தேவனுக்கே மகிமையுண்டாவதாக
1தெசலோனிக்கேயர் 4: 4 - 6
தேவனை அறியாத அஞ்ஞானிகளைப்போல மோக இச்சைக்குட்படாமல்,
உங்களில் அவனவன் தன்தன் சரீரபாண்டத்தைப் பரிசுத்தமாயும் கனமாயும் ஆண்டுகொள்ளும்படி அறிந்து:
இந்த விஷயத்தில் ஒருவனும் மீறாமலும் தன் சகோதரனை வஞ்சியாமலும் இருக்கவேண்டும்; முன்னமே நாங்கள் உங்களுக்குச் சொல்லி, சாட்சியாக எச்சரித்தபடியே இப்படிப்பட்ட விஷயங்களெல்லாவற்றையுங்குறித்துக் கர்த்தர் நீதியைச் சரிக்கட்டுகிறவராயிருக்கிறார்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நாம் மாம்ச இச்சைகளில் விழுந்துவிடாதபடி ஜாக்கிரதையாக நம்முடைய பரிசுத்த வாழ்வை காத்துக்கொள்ள வேண்டும்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் அனுதினம் கர்த்தருக்கு ஆராதனை செய்கிறவர்களாக இருக்க வேண்டும்; எந்த உலக இன்பங்களிலும் நாம் விழாமல் ஜாக்கிரதையாக நம்மை பரிசுத்தப்படுத்த வேண்டும் என்பதனை குறித்து தியானித்தோஞம்.
மேலும் நாம் தியானிப்பது
2 சாமுவேல் 11:13-14
தாவீது அவனைத் தனக்கு முன்பாகப் புசித்துக் குடிக்கிறதற்கு அழைத்து, அவனை வெறிக்கப்பண்ணினான்; ஆனாலும் அவன் தன் வீட்டுக்குப் போகாமல், சாயங்காலத்திலே தன் ஆண்டவனின் சேவகரோடே தன் படுக்கையிலே படுத்துக்கொண்டான்.
காலமே தாவீது யோவாபுக்கு ஒரு நிருபத்தை எழுதி, உரியாவின் கையில் கொடுத்து அனுப்பினான்.
மேற்கூறப்பட்ட வார்த்தைகளில் தாவீது உரியாவிடம் சொன்னது போல் அன்றும், மறுநாளிலும் எருசலேமில் இருந்தான். தாவீது அவனை தனக்கு முன்பாக புசித்து, குடிக்கிறதற்கு அழைத்து அவனை வெறிக்க பண்ணினான். ஆனாலும் அவன் தன் வீட்டுக்கு போகாமல், சாயங்காலத்தில் தன் ஆண்டவனின் சேவகரோடே தன் படுக்கையிலே படுத்துக்கொண்டான். காலையிலே தாவீது யோவாபுக்கு ஒரு நிரூபத்தை எழுதி உரியாவுடைய கையிலே கொடுத்தனுப்பினான்.
அந்த நிருபம் 2 சாமுவேல் 11:15
அந்த நிருபத்திலே: மும்முரமாய் நடக்கிற போர்முகத்திலே நீங்கள் உரியாவை நிறுத்தி, அவன் வெட்டுண்டு சாகும்படிக்கு, அவனை விட்டுப் பின்வாங்குங்கள் என்று எழுதியிருந்தான்.
முன் எழுதியிருக்கிற நிருபத்தில் எழுதியிருக்கிறப்படியே யோவாப் பராக்கிரமாலிகள் நிறுத்தப்பட்டிருக்கிற இடத்தில் உரியாவை நிறுத்தினான். அதன் பின்பு பட்டணத்து மனுஷர் புறப்பட்டு யோவாபோடே யுத்தம் பண்ணுகையில், தாவீதின் சேவகராகிய ஜனத்தின் சிலர் பட்டார்கள். ஏத்தியனாகிய உரியாவும் செத்தான். அப்போது யோவாப் யுத்தத்தின் செய்தியை அறிவிக்க தாவீதிடத்தில் ஆள் அனுப்பி, தான் அனுப்புகிற ஆளிடம்
2 சாமுவேல் 11:19-21
தான் அனுப்புகிற ஆளை நோக்கி: நீ யுத்தத்தின் செய்திகளையெல்லாம் ராஜாவுக்குச் சொல்லித் தீர்ந்தபோது,
ராஜாவுக்குக் கோபம் எழும்பி, அவர்: நீங்கள் பட்டணத்திற்கு இத்தனை கிட்டப்போய் யுத்தம்பண்ணவேண்டியது என்ன? அலங்கத்தில் நின்று எய்வார்கள் என்று உங்களுக்குத் தெரியாதா?
எருப்பேசேத்தின் குமாரன் அபிமெலேக்கைக் கொன்றது யார்? தேபேசிலே ஒரு பெண்பிள்ளை அலங்கத்திலிருந்து ஒரு ஏந்திரக்கல்லின் துண்டை அவன்மேல் போட்டதினால் அல்லவோ அவன் செத்தான்; நீங்கள் அலங்கத்திற்கு இத்தனை கிட்டப்போனது என்ன என்று உன்னோடே சொன்னால், அப்பொழுது நீ, உம்முடைய சேவகனாகிய உரியா என்னும் ஏத்தியனும் செத்தான் என்று சொல் என்றான்.
மேற்சொல்லி அனுப்பிய வார்த்தைகளை தாவீதிடம் அறிவித்து, தாவீதை பார்த்து; அந்த மனுஷர் கைமிஞ்சி, அவர்கள் வெளியே எங்களுக்கு எதிராக புறப்பட்டு வந்தபோது நாங்கள் அவர்களை பட்டண வாசல் மட்டும் துரத்தினோம். அப்போது வில் வீரர் அலங்கத்திலிருந்து உம்முடைய சேவகரின் மேல் எய்ததினால், ராஜாவின் சேவகரில் சிலர் செத்தார்கள்; உம்முடைய சேவகனாகிய உரியா என்னும் ஏத்தியனும் செத்தான் என்றான்.பின்பு தாவீது யோவாபிடத்தில் ஆள் அனுப்பி, இந்த காரியத்தை குறித்து விசாரப்பட வேண்டாம். பட்டயம் ஒருவேளை ஒருவனையும், ஒருவேளை மற்றொருவனையும் பட்சிக்கும்; நீ யுத்தத்தை பலக்கப்பண்ணி, பட்டணத்தை இடித்து போடு என்று அவனுக்கு திடஞ்சொல் என்றான். தன் புருஷனாகிய உரியா செத்தான் என்று அவன் மனைவி அறிந்தபோது, அவள் தன் நாயகனுக்காக இழவுக் கொண்டாடினாள். துக்கநாள் சென்ற பின்பு, தாவீது அவளை அழைத்தனுப்பி, தன் வீட்டிலே சேர்த்துக்கொண்டான், அவள் அவனுக்கு மனைவியாகி, ஒரு குமாரனைப் பெற்றாள். தாவீது செய்த இந்த காரியம் கர்த்தரின் பார்வைக்கு பொல்லாப்பாயிருந்தது.
பிரியமானவர்களே மேற்கூறப்பட்ட வார்த்தைகளை நாம் தியானிக்கும்போது, ஒரு ஆத்துமா பாவகுழியாகிய பாதாள உலகத்தில் விழுந்து விட்டால்; தான் எங்கே இருக்கிறேன் என்று தெரியாதபடி கர்த்தர் ஆவிக்குரிய கண்களை அடைத்து, மாம்ச கண்ணை திறக்கிறார். அதன் காரணமாக அவன் மீண்டும் மீண்டும் தவறான பாதையில் தேவபயமில்லாமல் நடக்கிறான்; இது ஒரு தேவனுடைய நியாயத்தீர்ப்பு என்பதனை நாம் அறிந்துக்கொள்ள வேண்டும். இப்படி நாம் சிக்கிக்கொண்டால் பாவம் நம்மை மேற்க்கொண்டு ஆத்துமா செத்ததாயிருக்கும். பின்பு நாம் இதிலிருந்து மீள வேண்டுமானால் கர்த்தரின் சத்தம் கேட்டு, நாம் உள்ளம் உடைந்து கர்த்தரிடத்தில் மன்னிப்புக்கேட்டால் மட்டுமே, கர்த்தர் நம்முடைய மனதின் செயல்பாடுகளுக்கேற்ப சில வேளை மன்னிக்கலாம். இவைதான் கர்த்தர் நமக்கு தாவீதை வைத்து திருஷ்டாந்தப்படுத்துகிறார். மேலும் நம்முடைய பரிசுத்த வாழ்க்கைக்கு பரீட்சை உண்டு என்பதை நாம் அறிந்துக்கொள்ள வேண்டும். ஆதலால் கர்த்தரை ஆராதிப்பதில் நாம் மிகுந்த கவனம் உடையவர்களாக இருக்க வேண்டும். மேலும் எந்த கபடான வாழ்க்கையும் நம்மிடத்தில் இருக்கக்கூடாது. அப்படி உண்டாயிருக்குமானால் கர்த்தரின் பார்வைக்கு நாப் பொல்லாப்பு செய்கிறோம்; அது மட்டுமல்லாமல்,அந்நிய பரஸ்திரீயின் குழந்தையாக நம்முடைய ஆத்துமா காணப்படும். ஆதலால் நாம் நம்முடைய ஆத்துமா தேவசாயலாக மாறி, அதிலே நாம் அனுதினம் தேவனுக்கு ஆராதனை பலி செலுத்தி நித்திய ஜீவனை இழந்து போகாதபடி காத்துக்கொள்ளும்படியாகவும், கர்த்தரின் பார்வைக்கு பொல்லாப்பு செய்யாதபடியாகவும், பரிசுத்தத்தை காத்துக்கொள்ளும்படியாகவும், ஒப்புக்கொடுப்போம்.
ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.