தேவனுக்கே மகிமையுண்டாவதாக

சங்கீதம் 9:1 

கர்த்தாவே, என் முழு இருதயத்தோடும் உம்மைத் துதிப்பேன்; உம்முடைய அதிசயங்களையெல்லாம் விவரிப்பேன்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.  அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் நம்மை கர்த்தரின் சித்தத்திற்கு ஒப்புக்கொடுப்போம்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில் மணவாட்டி சபையாகிய நமக்கு கர்த்தர் வேறு இருதயத்தை கொடுக்கிறார் என்பதனை குறித்து தியானித்தோம்.  

அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

1சாமுவேல் 10:12-16 

அதற்கு அங்கே இருக்கிறவர்களில் ஒருவன்: இவர்களுக்குத் தகப்பன் யார் என்றான்; ஆதலால் சவுலும் தீர்க்கதரிசிகளில் ஒருவனோ? என்பது பழமொழியாயிற்று.

அவன் தீர்க்கதரிசனம் சொல்லி முடிந்தபின்பு, மேடையின்மேல் வந்தான்.

அப்பொழுது சவுலுடைய சிறிய தகப்பன்: நீங்கள் எங்கே போனீர்கள் என்று அவனையும் அவன் வேலைக்காரனையும் கேட்டான். அதற்கு அவன்: நாங்கள் கழுதைகளைத் தேடப்போய், அவைகளை எங்குங் காணாதபடியினால், சாமுவேலிடத்துக்குப் போனோம் என்றான்.

அப்பொழுது சவுலின் சிறியதகப்பன்: சாமுவேல் உங்களுக்குச் சொன்னது என்ன? அதைச் சொல் என்றான்.

சவுல் தன் சிறியதகப்பனைப் பார்த்து: கழுதைகள் அகப்பட்டது என்று எங்களுக்குத் தீர்மானமாய்ச் சொன்னார் என்றான்; ஆனாலும் ராஜ்யபாரத்தைப்பற்றிச் சாமுவேல் சொன்னதை அவனுக்கு அறிவிக்கவில்லை.

மேற்கூறப்படுகிற வசனங்களில் சவுல் தீர்க்கதரிசனம் சொன்னதை கேட்ட ஜனங்கள், சவுல் தீர்க்கதரிசிகளில் ஒருவனோ என்று சொல்லிக்கொண்டதால், சவுலும் தீர்க்கதரிசிகளில் ஒருவனோ என்பது பழமொழியாயிற்று.  பின்பு அவன் மேடைக்கு வந்தான்.  அப்பொழுது அவன் சிறிய தகப்பன். நீங்கள் எங்கே போனீர்கள் என்று, அவன் வேலைக்காரனை கேட்டதற்கு, நாங்கள் கழுதைகளை தேடப்போய், அவைகளை எங்கும் கண்டுபிடியாதபடியால், சாமுவேலிடத்திற்கு போனோம் என்றான்.  அதற்கு அவன் சாமுவேல் உங்களுக்கு என்ன சொன்னான் என்று கேட்டதற்கு, சவுல் சிறிய தகப்பனை பார்த்து கழுதைகள் அகப்பட்டது என்று எங்களுக்கு தீர்மானமாய் அறிவிக்கப்பட்டது என்று சொன்னதுமல்லாமல், ராஜ்யபாரத்தை பற்றி சாமுவேல் சொன்னது அவனுக்கு அறிவிக்கவில்லை.  

பின்பு சாமுவேல் ஜனங்களை மிஸ்பாவில் கர்த்தரிடத்தில் வரவழைத்து 

1சாமுவேல் 10:18-19 

இஸ்ரவேல் புத்திரரை நோக்கி: இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், நான் இஸ்ரவேலை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணி, உங்களை எகிப்தியர் கைக்கும், உங்களை இறுகப்பிடித்த எல்லா ராஜ்யத்தாரின் கைக்கும் நீங்கலாக்கிவிட்டேன்.

நீங்களோ உங்களுடைய எல்லாத் தீங்குகளுக்கும் நெருக்கங்களுக்கும் உங்களை நீங்கலாக்கி ரட்சித்த உங்கள் தேவனை இந்நாளிலே புறக்கணித்து, ஒரு ராஜாவை எங்கள்மேல் ஏற்படுத்தும் என்று அவரிடத்தில் கேட்டுக்கொண்டீர்கள்; இப்பொழுது கர்த்தருடைய சந்நிதியில் உங்கள் வம்சங்களின்படியேயும், ஆயிரங்களான உங்கள் சேர்வைகளின்படியேயும், வந்து நில்லுங்கள்; என்றான்.

மேற்க்கூறப்பட்டிருக்கிற வசனங்களை தியானிக்கையில் இஸ்ரவேலர், தேவன் அவர்களுக்கு எவ்வளவோ இக்கட்டிலிருந்து விடுவித்து இரட்சித்தும் அதனை உணராமல்,தேவனை புறக்கணித்து தள்ளி, தங்களுக்கு ஒரு ராஜா வேண்டுமென்று கேட்டுக் கொண்டதால், சாமுவேல் அவர்களிடம் கர்த்தருடைய சந்நிதியில் உங்கள் வம்சங்களின் படியேயும் ஆயிரங்களான உங்கள் சேர்வையின்படியேயும் வந்து நில்லுங்கள் என்றான்.  அவ்விதமாக நிறுத்தினபின்பு பென்யமீன் கோத்திரத்தின் மேல் சீட்டு விழுந்தது.  

பின்பு 1சாமுவேல் 10:22  

அவன் இனி இங்கே வருவானா என்று அவர்கள் திரும்பக் கர்த்தரிடத்தில் விசாரித்தபோது: இதோ, அவன் தளவாடங்களிருக்கிற இடத்திலே ஒளித்துக்கொண்டிருக்கிறான் என்று கர்த்தர் சொன்னார்.

மேற்கூறப்பட்டிருக்கிற வசனங்களை நாம் தியானிக்கும் போது கீசின் குமாரன் சவுலின் பேரில் சீட்டு விழுந்தது, அவனை தேடினபோது அவன் அகப்படவில்லை.  ஆனால் அவன் வருவானா என்று கர்த்தரிடத்தில் விசாரித்தபோது, இதோ அவன் தளவாடங்களண்டையில் ஒளித்துக்கொண்டிருக்கிறான் என்று கர்த்தர் சொன்னார். 

பிரியமானவர்களே இப்படிதான் நம்மமிலும் அநேகர் கர்த்தரால் அழைத்து, தெரிந்தெடுத்து தம்முடைய அபிஷேகத்தால் அபிஷேகித்து எடுப்பதற்காக காத்திருக்கும் போது, நாம் அவரண்டையில் சேராமலும், அவருடைய ராஜரீக அபிஷேகத்தை அசட்டைபண்ணியுமாக, நம்முடைய விருப்பத்திற்கேற்றபடிசெய்து, மனது விரும்புகிறபிரகாரம் நடந்து ஒளித்துக்கொள்வோம். ஆனாலும் நம்மை அழைக்க சித்தமுள்ளவர் நாம் எவ்விதம் அவரை காணாமல் ஒளித்தாலும் நம்மை கண்டு பிடித்து அவரண்டையில் நிறுத்துவார் என்பதில் சந்தேகமில்லை.  ஆதலால் பிரியமானவர்களே நாம் இன்றைக்கே அவரண்டையில் நம்மை முழுமையும் ஒப்புக்கொடுப்போம்

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.