தேவனுக்கே மகிமையுண்டாவதாக

நீதிமொழிகள் 29:17

உன் மகனைச் சிட்சைசெய், அவன் உனக்கு ஆறுதல்செய்வான், உன் ஆத்துமாவுக்கு ஆனந்தத்தையும் உண்டாக்குவான். 

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.  அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாமும் நம்முடைய குடும்பமும் கர்த்தரின்  பாதையை விட்டு தவறாமல் நடக்க வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில் மணவாட்டி சபையாகிய நாம் கவலைகள் போக்க கர்த்தரின் சந்நிதியில் நம்முடைய உள்ளம் உடைக்கப்பட்டு ஊற்றப்பட வேண்டும் என்பதனைக் குறித்து தியானித்தோம்.  

அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

1 சாமுவேல் 2:22- 24 

ஏலி மிகுந்த கிழவனாயிருந்தான்; அவன் தன் குமாரர் இஸ்ரவேலுக்கெல்லாம் செய்கிற எல்லாவற்றையும், அவர்கள் ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலில் கூட்டங்கூடுகிற ஸ்திரீகளோடே சயனிக்கிறதையும் கேள்விப்பட்டு,

அவர்களை நோக்கி: நீங்கள் இப்படிப்பட்ட காரியங்களைச் செய்கிறது என்ன? இந்த ஜனங்கள் எல்லாரும் உங்கள் பொல்லாத நடக்கைகளைச் சொல்லக்கேட்கிறேன்.

என் குமாரரே, வேண்டாம்; நான் கேள்விப்படுகிற இந்தச் செய்தி நல்லதல்ல; கர்த்தருடைய ஜனங்கள் மீறி நடக்கிறதற்குக் காரணமாயிருக்கிறீர்களே.

மேற்க்கூறிய வசனங்களை நாம் தியானிக்கையில் ஆசாரியனாகிய ஏலி வயது சென்ற கிழவனாயிருந்தான்.  அவன் தன்னுடைய குமாரர்களாகிய ஓப்னியும், பினெகாசும் ஆசரிப்புக்கூடாரத்து  வாசற்படியிற் கூடுகிற ஸ்திரீகளோடேசெய்கிற எல்லாஅருவருப்புகளையும்,  குறிப்பாக இஸரவேலருக்கு செய்கிற எல்லாவற்றையும் அவன் கேள்விபட்டு, தன் குமாரரை நோக்கி; என் குமாரரே, வேண்டாம், நான் கேள்விப்படுகிற இந்த செய்தி நல்லதல்ல, கர்த்தருடைய ஜனங்கள் மீறி நடக்கிறதற்கு காரணமாயிருக்கிறீர்கள் என்றும் அல்லாமலும்  

1 சாமுவேல் 2: 25  

மனுஷனுக்கு விரோதமாக மனுஷன் பாவஞ்செய்தால், நியாயாதிபதிகள் அதைத் தீர்ப்பார்கள்; ஒருவன் கர்த்தருக்கு விரோதமாகப் பாவஞ்செய்வானேயாகில், அவனுக்காக விண்ணப்பஞ்செய்யத்தக்கவன் யார் என்றான்; அவர்களோ தங்கள் தகப்பன் சொல்லைக் கேளாமற்போனார்கள்; அவர்களைச் சங்கரிக்கக் கர்த்தர் சித்தமாயிருந்தார்.

ஆனால் சாமுவேல் என்னும் பிள்ளையாண்டான் பெரியவனாக வளர்ந்து, கர்த்தருக்கும் மனுஷருக்கும் பிரியமாக நடந்துக்கொண்டான்.  அப்போது தேவனுடைய மனுஷன் ஒருவன் ஏலியினிடத்தில் வந்து: கர்த்தர் உரைக்கிற வார்த்தையை வெளிப்படுத்துகிறான்.  என்னவென்றால்  ஆசாரியனாகிய ஏலியோடு உன் பிதாவின் வீட்டார்  எகிப்திலே பார்வோனின் வீட்டிலே  இருக்கும் போது கர்த்தர் அவர்களுக்கு வெளிப்பட்டதையும், மேலும் பலிபீடத்தின் மேல் பலியிடவும், தூபங்காட்டவும், கர்த்தரின் சமூகத்தில் ஏபோத்தை தரிக்கவும், இஸ்ரவேல் கோத்திரங்களிலெல்லாம் ஆசாரியனாக தெரிந்துக்கொண்டதையும், மேலும் பிதாவின் வீட்டாருக்கு இஸ்ரவேல் புத்திரருடைய தகனபலிகளையெல்லாம் கொடுத்ததையும் எடுத்துகூறுகிறார்.  

ஆனாலும்  1சாமுவேல் 2:29  

என் வாசஸ்தலத்திலே செலுத்தும்படி நான் கட்டளையிட்ட என் பலியையும், என் காணிக்கையையும், நீங்கள் உதைப்பானேன்? என் ஜனமாகிய இஸ்ரவேலின் காணிக்கைகளிலெல்லாம் பிரதானமானவைகளைக்கொண்டு உங்களைக் கொழுக்கப்பண்ணும்படிக்கு, நீ என்னைப்பார்க்கிலும் உன் குமாரரை மதிப்பானேன் என்கிறார்.

மேற்க்கூறப்படுகிற வார்த்தைகளின் படி நடக்கிறபடியினால் 

1சாமு 2:30   

ஆகையால் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறதாவது: உன் வீட்டாரும் உன் பிதாவின் வீட்டாரும் என்றைக்கும் என் சந்நிதியில் நடந்து கொள்வார்கள் என்று நான் நிச்சயமாய்ச் சொல்லியிருந்தும், இனி அது எனக்குத் தூரமாயிருப்பதாக; என்னைக் கனம்பண்ணுகிறவர்களை நான் கனம் பண்ணுவேன்; என்னை அசட்டை பண்ணுகிறவர்கள் கனவீனப்படுவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

மேற்க்கூறப்பட்ட வார்த்தைகளை நாம் தியானிக்கும் போது கர்த்தர் நமக்கு நன்மையான ஆசீர்வாதங்களை தந்திருந்தாலும், நம் நடத்தைகள் அல்லது நம் பிள்ளைகளின் நடத்தைகள் பொல்லாததாய் இருந்தால் கர்த்தர் மேலே கூறப்பட்டிருக்கிற தீமைகள் நமக்கு வந்து நேரிடக்கூடும். 

ஆதலால் பிரியமானவர்களே, நம்முடைய பாவம் மட்டுமல்ல , நம்முடைய பிள்ளைகளை நாம் சரியாக தண்டித்து வளர்க்கா விட்டால், தேவ கோபம் நம்மேல் இறங்கும்.  ஆனால் ஏலியின் குமாரர்களோடு அவன் தப்பிதங்களை எடுத்து சொல்லுகிறான்.  ஆனால் பிள்ளைகள் அதற்கு கீழ்படியவில்லை.  ஆதலால் முழு குடும்பத்துக்கும், கர்த்தர் சாபத்தை கட்டளையிடுகிறார்.  அதுபோல நாமும், நம்முடைய குமாரர், குமாரத்திகள் கீழ்படியாவிட்டால் நிர்விசாரமாக தள்ளிவிடுகிறோம். கீழ்படியவில்லை, நாம் இனி என்ன செய்ய முடியும் என்று எண்ணி தள்ளிவிடுகிறோம்.  இவ்விதமாக நாம் செய்தால் கர்த்தர் அந்த காரணத்தை ஒருபோதும் நம்மிடத்தில் ஏற்றுக்கொள்ளமாட்டார்.  அல்லாமலும் தேவன் வாக்கு தந்தார், அதனால் கர்த்தர் அதனை பார்த்துக்கொள்வார் என்றும் நாம் சொல்லி வர முடியாது.  அதற்கு தான் கர்த்தர்சொல்கிறார்; உன் வீட்டாரும், உன் பிதாவின் வீட்டாரும் என்றைக்கும் என் சந்நிதியில் நடந்துக்கொள்வார்கள் என்று நான் நிச்சயமாய் சொல்லியிருந்தும், இனி எனக்கு அது தூரமாயிருப்பதாக; என்னை கனம் பண்ணுகிறவர்களை நான் கனம் பண்ணுவேன்; என்னை அசட்டைபண்ணுகிறவர்கள் கன ஈனப்படுவார்கள் என்று கர்த்தர் கூறுகிறதை பார்க்கிறோம்.  

ஆதலால்  நாமும் நம்முடைய பிள்ளைகளும் கர்த்தரின் வழியை விட்டு தவறாமல் நடக்கும்படியாக ஒப்புக்கொடுப்போம். அவர் ஆசீர்வதிப்பார். ஜெபிப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.