தேவனுக்கே மகிமையுண்டாவதாக
சங்கீதம் 119:130
உம்முடைய வசனத்தின் பிரசித்தம் வெளிச்சம் தந்து, பேதைகளை உணர்வுள்ளவர்களாக்கும்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நமக்குள் ஏதோமிய கிரியைகள் எழும்பாமல் நம்மை பரிசுத்தபடுத்த வேண்டும்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதபகுதியில் யாரைக்குறித்தும் தவறான எண்ணங்கொள்ளாதபடி நம் உள்ளத்தை காத்துக்கொள்ளவேண்டும் என்பதனை குறித்து தியானித்தோம்.
அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்
1சாமுவேல் 22: 9 -13
அப்பொழுது சவுலின் ஊழியக்காரரோடே நின்ற ஏதோமியனாகிய தோவேக்கு பிரதியுத்தரமாக: ஈசாயின் மகனை நோபிலிருக்கிற அகிதூபின் குமாரனாகிய அகிமெலேக்கிடத்தில் வரக்கண்டேன்.
இவன் அவனுக்காகக் கர்த்தரிடத்தில் விசாரித்து, அவனுக்கு வழிக்கு போஜனத்தைக் கொடுத்து, பெலிஸ்தனாகிய கோலியாத்தின் பட்டயத்தையும் அவனுக்குக் கொடுத்தான் என்றான்.
அப்பொழுது ராஜா: அகிதூபின் குமாரனாகிய அகிமெலேக் என்னும் ஆசாரியனையும், நோபிலிருக்கிற அவன் தகப்பன் வீட்டாராகிய எல்லா ஆசாரியரையும் அழைப்பித்தான்; அவர்களெல்லாரும் ராஜாவினிடத்தில் வந்தார்கள்.
அப்பொழுது சவுல்: அகிதூபின் குமாரனே கேள் என்று சொல்ல, அவன்: இதோ, இருக்கிறேன் என் ஆண்டவனே என்றான்.
அப்பொழுது சவுல் அவனை நோக்கி: நீயும் ஈசாயின் மகனும் எனக்கு விரோதமாய்க் கட்டுப்பாடுபண்ணி, இந்நாளில் இருக்கிறபடி எனக்குச் சதிபண்ண அவன் எனக்கு விரோதமாக எழும்பும்படிக்கு, நீ அவனுக்கு அப்பமும் பட்டயமும் கொடுத்து, தேவசந்நிதியில் அவனுக்காக விசாரித்தது என்ன என்றான்.
மேற்கூறப்பட்ட வசனங்களின் கருத்துக்கள் என்னவென்றால் யோனத்தானும், தாவீதும் உடன்படிக்கை பண்ணிக்கொண்டதை அறிந்த சவுல், அதனை குறித்து தன் ஊழியக்காரரிடம் விசாரித்துக் கொண்டிருக்கும்போது, சவுலின் ஊழியக்காரரொடே நின்ற ஏதோமியனாகிய தோவேக்கு பிரதியுத்தரமாக சொன்னது; ஈசாயின் மகனை நோபிலிருக்கிற அகிதூபின் குமாரனாகிய அகிமெலேக்கினிடத்தில் வர கண்டேன். இவன் அவனுக்காக கர்த்தரிடத்தில் விசாரித்து அவனுக்கு வழிக்குப் போஜனத்தைக்கொடுத்து, பெலிஸ்தியனாகிய கோலியாத்தின் பட்டயத்தையும் அவனுக்கு கொடுத்தான் என்று அறிவித்தான். அப்போது ராஜா அகிதூபின் குமாரனாகிய அகிமெலேக்கையும், நோபிலிருக்கிற அவன் தகப்பன் வீட்டாராகிய எல்லா ஆசாரியரையும் அழைப்பித்தான். அவர்களெல்லாரும் ராஜாவினிடத்தில் வந்த போது; சவுல் அகிமெலேக்கை பார்த்து சொன்னது; அகிதூபின் குமாரனே கேள்; என்ற போது, அவன் இதோ அடியேன் இருக்கிறேன் ஆண்டவரே என்றான். அப்பொது சவுல் அவனிடம் ஈசாயின் குமாரன் எனக்கு விரோதமாக கட்டுபாடு பண்ணி, இந்நாளில் இருக்கிறபடி எனக்கு சதிபண்ண, அவன் எனக்கு விரோதமாக எழும்ப அப்பமும் பட்டயமும் கொடுத்து, தேவ சந்நிதியில் அவனுக்காக விசாரித்தது என்ன? என்று கேட்க அகிமெலேக்கு ராஜாவிடம் கூறியது
1சாமுவேல் 22:14,15
அகிமெலேக் ராஜாவுக்குப் பிரதியுத்தரமாக: உம்முடைய எல்லா ஊழியக்காரரிலும் தாவீதைப்போல, ராஜாவுக்கு மருமகனும், உம்முடைய கட்டளைகளின்படி செய்துவருகிறவனும், உம்முடைய வீட்டிலே கனமுள்ளவனுமாயிருக்கிற உண்மையுள்ளவன் யார்?
இன்றையதினம் அவனுக்காக தேவசந்நிதியில் விசாரிக்கத் தொடங்கினேனோ? அது எனக்குத் தூரமாயிருப்பதாக; ராஜா தம்முடைய அடியானாகிய என்மேலாகிலும் என் தகப்பன் வீட்டாரில் எவன்மேலாகிலும் குற்றம் சுமத்தவேண்டாம்; உம்முடைய அடியான் இவைகளிலெல்லாம் ஒரு சிறிய காரியமாகிலும் பெரிய காரியமாகிலும் அறிந்திருந்ததில்லை என்றான்.
மேற்கூறப்பட்ட வார்த்தைகள் ஆசாரியனாகிய அகிமெலேக்கு சொன்னபிறகு, ராஜா சொன்னது அகிமெலேக்கே, நீயும் உன் தகப்பன் வீட்டாரும் சாக வேண்டும் என்று சொல்லி; பின்பு ராஜா தன்னண்டையில் நிற்கிற சேவகரை பார்த்து சொன்னது நீங்கள் போய் கர்த்தருடைய ஆசாரியர்களை கொல்லுங்கள்; அவர்கள் கை தாவீதோடே இருக்கிறது. அல்லாமலும் அவன் ஓடி போகிறதை அறிந்தும் யாரும் எனக்கு வெளிப்படுத்தவில்லை என்றான். ஆனாலும் யாரும் கர்த்தருடைய ஆசாரியர்களை கொல்ல தங்கள் கைகளை நீட்ட சம்மதிக்கவில்லை. அதனால் ராஜா தோவேக்கிடம்; ஆசாரியர்களை கொன்றுபொட சொல்கிறான். அப்போது ஏதோமியனாகிய தோவேக்கு ஆசாரியர்கள் மேல் விழுந்து சணல் நூல் ஏபோத்தைத் தரித்திருக்கும் எண்பத்தைந்து பேரை அன்றைய தினம் கொன்றான். அதன் பின்பு ஆசாரியர்களின் பட்டணமாகிய நோபிலுள்ள புருஷரையும், ஸ்திரீகளையும், ஆடுகளையும், மாடுகளையும், கழுதைகளையும் பட்டயகருக்கினால் வெட்டினான். இதனை கண்ட அகிமெலேக்கின் குமாரரில் அபியத்தார் என்பவன் தப்பி தாவீது இருக்கும் புறமாய் ஓடி போனான். அவன் சவுல் கர்த்தரின் ஆசாரியர்களை கொன்றுப்போட்ட செய்தியை தாவீதுக்கு அறிவித்தான்.
அப்போது தாவீது சொன்னது 1சாமுவேல் 22: 22, 23
அப்பொழுது தாவீது அபியத்தாரைப் பார்த்து: ஏதோமியனாகிய தோவேக்கு அங்கே இருந்தபடியினாலே, அவன் எவ்விதத்திலும் சவுலுக்கு அதை அறிவிப்பான் என்று அன்றையதினமே அறிந்திருந்தேன்; உன் தகப்பன் வீட்டாராகிய எல்லாருடைய மரணத்துக்கும் காரணம் நானே.
நீ என்னிடத்தில் இரு, பயப்படவேண்டாம்; என் பிராணனையும் வாங்கத்தேடுகிறவனே உன் பிராணனையும் வாங்கத்தேடுகிறான்; நீ என் ஆதரவிலே இரு என்றான்.
மேற்கூறப்பட்ட வார்த்தைகளை சொல்லி தாவீது தன்னுடைய ஆதரவிலே அங்கு அபியத்தாரை இருக்க சொல்கிறான்.
பிரியமானவர்களே இந்த பகுதிகளை நாம் பார்க்கும் போது பொல்லாத ஆவி உள்ள சவுலின் இருதயம் ஒருநாளும் சீர்படவில்லை. ஏனென்றால் அவனுக்குள் பொல்லாத ஆவி அனுப்பியது கர்த்தர் தம்முடைய கோபத்தினால், பொறாமை அவனிடம் இருந்ததால் அனுப்பிவிடுகிறார். அதனால் கர்த்தரின் ஆவி உள்ள தாவீதிடத்தில் மிகவும் வைராக்கியம் உள்ளவனாக காணப்படுகிறான். இப்படிபட்ட வைராக்கியம் நம்முடைய உள்ளத்தில் எழும்பாதபடி நாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். மற்றும் தாவீதுக்கு உதவியாக இருந்தவர்களையும் கொல்லவேண்டும் என்று திட்டம் போடுகிறான். என்னவென்றால் தாவீதுக்கு உதவியாயிருந்தது ஆசாரியனாகிய அகிமெலேக்கு; அதனை அறிந்த சவுல் கொடூரக்குணத்தோடுக்கூட ஆசாரியர்களாயிருக்கிற யாவரையும் கொன்றுப் போட உத்தரவு போடுகிறான். ஆனால்அந்த ஆசாரியர்களை கொன்று போடும் படி கட்டளையிட, ராஜாவின் வேலைக்காரரோ அவர்களை கொல்ல சம்மதியாமல், தங்கள் கைகளை நீட்டவில்லை. பிரியமானவர்களே நாம் அறிந்துக்கொள்ள வேண்டியது என்னவென்றால் நம்மிலும் அநேகர் இவ்வித துணிகரமுள்ளவர்களாக இருக்கிறார்கள். ஆசாரியர்கள் கர்த்தரால் ஆசாரிய அபிஷேகம் பெற்றவர்கள்; அதனை அறியாமல் தங்கள் கொடுமையினால் அபிஷேகம் பெற்றவர்களை ஆயுதத்தினால் அல்ல, தங்களில் இருக்கிற தீட்டபட்ட சவரகன் கத்தியினால் வார்த்தைகளை வைத்து கொல்லுகிறார்கள். ஆனால் அவர்கள் வரும் நாட்களில் நடக்கபோகிற காரியங்களை சிந்திக்காமல் பேசுகிறார்கள்.
அவர்களை குறித்து கர்த்தருடைய வசனம்
சங்கீதம் 52: 2-5
நீ கேடுகளைச் செய்ய எத்தனம்பண்ணுகிறாய், கபடுசெய்யும் உன் நாவு தீட்டப்பட்ட சவரகன் கத்தியைப்போல் இருக்கிறது.
நன்மையைப்பார்க்கிலும் தீமையையும், யதார்த்தம் பேசுகிறதைப்பார்க்கிலும் பொய்யையும் விரும்புகிறாய். (சேலா.)
கபடமுள்ள நாவே, சங்கரிக்கும் சகல வார்த்தைகளையும் நீ விரும்புகிறாய்.
தேவன் உன்னை என்றென்றைக்கும் இராதபடி அழித்துப்போடுவார்; அவர் உன்னைப் பிடித்து, உன் வாசஸ்தலத்திலிருந்து பிடுங்கி, நீ ஜீவனுள்ளோர் தேசத்தில் இராதபடிக்கு உன்னை நிர்மூலமாக்குவார். (சேலா.)
மேற்கூறப்பட்ட வார்த்தைகளை கவனத்தோடு வாசித்து ஜாக்கிரதையாயிருங்கள். ஆனால் ஏதோமியனாகிய தோவேக்கிடத்தில் ஆசாரியர்களை கொல்லும்படி சொல்ல, அவன் அவர்களை கொன்றுவிடுகிறான். அதனால் இப்படி பட்டவர்கள் ஏதோமியர்கள் தான் என்பதனை புரிந்துக்கொண்டு, தாங்கள் யாரிலும் கொடூர குணம் வராதபடி காத்துக்கொள்ளுங்கள். நாம் ஒவ்வொருவரும் எப்படியிருக்க வேண்டும் என்று எழுதப்பட்டிருக்கிறது
சங்கீதம் 52: 8
நானோ தேவனுடைய ஆலயத்தில் பச்சையான ஒலிவமரத்தைப் போலிருக்கிறேன்; தேவனுடைய கிருபையை என்றென்றைக்கும் நம்பியிருக்கிறேன்.
ஆனால் தோவேக்கு போல அநேக பேர் தேவனுடைய சபைகளில் இருக்கிறார்கள். அதனால் நாம் எந்த ஆத்மீக காரியத்தை செய்தாலும் மிகவும் கவனத்தோடு இருக்கவேண்டும். இஸ்ரவேலருக்குள் பொல்லாத ஆவிக்கு இடகொடுத்தால் சபைகளில் தோவேக்குகள் எழும்புவார்கள். தேவனுடைய சபையை எப்படி தகர்க்கலாம் என்று பார்ப்பார்கள். ஆதலால் நம்முடைய உள்ளத்திலும் பொல்லாத ஆவியின் காரணமாக தோவேக்குள் எழும்பாத படி நாம் நம்முடைய ஆத்துமாவை காத்துக்கொண்டு, கர்த்தருக்காய் வாழும் படி ஒப்புக்கொடுப்போம்.
ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.