தேவனுக்கே மகிமையுண்டாவதாக
சங்கீதம் 44:4
தேவனே, நீர் என் ராஜா, யாக்கோபுக்கு இரட்சிப்பைக் கட்டளையிடும்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலூயா.
யாக்கோபு- சபைகளில்- இரண்டுவித தோற்றம் எழுப்புதல்:-
கர்த்தருக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாட்களில் நாம் தியானித்த வேத பகுதியை ஒன்று சிந்திப்போம். லேயாள் நான்கு குமாரனை முதலில் யாக்கோபுக்கு பெற்றெடுக்கிறாள். அவளிடத்தில் எரிச்சல் கொண்ட ராகேல் அவளுடைய வேலைகாரியாகிய பில்காளை யாக்கோபுக்கு மனைவியாகக் கொடுத்து, இரண்டு குமாரர்களை பெற்றெடுக்கிறதை பார்க்கிறோம். அதைக் கண்ட லேயாள் தன் வேலைகாரியாகிய சில்பாளை அழைத்து,தன் புருஷனுக்கு மனைவியாக கொடுக்கிறாள். அவள் காத் என்றும்,ஆசேர் என்றும் இரண்டு குமாரனை யாக்கோபுக்கு பெற்றெடுக்கிறாள்.
மேலும், கோதுமை அறுப்பு நாட்களில் ரூபன் வயல்வெளியில் போயிருக்கும் போது தூதாயீம் கனிகளைக் எடுத்து அவைகளை கொண்டு வந்து தன் தாயாகிய லேயாளிடத்தில் கொடுத்தான். அப்பொழுது ராகேல்,லேயாளை நோக்கி உன் குமாரனுடைய தூதாயீம் கனியில் எனக்கு கொஞ்சம் தா என்றாள்.
அதற்கு லேயாள் ராகேலிடம் என் புருஷனை எடுத்துக்கொண்டது அற்ப காரியமா? இப்போதும் என் மகனுடைய தூதாயீம் கனிகளையும் எடுத்துக்கொள்ள வேண்டுமோ என்றாள். அதற்கு ராகேல் உன் குமாரனுடைய தூதாயீம் கனிகளுக்கு ஈடாக இன்று என் புருஷனை உனக்குத் தருகிறேன் என்று சொல்ல, சாயங்காலத்தில் யாக்கோபு வெளியிலிருந்து வருகையில் லேயாள் புறப்பட்டு அவனுக்கு எதிர்கொண்டு போய் என் குமாரனுடைய தூதாயீம் கனிகளால் உம்மை கொண்டேன் என்று சொல்ல, யாக்கோபு அதற்கு செவிகொடுத்து, லேயாள் கர்ப்பவதியாகி ஐந்தாம் குமாரனாகிய இசக்காரை யாக்கோபுக்கு பெற்றெடுக்கிறாள்.
மேலும், லேயாள் யாக்கோபுக்கு ஆறாம் குமாரனாகிய செபுலோனை பெற்றெடுக்கிறாள்.
இவ்விதமாக யாக்கோபு நான்கு மாம்ச சந்ததிகளை பெற்றிருக்கிறான்.
பின்பு தேவன் ராகேலை நினைத்தருளினார்.அவளுக்கு தேவன் செவி கொடுத்து அவள் கர்ப்பந்தரிக்கும் படி செய்தார்.
ஆதியாகமம் 30: 23 -24
அவள் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்று: தேவன் என் நிந்தையை நீக்கிவிட்டார் என்றும்,
இன்னும் ஒரு குமாரனைக் கர்த்தர் எனக்குத் தருவார் என்றும் சொல்லி, அவனுக்கு யோசேப்பு என்று பேரிட்டாள்.
மேலும் லேயாள் ஆறாம் குமாரனை பெற்றெடுத்த பிறகு தீனாள் என்ற ஒரு குமாரத்தியை பெற்றெடுத்தாள்.
இதில் நமக்கு தெரியவருவது என்னவென்றால் யாக்கோபுக்கு பன்னிரண்டு குமாரர்,ஒரு குமாரத்தியும் பிறக்கிறார்கள். குமாரத்தி ஊரை சுற்றி திரிந்து தீட்டுப்பட்டு போகிறாள். இதன் விளக்கம் என்னவென்றால் தேவனுடைய சபையின் வளர்ச்சியை காட்டுகிறது. உண்மையான மனைவியாகிய மணவாட்டியோடு பெற்றெடுக்கிற சந்ததி ஆசீர்வதிக்கப்பட்ட சந்ததி என்றும் ,மாம்சத்துக்கும், இச்சைக்கும் அடிமையாக இருக்குமானால் அது சபிக்கப்பட்ட சந்ததி என்றும் விளங்குகிறது. யாக்கோபுக்கு ஈசாக்கு கொடுத்த ஆசீர்வாதம் உன்னை ஆசீர்வதிக்கிறவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாகவும் உன்னை சபிக்கிறவர்கள் சபிக்கப்பட்டவர்களாகவும், இருப்பார் என்று கூறப்படுவதை பார்க்கிறோம்.
மேலும், யாக்கோபின் முதல் குமாரன் ரூபன் ஆசீர்வாதத்தை இழந்துவிட்டான். அவன் அந்த ஆசீர்வாதம் இழந்து விடுவதற்கு காரணமாக இருந்தவள் தாயாகிய லேயாள் அந்த தூதாயீம் கனி தேவனுடைய அன்பை காட்டுகிறது. அதனை ராகேல் பெற்றுக் கொள்கிறாள். அதனால் அவளுக்கு முதலாக கர்ப்பந்தரித்து பிறந்தது தான் யோசேப்பு ,கனிதரும் செடி என்று எழுதப்பட்டிருக்கிறது.
ஆதியாகமம் 49:22
யோசேப்பு கனிதரும் செடி;அவன் நீர் ஊற்றண்டையில் அதில் உள்ள கனிதரும் செடி;அதின் கொடிகள் சுவரின் மேல் படரும்.
ரூபன் தன் சேஷ்டபத்திர பாகத்தை இழந்துவிடுகிறான். நாம் இதனைப் பார்க்கும் போது யாக்கோபு இவ்விடத்தில் தன் வாழ்க்கையில் ஏசாவின் பங்கு பெற்றுக் கொண்டானோ அது போல் அவன் மூத்தகுமரான் சேஷ்டபுத்திர பங்கை தேவன் இழக்க செய்து விடுகிறார்.
ஆதியாகமம் 49:1-4
யாக்கோபு தன் குமாரரை அழைத்து: நீங்கள் கூடிவாருங்கள், கடைசி நாட்களில் உங்களுக்கு நேரிடும் காரியங்களை அறிவிப்பேன்.
யாக்கோபின் குமாரரே, கூடிவந்து கேளுங்கள்; உங்கள் தகப்பனாகிய இஸ்ரவேலுக்குச் செவிகொடுங்கள்.
ரூபனே, நீ என் சேஷ்டபுத்திரன்; நீ என் சத்துவமும், என் முதற்பெலனுமானவன்; நீ மேன்மையில் பிரதானமும் வல்லமையில் விசேஷமுமானவன்.
தண்ணீரைப்போலத் தளம்பினவனே, நீ மேன்மை அடையமாட்டாய்; உன் தகப்பனுடைய மஞ்சத்தின்மேல் ஏறினாய்; நீ அதைத் தீட்டுப்படுத்தினாய்; என் படுக்கையின்மேல் ஏறினானே.
இவ்விதமாய் யாக்கோபு ரூபனை நீ மேன்மை அடைய மாட்டாய் என்று சொல்லுகிறதை பார்க்கிறோம்.
யாக்கோபின் பன்னிரண்டு குமாரர்களும் பன்னிரண்டு கோத்திரங்களாக தேவன் காட்டுகிறார். ஆறு பேர் கெரிசீம் மலையில் ஆசீர்வாதத்தை கூறும் படியாகவும், ஆறு பேர் ஏபால் மலையில் சாபத்தை கூறும் படியாகவும் நிறுத்தப்பட்டிருக்கிறதை பார்க்கிறோம்.
ஆவிக்குரிய சபை ஆசீர்வாதத்தையும்,மேலும் மாம்ச சிந்தைகேற்ற உலக சபைகள் சபிக்கப்படுவதாகவும் தேவன் திருஷ்டாந்தபடுத்துகிறார்.
உபாகமம் 27:11-15
மேலும் அந்நாளிலே மோசே ஜனங்களை நோக்கி:
நீங்கள் யோர்தானைக் கடந்தபின்பு, ஜனங்கள் ஆசீர்வதிக்கப்படும்படி கெரிசீம் மலையில் சிமியோன், லேவி, யூதா, இசக்கார், யோசேப்பு, பென்யமீன் என்னும் கோத்திரங்கள் நிற்கவேண்டும்.
சாபங்கூறப்படும்பொருட்டு ஏபால்மலையில் ரூபன், காத், ஆசேர், செபுலோன், தாண், நப்தலி என்னும் கோத்திரங்கள் நிற்கவேண்டும்.
அப்பொழுது லேவியர் உரத்த சத்தமிட்டு இஸ்ரவேல் மனிதர் எல்லாரையும் பார்த்து:
கர்த்தருக்கு அருவருப்பான காரியமாகிய தொழிலாளிகளுடைய கைவேலையால் செய்யப்பட்டதும் வார்ப்பிக்கப்பட்டதுமான யாதொரு விக்கிரகத்தை உண்டுபண்ணி ஒளிப்பிடத்திலே வைக்கிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; அதற்கு ஜனங்களெல்லாரும் பிரதியுத்தரமாக ஆமென் என்று சொல்லக்கடவர்கள்.
இதிலிருந்து தெரிய வருவது என்னவென்றால்
கை வேலையால் செய்யப்பட்ட யாதொன்றை நம்முடைய உள்ளத்திலே முக்கிய பங்கு கொடுத்து வைப்போமானால் அவர்கள் சபிக்கப்பட்டவர்கள் என்று கர்த்தர் சொல்லுகிறதை பார்க்கிறோம்.
மேலும் அடுத்த பாகத்தின் தொடர்ச்சி நாளை,
ஜெபிப்போம் . கர்த்தர் ஆசீர்வதிப்பாராக.