தேவனுக்கே மகிமையுண்டாவதாக
1பேதுரு 2:1-3
இப்படியிருக்க, கர்த்தர் தயையுள்ளவரென்பதை நீங்கள் ருசிபார்த்ததுண்டானால்,
சகல துர்க்குணத்தையும், சகலவித கபடத்தையும், வஞ்சகங்களையும், பொறாமைகளையும், சகலவித புறங்கூறுதலையும் ஒழித்துவிட்டு,
நீங்கள் வளரும்படி, புதிதாய்ப் பிறந்த குழந்தைகளைப்போல, திருவசனமாகிய களங்கமில்லாத ஞானப்பாலின்மேல் வாஞ்சையாயிருங்கள்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நம்முடைய சகல துர்குணமும் நீக்கப்பட வேண்டும்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், சமாதானத்துக்கேதுவான காரியங்களை நம் ஆத்துமாவில் நடப்பிக்கிறவர்களாக இருக்க வேண்டும்.
அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவெனில்
நியாயாதிபதிகள் 20: 22 - 24
இஸ்ரவேல் ஜனங்கள் தங்களைத் திடப்படுத்திக்கொண்டு, முதல்நாளில் அணிவகுத்து நின்ற ஸ்தலத்திலே, மறுபடியும் போர்செய்ய அணிவகுத்து நின்றார்கள்.
அவர்கள் போய், கர்த்தருடைய சந்நிதியில் சாயங்காலமட்டும் அழுது: எங்கள் சகோதரராகிய பென்யமீன் புத்திரரோடே திரும்பவும் யுத்தம் கலக்கப்போவோமா என்று கர்த்தரிடத்தில் விசாரித்தார்கள்; அப்பொழுது கர்த்தர்: அவர்களுக்கு விரோதமாய்ப் போங்கள் என்றார்.
மறுநாளிலே இஸ்ரவேல் புத்திரர் பென்யமீன் புத்திரர் கிட்டச் சேருகிறபோது,
மேற்கூறப்பட்ட வசனங்கள் பிரகாரம், இஸ்ரவேல் புத்திரருக்கும், இஸ்ரவேல் புத்திரராகிய பென்யமீனருக்கும் இடையே நடந்த யுத்தத்தில், பென்யமீனர் வெற்றிபெற்றனர். அதன் பிரகாரம் இரண்டாவதாக இஸ்ரவேல் ஜனங்கள் தங்களை திடபடுத்திக்கொண்டு முதல் தடவை அணிவகுத்து நின்ற ஸ்தலத்திலே மறுபடியும் போர்செ்ய அணிவகுத்து நின்றார்கள். அவர்கள் போய், கர்த்தருடைய சந்நிதியில் சாயங்காலம் மட்டும் அழுது, எங்கள் சகோதரராகிய பென்யமீன் புத்திரரோடே திரும்பவும் யுத்தம் கலக்க போவோமா என்று கர்த்தரிடத்தில் விசாரித்ததிற்கு, கர்த்தர் அவர்களுக்கு விரோதமாக போங்கள்என்றார். அப்போது மறுநாளிலே இஸ்ரவேல் புத்திரர், பென்யமீன்புத்திரர் கிட்ட சேருகிறபோது
நியாயாதிபதிகள் 20:25
பென்யமீன் கோத்திரத்தாரும் அந்நாளிலே கிபியாவிலிருந்து அவர்களுக்கு எதிராகப் புறப்பட்டுவந்து, பின்னும் இஸ்ரவேல் புத்திரரில் பட்டயம் உருவுகிற பதினெண்ணாயிரம்பேரைத் தரையிலே விழும்படி சங்கரித்தார்கள்.
இந்த வசனங்களில் கூறப்பட்டபடியே, பென்யமீன் புத்திரர், இஸ்ரவேல் புத்திரரில் பட்டயம் உருவுகிற பதினெண்ணாயிரம் பேரை தரையிலே விழும்படி சங்கரித்தார்கள். அப்பொழுது
நியாயாதிபதிகள் 20:26-28
அப்பொழுது இஸ்ரவேல் புத்திரராகிய சகல ஜனங்களும் புறப்பட்டு, தேவனுடைய வீட்டிற்குப் போய், அங்கே கர்த்தருடைய சந்நிதியில் அழுது, தரித்திருந்து, அன்று சாயங்காலமட்டும் உபவாசித்து, கர்த்தருடைய சந்நிதியில் சர்வாங்க தகனபலிகளையும் சமாதானபலிகளையும் இட்டு,
கர்த்தரிடத்தில் விசாரித்தார்கள்; தேவனுடைய உடன்படிக்கையின் பெட்டி அந்நாட்களில் அங்கே இருந்தது.
ஆரோனின் குமாரனாகிய எலெயாசாரின் மகன் பினெகாஸ் அந்நாட்களில் அவருடைய சந்நிதியில் நின்றான்; எங்கள் சகோதரராகிய பென்யமீன் புத்திரரோடே பின்னும் யுத்தம்பண்ணப் புறப்படலாமா புறப்படலாகாதா என்று அவர்கள் விசாரித்தார்கள்; அப்பொழுது கர்த்தர்: போங்கள்; நாளைக்கு அவர்களை உங்கள் கையில் ஒப்புக்கொடுப்பேன் என்றார்.
மேற்கூறப்பட்ட வசனங்களை நாம் தியானிக்கும் போது மூன்றாம் தடவை இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரிடத்தில் விசாரிப்பதற்காக தேவனுடைய வீட்டில் பிரவேசித்து, அங்கே கர்த்தருடைய சந்நிதியில் அழுது, தரித்திருந்து சாயங்காலம் மட்டும் உபவாசித்து, கர்த்தருடைய சந்நிதியில் சர்வாங்க தகன பலிகளையும், சமாதானபலிகளையும் இட்டு கர்த்தரிடத்தில் விசாரித்தார்கள். தேவனுடைய உடன்படிக்கைப்பெட்டி அந்நாட்களில் அங்கே இருந்தது. மேலும் ஆரோனின் குமாரனாகிய எலெயாசாரின் மகன் பினெகாஸ் அவருடைய சந்நிதியில் நின்றான். அவன் கர்த்தரிடத்தில் எங்கள் சகோதரன் பென்யமீன் புத்திரரோடு யுத்தம் பண்ண புறப்படலாமா புறப்படலாகாதா என்று விசாரித்ததற்கு, கர்த்தர் போங்கள் நாளைக்கு அவர்களை உங்கள் கையில் ஒப்புக்கொடுப்பேன் என்றார்.
பிரியமானவர்களே நாம் மேற்கூறிய வசனங்களை தியானிக்கையில், இஸ்ரவேல் புத்திரரின் பொல்லாத கிரியைகளை கர்த்தர் பென்யமீன் புத்திரரை வைத்து சங்கரிப்பதையும், மேலும் இஸ்ரவேல் புத்திரர் கர்த்தருக்கு செலுத்த வேண்டிய சர்வாங்க தகன பலிகளையும், சமாதான பலிகளையும் செலுத்தும் போது பென்யமீனரை சங்கரிப்பதையும் வாசிக்கிறோம். இவைகள் எப்படியென்றால் நம் உள்ளத்தில் செயல்பாடுகளை கர்த்தர் ஒரே கிறிஸ்துவின் சிந்தையாக்குகிறார். எப்படியென்றால் முதலாம் முறை இஸ்ரவேலரால் சங்கரிக்கப்பட்டு தரையில் விழுகிறார்கள். இரண்டாம் முறை அவர்கள் கர்த்தரிடத்தில் விசாரித்தபோது, பென்யமீனருக்கு விரோதமாக போங்கள் என்கிறார். ஆனால் இஸ்ரவேலர் சங்கரிக்கப்படுகிறார்கள். காரணம் என்னவென்றால் அவர்கள் செலுத்தபட வேண்டிய பலியை செலுத்தாமல் முந்தின பிரகாரமே அதே ஸ்தலத்தில் அணிவகுத்து நின்றார்கள். ஆனால் அவர்கள் கர்த்தரிடத்தில் எந்த ஒப்புரவாகுதலும் இல்லாதிருந்தது. எப்படியென்றால் அவர்கள் செலுத்தபடவேண்டிய பலியை செலுத்தவில்லை; ஆதலால் கர்த்தர் பென்யமீனருக்கு விரோதமாக போங்கள் என்றார். ஆனால் அவர்கள் சங்கரிக்கப்பட்டார்கள், ஏனென்றால் கர்த்தரின் ஞானம் அளவிடமுடியாதது. இப்படி தான் நாமும் கர்த்தர் நம்மிடத்தில் பேசுகிற தீர்க்கதரிசன வார்த்தைகளை தவறாக நினைத்து கர்த்தர் மேல் குற்றம் சாட்டி மீண்டும் அடுத்த பாவத்திற்கு ஆளாகி,ஆக்கினைக்குள்ளாக தீர்க்கப்படுகிறோம். மேலும் மூன்றாம் முறை அவர்கள் கர்த்தரிடத்தில் அழுது, உபவாசித்து, பலிகளை செலுத்தி கர்த்தரின் வார்த்தைகளை காத்துக்கொண்டதால், இஸ்ரவேலர் விசாரித்தபோது பென்யமீனரை உங்கள் கையில் நாளைக்கு ஒப்புக்கொடுப்பேன் என்கிறார்.
இப்படியாக நம்முடைய எல்லாவித அழுக்கையும், துர்குணத்தையும், நீக்கி நம்மை சுத்திகரிப்பதற்கு நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து உண்மையும், நீதியுமுள்ளவராக விளங்குகிறார். இவ்விதம் நாம் சுத்திகரிக்கப்படும்படியாக ஒப்புக்கொடுப்போம்
ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.