தேவனுக்கே மகிமையுண்டாவதாக
சங்கீதம் 94:15
நியாயம் நீதியினிடமாகத் திரும்பும்; செம்மையான இருதயத்தார் யாவரும் அதைப் பின்பற்றுவார்கள்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நாம் கரத்தர் நம்மில் நீதியை நடப்பிக்கும்படி காத்திருப்போம்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில் மணவாட்டி சபையாகிய நாம் கர்த்தரோடிருந்தால் கர்த்தர் நம்மோடிருப்பார் என்பதனை குறித்து நாம் தியானித்தோம்.
அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்
1சாமுவேல் 20:1- 2
. தாவீது ராமாவுக்கடுத்த நாயோதிலிருந்து ஓடிப்போய், யோனத்தான் முன்பாக வந்து: உம்முடைய தகப்பன் என் பிராணனை வாங்கத்தேடுகிறாரே, நான் செய்தது என்ன? என் அக்கிரமம் என்ன? நான் அவருக்குச் செய்த துரோகம் என்ன? என்றான்.
அதற்கு அவன்: அப்படி ஒருக்காலும் வராது; நீர் சாவதில்லை, இதோ, எனக்கு அறிவிக்காமல் என் தகப்பன் பெரியகாரியமானாலும் சிறியகாரியமானாலும் ஒன்றும் செய்கிறதில்லை; இந்தக் காரியத்தை என் தகப்பன் எனக்கு மறைப்பானேன்? அப்படி இருக்கமாட்டாது என்றான்.
மேற்கூறப்பட்ட வார்த்தைகளை நாம் தியானிக்கையில் தாவீது ராமாவுக்கடுத்த நாயோதிலிருந்து ஓடிப்போய் யோனத்தானிடம், அவன் தகப்பன் சவுல் பிராணனை வாங்க தேடுகிறதையும் சொல்லி, நான் செய்த அக்கிரமம் என்ன? நான் செய்த பாவம் என்ன? என்று கேட்கும் போது அவன் அது ஒருக்காலும் வாராது? நீர் சாவதில்லை என்று சொல்லி விட்டு என் தகப்பன் சிறிய காரியமானாலும், பெரிய காரியமானாலும் ஒன்றும் செய்கிறதில்லை; இந்த காரியத்தையும் மறைப்பதில்லை என்றான்.
அப்போது தாவீது யோனத்தானிடம்
1சாமுவேல் 20:3
அப்பொழுது தாவீது: உம்முடைய கண்களில் எனக்குத் தயைகிடைத்தது என்று உம்முடைய தகப்பன் நன்றாய் அறிவார்; ஆகையால் யோனத்தானுக்கு மனநோவு உண்டாகாதபடிக்கு அவன் இதை அறியப்போகாது என்பார்; மரணத்திற்கும் எனக்கும் ஒரு அடி தூரமாத்திரம் இருக்கிறது என்று கர்த்தருடைய ஜீவனையும் உம்முடைய ஜீவனையும் கொண்டு நிச்சயமாய்ச் சொல்லுகிறேன் என்று மறுமொழி சொல்லி ஆணையிட்டான்.
மேற்கூறப்பட்ட வார்த்தைகளை கேட்ட யோனத்தானோ தாவீதிடம் உமது மனவிருப்பம் இன்னது என்று சொல்லும், அதன்படி உமக்கு செய்வேன் என்றான்.
அதற்கு தாவீது 1சாமுவேல் 20:5-8
தாவீது யோனத்தானை நோக்கி: இதோ, நாளைக்கு அமாவாசி, நான் ராஜாவோடே பந்தியிருந்து சாப்பிடவேண்டியதாயிருக்கும்; ஆனாலும் நான் மூன்றாம் நாள் சாயங்காலமட்டும் வெளியிலே ஒளித்திருக்கும்படி எனக்கு உத்தரவு கொடும்.
உம்முடைய தகப்பன் என்னைக்குறித்து விசாரித்தால், தன் ஊராகிய பெத்லகேமிலே தன் குடும்பத்தார் யாவரும் வருஷத்துக்கு ஒருதரம் பலியிடவருகிறபடியால் தாவீது அவ்விடத்திற்குப் போக என்னிடத்தில் வருந்திக்கேட்டான் என்று நீர் சொல்லும்.
அதற்கு அவர் நல்லது என்றால், உம்முடைய அடியானுக்குச் சமாதானம் இருக்கும்; அவருக்கு எரிச்சலுண்டானால், அவராலே பொல்லாப்புத் தீர்மானப்பட்டிருக்கிறது என்று அறிந்துகொள்வீர்.
ஆகையால் உம்முடைய அடியானுக்குத் தயைசெய்யவேண்டும்; கர்த்தருக்கு முன்பாக உம்முடைய அடியானோடே உடன்படிக்கை பண்ணியிருக்கிறீரே; என்னில் ஒரு அக்கிரமம் இருந்ததேயானால், நீரே என்னைக் கொன்றுபோடும்; நீர் என்னை உம்முடைய தகப்பனிடத்துக்குக் கொண்டுபோகவேண்டியது என்ன என்றான்.
மேற்கூறப்பட்ட வார்த்தைகளை தாவீது யோனத்தானோடே பேசினதுமட்டுமல்லாமல், தன் மனதின் வருத்தத்தையும் எடுத்துக்கூறினான். அதற்கு யோனத்தான் அப்படி உமக்கு வராதிருப்பதாக; உமக்கு பொல்லாப்பு செய்ய என் தகப்பனாலே தீர்மானித்திருக்கிறது என்ன என்று நான் நிச்சயமாய் அறிந்தேனானால் நான் அதை உமக்கு அறிவிக்காதிருப்பேனோ என்றான். அப்போது தாவீது யோனத்தானிடம் உம்முடைய தகப்பன் கடினமான உத்தரம் சொன்னால் யார் அதை அறிவிப்பான் என்றான். அதற்கு யோனத்தான் ஊருக்கு வெளியே போவோம் வாரும் என்றான். அப்படியாக இருவரும் வெளியே போனபோது யோனத்தான் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரை முன்னிட்டு தாவீதை நோக்கி நான் நாளையோ, மறு நாளிலோ என் தகப்பனுடைய மனதை அறிந்துக்கொண்டு அவர் தாவீதின் மேல் தயவாயிருக்கிறார் என்று கண்டும், அதை அப்போது உமது செவிகளுக்கு வெளிப்படுத்தும்படிக்கு, உமக்கு சொல்லியனுப்பாதிருந்தால், இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் யோனத்தானுக்கு அதற்கு சரியாகவும், அதற்கு அதிகமாகவும் செய்யக்கடவர். ஆனாலும் தீங்கு செய்ய என் தகப்பனுக்கு பிரியமாயிருந்தால், அதை உமக்கு வெளிப்படுத்தி, நீர் சமாதானத்தோடே போகும்படி உம்மை அனுப்பி விடுவேன்; கர்த்தர் என் தகப்பனோடு இருந்தது போல, உம்மோடும் இருப்பாராக என்றான்.
பிரியமானவர்களே, இவ்விதமாக யோனத்தான் தாவீதுக்கு ஆறுதலான வார்த்தைகளை கூறுகிறதை பார்க்கிறோம். இதனை நாம் தியானிக்கும் போது தாவீது கர்த்தரோடிருந்தாலும், சவுல் கொன்றுவிடுவானோ என்று பயப்படுகிறான்; அதனால் தான் நேசித்த யோனத்தானுடைய உதவியை நாடுகிறான். அதென்னவென்றால் அவர்கள் இருவருடைய ஆத்துமாவும் ஒன்றோடோன்று இசைந்து இருந்ததால் அவன் கவலைகளை குறித்து அவனிடம் பகர்ந்துக்கொள்கிறான். இவை எதற்கு கர்த்தர் திருஷ்டாந்தப்படுத்துகிறாரென்றால் நம் ஆத்துமாவில் கிறிஸ்து ஜீவித்துக்கொண்டிருப்பதினால் நம் சத்துக்கள் நம்மோடு எதிர்க்கையில் நாம் சொல்ல வேண்டியது கிறிஸ்துவினிடத்தில்; அவர் நம்மை மரண பயத்தினின்று விடுதலையாக்கி இரட்சிப்பார். நம்முடைய சத்துருக்களுக்கு அவர் சரிக்கு சரிக்கட்டுவார். நாம் கிறிஸ்துவோடு கூட இருந்தால் எதற்கும் பயப்பட வேண்டாம். அவரே எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வார். மேலும் நம்மில் இருந்து நீதியை நடப்பிக்கிறவர், அவருக்கே காத்திருப்போம். ஒப்புக்கொடுப்போம்.
ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.