தேவனுக்கே மகிமையுண்டாவதாக
1பேதுரு 2:9
நீங்களோ, உங்களை அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்குத் தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், அவருக்குச் சொந்தமான ஜனமாயும் இருக்கிறீர்கள்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நாம் நம்முடைய ஆவி ஆத்தமா சரீரம் பரிசுத்தமாக்கப்பட்டு கர்த்தரிடத்திலிருந்து ராஜரீக அபிஷேகம் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதன் திருஷ்டாந்தம்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேத பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் நம்முடைய விசுவாச பயணத்தில் அமலேக்கின் கிரியைகளால் நித்திய ஜீவன் இழந்துபோகாதபடி காத்துக்கொள்ள வேண்டும் என்பதனை குறித்து தியானித்தோம்.
அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்
1சாமுவேல் 16:1-4
கர்த்தர் சாமுவேலை நோக்கி: இஸ்ரவேலின்மேல் ராஜாவாயிராதபடிக்கு, நான் புறக்கணித்துத் தள்ளின சவுலுக்காக நீ எந்தமட்டும் துக்கித்துக்கொண்டிருப்பாய்; நீ உன் கொம்பை தைலத்தால் நிரப்பிக்கொண்டுவா; பெத்லெகேமியனாகிய ஈசாயினிடத்துக்கு உன்னை அனுப்புவேன்; அவன் குமாரரில் ஒருவனை நான் ராஜாவாகத் தெரிந்துகொண்டேன் என்றார்.
அதற்குச் சாமுவேல்: நான் எப்படிப்போவேன்; சவுல் இதைக் கேள்விப்பட்டால், என்னைக் கொன்றுபோடுவானே என்றான்; அப்பொழுது கர்த்தர்: நீ ஒரு காளையைக் கையோடே கொண்டுபோய், கர்த்தருக்குப் பலியிடவந்தேன் என்று சொல்லி,
ஈசாயைப் பலிவிருந்துக்கு அழைப்பாயாக; அப்பொழுது நீ செய்யவேண்டியதை நான் உனக்கு அறிவிப்பேன்; நான் உனக்குச் சொல்லுகிறவனை எனக்காக அபிஷேகம்பண்ணுவாயாக என்றார்.
கர்த்தர் சொன்னபடியே சாமுவேல் செய்து, பெத்லெகேமுக்குப் போனான்; அப்பொழுது அவ்வூரின் மூப்பர் தத்தளிப்போடே அவனுக்கு எதிர்கொண்டுவந்து, நீர் வருகிறது சமாதானமா என்றார்கள்.
மேற்கூறிய வசனங்களில் கூறப்படுவது சவுலுக்காக சாமுவேல் துக்கித்துக் கொண்டிருக்கும்போது, கர்த்தர் அதனை கண்டு சாமுவேலிடம் கேட்கிறார், இஸ்ரவேலின் மேல் ராஜாவாயிராதபடி நான் புறக்கணித்து தள்ளின சவுலுக்காக நீ எந்த மட்டும் துக்கித்துக்கொண்டிருப்பாய் ; நீ உன் கொம்பை தைலத்தால் நிரப்பிக் கொண்டு வா; பெத்லெகேமியனாகிய ஈசாயினிடத்திற்கு உன்னை அனுப்புவேன்: அவன் குமாரரில் ஒருவனை நான் ராஜாவாக தெரிந்துக்கொண்டேன் என்றார்.
பிரியமானவர்களே, இவைகள் எல்லாம் கர்த்தர் நமக்கு திருஷ்டாந்தமாக வைத்திருக்கிறார் என்பதனை நாம் தெரிந்துக்கொள்ள வேண்டும். என்னவென்றால் ஈசாய்க்கோ, அவன் குமாருக்கோ கர்த்தர் தெரிந்தெடுக்க போகிற காரியமோ தெரியாமல் இருக்கும் போது, கர்த்தர் சாமுவேலிடம் ஈசாயின் குமாரரை தெரிந்தெடுத்தேன் என்றார். இப்படி தான் நமக்கு தெரியாமலே கர்த்தர் நம்மை தெரிந்து வைத்திருப்பார் என்பது நிச்சயம். மேலும் கர்த்தர் சாமுவேலிடம் ஈசாயின் வீட்டிற்கு போக சொன்ன போது , சாமுவேல் சொன்னது நான் எப்படி போவேன்: சவுல் இதனை கேள்விப்பட்டால் என்னை கொன்று போடுவானே என்று சொல்லும் போது, சாமுவேலுக்கு கர்த்தர் கொடுக்கிற ஆலோசனை என்றால் நீ கையில் ஒரு காளையை கொண்டு போய் பலியிட வந்தேன் என்று சொல்லி, ஈசாயை பலி விருந்துக்கு அழைக்கும் போது, நீ செய்ய வேண்டியதை உனக்கு அறிவிப்பேன் என்று சொல்லி; நான் உனக்கு சொல்லுகிறவனை அபிஷேகம் பண்ணுவாயாக என்றார். மேலும் கர்த்தர் சொன்னது போல் தன்னை ஆயத்தப்படுத்திக்கொண்டு பெத்லெகேமுக்கு போனான்; அப்போது அவ்வூரின் மூப்பர் தத்தளிப்போடே அவனுக்கு எதிர்க்கொண்டு வந்து நீர் வருகிறது சமாதானமா? என்றார்கள். அதற்கு சாமுவேல் சொன்னது சமாதானந்தான்; கர்த்தருக்கு பலியிட வந்தேன் என்று சொல்லி யாவரும் உங்களை பரிசுத்தப்படுத்திக்கொண்டு பலிவிருந்துக்கு வாருங்கள் என்று அழைத்தான். இவ்விதமாக கர்த்தர் சொன்னது போல் சாமுவேல் செய்கிறான்.
பிரியமானவர்களே இந்த அபிஷேகம் ராஜரீக அபிஷேகம். இது தங்களை பரிசுத்தப்படுத்தும் போது கர்த்தர் நமக்கு தருகிற ஈவு. இந்த ஈவை நாம் நிச்சயமாக பெற்றுக்கொள்ள வேண்டும். நாம் கர்த்தரால் பரிசுத்தபடும் போது, நமக்கு முன்கூட்டி தெரியாமலே நாம் நினையாத நேரத்திலே நம்மை கர்த்தர் அபிஷேகிப்பார் என்பதில் மாற்றமில்லை. இவ்வித அனுபவத்தை நாம் பெற்றுக்கொள்ளும்படியாக ஒப்புக்கொடுப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.