தேவனுக்கே மகிமையுண்டாவதாக
மாற்கு 12:30
உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழு மனதோடும், உன் முழுப் பலத்தோடும் அன்புகூருவாயாக என்பதே பிரதான கற்பனை.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நாம் கர்த்தரை நம்முடைய தேவனாக முழு மனதோடும், முழு இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடும் மனதார ஏற்றுக்கொண்டு, அவரை பின்பற்றி வாழ வேண்டும்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில் மணவாட்டி சபையாகிய நாம் நம்முடைய ஆத்மாவில் எப்பொழுதும் கர்த்தருக்குக் கீழ்ப்படிந்தவர்களாக இருக்க வேண்டும் என்பதனை குறித்து தியானித்தோம்.
ஆனால் சவுல் ராஜாவாக சில காரியங்கள் கர்த்தருக்கு பிரியமானப்பிரகாரம் செய்ததால் கர்த்தர் அவனுடைய நாட்களில் நன்மையை செய்துக்கொண்டிருந்தார் என்பதனை குறித்து முந்தின சில நாட்கள் தியானித்தோம். ஆனால் அமலேக்கியனுடைய காரியத்தில் கர்த்தர் சொன்னக் காரியத்தை செய்யாமற் போனதினால் அவன் கர்த்தருக்கு கீழ்ப்படியாமற் போனான் என்றதால் கர்த்தர் அவன் இஸ்ரவேலுக்கு ராஜாவாயிராதபடிக்கு புறக்கணித்து தள்ளினார் என்று சாமுவேல் சவுலுக்கு அறிவித்தான் என்றும் தியானித்தோம்.
அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்
1சாமுவேல் 15: 24-31
அப்பொழுது சவுல் சாமுவேலை நோக்கி: நான் கர்த்தருடைய கட்டளையையும் உம்முடைய வார்த்தைகளையும் மீறினதினாலே பாவஞ்செய்தேன்; நான் ஜனங்களுக்குப் பயந்து, அவர்கள் சொல்லைக் கேட்டேன்.
இப்போதும் நீர் என் பாவத்தை மன்னித்து, நான் கர்த்தரைப் பணிந்துகொள்ளும்படிக்கு, என்னோடேகூடத் திரும்பிவாரும் என்றான்.
சாமுவேல் சவுலைப் பார்த்து: நான் உம்மோடேகூடத் திரும்பிவருவதில்லை; கர்த்தருடைய வார்த்தையைப் புறக்கணித்தீர்; நீர் இஸ்ரவேலின்மேல் ராஜாவாயிராதபடிக்கு, கர்த்தர் உம்மையும் புறக்கணித்துத் தள்ளினார் என்றான்.
போகும்படி சாமுவேல் திரும்புகிறபோது, சவுல், அவன் சால்வையின் தொங்கலைப் பிடித்துக்கொண்டான், அது கிழிந்துபோயிற்று.
அப்பொழுது சாமுவேல் அவனை நோக்கி: கர்த்தர் இன்று உம்மிடத்திலிருந்த இஸ்ரவேலின் ராஜ்யத்தைக் கிழித்துப்போட்டு; உம்மைப்பார்க்கிலும் உத்தமனாயிருக்கிற உம்முடைய தோழனுக்கு அதைக் கொடுத்தார்.
இஸ்ரவேலின் ஜெயபலமானவர் பொய் சொல்லுகிறதும் இல்லை; தாம் சொன்னதைப்பற்றி மனஸ்தாபப்படுகிறதும் இல்லை; மனம் மாற அவர் மனுஷன் அல்ல என்றான்.
அதற்கு அவன்: நான் பாவஞ்செய்தேன்; இப்போது என் ஜனத்தின் மூப்பருக்கு முன்பாகவும், இஸ்ரவேலுக்கு முன்பாகவும் நீர் என்னைக் கனம்பண்ணி, நான் உம்முடைய தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொள்ளும்படிக்கு, என்னோடேகூடத் திரும்பிவாரும் என்றான்.
அப்பொழுது சாமுவேல் திரும்பிச் சவுலுக்குப் பின்சென்றான்; சவுல் கர்த்தரைப் பணிந்துகொண்டான்.
மேற்க்கூறப்பட்ட வார்த்தைகளில் சாமுவேல் கர்த்தர் கூறினதை சவுலுக்கு அறிவித்ததால், சவுல் சாமுவேலிடம் கர்த்தருடைய கட்டளையையும், உம்முடைய வார்த்தைகளையும் மீறினதினாலே பாவஞ்செய்தேன் என்றான், அதற்கு காரணம் ஜனங்களுக்கு பயந்ததினால் என்று சொல்கிறான்.
இப்படியே நாமும் அநேகம் பேர் கர்த்தருக்கு பயப்படாமல், ஜனங்களுக்கு பயந்து கர்த்தருடைய கட்டளையை அலட்சியம் செய்து , அவருடைய வார்த்தைக்கு செவிக்கொடாமற் போகிறோம். இந்த வேளையும் இதனை வாசிக்கிற அன்பான தேவனுடைய ஜனங்களே நாம் யாருக்கு பயப்பட வேண்டும்? யாருக்கு கீழ்படிய வேண்டும்? என்பதனை உணரந்துக்கொண்டு, சவுலை புறக்கணித்து தள்ளினவர், நாம் சவுலை போல கர்த்தரால் புறக்கணித்து தள்ளாதபடி, நம்முடைய கிறிஸ்து மனுஷ குமாரனாக இருந்தும் தேவனுக்கு எல்லாவற்றிற்கும் கீழ்ப்படிந்தவராகி தம்மை தாமே தாழ்த்தினார் என்பதனை எல்லாவரும் உணர்ந்துக்கொண்டு, ஒரு புதிய ஆத்மீக வாழ்க்கைக்குள் பிரவேசிக்க வேண்டும்.
ஆனால் சவுல் அங்கு மன்னிப்புக்கேட்கிறதைப் பார்க்கிறோம்; எப்படியெனில் நீர் என் பாவத்தை மன்னித்து, நான் கர்த்தரை பணிந்துக்கொள்ளும்படி என்னோடே கூட வாரும் என்று சாமுவேலிடம் கேட்டதற்கு, அவன் நான் உம்மோடேக்கூட திரும்பி வருவதில்லை என்கிறான். நீர் கர்த்தருடைய வார்த்தையை புறக்கணித்தீர்; நீர் இஸ்ரவேலின் மேல் ராஜாவாயிராதப்படிக்கு கர்த்தரும் உம்மை புறக்கணித்து தள்ளினார் என்று சொல்லி விட்டு, அவன் போகும்படி திரும்பும்போது , சவுல் சாமுவேலின் சால்வையை பிடித்துக்கொண்டான்; அப்போது அந்த சால்வை கிழிந்து போயிற்று. அப்பொழுது சாமுவேல் சவுலை நோக்கி; கர்த்தர் இன்று உம்மிடத்திலிருந்த ராஜ்யபாரத்தை கிழித்துப்போட்டு, உம்மை பார்க்கிலும் உத்தமனாயிருக்கிற உம்முடைய தோழனுக்கு அதனைக் கொடுத்தார் என்றான். மேலும் அவன் சொன்னது என்னவென்றால் இஸ்ரவேலின் ஜெயபலமானவர் பொய் சொல்லுகிறதுமில்லை; தாம் சொன்னதை பற்றி மனஸ்தாபப்படுகிறதுமில்லை; மனம்மாற அவர் மனுஷன் அல்ல என்றான். பின்பு சவுல் நான் பாவஞ் செய்தேன்; என் ஜனத்தின் மூப்பருக்கு முன்பாகவும், இஸ்ரவேலுக்கு முன்பாகவும் நீர் என்னை கனம் பண்ணி,நான் உம்முடைய தேவனாகிய கர்த்தரை பணிந்துக்கொள்ளும்படி, நீர் என்னோடே திருமபி வாரும் என்றான். அதன் பின்பு சாமுவேல் அவனோடே திரும்பி போனான்; சவுல் கர்த்தரை பணிந்துக்கொண்டான். ஆனால் நாம் இந்த இடத்தில் பார்க்கும் போது சவுல் சாமுவேலிடம் உம்முடைய தேவனாகிய கர்த்தர் என்று சில இடங்களில் சொல்கிறானேயன்றி தன் தேவன் என்று ஒரு போதும் அவன் மனதார ஏற்றுக்கொள்ளவில்லை என்பதும் தெரிகிறது.
இப்படிதான் கர்த்தர் நம்மை தெரிந்தெடுத்தாலும், மனுஷர்களை பிரியப்படுத்த வேண்டும் என்றும், காரியங்கள் நடந்தேற வேண்டும் என்று நினைத்து தேவனை தேடுவோமேயன்றி, நம்முடைய முழு உள்ளத்தோடும் தேடமாட்டோம். அதனால் தான் நம்முடைய தேவன், நாம் தேவனை முழு உள்ளத்தோடு தேடும் படியாக நம்முடைய உள்ளமாகிய எண்ணத்தில் ஒரு புது சிருஷ்டியை (கிறிஸ்து) தோன்ற பண்ணுகிறார். இவ்விதமான தோன்றுதலோடு காணப்படுபவர்கள் எப்போதும் கர்த்தருக்கு கீழ்படிய வேண்டும் என்ற எண்ணம் உருவாகும்; அது மட்டுமல்ல கர்த்தரை தங்கள் தேவனாக ஏற்றுக்கொள்வார்கள். தாங்கள் செய்த பாவங்களுக்காக கர்த்தரிடத்தில் பாவமன்னிப்பு பெற்று கொள்வார்கள். மேலும் ஆத்மீகத்தில் அனுதினம் வளர்ந்துக் கொண்டிருப்பார்கள். இவ்விதமாக கர்த்தரை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ளும்படியாக ஒப்புக்கொடுப்போம்.
ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.