தேவனுக்கே மகிமையுண்டாவதாக
சங்கீதம் 86:12
என் தேவனாகிய ஆண்டவரே, உம்மை என் முழு இருதயத்தோடும் துதித்து, உமது நாமத்தை என்றென்றைக்கும் மகிமைப்படுத்துவேன்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நாம் முழு இருதயத்தோடும்,முழு மனதோடும் முழு ஆத்துமாவோடும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை சேவிக்க வேண்டும்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில் மணவாட்டி சபையாகிய நம்மை ஆளுகிறவர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவாக இருக்க வேண்டும். ஆனால் இஸ்ரவேல புத்திரர், எங்களோடு நின்று எங்களை ஆளும்படி எங்களுக்கு ஒரு ராஜா வேண்டும் என்று கேட்டுக்கொண்டதால் கர்த்தர் சவுலை அவர்களுக்காக ராஜாவாக்கினார்.
பின்பு கர்த்தர் இஸ்ரவேலரிடம் கர்த்தரின் சத்தத்திற்கு கீழ்படியும்படி எச்சரிப்போடுகூட கூறுகிறார். அதன்பின்பு அவர் சொல்வது
1சாமுவேல் 12:16-18
இப்பொழுது கர்த்தர் உங்கள் கண்களுக்கு முன்பாகச் செய்யும் பெரிய காரியத்தை நின்று பாருங்கள்.
இன்று கோதுமை அறுப்பின் நாள் அல்லவா? நீங்கள் உங்களுக்கு ஒரு ராஜாவைக் கேட்டதினால், கர்த்தரின் பார்வைக்குச் செய்த உங்களுடைய பொல்லாப்புப் பெரியதென்று நீங்கள் கண்டு உணரும்படிக்கு, நான் கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணுவேன்; அப்பொழுது இடி முழக்கங்களையும் மழையையும் கட்டளையிடுவார் என்று சொல்லி,
சாமுவேல் கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணினான்; அன்றையதினமே கர்த்தர் இடிமுழக்கங்களையும் மழையையும் கட்டளையிட்டார்; அப்பொழுது ஜனங்கள் எல்லாரும் கர்த்தருக்கும் சாமுவேலுக்கும் மிகவும் பயந்து;
மேற்கூறப்படுகிற வார்த்தைகள், கர்த்தர் நமக்கு முன்பாக பெரிய காரியங்களை செய்வார் என்பதனை திருஷடாந்தபடுத்தி கோதுமை அறுப்பின் நாளில், (ஆத்துமா அறுவடையின் நாள்) கர்த்தரின் பார்வைக்கு பொல்லாப்பானதை செய்திருந்தால், என்னவெனில் கர்த்தரை நம்புவதை விட்டு விட்டு மனுஷன் மேல் நம்பிக்கையாயிருப்போமானால்; கர்த்தர் திருஷ்டாந்தப்படுத்தினது என்னவென்றால், சாமுவேல் விண்ணப்பம் பண்ண இடிமுழக்கங்களையும், மழையையும் கட்டளையிட்டார். அப்போது இஸ்ரவேல் புத்திரர் கர்த்தருக்கும், சாமுவேலுக்கும் மிகவும் பயந்து; நாங்கள் சாகாதபடிக்கு உம்முடைய தேவனாகிய கர்த்தரிடத்தில் உம்முடைய அடியாருக்காக விண்ணப்பம் செய்யும்; நாங்கள் செய்த எல்லா பாவங்களோடும் எஙகளுக்கு ஒரு ராஜா வேண்டும் என்று கேட்ட இந்த பாவத்தை கூட்டிக்கொண்டோம் என்று ஜனங்கள் எல்லாரும் சொல்ல; சாமுவேல் ஜனங்களை நோக்கி
1சாமுவேல் 12:20-25
அப்பொழுது சாமுவேல் ஜனங்களை நோக்கி: பயப்படாதேயுங்கள்; நீங்கள் இந்தப் பொல்லாப்பையெல்லாம் செய்தீர்கள்; ஆகிலும் கர்த்தரை விட்டுப் பின்வாங்காமல் கர்த்தரை உங்கள் முழுஇருதயத்தோடும் சேவியுங்கள்.
விலகிப்போகாதிருங்கள்; மற்றப்படி பிரயோஜனமற்றதும் ரட்சிக்கமாட்டாததுமாயிருக்கிற வீணானவைகளைப் பின்பற்றுவீர்கள்; அவைகள் வீணானவைகளே.
கர்த்தர் உங்களைத் தமக்கு ஜனமாக்கிக்கொள்ளப் பிரியமானபடியினால், கர்த்தர் தம்முடைய மகத்துவமான நாமத்தினிமித்தம் தமது ஜனத்தைக் கைவிடமாட்டார்.
நானும் உங்களுக்காக விண்ணப்பம் செய்யாதிருப்பேனாகில் கர்த்தருக்கு விரோதமாகப் பாவஞ்செய்கிறவனாயிருப்பேன்; அது எனக்குத் தூரமாயிருப்பதாக; நன்மையும் செவ்வையுமான வழியை நான் உங்களுக்குப் போதிப்பேன்.
நீங்கள் எப்படியும் கர்த்தருக்குப் பயந்து, உங்கள் முழுஇருதயத்தோடும் உண்மையாய் அவரைச் சேவிக்கக்கடவீர்கள்; அவர் உங்களிடத்தில் எவ்வளவு மகிமையான காரியங்களைச் செய்தார் என்பதைச் சிந்தித்துப்பாருங்கள்.
நீங்கள் இன்னும் பொல்லாப்பைச் செய்யவே செய்வீர்களானால், நீங்களும் உங்கள் ராஜாவும் நாசமடைவீர்கள் என்றான்.
மேற்கூறப்பட்ட வசனங்களின் கருத்துக்கள் என்னவெனில், நாம் கர்த்தராகிய இயேசுவை முழுஇருதயத்தோடும், முழு மனதோடும் சேவித்து, அவருக்கு பயந்து அவர் கற்பனைகளின் படி நடக்க கர்த்தர் சவுலை நமக்கு திருஷ்டாந்தப்படுத்துகிறார். ஆனால் மனுஷர்களை நம்புவோமானால் நாம் நாசமடைவோம் என்றும் சொல்கிறார்.
ஆதலால் பிரியமானவர்களே நாம் கர்த்தரை முழு இருதயத்தோடும், முழுமனதோடும் சேவிக்கிறவர்களாக இருக்க வேண்டும். இவ்விதம் நம்மை ஒப்புக்கொடுப்போம்.
ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.