தேவனுக்கே மகிமையுண்டாவதாக

எபேசியர் 4:22-24

அந்தப்படி, முந்தின நடக்கைக்குரிய மோசம்போக்கும் இச்சைகளாலே கெட்டுப்போகிற பழைய மனுஷனை நீங்கள் களைந்துபோட்டு,

உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியுள்ளவர்களாகி,

மெய்யான நீதியிலும் பரிசுத்தத்திலும் தேவனுடைய சாயலாக சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொள்ளுங்கள்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நம்முடைய ஆத்துமாவிற்குள் புது ஜீவனுக்குரிய கிறிஸ்துவின் சாயல் பெற்று கொள்ள வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில் மணவாட்டி சபையாகிய நாம் பாவம்செய்யாதபடி நம்மை காத்துக்கொள்ள வேண்டும் என்பதனை குறித்து தியானித்தோம்.  

அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

2 சாமுவேல் 12:15-20 

அப்பொழுது கர்த்தர் உரியாவின் மனைவி தாவீதுக்குப் பெற்ற ஆண்பிள்ளையை அடித்தார்; அது வியாதிப்பட்டுக் கேவலமாயிருந்தது.

அப்பொழுது தாவீது அந்தப் பிள்ளைக்காக தேவனிடத்தில் பிரார்த்தனைபண்ணி, உபவாசித்து, உள்ளேபோய், இராமுழுதும் தரையிலே கிடந்தான்.

அவனைத் தரையிலிருந்து எழுந்திருக்கப்பண்ண, அவன் வீட்டிலுள்ள மூப்பரானவர்கள் எழுந்து, அவனண்டையில் வந்தாலும், அவன் மாட்டேன் என்று சொல்லி, அவர்களோடே அப்பம் சாப்பிடாமல் இருந்தான்.

ஏழாம்நாளில், பிள்ளை செத்துப்போயிற்று. பிள்ளை செத்துப்போயிற்று என்று தாவீதின் ஊழியக்காரர் அவனுக்கு அறிவிக்க ஐயப்பட்டார்கள்; பிள்ளை உயிரோடிருக்கையில், நாம் அவரோடே பேசுகிறபோது, அவர் நம்முடைய சொற்கேட்கவில்லை; பிள்ளை செத்துப்போயிற்று என்று அவரோடே எப்படிச் சொல்லுவோம்? அதிகமாக வியாகுலப்படுவாரே என்று பேசிக்கொண்டார்கள்.

தாவீது தன் ஊழியக்காரர் இரகசியமாய்ப் பேசிக்கொள்ளுகிறதைக் கண்டு, பிள்ளை செத்துப்போயிற்று என்று அறிந்து, தன் ஊழியக்காரரை நோக்கி: பிள்ளை செத்துப்போயிற்றோ என்று கேட்டான்; செத்துப்போயிற்று என்றார்கள்.

அப்பொழுது தாவீது தரையைவிட்டு எழுந்து, ஸ்நானம்பண்ணி, எண்ணெய்பூசிக்கொண்டு, தன் வஸ்திரங்களை மாற்றி, கர்த்தருடைய ஆலயத்தில் பிரவேசித்து, பணிந்துகொண்டு, தன் வீட்டுக்குவந்து, போஜனம் கேட்டான்; அவன்முன்னே அதை வைத்தபோது புசித்தான்.

மேற்கூறப்பட்ட வசனங்களை நாம் தியானிக்கையில் கர்த்தர் தாவீதின் பொல்லாத காரியங்களை நாத்தான் தீர்க்கதரிசியினிடத்தில் அறிவித்து, நாத்தான் அதனை தாவீதினிடத்தில் அறிவித்து விட்டு தன் வீட்டுக்குப் போய் விட்டான்.  அப்பொழுது கர்த்தர் உரியாவின் மனைவி தாவீதுக்கு பெற்ற ஆண் பிள்ளையை அடித்தார்; அது வியாதிபட்டு கேவலமாயிருந்தது.  அப்போது தாவீது அந்த பிள்ளைக்காகத் தேவனிடத்தில் பிரார்த்தனை பண்ணி, உபவாசித்து உள்ளே போய், இரா முழுவதும் தரையிலே கிடந்தான்.  அவனை தரையிலிருந்து எழுந்திருக்கப்பண்ண வீட்டிலுள்ள மூப்பரானவர்கள் அவனண்டையில் வந்தாலும் அவன் மாட்டேன் என்று சொல்லி அவர்களோடே அப்பம் சாப்பிடாமலிருந்தான்.  பின்பு ஏழாம் நாளில் பிள்ளை செத்து போயிற்று; பிள்ளை செத்துப்போயிற்று என்று அவனுடைய ஊழியக்காரர்கள் அவனுக்கு அறிவிக்க ஐயப்பட்டார்கள்; ஏனென்றால் பிள்ளை உயிரோடிருக்கும் போது அவர்கள் சொன்னதை கேட்காமலிருந்ததால், பிள்ளை செத்து போயிற்று என்று அவரோடே எப்படி சொல்ல முடியும்? அதிகமாக வியாகுலபடுவாரே என்றார்கள்.  ஆனால் தாவீது தன் ஊழியக்காரர் ரகசியமாய் பேசிக்கொண்டதை கண்டு, பிள்ளை செத்துப் போயிற்று என்று அறிந்து, தன் ஊழியக்காரரை நோக்கி பிள்ளை செத்து போயிற்றோ என்று கேட்டான்; அதற்கு அவர்கள் செத்துப்போயிற்று என்றார்கள்.  அப்போது தாவீது தரையை விட்டு எழுந்து, ஸ்நானம் பண்ணி எண்ணெய் பூசிக்கொண்டு தன் வஸ்திரங்களை மாற்றி, கர்த்தருடைய ஆலயத்தில் பிரவேசித்து, பணிந்துக்கொண்டு போஜனம் கேட்டான்.  பின்பு அவன் முன்னே வைக்கப்பட்ட போஜனத்தை புசித்தான்.  

அதற்கு அவனுடைய ஊழியக்காரர்,

2 சாமுவேல் 12:21 

அப்பொழுது அவன் ஊழியக்காரர் அவனை நோக்கி: நீர் செய்கிற இந்தக் காரியம் என்ன? பிள்ளை உயிரோடிருக்கையில் உபவாசித்து அழுதீர்; பிள்ளை மரித்தபின்பு, எழுந்திருந்து அசனம்பண்ணுகிறீரே என்றார்கள்.

மேற்கூறிய வார்த்தைகள் ஊழியக்காரர்கள் சொல்ல, தாவீது 

2 சாமுவேல் 12:22,23 

அதற்கு அவன்: பிள்ளை இன்னும் உயிரோடிருக்கையில், பிள்ளை பிழைக்கும்படிக்குக் கர்த்தர் எனக்கு இரங்குவாரோ, எப்படியோ, யாருக்குத் தெரியும் என்று உபவாசித்து அழுதேன்.

அது மரித்திருக்கிற இப்போது நான் உபவாசிக்கவேண்டியது என்ன? இனி நான் அதைத் திரும்பிவரப்பண்ணக்கூடுமோ? நான் அதினிடத்துக்குப் போவேனே அல்லாமல், அது என்னிடத்துக்குத் திரும்பி வரப்போகிறது இல்லை என்றான்.

மேற்கூறிய வார்த்தைகளை தாவீது தன் ஊழியக்காரர்களிடம் சொல்லி முடித்தபின்பு, தன் மனைவியாகிய பத்சேபாளுக்கு ஆறுதல் கூறி, அவளித்தில் போய், அவளோடே சயனித்தான்; அவள் ஒரு குமாரனை பெற்றாள்; அவனுக்கு சாலொமோன் என்று பேரிட்டான்: அவனிடத்தில் கர்த்தர் அன்பாயிருந்தார்.  அவர் தீர்க்கதரிசியாகிய  நாத்தானை அனுப்ப , அவன் கர்த்தரின் நிமித்தம் அவனுக்கு யெதிதியா என்று பெயரிட்டான்.  இந்த காரியம் நடப்பதற்குள்ளே யோவாப் அம்மோன் புத்திரரின் ரப்பா பட்டணத்தின் மேல் யுத்தம் பண்ணி தண்ணீர் ஓரமான பட்டணத்தை பிடித்துக் கொண்டான். ஆனால் யோவாப் தாவீதிடம் சொல்ல சொன்ன காரியம் நான் பட்டணத்தை பிடிக்கிறதினால் என் பேர் வழங்காதபடிக்கு, நீர் மற்ற ஜனங்களை கூட்டிக்கொண்டு வந்து பட்டணத்தை முற்றுகைப்போட்டு பிடிக்க வேண்டும் என்று சொல்ல சொன்னான்.  அப்படியே தாவீது செய்து ரப்பாவின் மேல் யுத்தம் பண்ணி  அதைப் பிடித்தான்.  அவர்களுடைய ராஜாவின் தலையின் மேல் இருக்கிற கிரீடத்தை எடுத்துக்கொண்டான்.    அந்த கிரீடம் ஒரு தாலந்து நிறை பொன்னும், இரத்தினங்கள் பதித்ததுமாயிருந்தது; அது தாவீதினுடைய தலையில் வைக்கப்பட்டது; பட்டணத்திலிருந்து ஏராளமான கொள்ளையைக் கொண்டு போனான்.  பின்பு அதிலிருந்த ஜனங்களை அவன் வெளியே கொண்டு போய் அவர்களை வாள்களுக்கும், இருப்புப்பாரைகளுக்கும், , இருப்புக்கோடாரிகளுக்கும் உட்படுத்தி அவர்களை செங்கற்சூளையையும் கடக்கப்பண்ணினான்; இப்படி அம்மோன் புத்திரரின் பட்டணங்களுக்கெல்லாம் செய்து,தாவீது எல்லா ஜனங்களோடுகூட எருசலேமுக்கு திரும்பினான்.  

பிரியமானவர்களே முந்தின கர்த்தருடைய வார்த்தைகளை நாம் சிந்திக்கும் போது கர்த்தரால் தெரிந்தெடுக்கப்பட்ட ஒரு மணவாட்டி சபையாகிய ஆத்துமா, எவ்விதத்தில் உலக இன்பங்களில் விழுகிறது என்பதை பார்க்க முடிகிறது.   கர்த்தரின் பார்வைக்கு அது பொல்லாப்பானது என்பதை உணர முடிகிறது.  இதனை கர்த்தர் எதற்காக நமக்கு திருஷ்டாந்தபடுத்துகிறாரென்றால், மணவாட்டி சபையாகிய நாம் அந்நிய ஒரு புருஷனுடைய மனைவியாகிய சபை(பரஸ்திரீ) நம் உள்ளமாகிய வீட்டிற்குள் பிரவேசிக்க இடம் கொடுக்கக்கூடாது.  அவ்விதம் இடம் கொடுப்போமானால் சுயமான இச்சைகள் உண்டாகி, அந்த இச்சையினால் மனம் இழுக்கப்பட்டு, சிக்குண்டு நாம் சோதிக்கப்படுகிறோம்.  பின்பு இச்சையானது கர்ப்பந்தரித்து, பாவத்தை பிறப்பிக்கும், பாவம் பூரணமாகும் போது மரணத்தை பிறப்பிக்கும்.  இப்படி தான் தாவீது சிக்குண்டு,  பாவத்தில் விழுந்து, அந்த பாவத்தினால்   உரியாவின் மனைவியினிடத்தில் தாவீதுக்கு பிறந்த குழந்தை வியாதிப்பட்டு மரிக்கிறது.  இப்படி தான் நாம் எந்த ஒரு இச்சையில் அகப்பட்டாலும், அது கர்ப்பந்தரித்து பாவத்தை பிறப்பிக்கும்.  பாவத்தின் காரணமாக ஆத்துமாவில் சுகம் இருக்காது.  பின்பு மரணம் உண்டாகிறது.  அப்படியான மரணம் நம் வாழ்வில் ஆத்துமாவுக்குள் உண்டானால், நாம் அதிலிருந்து விடுதலை பெற வேண்டுமானால் உபவாசித்து, மீண்டும் பாவ அறிக்கைபண்ணி, நம்மை இயேசுவின் இரத்தத்தால் கழுவி சுத்திகரிக்கப்பட்டு, புதிய அபிஷேகம் பெற்றுக்கொண்டு, எந்த காரணத்தால் விழுந்தோமோ, அவற்றில் வெற்றிபெற்று,ஆத்துமா புதியதாக தேவ சாயல் பெற்று, அதின் மேல் உள்ள கொள்ளை பொருளால் திருப்தியாகும் போது, கர்த்தர் தமது மகிமையை நம் மேல் விளங்க பண்ணி, அவர் சிரசின் மேல் பொற்கிரீடம் சூட்டபட்டவராய் ஜாதிகள் மேல் அதிகாரம் உள்ளவராய், ஜாதியை தோற்கடித்து தாமே வெற்றிப்பெற்று புதிய எருசலேமாக விளங்குகிறார்.   இப்படியாக  நம்முடைய ஆத்துமா எந்த இச்சையிலும் விழாதபடி ஜாக்கிரதையாக கிறிஸ்துவுக்குள் வாழும்படியாக ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.