தேவனுக்கே மகிமையுண்டாவதாக
ரோமர் 12:21
நீ தீமையினாலே வெல்லப்படாமல், தீமையை நன்மையினாலே வெல்லு.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய தீமைக்கு நன்மை செய்கிறவர்களாக இருக்க வேண்டும்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நம் உள்ளம் நய வஞ்சக கிரியைகள் எழும்பாத படி, கபடற்ற உள்ளமாக பரிசுத்தமாக காத்துக்கொள்ள வேண்டும் என்பதனை குறித்து தியானித்தோம்.
அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்
1சாமுவேல் 19:1-4
தாவீதைக் கொன்றுபோடும்படிக்கு, சவுல் தன் குமாரனாகிய யோனத்தானோடும் தன் ஊழியக்காரர் எல்லாரோடும் பேசினான்.
சவுலின் குமாரனாகிய யோனத்தானோ, தாவீதின்மேல் மிகவும் பிரியமாயிருந்தான்; அதனால் யோனத்தான் தாவீதுக்கு அதை அறிவித்து: என் தகப்பனாகிய சவுல் உம்மைக் கொன்று போட வகைதேடுகிறார்; இப்போதும் நாளைக்காலமே நீர் எச்சரிக்கையாயிருந்து, மறைவான இடத்தில் ஒளித்துக்கொண்டிரும்.
நான் புறப்பட்டுவந்து, நீர் வெளியிலிருக்கும் இடத்தில் என் தகப்பன் பக்கத்திலே நின்று, உமக்காக என் தகப்பனோடே பேசி, நடக்கும் காரியத்தைக் கண்டு, உமக்கு அறிவிப்பேன் என்றான்.
அப்படியே யோனத்தான் தன் தகப்பனாகிய சவுலோடே தாவீதுக்காக நலமாய்ப் பேசி, ராஜா தம்முடைய அடியானாகிய தாவீதுக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்யாதிருப்பாராக; அவன் உமக்கு விரோதமாகப் பாவஞ்செய்யவில்லை; அவன் செய்கைகள் உமக்கு மெத்த உபயோகமாயிருக்கிறதே.
மேற்க்கூறப்பட்ட வார்த்தைகளில் தாவீதை பொறாமையினிமித்தமாக சவுல் கொன்றுப்போடும்படி தன் குமாரனாகிய யோனத்தானோடும், தன் ஊழியககாரர் எல்லாரோடும் பேசினான். ஆனால் சவுலின் குமாரனாகிய யோனத்தானோ தாவீதை மிகவும் நேசித்தான்; அதனால் யோனத்தான் இந்த செய்தியை தாவீதுக்கு அறிவித்து சவுல் உம்மைக் கொன்றுப் போட வகை தேடுகிறார்;இப்போதும் நாளைக் காலமே நீர் எச்சரிக்கையாயிருந்து மறைவான இடத்தில் ஒளித்து கொண்டிருக்கும்படி சொல்கிறான். பின்பு அவன் சொல்கிறான் நான் புறப்பட்டுவந்து நீர் வெளியிலிருக்கும் இடத்தில் என் தகப்பனோடு உமக்காக பேசி, நடக்கும் காரியத்தை கண்டு உமக்கு அறிவிப்பேன் என்றான். அவ்விதம் யோனத்தான் தாவீதுக்காக நலமாய்பேசி ராஜா தம்முடைய அடியானாகிய தாவீதுக்காக பாவஞ்செய்யாதிருப்பாராக; என்று யோனத்தான் கூறி; தாவீது சவுலுக்கு விரோதமாக பாவஞ்செய்யவில்லை என்றும் தாவீது சவுலுக்கு உபயோகமாக இருக்கிறதையும் எடுத்து கூறுகிறான்.
மேலும் தாவீது சவுலுக்காக தன் பிராணனையும் எண்ணாமல் உதவி செய்ததை
1சாமுவேல் 19:5
அவன் தன் பிராணனைத் தன் கையிலே வைத்துக்கொண்டு, அந்தப் பெலிஸ்தனைக் கொன்றதினாலே, கர்த்தர் இஸ்ரவேலுக்கெல்லாம் பெரிய இரட்சிப்பைக் கட்டளையிட்டதை நீர் கண்டு, சந்தோஷப்பட்டீரே; இப்போதும் முகாந்தரமில்லாமல் தாவீதைக் கொல்லுகிறதினால், குற்றமில்லாத இரத்தத்திற்கு விரோதமாக நீர் பாவஞ்செய்வானேன் என்றான்.
பின்பு சவுல் யோனத்தானுடைய சொல்லை கண்டு தாவீது கொலை செய்யப்படுவதில்லை என்று என்று கர்த்தருடைய ஜீவனைக் கொண்டுஆணையிட்டான். பின்பு யோனத்தான் தாவீதை அழைத்து அந்த வார்த்தைகளையெல்லாம் சொல்லி தாவீதண்டையில் கொண்டு போய் விட்டான்; அவன் முன்போலவே அவன் சமுகத்தில் இருந்து மறுபடியும் ஒரு யுத்தம் வந்தபோது, தாவீது புறப்பட்டு பெலிஸ்திரோடு யுத்தம் பண்ணி அவர்களுக்குள் மகா சங்காரம் பண்ணினதினால் அவனுக்கு முன்பாக முறிந்தோடினார்கள்.
பிரியமானவர்களே மேலே கூறப்பட்ட வசனங்களை நாம் தியானிக்கையில் சவுல் தாவீதுக்கு தீமை செய்ய நினைத்த போது, கர்த்தர் அதை தடைபண்ணின விதம் நாம் வாசிக்கிறோம். மேலும் யார் நமக்கு விரோதமாக வந்தாலும் கர்த்தருடைய ஆவியானவர் நம்மில் இருந்தால் நமக்கு எவ்விதத்திலாகிலும் அதனை வெளிப்படுத்தாமல் இருக்க மாட்டார் என்பது நாம் புரிந்துக்கொள்ள வேண்டும். அல்லாமலும் சவுல் தீமை செய்ய நினைத்தான்; ஆனால் தாவீதோ அதனைப் பொருட்படுத்தாமல் நன்மை செய்கிறான். என்னவென்றால் யாராவது நமக்கு தீமை செய்கிறார்கள் என்று இருந்தால் நாம் சோர்ந்து போகாதபடி, கர்த்தர் நமக்கு தந்த வேலையில் தளர்வு வராதபடி ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். நாம் எவ்விதத்தில் கர்த்தரிடத்தில் உண்மையுள்ளவர்களாக இருககிறோம் என்பதனை சோதித்தறியும் பொருட்டாக கர்த்தரிடத்திலிருந்து நன்மையை பெற்றவர்கள் தீமையான காரியங்களை நம்மை குறித்து பேசலாம், செய்கையிலும் நடப்பிக்கலாம். ஆனால் கர்த்தரின் ஆவியால் நிரப்பப்பட்டிருப்போமானால் அவர்களே வெட்கமடைந்து போவார்கள். ஆனால் நம்முடைய ஆத்துமா கிறிஸ்துவோடு ஒருங்கிணைந்து காணப்படும். இவ்விதமாக நம்மை கர்த்தரிடத்தில் ஒப்புக்கொடுப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.