே, இங்கே ஆலோசித்துத் தீர்மானம்பண்ணுங்கள் என்றான்.
அப்பொழுது எல்லா ஜனங்களும் ஏகமாய் எழும்பி: நம்மில் ஒருவரும் தன் கூடாரத்திற்குப் போகவும்படாது, ஒருவனும் தன் வீட்டிற்குத் திரும்பவும்படாது.
இப்பொழுது கிபியாவுக்குச் செய்யவேண்டியது என்னவென்றால்: சீட்டுப்போட்டு அதற்கு விரோதமாகப் போவோம்.
மேற்க்கூறிய வசனங்கள் பிரகாரம் தாண் முதல் பெயர்செபா மட்டுமுள்ள இஸ்ரவேல் புத்திரர் அனைவரும் கீலேயாத் தேசத்தாருடன் மிஸ்பாவிலே கர்த்தருக்கு முன்பாக ஏகோபித்து சபையாகக் கூடினார்கள். சகல ஜனங்களின் அதிபதிகளும், இஸ்ரவேலின் சகல கோத்திரத்தாரும் தேவனுடைய ஜனமாகிய சபையாகக் கூடி நின்றார்கள். அவர்கள் பட்டயம் உருவுகிற நாலு லட்சம் காலாட்கள். இவ்விதமாக அவர்கள் ஏகமாய் ஒரு இடத்தில் கூடுகிறார்கள். இவ்விதமாக அவர்கள் கூடுகிற காரணம் என்னவென்றால் பென்யமீனர் செய்த அக்கிரமம் என்ன என்று விசாரிக்கும்படியாக வந்து, அந்த லேவியனுடைய மறுமனையாட்டிக்கு நடந்த காரியங்களை குறித்து விசாரிக்கும் போது , அந்த லேவியன் நடந்த சம்பவங்களை குறித்து சொல்கிறான். என்னவெனில் அவனுடைய மறுமனையாட்டியை குறித்து, கிபியாவிலே இராதங்கும் போது, அந்த இடத்து பென்யமீனர் அவளை அவமானபடுத்தினதையும், அவள் செத்துப்போனதையும் சொல்கிறான்.
மேலும் அவன் சொல்கிறான் நியாயாதிபதிகள் 20:6
ஆகையால் இஸ்ரவேலிலே அவர்கள் இப்படிப்பட்ட முறைகேட்டையும் மதிகேட்டையும் செய்தபடியினால், நான் என் மறுமனையாட்டியைப் பிடித்துத் துண்டித்து, இஸ்ரவேலின் சுதந்தரமான சகல நாடுகளுக்கும் அனுப்பினேன்.
மேற்கூறப்படும் வார்த்தை அவன் அவளை பன்னிரண்டு துண்டங்களாக்கியதையும், இஸ்ரவேலின் எல்லைகளிலெங்கும் அனுப்பியதையும் கூறுகிறான். பின்பு அவன் சொல்வது நீங்கள் எல்லாரும் இஸ்ரவேலரே, இங்கே ஆலோசித்து தீர்மானம் செய்யுங்கள் என்ற போது, ஜனங்கள் எல்லரும் எழும்பி நம்மில் ஒருவனும் கூடாரத்திற்கு போகக்கூடாது; ஒருவனும் தங்கள் வீட்டிற்கும் திரும்பவும் படாது. என்னவென்றால் கிபியாவுக்கு செய்ய வேண்டியது என்னவென்றால்; சீட்டுபோட்டு அவர்களுக்கு விரோதமாக போவோம் என்றார்கள்.
அப்படியாக நியாயாதிபதிகள் 20:10
பென்யமீன் கோத்திரமான கிபியாபட்டணத்தார் இஸ்ரவேலிலே செய்த எல்லா மதிகேட்டுக்கும் தக்கதாக ஜனங்கள் வந்து செய்யும்படிக்கு, நாம் தானியதவசங்களைச் சம்பாதிக்கிறதற்கு, இஸ்ரவேல் கோத்திரங்களிலெல்லாம் நூறுபேரில் பத்துப்பேரையும், ஆயிரம்பேரில் நூறுபேரையும், பதினாயிரம்பேரில் ஆயிரம்பேரையும், தெரிந்தெடுப்போம் என்றார்கள்.
இஸ்ரவேல் புத்திரர் சொல்கிறது எனனவென்றால் பென்யமீனர் செய்த மதிகேட்டுக்கு தக்கதாக ஜனங்கள் செய்யும்படிக்கு,நாம் தானிய தவசங்களை சம்பாதிக்கிறதற்கு, இஸ்ரவேல் கோத்திரங்களிலெல்லாம் நூறு பேருக்கு பத்து பேரையும், ஆயிரம் பேரில் நூறு பேரையும், பதினாயிரம் பேரில் ஆயிரம்பேரையும் தெரிந்தடுப்போம் என்றார்கள். மேலும் இஸ்ரவேரெல்லாரும் ஒன்று போல ஏகோபித்து பட்டணத்துக்கு முன்பாக கூட்டங்கூடுகிறார்கள்.
பிரியமானவர்களே மேற்கூறப்பட்ட வசனங்களில் இரண்டு கூட்டத்தாரும் இஸ்ரவேல் புத்திரர்களும், தங்களுக்குள் சகோதரருமாகதான் இருக்கிறார்கள். ஆனால் இரண்டு சாராருக்குள்ளும் ஒற்றுமை இல்லை; இதன் காரணம் இரண்டு பேரிடத்திலும் மாம்சத்தின கிரியைகள் அதிகமாக இருக்கிறது. அதனால் கர்த்தர் இவ்விரண்டு கூட்டத்தையும் நியாயதீர்க்கும் படியாக கர்த்தர் மிகுந்த ஞானத்தோடு அங்கு விளங்குகிறார்.
அவை என்னவென்றால் எசேக்கியல் 34:20-31
ஆகையால், கர்த்தராகிய ஆண்டவர் அவைகளை நோக்கி: இதோ, நான், நானே கொழுத்த ஆடுகளுக்கும் இளைத்த ஆடுகளுக்கும் நியாயந்தீர்ப்பேன்.
நீங்கள் பலவீனமாயிருக்கிறவைகளையெல்லாம் புறம்பாக்கிச் சிதறப்பண்ணும்படி, அவைகளைப் பக்கத்தினாலும் முன்னந்தொடையினாலும் தள்ளி உங்கள் கொம்புகளைக்கொண்டு முட்டுகிறபடியினாலே,
நான் என் ஆடுகளை இனிச் சூறையாகாதபடிக்கு இரட்சித்து, ஆடுகளுக்கும் ஆடுகளுக்கும் நியாயந்தீர்ப்பேன்.
அவர்களை மேய்க்கும்படி என் தாசனாகிய தாவீது என்னும் ஒரே மேய்ப்பனை நான் அவர்கள்மேல் விசாரிப்பாயிருக்க ஏற்படுத்துவேன்; இவர் அவர்களை மேய்த்து, இவரே அவர்களுக்கு மேய்ப்பனாயிருப்பார்.
கர்த்தராகிய நான் அவர்களுக்குத் தேவனாக இருப்பேன், என் தாசனாகிய தாவீது அவர்கள் நடுவில் அதிபதியாயிருப்பார்; கர்த்தராகிய நான் இதைச் சொன்னேன்.
நான் அவர்களோடு சமாதான உடன்படிக்கைசெய்து, துஷ்ட மிருகங்களை தேசத்தில் இராதபடிக்கு ஒழியப்பண்ணுவேன்; அவர்கள் சுகமாய் வனாந்தரத்தில் தாபரித்து, காடுகளில் நித்திரைபண்ணுவார்கள்.
நான் அவர்களையும் என் மேட்டின் சுற்றுப்புறங்களையும் ஆசீர்வாதமாக்கி, ஏற்றகாலத்திலே மழையைப் பெய்யப்பண்ணுவேன்; ஆசீர்வாதமான மழை பெய்யும்.
வெளியின் விருட்சங்கள் தங்கள் கனியைத்தரும்; பூமி தன் பலனைக்கொடுக்கும்; அவர்கள் தங்கள் தேசத்தில் சுகமாயிருப்பார்கள்; நான் அவர்கள் நுகத்தின் கயிறுகளை அறுத்து, அவர்களை அடிமைகொண்டவர்களின் கைக்கு அவர்களை நீங்கலாக்கி விடுவிக்கும்போது, நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள்.
இனி அவர்கள் புறஜாதிகளுக்குக் கொள்ளையாவதில்லை, பூமியின் மிருகங்கள் அவர்களைப் பட்சிப்பதுமில்லை; தத்தளிக்கப்பண்ணுவார் இல்லாமல் சுகமாய்த் தங்குவார்கள்.
நான் அவர்களுக்குக் கீர்த்திபொருந்திய ஒரு நாற்றை எழும்பப்பண்ணுவேன்; அவர்கள் இனி தேசத்திலே பஞ்சத்தால் வாரிக்கொள்ளப்படுவதுமில்லை, இனிப் புறஜாதிகள் செய்யும் அவமானத்தைச் சுமப்பதுமில்லை.
தங்கள் தேவனாகிய கர்த்தராயிருக்கிற நான் தங்களோடே இருக்கிறதையும், இஸ்ரவேல் வம்சத்தாராகிய தாங்கள் என் ஜனமாயிருக்கிறதையும், அவர்கள் அறிந்துகொள்வார்களென்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
என் மந்தையும் என் மேய்ச்சலின் ஆடுகளுமாகிய நீங்கள் மனுஷர்; நான் உங்கள் தேவன் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார் என்று சொல் என்றார்.
மேற்க்கூறிய வசனங்களை நாம் தியானிக்கும் போது, அந்நாட்களில் ராஜாக்களும், ஆசாரியர்களும் இல்லாததினால், கர்த்தர் அவர்கள் நடுவில் மேய்ப்பராக விளங்கும்படியாகவும், என்றென்றும் அவர் நம்முடைய மேய்ப்பரும், நாம் அவருடைய மந்தையாகவும் இருப்போம் என்பதனை திருஷ்டாந்தப்படுத்துகிறார். இதற்காகவே ஆடுகளுக்கும், ஆடுகளுக்கும் நியாயந்தீர்த்து நம்மை அவருடைய ஆடாக சொல்கிறார். இப்படியாக அவரே நம்முடைய மேய்ப்பராக நம் கர்த்தரிடத்தில் ஒப்புக்கொடுப்போம்.
ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.