தேவனுக்கே மகிமையுண்டாவதாக
2 கொரிந்தியர் 4:8,9
நாங்கள் எப்பக்கத்திலும் நெருக்கப்பட்டும் ஒடுங்கிப்போகிறதில்லை; கலக்கமடைந்தும் மனமுறிவடைகிறதில்லை;
துன்பப்படுத்தப்பட்டும் கைவிடப்படுகிறதில்லை; கீழே தள்ளப்பட்டும் மடிந்துபோகிறதில்லை.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நாம் எப்பக்கம் நெருக்கப்பட்டாலும் சோர்ந்து போகாமல் இருக்க வேண்டும்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதபகுதியில் மணவாட்டி சபையாகிய நம்முடைய ஆத்துமா கிறிஸ்துவை தரித்திருந்தால் கர்த்தர் நம்மை சத்துருவின் கையில் ஒப்புக்கொடுக்கமாட்டார் என்பதனை குறித்து தியானித்தோம்.
அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்
1சாமுவேல் 23:15-21
தன் பிராணனை வாங்கத் தேடும்படிக்கு, சவுல் புறப்பட்டான் என்று தாவீது அறிந்தபடியினாலே, தாவீது சீப் வனாந்தரத்திலுள்ள ஒரு காட்டிலே இருந்தான்.
அப்பொழுது சவுலின் குமாரனாகிய யோனத்தான் எழுந்து, காட்டிலிருக்கிற தாவீதினிடத்தில் போய், தேவனுக்குள் அவன் கையைத் திடப்படுத்தி:
நீர் பயப்படவேண்டாம்; என் தகப்பனாகிய சவுலின் கை உம்மைக் கண்டு பிடிக்கமாட்டாது; நீர் இஸ்ரவேலின்மேல் ராஜாவாயிருப்பீர்; அப்பொழுது நான் உமக்கு இரண்டாவதாயிருப்பேன்; அப்படி நடக்கும் என்று என் தகப்பனாகிய சவுலும் அறிந்திருக்கிறார் என்றான்.
அவர்கள் இருவரும் கர்த்தருக்கு முன்பாக உடன்படிக்கை பண்ணினபின்பு, தாவீது காட்டில் இருந்துவிட்டான்; யோனத்தானோ தன் வீட்டிற்குப் போனான்.
பின்பு சீப் ஊரார் கிபியாவிலிருக்கிற சவுலிடத்தில் வந்து: தாவீது எங்களிடத்தில் எஷிமோனுக்குத் தெற்கே ஆகிலா என்னும் மலைக்காட்டிலுள்ள அரணிப்பான இடங்களில் ஒளித்துக்கொண்டிருக்கிறான் அல்லவா?
இப்போதும் ராஜாவே, நீர் உம்முடைய மனவிருப்பத்தின்படி இறங்கி வாரும்; அவனை ராஜாவின் கையில் ஒப்புக்கொடுக்க, எங்களால் ஆகும் என்றார்கள்.
அதற்கு சவுல்: நீங்கள் என்மேல் தயை வைத்ததினாலே, கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பீர்களாக.
மேற்கூறப்பட்ட வசனங்களில் எழுதபட்டவைகளின்படி தாவீது சவுலுக்கு பயந்து சீப் என்னும் வனாந்தரத்திலுள்ள ஒரு மலையில் தரித்திருந்தான் என்று வாசிக்கிறோம். பின்பு சவுல் தாவீதின் பிராணனை வாங்க தேடுகிறான் என்று அறிந்தபடியினாலே சீப் வனாந்தரத்திலுள்ள ஒரு காட்டில் இருக்கிறான். அப்போது காட்டிலிருக்கிறான் என்று யோனத்தான் அறிந்து தாவீதினிடத்தில் வந்து நீர் பயப்படவேண்டாம். நிச்சயமாகவே நீர் இஸ்ரவேலுக்கு ராஜாவாயிருப்பீர், நான் இரண்டாவதாயிருப்பேன், அப்படி நடக்கும் என்று என் தகப்பனாரும் அறிந்திருக்கிறார் என்று கூறி, கர்த்தருக்கு முன்பாக இருவரும் உடன்படிக்கை பண்ணின பின்பு யோனத்தான் தன் வீட்டிற்கு போகிறான்; தாவீதோ காட்டிலே இருந்து விட்டான். பின்பு சீப் ஊரார் கிபியாவிலிருக்கிற சவுலினிடத்தில் வந்து தாவீது எங்களிடத்தில் எஷிமோனுக்கு தெற்கே ஆகிலா என்னும் மலைக்காட்டிலுள்ள அரணிப்பான இடத்தில் ஒளித்துக்கொண்டிருக்கிறான்; ராஜாவே நீர் உம்முடைய மனவிருப்பத்தின் படி இறங்கி வாரும்; அவனை ராஜவின் கையில் ஒப்புக்கொடுக்க எங்களால் ஆகும் என்றார்கள். அதற்கு ராஜா நீங்கள் என் மேல் தயை வைத்ததினால் கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பீர்களாக.
ஆனால் சவுல் அவர்களிடம் கூறுகிறது என்னவென்றால்
1சாமுவேல் 23:22,23
நீங்கள் போய், அவன் கால் நடமாடுகிற இடத்தைப் பார்த்து, அங்கே அவனைக் கண்டவன் யார் என்பதையும் இன்னும் நன்றாய் விசாரித்து அறியுங்கள்; அவன் மகா தந்திரவாதி என்று எனக்குத் தெரியவந்தது.
அவன் ஒளித்துக்கொண்டிருக்கும் எல்லா மறைவிடங்களையும் பார்த்தறிந்து கொண்டு, நிச்சய செய்தி எனக்குக் கொண்டுவாருங்கள்; அப்பொழுது நான் உங்களோடே கூடவந்து, அவன் தேசத்தில் இருந்தால், யூதாவிலிருக்கிற சகல ஆயிரங்களுக்குள்ளும் அவனைத் தேடிப் போவேன் என்றான்.
இந்த வார்த்தைகளால் சவுல் தாவீது நிச்சயமாய் அங்கு இருக்கிறான் என்பதனை அறிந்துக் கொள்ள விரும்புகிறான். மேலும் தாவீதைக்குறித்து சவுல் சொன்னது; மகா தந்திரவாதி. இவ்விதம் சவுல் சொன்னதால் அவர்கள் எழுந்து சவுலுக்கு முன்னாலே சீப் ஊருக்கு போனார்கள். அப்போது தாவீதுக்கு இவை அறிவிக்கப்பட்ட போது அவன் கன்மலையிலிருந்து இறங்கி, மாகோன் வனாந்தரத்திலே தங்கினான்; அதை சவுல் கேள்விபட்டு, மாகோன் வனாந்திரத்திலே தாவீதை பின் தொடர்ந்தான். அவ்விதமாக சவுல் மலையின் இந்த பக்கத்திலும், தாவீதும் அவன் மனுஷரும் மலையின் அந்தபக்கத்திலும் நடந்தார்கள்; தாவீது சவுலுக்கு தப்பிப்போக தீவிரித்த போது சவுலும் அவன் மனுஷரும் தாவீதையும், அவன் மனுஷரையும் பிடிக்கதக்கதாய் அவர்களை வளைந்துக்கொண்டார்கள். அந்த நேரத்தில் ஒரு ஆள் சவுலிடத்தில் வந்து பெலிஸ்தியர்கள் தேசத்தின் மேல் படையெடுத்து வந்திருக்கிறார்கள், நீர் சீக்கிரமாய் வாரும் என்றான். அப்போது சவுல் தாவீதை பின் தொடருகிறதை விட்டு திரும்பி, பெலிஸ்தியரை எதிர்க்கும்படி போனான்; ஆதலால் அவ்விடத்திற்கு சேலா அம்மாலிகோத் என்று பேரிட்டார்கள். அப்போது தாவீது அவ்விடத்தை விட்டுப் புறப்பட்டு, என்கேதியிலுள்ள அரணிப்பான இடங்களில் தங்கினான்.
பிரியமானவர்களே, மேற்கூறப்பட்ட கருத்துக்கள் என்னவெனில் கிறிஸ்துவை தரித்தவர்கள், தங்களுக்கு வரும் சோதனைகளால் பயப்பட்டு, தாங்கள் பெற்ற ஆவிக்குரிய ஆசீர்வாதத்தை இழந்து விடுகிறார்கள். அதனை திருஷ்டாந்தப்படுத்தவே கர்த்தர் தாவீதை குறித்து அவன் சீப் வனாந்திரத்தில் அரணிப்பான மலையில் தங்கியிருந்தான் என்றும், கர்த்தர் அவனுக்கு பாதுகாவலாக இருக்கும்போது, சவுல் படையெடுத்துவருவதை அறிந்து மலையில் இருந்து காட்டிற்கு தாவீது வந்து தங்குகிறான். காட்டின் வாழ்வு என்றால் பொல்லாத ஆவியுள்ளவர்களுக்கு பயந்து வாழ்கிற ஆவியில் குன்றுதலை காட்டுகிறது. இவ்விதம் தாவீது காட்டில் இருக்கும் போது யோனத்தான் வந்து கர்த்தருடைய வார்த்தையை ஆறுதலாகக் கூறுகிறான். பின்பு சீப் ஊராரும் தாவீதுக்கு விரோதமாக செயல்படுகிறார்கள். அவன் தங்கியிருந்த இடத்தை சவுலுக்கு அறிவிக்கிறார்கள். ஆனால் சவுல் தாவீதை தந்திரவாதி என்கிறான்.
பிரியமானவர்களே, யாரை கர்த்தர் நேசிக்கிறாரென்றால் அவர் சத்தம் கீழ்படிகிறவர்களை; அதனால் சவுலின் கூட்டாளிகள் கர்த்தர் நேசிக்கிறவர்கள் மேல் பொறாமைப்பட்டுக்கொண்டே இருப்பார்கள். பொறாமைபடுகிறார்களென்றால் கர்த்தருடைய பிள்ளைகளை துன்பப்படுத்திக்கொண்டே இருப்பார்கள். ஆனால் துன்பபடுத்தபடுகிறவர்கள் கர்த்தரால் ஆசீர்வதிக்கப்படுவார்கள்; இதன் திருஷ்டாந்தம் தான் தாவீது. ஆனால் வார்த்தைகளினாலோ மற்றும் செயலின் மூலமாகவோ துன்பப்படுத்துகிறவர்கள் கர்த்தரால் சபிக்கப்படுவார்கள். இதன் திருஷ்டாந்தம் சவுல்; ஆனால் துன்பப்படுத்துகிறவன் இவன் இருதயம் எப்போதும் பொல்லாததாய் மாறுபாடானவைகளை எப்பொழுதும் பேசியும், செய்கையிலும் பொல்லாததாயிருக்கும். அவனுடைய முடிவு அழிவு என்பது சவுலின் நாட்களில் போகபோக தெரிந்தது. ஆனால் உண்மையும் நேர்மையுமாய் கர்த்தருக்காக வாழ்ந்த தாவீதை, சவுலும் அவன் ஜனங்களும் வளைந்து பக்கத்தில் வரும் போது கர்த்தர் தாவீதை நொடி நேரத்தில் அவர்கள் கையில் ஒப்புக்கொடுக்காமல் பாதுக்காக்கிற விதத்தை வாசிக்கிறோம்.
ஆதலால் பிரியமானவர்களே நாமும் கர்த்தருக்கு பிரியமாய் நடப்போமானால் கர்த்தர் அவ்விதமே பாதுகாப்பார் என்பது நிச்சயம். அவ்விதமாக சத்துரு நம்மை நெருக்கினாலும் கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பார். ஆதலால் எப்பக்கம் நெருக்கப்பட்டாலும் சோர்ந்து போகாதபடி ஒப்புக்கொடுப்போம்.
ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.