தேவனுக்கே மகிமையுண்டாவதாக

சங்கீதம் 23:5 

என் சத்துருக்களுக்கு முன்பாக நீர் எனக்கு ஒரு பந்தியை ஆயத்தப்படுத்தி, என் தலையை எண்ணெயால் அபிஷேகம்பண்ணுகிறீர்; என் பாத்திரம் நிரம்பி வழிகிறது.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.  அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் கர்த்தரால் தெரிந்தெடுத்து அபிஷேகம் பெற்றுக்கொள்கிறவர்களாக இருக்க வேண்டும்

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில் மணவாட்டி சபையாகிய நாம் ஆவி ஆத்தமா சரீரம் பரிசுத்தமாக்கப்பட்டு கர்த்தரிடத்திலிருந்து ராஜரீக அபிஷேகம் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதனை குறித்து தியானித்தோம்.  

அதற்கு ஆதாரமாக, அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

1சாமுவேல் 16: 6-13 

அவர்கள் வந்தபோது, அவன் எலியாபைப் பார்த்தவுடனே: கர்த்தரால் அபிஷேகம்பண்ணப்படுபவன் இவன்தானாக்கும் என்றான்.

கர்த்தர் சாமுவேலை நோக்கி: நீ இவனுடைய முகத்தையும், இவனுடைய சரீரவளர்ச்சியையும் பார்க்கவேண்டாம்; நான் இவனைப் புறக்கணித்தேன்; மனுஷன் பார்க்கிறபடி நான் பாரேன்; மனுஷன் முகத்தைப் பார்ப்பான்; கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார் என்றார்.

அப்பொழுது ஈசாய் அபினதாபை அழைத்து, அவனைச் சாமுவேலுக்கு முன்பாகக் கடந்துபோகப்பண்ணினான்; அவன்: இவனையும் கர்த்தர் தெரிந்து கொள்ளவில்லை என்றான்.

ஈசாய் சம்மாவையும் கடந்துபோகப்பண்ணினான்; அவன்: இவனையும் கர்த்தர் தெரிந்துகொள்ளவில்லை என்றான்.

இப்படி ஈசாய் தன் குமாரரில் ஏழுபேரை சாமுவேலுக்கு முன்பாகக் கடந்துபோகப்பண்ணினான்; பின்பு சாமுவேல் ஈசாயைப் பார்த்து: கர்த்தர் இவர்களில் ஒருவனையும் தெரிந்துகொள்ளவில்லை என்று சொல்லி;

உன் பிள்ளைகள் இவ்வளவுதானா என்று ஈசாயைக் கேட்டான். அதற்கு அவன்: இன்னும் எல்லாருக்கும் இளையவன் ஒருவன் இருக்கிறான்; அவன் ஆடுகளை மேய்த்துக்கொண்டிருக்கிறான் என்றான்; அப்பொழுது சாமுவேல் ஈசாயை நோக்கி: ஆள் அனுப்பி அவனை அழைப்பி; அவன் இங்கே வருமட்டும் நான் பந்தியிருக்கமாட்டேன் என்றான்.

ஆள் அனுப்பி அவனை அழைப்பித்தான்; அவன் சிவந்தமேனியும், அழகிய கண்களும், நல்ல ரூபமுமுள்ளவனாயிருந்தான்; அப்பொழுது கர்த்தர்: இவன்தான், நீ எழுந்து இவனை அபிஷேகம்பண்ணு என்றார்.

அப்பொழுது சாமுவேல்: தைலக்கொம்பை எடுத்து, அவனை அவன் சகோதரர் நடுவிலே அபிஷேகம்பண்ணினான்; அந்நாள்முதற்கொண்டு, கர்த்தருடைய ஆவியானவர் தாவீதின்மேல் வந்து இறங்கியிருந்தார்; சாமுவேல் எழுந்து ராமாவுக்குப் போய்விட்டான்.

மேற்கூறிய வசனங்களில் கர்த்தர் சொல்லியனுப்பின பிரகாரம், சாமுவேல் மூபபர்களையெல்லாம் பலி விருந்துக்கு அழைத்தான்.  பின்பு அவர்கள் வந்தபோது ஈசாயின் மூத்தமகனாகிய எலியாபை பார்த்து இவன் தானாக்கும் கர்த்தரால்  அபிஷேகம் பண்ணபடுபவன் என்று கேட்டதற்கு, கர்த்தர் சாமுவேலிடம், இவனுடைய முகத்தையும், இவனுடைய சரீர வளர்ச்சியையும் பார்க்க வேண்டாம்; நான் இவனை புறக்கணித்தேன்; மனுஷர் பார்க்கிற பிரகாரம் நான் பாரேன்; மனுஷன் முகத்தை பார்ப்பான்; கர்த்தரோ இருதயத்தை பார்ப்பார் என்றார். பின்பு ஈசாய் அபினதாபை அழைத்து, அவனை சாமுவேலுக்கு முன்பாக கடந்து போக பண்ணினான்; அவன் இவனையும் கர்த்தர் தெரிந்துக்கொள்ளவில்லை என்பதனை அறிவித்தான். பின்பு ஈசாய் சம்மாவை காண்பிக்கிறான்; அவனும் கர்த்தர் தெரிந்தக்கொள்ளவில்லை;  அதன் பின்பு அவனுக்குள்ள ஏழு பேரில் மீதியானவர்களை யெல்லாம் காண்பிக்கும் போதும்; சாமுவேல் ஈசாயை நோக்கி இவர்களில் ஒருவனையும் கர்த்தர் தெரிந்துக் கொள்ளவில்லை என்று சொல்லி; ஈசாயை நோக்கி உன் பிள்ளைகள் இவ்வளவு தானா என்று கேட்கும்போது, இன்னும் இளையவன் ஒருவன் இருக்கிறான்; அவன் ஆடுகளை மேய்த்துக்கொண்டிருக்கிறான் என்றபோது சாமுவேல் ஈசாயிடம் ஆள் அனுப்பி அவனை வரச்சொல்; அவன் இங்கே வரும்வரையிலும் போஜனம் பந்தியிருக்கமாட்டேன் என்றார்.  அவ்விதம் ஆள் அனுப்பி அவனை அழைப்பித்தபோது; அவன் சிவந்த மேனியும், அழகிய கண்களும், நல்ல ரூபமுள்ளவனுமாயிருந்தான்: அப்பொழுது கர்த்தர் இவன் தான் இவனை அபிஷேகம் பண்ணு என்றபோது; சாமுவேல் தைலக்கொம்பை எடுத்து அவனை அவன் சகோதரர் நடுவிலே அபிஷேகம் பண்ணினான்.  அந்நாள் முதற்க்கொண்டு கர்த்தருடைய ஆவியானவர் தாவீதின்மேல் வந்து இறங்கியிருந்தார் சாமுவேல் ராமாவுக்கு போய் விட்டான். 

பிரியமானவர்களே மேற்கூறிய வசனங்களை நாம் தியானிக்கையில், கர்த்தர் மனிதனுடைய முகத்தை பார்க்கிறவர் அல்ல என்றும், அவர் நம்முடைய இருதயத்தை நன்றாக சோதித்தறிந்து அபிஷேகிக்கிறவர் என்பதும் புரிகிறது.  மேலும் கர்த்தர் அபிஷேகிக்கிறது நம்மில் இருக்கிற கிறிஸ்துவை என்றால், நம்முடைய ஆத்துமா கிறிஸ்துவினால் ஜீவன் அடைந்து பரிசுத்தமாக காக்கப்படும் போது மட்டுமே கர்த்தர் நம்மை அபிஷேகித்து, கர்த்தருடைய ஆவி நம்மேல் இறங்கும் என்பதில் மாற்றமில்லை.  மேலும் கர்த்தர் தம்முடைய நினைவுகளை; அதாவது அபிஷேகிக்க வேண்டியவர்களை அபிஷேகிக்கும் வரையிலும் அவர் அமர்ந்திருக்க மாட்டார்.  ஆதலால் பிரியமானவர்களே நாம் பெற்றுக்கொள்ள வேண்டிய காரியங்களை இந்நாட்களில் நம்மை பரிசுத்தப்படுத்தி பெற்றுக்கொள்ளும்படியாக ஒப்புக்கொடுப்போம்.  

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.