தேவனுக்கே மகிமையுண்டாவதாக

எபிரெயர் 4:12

தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், ஆத்துமாவையும் ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக் குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.  அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நம்முடைய ஆத்தும இரட்சிப்பு எப்படியாயிருக்கிறது என்பதனை, கர்த்தர் தம்முடைய வார்த்தையை நமக்குள் அனுப்பி நம்மை ஆராய்ந்து, அவரோடு ஜக்கியப்படுகிறவர்களை தெரிந்தெடுக்கிறார்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில் மணவாட்டி சபையாகிய நம்மை கர்த்தர் நினைத்தருளினாரானால், நிச்சயமாக நம்மை இரட்சிக்கிறார் என்பதனை குறித்து நாம் தியானித்தோம்.  

அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

1சாமுவேல் 2: 1-10  

அப்பொழுது அன்னாள் ஜெபம்பண்ணி: என் இருதயம் கர்த்தருக்குள் களிகூருகிறது; என் கொம்பு கர்த்தருக்குள் உயர்ந்திருக்கிறது; என் பகைஞரின்மேல் என் வாய் திறந்திருக்கிறது; உம்முடைய இரட்சிப்பினாலே சந்தோஷப்படுகிறேன்.

கர்த்தரைப்போலப் பரிசுத்தமுள்ளவர் இல்லை; உம்மையல்லாமல் வேறொருவரும் இல்லை; எங்கள் தேவனைப்போல ஒரு கன்மலையும் இல்லை.

இனி மேட்டிமையான பேச்சைப் பேசாதிருங்கள்; அகந்தையான பேச்சு உங்கள் வாயிலிருந்து புறப்படவேண்டாம்; கர்த்தர் ஞானமுள்ள தேவன்; அவர் செய்கைகள் யதார்த்தமல்லவோ?

பலவான்களின் வில் முறிந்தது; தள்ளாடினவர்களோ பலத்தினால் இடைகட்டப்பட்டார்கள்.

திருப்தியாயிருந்தவர்கள் அப்பத்துக்காக கூலிவேலை செய்கிறார்கள்; பசியாயிருந்தவர்களோ இனிப் பசியாயிரார்கள்; மலடியாயிருந்தவள் ஏழு பெற்றாள்; அநேகம் பிள்ளைகளைப் பெற்றவளோ பலட்சயப்பட்டாள்.

கர்த்தர் கொல்லுகிறவரும் உயிர்ப்பிக்கிறவருமாயிருக்கிறார்; அவரே பாதாளத்தில் இறங்கவும் அதிலிருந்து ஏறவும்பண்ணுகிறவர்.

கர்த்தர் தரித்திரம் அடையச்செய்கிறவரும், ஐசுவரியம் அடையப்பண்ணுகிறவருமாயிருக்கிறார்; அவர் தாழ்த்துகிறவரும், உயர்த்துகிறவருமானவர்.

அவர் சிறியவனைப் புழுதியிலிருந்து எடுத்து, எளியவனைக் குப்பையிலிருந்து உயர்த்துகிறார்; அவர்களைப் பிரபுக்களோடே உட்காரவும், மகிமையுள்ள சிங்காசனத்தைச் சுதந்தரிக்கவும் பண்ணுகிறார்; பூமியின் அஸ்திபாரங்கள் கர்த்தருடையவைகள்; அவரே அவைகளின்மேல் பூச்சக்கரத்தை வைத்தார்.

அவர் தமது பரிசுத்தவான்களின் பாதங்களைக் காப்பார்; துன்மார்க்கர் இருளிலே மௌனமாவார்கள்; பெலத்தினால் ஒருவனும் மேற்கொள்வதில்லை.

கர்த்தரோடே வழக்காடுகிறவர்கள் நொறுக்கப்படுவார்கள்; வானத்திலிருந்து அவர்கள்மேல் முழங்குவார்; கர்த்தர் பூமியின் கடையாந்தரங்களை நியாயந்தீர்த்து, தாம் ஏற்படுத்தின ராஜாவுக்குப் பெலன் அளித்து, தாம் அபிஷேகம்பண்ணினவரின் கொம்பை உயரப்பண்ணுவார் என்று துதித்தாள்.

மேற்கூறப்பட்ட வசனங்களை நாம் தியானிக்கும் போது கர்த்தர் அன்னாளை இரட்சித்திருக்க: அவள் ஜெபம் பண்ணி; என் இருதயம் கர்த்தருக்குள் களிக்கூர்ந்திருக்கிறது; என் பகைஞரின் மேல் என் வாய் திறந்திருக்கிறது; உம்முடைய இரட்சிப்பினால் சந்தோஷப்படுகிறேன்.  இவ்விதமாக இரட்சிக்கப்பட்ட நம்முடைய ஆத்துமா கர்த்தரை துதிக்கும் சத்தம் நம்முடைய வாயை திறந்து கர்த்தரை மகிமைபடுத்தவேண்டும்.  அவள் இப்படியாக கர்த்தரை துதிக்கும் சத்தத்தை தொனிக்கப்பண்ணின பின்பு,எல்க்கானா ராமாவிலிருக்கிற தன் வீட்டுக்கு போனான்; அந்த பிள்ளையோ ஆசாரியனாகிய  ஏலிக்கு முன்பாக கர்த்தருக்கு  பணிவிடை செய்தான். ஆனால் ஏலியின் குமாரர் பேலியாளின் மக்களாயிருந்தார்கள்: அவர்கள் கர்த்தரை அறியாதவர்களாயிருந்தார்கள். அந்த ஆசாரியரகள் ஜனங்களை நடப்பித்த விதம் எப்படியென்றால்  யாராவது ஒரு பலியை செலுத்துங்காலத்தில் இறைச்சி வேகும் போது ஆசாரியனுடைய வேலைக்காரன் மூன்று கூறுள்ள ஒரு ஆயுதத்தை கையிலே பிடித்துக்கொண்டு, அதினாலே கொப்பரையிலாவது பானையிலாவது,சருவத்திலாவது சட்டியிலாவது குத்துவான், அந்த ஆயுதத்தில் வருகிறதை ஆசாரியன் எடுத்துக்கொள்வான்; அப்படியே அங்கே சீலோவிலே வருகிற இஸ்ரவேலருக்கெல்லாம் செய்தார்கள்.  

பிரியமானவர்களே, இதனை கர்த்தர் எதற்காக திருஷ்டாந்தப்படுத்துகிறாரென்றால்,  நம் ஆத்துமா இரட்சிப்பின் சந்தோஷத்திற்குள் வந்த பிறகு, கிறிஸ்து நம்மில் இருந்து எப்போதும் கர்த்தருக்குள் களிகூர்ந்துக்கொண்டு, கர்த்தரை துதிக்கும் கொம்பு நம்மில் உயர்ந்துக்கொண்டிருக்கும்.  அல்லாமலும் அவருடைய வாய் எப்போதும் தேவனுக்குரிய சாட்சியோடிருக்கும்.  மேலும் ஜனங்களண்டையில் உபதேசிப்பார்.  அவரோடு வழக்காடுகிறவர்களை அவர் நொறுக்குவார். நம்முடைய தேவனாகிய கர்த்தர் வானத்திலிருந்து முழங்குவார்.  நம்முடைய பூமிக்குரிய கிரியைகளை நியாயந்தீர்த்துக்கொண்டு, கிறிஸ்துவை நமக்குள் அபிஷேகித்து, அதன் பெலனை அதிகரிக்க செய்து, அவரிலிருந்து நம்முடைய  நாவு மூலம் எப்போதும் தேவனை துதிக்கும் துதி உயர்ந்துக்கொண்டிருக்கும்.  இப்படியாக நம் வாழ்வில் பரிசுத்தம் விளங்கும்.   நம்முடைய ஆத்துமா கிறிஸ்துவோடு தங்கியிருந்து, கர்த்தருக்குரிய பணிவிடை செய்வோம். அப்போது உலகம் நம்மை விட்டு ஒவ்வொன்றாக நீங்கும். 

அல்லாமலும் நாம் கர்த்தருக்கு பலிசெலுத்தும் போது கர்த்தர் அதனை ஏற்றுக்கொள்கிறது எப்படியென்றால் திரித்துவ தேவனுடைய வசனத்தினால் நம்மை ஆராய்கிறார்.  எப்படியெனில் அவருடைய வார்த்தையை நம் உள்ளத்தில் அனுப்பும் போது, அது உருவ குத்துகிறதாய் துளைத்து சென்றால், அந்த உருவ குத்துகிற ஆயுதமானது தேவனுடைய வார்த்தை, அந்த வார்த்தையை ஏற்றுக்கொள்கிறவர்களை அவர் ஆராய்ந்து அறிந்து தம்மண்டையில் சேர்த்துக்கொள்வார்.  இவ்விதமாக இஸ்ரவேலரை தெரிந்தெடுக்கிறார்.  நம்மையும் இவ்விதமாக ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.