தேவனுக்கே மகிமையுண்டாவதாக
சங்கீதம் 18:50
தாம் ஏற்படுத்தின ராஜாவுக்கு மகத்தான இரட்சிப்பை அளித்து, தாம் அபிஷேகம்பண்ணின தாவீதுக்கும் அவன் சந்ததிக்கும் சதாகாலமும் கிருபை செய்கிறார்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நாம் கர்த்தரிடத்திலிருந்துப் பெற்ற ஆசீர்வாநம் நம்மை விட்டு எடுத்துப்போடாதபடி ஜாக்கிரதையாக காத்துக்கொள்ள வேண்டும்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் கர்த்தரால் தெரிந்தெடுத்து, ஆவி ஆத்தும சரீரம் முழுமையும் பரிசுத்தமாக்கப்பட்டு, கர்த்தரிடத்திலிருந்து அபிஷேகம் பெற்று, கர்த்தருடைய ஆவியினால் நிரப்பப்படுகிறவர்களாக இருக்க வேண்டும் என்பதனை குறித்து தியானித்தோம்.
அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்
1சாமுவேல் 16:14
கர்த்தருடைய ஆவி சவுலை விட்டு நீங்கினார்; கர்த்தரால் வரவிடப்பட்ட ஒரு பொல்லாத ஆவி அவனைக் கலங்கப்பண்ணிக்கொண்டிருந்தது.
மேற்கூறப்பட்ட கர்த்தருடைய வார்த்தையை நாம் தியானிக்கும் போது, கர்த்தர் சாமுவேலை கொண்டு தாவீதை அபிஷேகித்து, பின்பு தாவீதின் மேல் கர்த்தருடைய ஆவியானவர் இறங்கினார் என்பதனை குறித்து தியானித்தோம். அதன் பின்பு கர்த்தருடைய ஆவி சவுலை விட்டு நீங்கினார்.
பிரியமானவர்களே, கர்த்தரின் சித்தம் செய்யாமல் இருப்போமானால் கர்த்தர் நம்மிலும் தங்கியிருக்கமாட்டார் என்பதனை நாம் சிந்தித்துக்கொள்ளவேண்டும். மேலும் கர்த்தருடைய ஆவியானவர் சவுலை விட்டு நீங்கினதால் கர்த்தரால் விடப்பட்ட பொல்லாத ஆவி சவுலை கலங்கப்பண்ணி கொண்டிருக்க, சவுலின் ஊழியக்காரர் அவனிடம் இதோ, தேவனால் விடப்பட்ட பொல்லாத ஆவி உம்மை கலங்கப்பண்ணுகிறதே. சுரமண்டலம் வாசிக்கிறதில் தேறின ஒருவனை தேடும்படிக்கு உம்முடைய அடியாருக்கு கட்டளையிடும். அப்பொது பொல்லாத ஆவி உம்மேல் இறங்குகையில் அவன் தன் கையினால் அதனை வாசித்தால் உமக்கு சவுக்கியமுண்டாகும் என்றதற்கு, தன் ஊழியகாரனிடம் நன்றாக வாசிக்கதக்க ஒருவனை தேடி என்னிடத்தில் கொண்டு வாருங்கள் என்றான்.
அதன் பின்பு 1சாமுவேல் 16:18
அப்பொழுது அந்த வேலைக்காரரில் ஒருவன் பிரதியுத்தரமாக: இதோ, பெத்லெகேமியனாகிய ஈசாயின் குமாரன் ஒருவனைக் கண்டிருக்கிறேன்; அவன் வாசிப்பதில் தேறினவன், அவன் பராக்கிரமசாலி, யுத்தவீரன், காரியசமர்த்தன், சவுந்தரியமுள்ளவன்; கர்த்தர் அவனோடேகூட இருக்கிறார் என்றான்.
மேற்கூறிய வார்த்தைகளில் தாவீதினை குறித்து சவுலின் ஊழியகாரன் சவுலிடம் சொல்ல,
1சாமுவேல் 16:19
அப்பொழுது சவுல்: ஈசாயினிடத்தில் ஆட்களை அனுப்பி, ஆட்டுமந்தையில் இருக்கிற உன் குமாரனாகிய தாவீதை என்னிடத்தில் அனுப்பு என்று சொல்லச் சொன்னான்.
அப்பொழுது ஈசாய் 1சாமுவேல் 16:20
அப்பொழுது ஈசாய்: அப்பத்தையும், ஒரு துருத்தி திராட்சரசத்தையும், ஒரு வெள்ளாட்டுக்குட்டியையும் கழுதையின் மேல் ஏற்றி, தன் குமாரனாகிய தாவீதின் வசமாய் சவுலுக்கு அனுப்பினான்.
அவ்விதமாக தாவீது சவுலிடத்தில் வந்து அவனுக்கு முன்பாக நின்றான். அவன் இவனை மிகவும் நேசித்தான்; அவனுக்கு இவன் ஆயுததாரியானான். பின்பு சவுல், தாவீதிடத்தில் ஆள் அனுப்பி எனக்கு முன்பாக நிற்கட்டும்; என்னுடைய கண்களில் தயவு கிடைத்தது என்று சொல்ல சொன்னான். அப்படியே தேவனால் விடப்பட்ட பொல்லாத ஆவி சவுலை பிடிக்கும் போது, தாவீது சுரமண்டலத்தை எடுத்து வாசிப்பான்; அதனாலே பொல்லாத ஆவி அவனை விட்டு நீங்க, சவுல் ஆறுதலடைந்து சொஸ்தமாவான்.
பிரியமானவர்களே இதனை நாம் தியானிக்கும் போது கீழ்படியாதவர்கள் மேல் பொல்லாத ஆவியை கர்த்தர் அனுப்புகிறார். அந்த பொல்லாத ஆவி நம்முடைய வாழ்க்கையை கலங்க பண்ணும். அது மட்டுமல்லாமல் நம்மில் இருக்கிற ஆசீர்வாதம் இனி ஒருவருக்கு கொடுக்கப்படுகிறது. இதனை கர்த்தர் சவுலையும், தாவீதையும் நமக்கு திருஷ்டாந்தப்படுத்துகிறார். இதே சவுலின் சவுக்கியம் தாவீதினால் வருவதற்கு கர்த்தர் முகாந்தரத்தை ஒருக்கி கொண்டு வருகிறதை நாம் பார்க்க முடிகிறது. ஏனென்றால் முதலில் இஸ்ரவேலுக்கு ராஜாவாக சவுலை அபிஷேகிக்கிறார், அதனை சரியாக காத்துகொள்ளாமல் இருந்ததால் அப்பொழுதே கர்த்தர் தாவீதை சாமுவேலை வைத்தே அபிஷேகித்து, பின் சவுலுக்கு ஆறுதலும், சவுக்கியமும் தாவீதை வைத்தே கொடுக்கிறார். அதே போல் நாமும் கர்த்தருக்கு முன்பாக உண்மையுள்ளவர்களாக இல்லா விட்டால் நம்மில் இருக்கிற அபிஷேகம் மாற்றப்பட்டு, இனி ஒருவருக்கு கொடுக்கப்படும். ஆதலால் நாம் யாவரும் ஜாக்கிரதையாக இருந்து கர்த்தர் தந்த ஆசீர்வாதம் இழந்து போகாதபடி காத்துக்கொள்ளும்படியாக ஒப்புக்கொடுப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.