தேவனுக்கே மகிமையுண்டாவதாக
சங்கீதம் 119:132
உம்முடைய நாமத்தை நேசிக்கிறவர்களுக்கு வழங்கும் நியாயத்தின்படியே என்னை நோக்கிப்பார்த்து, எனக்கு இரங்கும்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நாம் மற்றவர்களுக்கு எந்த தீமையும் செய்யாமல், நம்முடைய இருதயம் சுத்தமாக்கிக்கொண்டே இருக்க வேண்டும்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில் மணவாட்டி சபையாகிய நம்மை சத்துருக்கள் எப்பக்கத்தில் நெருக்கினாலும் நாம் சோர்ந்து போகாமல் இருக்க வேண்டும் என்பதனை குறித்து தியானித்தோம்.
அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்
1சாமுவேல் 24:1-3
சவுல் பெலிஸ்தரைப் பின்தொடர்ந்து திரும்பிவந்தபோது, இதோ, தாவீது என்கேதியின் வனாந்தரத்தில் இருக்கிறான் என்று அவனுக்கு அறிவிக்கப்பட்டது.
அப்பொழுது சவுல்: இஸ்ரவேல் அனைத்திலும் தெரிந்துகொள்ளப்பட்ட மூவாயிரம்பேரைக் கூட்டிக்கொண்டு, தாவீதையும் அவன் மனுஷரையும் வரையாடுகளுள்ள கன்மலைகளின்மேல் தேடப்போனான்.
வழியோரத்திலிருக்கிற ஆட்டுத்தொழுவங்களிடத்தில் அவன் வந்தபோது, அங்கே ஒரு கெபி இருந்தது; அதிலே சவுல் மலஜலாதிக்குப் போனான்; தாவீதும் அவன் மனுஷரும் அந்தக் கெபியின் பக்கங்களில் உட்கார்ந்திருந்தார்கள்.
மேற்கூறப்பட்டிருக்கிற வசனங்களில் எழுதப்பட்டவைகள் என்னவென்றால், சவுல் பெலிஸ்தியரை பின்தொடர்ந்து போனதினால், தாவீது சவுலின் கையிலிருந்து தப்பி என்கேதியிலுள்ள அரணிப்பான இடங்களில் தங்கியிருந்தான். பின்பு சவுல் பெலிஸ்தியரை பின் தொடர்ந்து திரும்பி வந்த போது, தாவீது என்கேதியின் வனாந்திரத்தில் இருக்கிறான் என்று அவனுக்கு அறிவிக்கப்பட்டது. அப்போது சவுல் இஸ்ரவேலனைத்திலும் தெரிந்துக்கொள்ளப்பட்ட முப்பதினாயிரம் பேரை கூட்டிக்கொண்டு, தாவீதையும் அவன் மனுஷர்களையும் தேடும்படி வரையாடுகளுள்ள கன்மலைகளுக்கு போனான். அப்போது வழியோரத்திலிருக்கிற ஆட்டுத்தொழுவங்களிடத்தில் வந்த போது, அங்கே ஒரு கெபி இருந்தது; அதிலே சவுல் மலஜலாதிக்கு போனான்; தாவீதும், அவன் மனுஷரும் அதன் பக்கத்தில் உட்கார்ந்திருந்தார்கள்.
அப்போது தாவீதின் மனுஷர் தாவீதை நோக்கி
1சாமுவேல் 24:4
அப்பொழுது தாவீதின் மனுஷர் அவனை நோக்கி: இதோ, நான் உன் சத்துருவை உன் கையில் ஒப்புக்கொடுப்பேன்; உன் பார்வைக்கு நலமானபடி அவனுக்குச் செய்வாயாக என்று கர்த்தர் உன்னோடே சொன்ன நாள் இதுதானே என்றார்கள்; தாவீது எழுந்திருந்துபோய், சவுலுடைய சால்வையின் தொங்கலை மெள்ள அறுத்துக்கொண்டான்.
மேற்கூறப்பட்ட வார்த்தைகளை சொன்ன பின் தாவீது எழுந்திருந்து போய், சவுலுடைய சால்வையின் தொங்கலை மெல்ல அறுத்துக்கொண்டான். அதன் பின்பு தாவீதின் மனது அடித்துக்கொண்டிருந்தது. பின்பு தாவீது தன் மனுஷரை நோக்கி சொன்னது ; கர்த்தர் தாம் அபிஷேகம்பண்ணின என் ஆண்டவன் மேல் கைபோடும்படியான இப்படிப்பட்ட காரியத்தை நான் செய்யாதபடிக்கு, கர்த்தர் என்னைக் காப்பாராக; அவன் கர்த்தரால் அபிஷேகம் பண்ணப்பட்வர் என்று சொல்லி,தன் மனுஷரை அவன் மேல் எழும்பவொட்டாமல் தாவீது தன் வார்த்தைகளினால் தடைப்பண்ணினான். சவுல் கெபியை விட்டு வெளிய போனான். அப்போது தாவீது எழுந்திருந்து சவுலுக்குபின்னாலே போய் என் ஆண்டவனே என்றுகூப்பிடும்போது, சவுல் திரும்பிபார்த்தபோது; தாவீது முகங்குப்புற விழுந்து வணங்கி, சவுலை நோக்கி தாவீது சொல்வது தாவீது உமக்கு பொல்லாப்பு செய்ய பார்க்கிறான்என்று சொல்லுகிற மனுஷருடைய வார்த்தைகளை ஏன் கேட்கிறீர்? இதோ கர்த்தர் கெபியில் உம்மை என் கையில் ஒப்புக்கொடுத்தார் என்பதனை இன்றைய தினம் உம்முடைய கண்கள் கண்டதே; உம்மை கொன்று போட வேண்டும் என்று சிலர் சொன்னார்கள்; ஆனாலும் என் கை உம்மை தப்பவிட்டது; என் ஆண்டவன் மேல் என் கையை போடேன்; அவர் கர்த்தரால் அபிஷேகம்பண்ணபட்டவராமே என்றேன்.
பின்னும் தாவீது சவுலிடம் சொன்னது
1சாமுவேல் 24:11-13
என் தகப்பனே பாரும்; என் கையிலிருக்கிற உம்முடைய சால்வையின் தொங்கலைப் பாரும்; உம்மைக் கொன்று போடாமல், உம்முடைய சால்வையின் தொங்கலை அறுத்துக்கொண்டேன்; என் கையிலே பொல்லாப்பும் துரோகமும் இல்லை என்றும், உமக்கு நான் குற்றம் செய்யவில்லை என்றும் அறிந்துகொள்ளும்; நீரோ என் பிராணனை வாங்க, அதை வேட்டையாடுகிறீர்.
கர்த்தர் எனக்கும் உமக்கும் நடு நின்று நியாயம் விசாரித்து, கர்த்தர் தாமே என் காரியத்தில் உமக்கு நீதியைச் சரிக்கட்டுவாராக; உம்முடைய பேரில் நான் கைபோடுவதில்லை.
முதியோர் மொழிப்படியே, ஆகாதவர்களிடத்திலே ஆகாமியம் பிறக்கும்; ஆகையால் உம்முடையபேரில் நான் கை போடுவதில்லை.
மேற்க்கூறப்பட்ட வசனங்களில் சொல்லப்படுவது கர்த்தர் சவுலை தாவீதின் கையில் ஒப்புக்கொடுத்தார் என்பதற்கு அத்தாட்சியாக சவுலின் சால்வையின் தொங்கலை அறுத்ததை தாவீது சவுலிடம் காட்டுகிறார்.. மேலும் தாவீது சமயம் வாய்த்த பிறகும் சவுலுக்கு துரோகம்பண்ணவில்லை, எந்த பொல்லாப்பும் செய்யவில்லை. ஆனால் சவுலோ தாவீதின் பிராணனை வாங்கும்படி வேட்டையாடும்படி தேடுகிறான். அல்லாமலும் தாவீது சவுலின் காரியத்தில் கர்த்தர் நீதியை சரிகட்டட்டும்; நான் சவுலின் மேல் கைபோடுவதில்லை என்று தீர்மானம் பண்ணுகிறார்.
ஆதலால் பிரியமானவர்களே, இதனை வாசிக்கிறவர்களே அவரவர் நம்மை நாம் சோதித்து அறிவோம். என்னவென்றால் நம்மிடத்தில் இருப்பது சவுலின் இருதயமா? அல்லது தாவீதின் இருதயமா? இரண்டு பேரும் கர்த்தரால் அபிஷேகம் பண்ணப்பட்டவர்கள். ஆனால் சவுலுக்கு தாவீதின் பிராணனை எப்படியாவது வேட்டையாடிவிட வேண்டும் என்ற எண்ணம். இப்படிபட்ட எண்ணம் இருக்கிறவர்கள் மற்றவர்களை, தங்களுக்கு விருப்பமில்லாதவர்களை; குறி வைத்தே வேட்டையாடும்படி, தங்களுடைய நாவால் (தீட்டப்பட்ட சவரகன் கத்தியால்) பொய்யான காரியங்களை சிறுமைபட்டவர்கள் மேல் சுமத்தி திரிவார்கள். அவ்விதம் சுமத்தாமல் இருந்தால் அவர்களுக்கு சவுலை போல நிம்மதி இருக்காது. சவுல் எப்போதும் தாவீதை தொடர்ந்து பிடித்து அழித்தே தீர வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. ஆனால் தாவீதோ ஒரு போதும் சவுலுக்கு விரோதமாக எந்த தீமையும் செய்ய முன் வரவில்லை; சமயம் பக்கத்தில் வந்த பிறகும் கர்த்தரால் அபிஷேகம்பண்ணபட்டவர்களின் மேல் கை போடுவதில்லை என்று சொன்னது மட்டுமல்லாமல், தன் வார்த்தைகளினால் தன் ஜனங்களையும் அவன் மேல் விழவொட்டாமல் தடை பண்ணுகிறான். மற்றும் நானும் கைபோடுவதில்லை என்று தீர்மானம் பண்ணுகிறான். இவ்விதம் கர்த்தரால் இரட்சிக்கபட்டவர்கள் தங்கள் இருதயத்தை சுத்தமாக்கிக்கொள்ளும்படியாக ஒப்புக்கொடுப்போம்.
ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.