தேவனுக்கே மகிமையுண்டாவதாக

மத்தேயு 5:11,12

என்னிமித்தம் உங்களை நிந்தித்துத் துன்பப்படுத்தி, பலவித தீமையான மொழிகளையும் உங்கள்பேரில் பொய்யாய்ச் சொல்வார்களானால் பாக்கியவான்களாயிருப்பீர்கள்;

சந்தோஷப்பட்டு, களிகூருங்கள்; பரலோகத்தில் உங்கள் பலன் மிகுதியாயிருக்கும்; உங்களுக்கு முன்னிருந்த தீர்க்கதரிசிகளையும் அப்படியே துன்பப்படுத்தினார்களே.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் கர்த்தருக்கு மிகுந்த சத்தத்தோடு பரிசுத்த ஆவியில் நிறைந்து ஆராதனை செலுத்தி அவரிடத்திலிருந்து ஆசீர்வாதங்களை சுதந்தரிக்க வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில் மணவாட்டி சபையாகிய நாம் கர்த்தரின் வசனங்கள் உட்கொண்டு ஆத்மாவில் கெம்பீர சத்தத்தோடு தேவனுக்கு ஆராதனை செய்கிறவர்களாக இருக்க வேண்டும் என்பதனை குறித்து தியானித்தோம். 

அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

2 சாமுவேல் 6:6-12 

அவர்கள் நாகோனின் களம் இருக்கிற இடத்துக்கு வந்தபோது, மாடுகள் மிரண்டு பெட்டியை அசைத்தபடியினால், ஊசா தேவனுடைய பெட்டியினிடமாய்த் தன் கையை நீட்டி, அதைப் பிடித்தான்.

அப்பொழுது கர்த்தருக்கு ஊசாவின்மேல் கோபமூண்டது; அவனுடைய துணிவினிமித்தம் தேவன் அங்கே அவனை அடித்தார்; அவன் அங்கே தேவனுடைய பெட்டியண்டையில் செத்தான்.

அப்பொழுது கர்த்தர் ஊசாவை அடித்ததினிமித்தம் தாவீது விசனப்பட்டு, அந்த ஸ்தலத்திற்கு இந்நாள்மட்டும் வழங்கிவருகிற பேரேஸ்ஊசா என்னும் பேரிட்டான்.

தாவீது அன்றையதினம் கர்த்தருக்குப் பயந்து, கர்த்தருடைய பெட்டி என்னிடத்தில் வருவது எப்படியென்று சொல்லி,

அதைத் தன்னிடத்தில் தாவீதின் நகரத்தில் கொண்டுவர மனதில்லாமல், கித்தியனாகிய ஓபேத்ஏதோமின் வீட்டிலே கொண்டுபோய் வைத்தான்.

கர்த்தருடைய பெட்டி கித்தியனாகிய ஓபேத்ஏதோமின் வீட்டிலே மூன்று மாதம் இருக்கையில் கர்த்தர் ஓபேத்ஏதோமையும் அவன் வீட்டார் அனைவரையும் ஆசீர்வதித்தார்.

தேவனுடைய பெட்டியினிமித்தம் கர்த்தர் ஓபேத்ஏதோமின் வீட்டையும், அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் ஆசீர்வதித்தார் என்று தாவீதுராஜாவுக்கு அறிவிக்கப்பட்டது; அப்பொழுது தாவீது தேவனுடைய பெட்டியை ஓபேத்ஏதோமின் வீட்டிலிருந்து தாவீதின் நகரத்துக்கு மகிழ்ச்சியுடனே கொண்டுவந்தான்.

மேற்கூறிய வசனங்களில் கர்த்தருடைய பெட்டி ஆராதனை முழக்கத்தோடு தாவீதின் நகரத்திற்குள் பிரவேசிக்கிறப்போது, சவுலின் குமாரத்தியாகிய மீகாள் பலகணி வழியாய் பார்த்தபோது, தாவீது ராஜா கர்த்தருக்கு முன்பாக குதித்து நடனம் பண்ணுகிறதை கண்டு, தன் இருதயத்திலே அவனை அவமதித்தாள்.  பின்பு அவர்கள் கர்த்தருடைய பெட்டியை தாவீது போட்ட கூடாரத்திற்குள் கொண்டு வைத்தபோது, தாவீது கர்த்தரின் சந்நிதியில் சர்வாங்க தகனபலிகளையும், சமாதானபலிகளையும் இட்டான்.  பின்பு ,

2 சாமுவேல் 6:18, 19 

தாவீது சர்வாங்க தகனபலிகளையும் சமாதானபலிகளையும் இட்டபின்பு, சேனைகளின் கர்த்தருடைய நாமத்தினாலே ஜனங்களை ஆசீர்வதித்து,

இஸ்ரவேலின் திரள்கூட்டமான ஸ்திரீ புருஷராகிய சகல ஜனங்களுக்கும், அவரவருக்கு ஒவ்வொரு அப்பத்தையும், ஒவ்வொரு இறைச்சித்துண்டையும், ஒவ்வொரு படி திராட்சரசத்தையும் பங்கிட்டான்; பிற்பாடு ஜனங்கள் எல்லாரும் அவரவர் தங்கள் வீட்டிற்குப் போய்விட்டார்கள்.

மேற்க்கூறப்பட்ட வசனங்களில் தாவீது திரள் கூட்டமான ஜனங்களைஆசீர்வதித்து அவரவருக்கு ஒவ்வொரு அப்பத்தையும், ஒவ்வொரு இறைச்சி துண்டையும், ஒவ்வொருபடி திராட்ச ரசத்தையும், பங்கிட்டு விட்டு, தன் வீட்டாரை ஆசீர்வதிக்க திரும்புகிற போது, சவுலின் குமாரத்தியாகிய மீகாள் எப்படி அவமதிக்கிறாள் என்றால், தாவீதுக்கு எதிர்கொண்டு வந்து, அற்ப மனுஷரில் ஒருவன் தன் வஸ்திரத்தை கழற்றி போடுகிறது போல, இன்றைக்கு தம்முடைய ஊழியக்காரருடைய பெண்களுக்கு முன்பாக தம்முடைய வஸ்திரங்களை உரிந்து போட்டிருந்த இஸ்ரவேலின் ராஜா இன்று எத்தனை மகிமைப்பட்டிருந்தார் என்றாள்.  அதற்குத் தாவீது மீகளைப் பார்த்து உன் தகப்பனைப்பார்க்கிலும், அவருடைய எல்லா வீட்டாரைப்பார்க்கிலும், என்னை இஸ்ரவேலாகிய கர்த்தருடைய ஜனத்தின் மேல் தலைவனாகும்படி  தெரிந்துக்கொண்டு கட்டளையிட்ட கர்த்தரின் சந்நிதிக்கு முன்பாக ஆடிப்பாடினேன்.  ஆனால் இதை பார்க்கிலும் இன்னும் நான் நீசனும் என் பார்வைக்கு அற்பனுமாவேன்; அப்படியே நீ சொன்ன பெண்களுக்குங்கூட மகிமையாய் விளங்குவேன் என்றான்.  அதினால் சவுலின் குமாரத்தியாகிய மீகாளுக்கு மரணமடையும் நாள் மட்டும் பிள்ளையில்லாதிருந்தது. 

பிரியமானவர்களே மேற்கூறப்பட்ட கருத்துக்கள் என்னவென்றால் நாம் ஒவ்வொருவரும் கர்த்தரை எவ்விதம் மகிமைப்படுத்த வேண்டும் என்றால், கர்த்தரின் சந்நிதியில் வரும் போது, மகிழ்ச்சியோடு கர்த்தருக்கு ஆராதனை செய்ய வேண்டும்.  மேலும் கர்த்தரின் ஆவியால் நிறைந்து கர்த்தரை ஆராதிக்க வேண்டும்.  அல்லாமலும் மனுஷர் முன்பாக அல்ல, தேவன் முன்பாக ஆராதிக்கிறோம் என்ற உள்ளத்தின் எண்ணங்கள் இருக்க வேண்டும்.  ஏனென்றால் நாம் ஆராதிக்கும் போது,  மீகாளை போலுள்ளவர்கள் நம்மை நிந்தித்து, அவமதிக்கலாம்.  

பிரியமானவர்களே நாம் நிந்தி்க்கப்பட்டால் பாக்கியவான்களாகயிருப்போம்.  ஏனென்றால் நிந்திக்கப்படுகிறவர் நாம் அல்ல; நம்மில் இருக்கிற மகிமையானவர்;அவர்கள் மூலம் நிந்திக்கபடுகிறார்; நம் மூலம் அவர் மகிமைபடுகிறார்.  ஆனால் நம்மில் அநேகருக்கு சத்தத்தோடும், முழக்கத்தோடும் ஆராதனை செய்தாலே வெட்கம் என்று நினைத்து தன்னை அடக்கிக்கொள்வார்கள்; அப்படிப்பட்டவர்கள் எந்த ஒரு நாளிலும் ஆத்மாவில் விடுதலையடைந்து தேவனோடு வாழமுடியாது.  நாம் கர்த்தரை  ஆராதிப்பதை வெட்கம் என்று நினைத்து விட்டால்; அவரும் நம்மை பார்த்து வெட்கப்படுவார்.  ஆதலால் கர்த்தரை முழு மனதோடும், முழு பலத்தோடும், முழுஆத்துமாவோடும் ஆராதித்து அவரிடத்திலிருந்து அப்பமாகிய அவருடைய சத்தியத்தையும், இறைச்சியாகிய கிறிஸ்துவின் சரீரத்தையும், திராட்ச ரசமாகிய அவருடைய கிருபைகளையும் பெற்றுக்கொள்ளும்படியாகவும், மீகாளை போல கர்த்தரிடத்திலிருந்து தண்டனைபெற்றுக்கொள்ளாதபடியாகவும் எச்சரிக்கையாக கர்த்தரின் சித்தம் செய்து அவருடைய ஆசீர்வாதத்தை சுதந்தரிக்கும்படியாக  ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.