தேவனுக்கே மகிமையுண்டாவதாக
1கொரிந்தியர் 12:12
எப்படியெனில், சரீரம் ஒன்று, அதற்கு அவயவங்கள் அநேகம்; ஒரே சரீரத்தின் அவயவங்களெல்லாம் அநேகமாயிருந்தும், சரீரம் ஒன்றாகவேயிருக்கிறது; அந்தப்பிரகாரமாகக் கிறிஸ்துவும் இருக்கிறார்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நாம் ஒவ்வொருவரும் கிறிஸ்துவின் சரீரத்தின் அவயவங்களாகுவோம்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில் மணவாட்டி சபையாகிய நாம் கர்த்தரிடத்திலிருந்து பெற்றுக்கொண்ட பலன் நம்மை விட்டு போய்விட்டால் மீண்டும் ஜாக்கிரதையாக இருந்து பெற்றுக்கொள்ள வேண்டும் என்பனை குறித்து தியானித்தோம்.
அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்
2 சாமுவேல் 3:16-18
அவள் புருஷன் பகூரிம்மட்டும் அவள் பிறகாலே அழுதுகொண்டுவந்தான்; அப்னேர் அவனை நோக்கி: நீ திரும்பிப்போ என்றான்; அவன் திரும்பிப் போய்விட்டான்.
அப்னேர் இஸ்ரவேலின் மூப்பரோடே பேசி: தாவீதை உங்கள்மேல் ராஜாவாக வைக்கும்படிக்கு நீங்கள் அநேகநாளாய்த் தேடினீர்களே.
இப்போதும் அப்படிச் செய்யுங்கள்; என் தாசனாகிய தாவீதின் கையினால், என் ஜனமாகிய இஸ்ரவேலைப் பெலிஸ்தரின் கைக்கும், அவர்களுடைய எல்லாச் சத்துருக்களின் கைக்கும் நீங்கலாக்கி ரட்சிப்பேன் என்று கர்த்தர் தாவீதைக்குறித்துச் சொல்லியிருக்கிறாரே என்றான்.
மேற்க்கூறிய வசனங்களை தியானிக்கும் போது தாவீதின் மனைவியாகிய மீகாளை லாயீசின் குமாரனாகிய பல்த்தியேலிடமிருந்து அழைத்து வருகிறார்கள். மேலும் அப்னேர் இஸ்ரவேலின் மூப்பரோடு, தாங்கள் அநேக நாட்களாக தாவீதை ராஜாவாக வைக்கும்படி தேடினீர்களே; அப்படியே நீங்கள் இனி தாவீதை ராஜாவாக்குங்கள் என்றும்; கர்த்தர் தாவீதை குறித்து இஸ்ரவேலை பெலிஸ்தரின் கைக்கும் நீங்கலாக்கி இரட்சிப்பேன் என்று சொன்ன வார்த்தையை அப்னேர் பென்யமீன் மனுஷர் காதுகள் கேட்க பேசினான். அப்னேருடைய கருத்து என்னவென்றால் இஸ்போசேத் ஆளுகிற இஸ்ரவேலையும், தாவாது ஆளுகிற யூதாவையும் ஒன்றாக்கி தாவீது ஆள வேண்டும் என்பதாகும். என்னவெனில் கர்த்தருடைய சித்தமாக இருந்ததால் தேவன் அதற்கேற்ற முகாந்தரத்தை ஒருக்குகிறார் என்பது தெரிய வருகிறது.
இந்த காரியத்தை நிறைவேற்றுவதற்க்காக
2 சாமுவேல் 3:19-20
இந்தப்பிரகாரமாக அப்னேர் பென்யமீன் மனுஷர் காதுகள் கேட்கப் பேசினான்; பின்பு அப்னேர் இஸ்ரவேலர் பார்வைக்கும், பென்யமீனுடைய எல்லாக் குடும்பத்தாரின் பார்வைக்கும், சம்மதியானதையெல்லாம் எப்ரோனிலே தாவீதின் காதுகள் கேட்கப் பேசுகிறதற்குப் போனான்.
அப்னேரும், அவனோடேகூட இருபதுபேரும் எப்ரோனிலிருக்கிற தாவீதினிடத்தில் வந்தபோது, தாவீது அப்னேருக்கும், அவனோடே வந்த மனுஷருக்கும் விருந்துசெய்தான்.
மேற்கூறிய வார்த்தைகளை பேசுவதற்காக அப்னேர் இருபது பேரோடேக்கூட எப்ரோனிலிருக்கிற தாவீதினிடத்தில் வந்த போது; தாவீது அப்னேருக்கும் அவனோடேகூட வந்த மனுஷருக்கும் விருந்து செய்தான். பின்பு அப்னேர் தாவீதினிடத்தில் சொன்னது
2 சாமுவேல் 3:21
பின்பு அப்னேர் தாவீதை நோக்கி: நான் எழுந்துபோய், இஸ்ரவேலரை எல்லாம் உம்மோடே உடன்படிக்கைபண்ணும்படிக்கு, ராஜாவாகிய என் ஆண்டவனிடத்தில் சேர்த்துக்கொண்டு வருகிறேன்; அதினாலே உம்முடைய ஆத்துமா அரசாள விரும்புகிற இடமெல்லாம் அரசாளுவீர் என்றான்; அப்படியே தாவீது அப்னேரை அனுப்பிவிட்டான்; அவன் சமாதானத்தோடே போனான்.
மேற்கூறப்பட்ட வார்த்தைகளை சொல்லிய பின்பு தாவீது அப்னேரை அனுப்பி விட்டான்; அப்னேர் சமாதானத்தோடே போனான். பின்பு தாவீதின் சேவகரும் யோவாபும் அநேக பொருட்களை கொள்ளையிட்டு தண்டிலிருந்து கொண்டு வந்தார்கள்; அவர்கள் வரும் போது அப்னேரும், அவன் மனுஷரும் எப்ரோனிலிருக்கும் தாவீதினிடத்தில் இல்லை; அவனை தாவீது அனுப்பி விட்டான்; அவன் சமாதானத்தோடே போய் விட்டான்.
பிரியமானவர்களே மேற்கூறபட்ட வசனங்களை நாம் தியானிக்கும் போது தாவீது தன் மனைவியாகிய மீகாளை திருப்பிக்கொள்கிறான்; அல்லாமலும் யூதாவையும் இஸ்ரவேலையும் ஒன்றாக இணைப்பதே தேவனுடைய நோக்கமாயிருந்தது; மற்றும் ராஜரீகம் பெற்றுக்கொள்வது மணவாட்டி சபையை பெற்றுக்கொண்டால் மட்டுமே கர்த்தர் தருகிற ராஜரீக அபிஷேகம் நிலைத்திருக்கும்; இவற்றை கர்த்தர் திருஷ்டாந்தப்படுத்துவது என்னவென்றால்; நம்முடைய உள்ளம் தாவீதின் சிங்காசனம் அமைக்க வேண்டும். சிங்காசனத்தில் வீற்றிருக்கிறவர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து; இதனை விளக்கி காட்டும் படியாக அப்னேர் தாவீதினிடத்தில் வந்து சொல்வது இஸ்ரவேலை எல்லாம் உம்மோடே உடன்படிக்கை பண்ணும்படி சேர்த்துக்கொண்டு வருகிறேன். உம்முடைய ஆத்துமா அரசாள விரும்புகிற இடமெல்லாம் அரசாளுவீர் என்கிறான். இவைகள் கர்த்தர் திருஷ்டாந்தபடுத்தகிறார்; எப்படியென்றால் நம்முடைய ஆத்துமா இஸ்ரவேல் சபை, யூதா என்பது அதின் கிறிஸ்துவின் ஆவி; இவைகள் இரண்டும் இணையும் போது கிறிஸ்துவின் சரீரம். ஆதலால் நம் எல்லாருடைய உள்ளான சாயல் கிறிஸ்துவின் சரீரமாக வேண்டும். இதற்காகவே நாம் நியமிக்கப்பட்டோம். இப்படியாக நாம் யாவரும் மாறும்படியாக ஒப்புக்கொடுப்போம்.
ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.