தேவனுக்கே மகிமையுண்டாவதாக
எபிரெயர் 10:35
ஆகையால், மிகுந்த பலனுக்கேதுவான உங்கள் தைரியத்தை விட்டுவிடாதிருங்கள்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நம்முடைய ஆத்துமாவிலிருக்கிற துர் உபதேசத்தை முழுமையும் அகற்ற வேண்டும்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் எப்போதும் கர்த்தருக்காக வேலைசெய்யும் படியாக உற்சாகமுள்ளவர்களாய் வைராக்கியத்தோடு சபையோடு இணைந்து வேலை செய்கிறவர்களாக இருக்க வேண்டும் என்பதனை குறித்து தியானித்தோம்.
அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்
1சாமுவேல் 17:32
தாவீது சவுலை நோக்கி: இவனிமித்தம் ஒருவனுடைய இருதயமும் கலங்க வேண்டியதில்லை; உம்முடைய அடியானாகிய நான் போய், இந்தப் பெலிஸ்தனோடே யுத்தம்பண்ணுவேன் என்றான்.
மேற்க்கூறப்பட்ட வசனங்கள் பிரகாரம் சவுல் தாவீதை பெலிஸ்தியர்களோடு யுத்தத்திற்கு அழைத்திருக்கும் போது, தாவீது சவுலை நோக்கி; கோலியாத்தினிமித்தம் ஒருவருடைய இருதயமும் கலங்க வேண்டியதில்லை; நான் போய் இந்த பெலிஸ்தியனோடே யுத்தம் பண்ணுவேன் என்ற போது சவுல் தாவீதிடம்
1சாமுவேல் 17:33
அப்பொழுது சவுல் தாவீதை நோக்கி: நீ இந்தப் பெலிஸ்தனோடே எதிர்த்து யுத்தம்பண்ண உன்னால் ஆகாது; நீ இளைஞன், அவனோ தன் சிறு வயதுமுதல் யுத்தவீரன் என்றான்.
இந்த வார்த்தைகளை சவுல் தாவீதிடம் சொல்ல, தாவீது
1சாமுவேல் 17:34 -37
தாவீது சவுலைப்பார்த்து: உம்முடைய அடியான் என் தகப்பனுடைய ஆடுகளை மேய்த்துக்கொண்டிருக்கிறபோது, ஒருவிசை ஒரு சிங்கமும் ஒருவிசை ஒரு கரடியும் வந்து, மந்தையிலிருக்கிற ஒரு ஆட்டைப் பிடித்துக்கொண்டது.
நான் அதைத் தொடர்ந்துபோய், அதை அடித்து, அதை அதின் வாய்க்குத் தப்புவித்தேன்; அது என்மேல் பாய்ந்தபோது, நான் அதின் தாடியைப் பிடித்து, அதை அடித்துக் கொன்றுபோட்டேன்.
அந்தச் சிங்கத்தையும் அந்தக் கரடியையும் உம்முடைய அடியானாகிய நான் கொன்றேன்; விருத்தசேதனமில்லாத இந்தப் பெலிஸ்தனும் அவைகளில் ஒன்றைப்போல இருப்பான்; அவன் ஜீவனுள்ள தேவனுடைய சேனைகளை நிந்தித்தானே என்றான்.
பின்னும் தாவீது: என்னைச் சிங்கத்தின் கைக்கும் கரடியின் கைக்கும் தப்புவித்த கர்த்தர் இந்தப் பெலிஸ்தனுடைய கைக்கும் தப்புவிப்பார் என்றான்; அப்பொழுது சவுல் தாவீதைப் பார்த்து: போ, கர்த்தர் உன்னுடனேகூட இருப்பாராக என்றான்.
மேற்கூறிய வார்த்தைகள் எல்லாம் தாவீது சவுலிடம் சொல்லி முடித்த பின்பு சவுல் தாவீதிடம் நீ போ, கர்த்தர் உன்னுடனேக்கூட இருப்பாராக என்றான். பின்பு சவுல் தன் வஸ்திரங்களை உடுத்துவித்து, வெண்கலமான ஒரு சீராவை அவன் தலையின் மேல் போட்டு, ஒரு கவசத்தையும் அவனுக்கு தரிப்பித்தான். மேலும் அவனுடைய பட்டயத்தை தாவீது தன் வஸ்திரங்கள் மேல் கட்டிக்கொண்டு; அதிலே அவனுக்கு பழக்கமில்லாததினால் நடந்து பார்த்தான்; அப்பொழுது தாவீது சவுலை நோக்கி; நான் இவைகளை போட்டுக்கொண்டு போகக்கூடாது; இந்த அப்பியாசம் எனக்கு இல்லை என்று அவைகளை களைந்து போட்டு தன் கையிலே பிடித்துக் கொண்டு, ஆற்றிலிருக்கிற ஐந்து கூழாங்கற்களைத் தெரிந்தெடுத்து, அவைகளை மேய்ப்பனுக்குரிய தன்னுடைய அடைப்பையிலே போட்டு, தன் கவணை தன் கையிலே பிடித்துக்கொண்டு அந்த பெலிஸ்தியனண்டையிலே போனான். பெலிஸ்தியனும் நடந்து தாவீதண்டையில் வந்தான். பெலிஸ்தியன் தாவீதை கண்டவுடனே அவன் இளைஞனும், சவுந்தரிய ரூபமான சிவந்த மேனியுமாயிருந்தபடியினால் அவனை அசட்டை பண்ணினான். பின்பு அவன் தாவீதை பார்த்து, நீ தடிகளோடே என்னிடத்தில் வர நான் நாயா என்று சொல்லி, அவன் தன் தேவர்களைக் கொண்டு தாவீதை சபித்தான். பின்னும் பெலிஸ்தியன் தாவீதை பார்த்து என்னிடத்தில் வா; உன் மாம்சத்தை ஆகாயத்துப்பறவைகளுக்கும், காட்டு மிருகங்களுக்கும் கொடுப்பேன் என்றான்.
பிரியமானவர்களே கர்த்தர் இதனை திருஷ்டாந்தப்படுத்துவது எதற்கு என்றால் நமக்கு மாம்ச யுத்தம் அல்ல என்பதும், ஆவிக்குரிய யுத்தம் செய்ய வேண்டும் என்பதற்காகவே, தாவீது; சவுல் தரிப்பித்த சகலத்தையும் கழற்றி விட்டு, தடியாகிய தேவனுடைய சத்திய வார்த்தையையும், அபிஷேகத்தையும், கல்லாகிய கிறிஸ்துவையும் பற்றிக்கொண்டு, அந்நிய துர் உபதேசத்தை நம்மை விட்டு முற்றிலும் அகற்றுகிறார் என்பதனை நமக்கு விளக்கி காட்டுகிறார். அதனை திருஷ்டாந்தத்தோடு தெளிவுபடுத்தும்படியாக தாவீது, ஆட்டை பிடித்த கரடியையும், சிங்கத்தையும் கொன்றேன் என்று எழுதப்பட்டிருக்கிறது. அல்லாமலும் சத்துரு எப்போதும் தேவ ஜனத்தை நிந்திக்கும்படியாக இருப்பான். ஆனால் அந்த நிந்தை கிறிஸ்துவின் ஆவியினால் ஒருபோதும் நிலைக்காது என்பதனை நாம் உணர்ந்துக்கொண்டு நாம் கிறிஸ்துவின் அபிஷேகத்தில் நிறைந்தவர்களாய் அவரவரில் இருக்கிற துர் உபதேசங்களை அழிக்கும் படியாக கர்த்தரிடத்தில் ஒப்புக்கொடுப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.