தேவனுக்கே மகிமையுண்டாவதாக
ரோமர் 6:23
பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நாம் பாவம்செய்யாதபடி நம்மை காத்துக்கொள்ள வேண்டும்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில் மணவாட்டி சபையாகிய நாம் மாம்ச இச்சைகளில் விழுந்துவிடாதபடி பரிசுத்தமாக நம்மை காத்துக்கொள்ள வேண்டும் என்பதனை குறித்து தியானித்தோம்.
அடுத்தபடியாக நாம் தியானிப்பது, தாவீது உரியாவை கொன்று அவன் மனைவியை தன் மனைவியாக சேர்த்துக்கொண்டு ஒரு குமாரனையும் பெற்றது கர்த்தரின் பார்வைக்கு பொல்லாப்பாயிருந்த காரணத்தால் கர்த்தர் நாத்தானை தாவீதிடத்தில் அனுப்புகிறார். அவ்விதமாக நாத்தான் தாவீதினிடத்தில் வந்த போது
2 சாமுவேல் 12:1-4
கர்த்தர் நாத்தானைத் தாவீதினிடத்தில் அனுப்பினார்; இவன் அவனிடத்தில் வந்து, அவனை நோக்கி: ஒரு பட்டணத்தில் இரண்டு மனுஷர் இருந்தார்கள், ஒருவன் ஐசுவரியவான், மற்றவன் தரித்திரன்.
ஐசுவரியவானுக்கு ஆடுமாடுகள் வெகு திரளாயிருந்தது.
தரித்திரனுக்கோ தான் கொண்டு வளர்த்த ஒரே ஒரு சின்ன ஆட்டுக்குட்டியைத்தவிர வேறொன்றும் இல்லாதிருந்தது; அது அவனோடும் அவன் பிள்ளைகளோடுங்கூட இருந்து வளர்ந்து, அவன் வாயின் அப்பத்தைத் தின்று, அவன் பாத்திரத்திலே குடித்து, அவன் மடியிலே படுத்துக்கொண்டு, அவனுக்கு ஒரு மகளைப்போல இருந்தது.
அந்த ஐசுவரியவானிடத்தில் வழிப்போக்கன் ஒருவன் வந்தான்; அவன் தன்னிடத்தில் வந்த வழிப்போக்கனுக்குச் சமையல் பண்ணுவிக்க, தன்னுடைய ஆடுமாடுகளில் ஒன்றைப் பிடிக்க மனதில்லாமல், அந்தத் தரித்திரனுடைய ஆட்டுக்குட்டியைப் பிடித்து, அதைத் தன்னிடத்தில் வந்த மனுஷனுக்குச் சமையல்பண்ணுவித்தான் என்றான்.
மேலே கூறப்பட்ட வார்த்தைகளை நாத்தான் தாவீதோடே சொன்னவுடன், தாவீது கோபமூண்டவனாகி, நாத்தானை பார்த்து: இந்த காரியத்தை செய்த மனுஷன் மரணத்திற்கு பாத்திரவான் என்று கர்த்தருடைய ஜீவனைக் கொண்டு சொல்லுகிறேன். அவன் இரக்கமற்றவனாயிருந்து இந்தக் காரியத்தை செய்த படியினால், அந்த ஆட்டுக்குட்டிக்காக நாலந்தனை திரும்ப செலுத்த வேண்டும் என்றான். அப்போது நாத்தான் தாவீதை நோக்கி நீயே அந்த மனுஷன்; இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால் நான் உன்னை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக அபிஷேகம் பண்ணி, உன்னை சவுலின் கைக்கு தப்புவித்து, உன் ஆண்டவனுடைய வீட்டை உனக்கு தந்து, உன் ஆண்டவனுடைய ஸ்திரீயை உன் மடியிலே தந்து, இஸ்ரவேல், யூதா ஜனத்தை உனக்கு கையளித்தேன்; இது போதாமலிருந்தால், இன்னும் உனக்கு வேண்டியதை தருவேன். ஆனால் கர்த்தருடைய பார்வைக்கு பொல்லாப்பான இந்த காரியத்தை செய்து, கர்த்தருடைய வார்த்தையை நீ அசட்டை பண்ணி ஏத்தியனாகிய உரியாவை பட்டயத்தினால் மடிவித்து அவன் மனைவியை உனக்கு மனைவியாக எடுத்துக்கொண்டு, அவனை அம்மோன் புத்திரரின் பட்டயத்தினால் கொன்றுப்போட்டதினால்; பட்டயம் என்றைக்கும் உன் வீட்டை விட்டு நீங்காதிருக்கும். மேலும் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், இதோ, நான் உன் வீட்டில் பொல்லாப்பை எழுப்பப்பண்ணி; உன் கண்கள் பார்க்க உன். ஸ்திரீகளை எடுத்து உனக்கு அடுத்தவனுக்குக் கொடுப்பேன்; அவன் இந்த சூரியனுடைய வெளிச்சத்திலே உன் ஸ்திரீகளோடே சயனிப்பான். நீ ஒளிப்பிடத்தில் அதை செய்தாய்; நானோ இந்த காரியத்தை இஸ்ரவேலர் எல்லாருக்கு முன்பாகவும், சூரியனுக்கு முன்பாகவும் செய்விப்பேன் என்றார் என்று சொன்னான். இதனைக் கேட்ட தாவீது நாத்தானிடத்தில்: நான் கர்த்தருக்கு விரோதமாக பாவஞ்செய்தேன் என்றான். நாத்தான் தாவீதை நோக்கி: நீ சாகாதபடிக்கு, கர்த்தர் உன் பாவம் நீங்க செய்தார். ஆனாலும் இந்த காரியத்தினாலே கர்த்தருடைய சத்துருக்கள் தூஷிக்க நீ காரணமாயிருந்தபடியால், உனக்கு பிறந்த பிள்ளை நிச்சயமாய்ச் சாகும் என்று சொல்லி, நாத்தான் தன் வீட்டுக்குப் போய் விட்டான்.
பிரியமானவர்களே மேற்கூறிய தேவனுடைய வார்த்தைகளின கருத்துகள் என்னவெனில் தாவீது செய்த பொல்லாப்பினிமித்தம் கர்த்தர் கோபமடைகிறதை பார்க்கிறோம். அதுமட்டுமல்லாமல் மறைவான ஒளிப்பிடத்தில் செய்கிற பாவத்தை வெளிச்சத்துக்கு கொண்டு வந்து வெட்கத்துக்குள்ளாக்குவேன் என்று கர்த்தர் நாத்தானிடம் சொல்லியனுப்புகிறார். அதுமட்டுமல்லாமல் தாவீது செய்த மறைவான பாவம் கர்த்தர் வெளிப்படுத்துகிறார். இதனை போலவே எந்த ரகசிய பாவம் செய்தாலும் கர்த்தருடைய கண்களுக்கு முன்பாக மறைக்க முடியாது என்பதனை நாம் தெரிந்துக்கொள்ள வேண்டும். தாவீது தான் செய்த பாவத்தை, நாத்தான் மூலம் அறிவித்து எச்சரித்தவுடன், தன் பாவத்தை அறிக்கைப்பண்ணுகிறான். அவ்விதம் அறிக்கை பண்ணிணதால் கர்த்தர் அந்த பாவத்தை நீக்குகிறார்; ஆனாலும் கர்த்தருடைய சத்துருக்கள் தூஷிக்க காரணமாய் இருந்தபடியால் அந்த குழந்தை நிச்சயமாக சாகும் என்றுகூறுகிறார். இதிலிருந்து நாம் தெரிந்துக்கொள்ள வேண்டியது பாவத்தின் சம்பளம் மரணம். அதேப்போல் நாம் பாவம் செய்தால் நம் ஆத்துமா சாகும் என்பது நிச்சயம். ஆதலால் நாம் பாவம் செய்யாதபடி நம்மை காத்துக்கொள்ளும்படியாக ஒப்புக்கொடுப்போம்.
ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.