தேவனுக்கே மகிமையுண்டாவதாக

சங்கீதம் 147:19

யாக்கோபுக்குத் தம்முடைய வசனங்களையும், இஸ்ரவேலுக்குத் தமது பிரமாணங்களையும் தமது நியாயங்களையும் அறிவிக்கிறார்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் ஒருபோதும் ஜனங்களை தவறான பாதையில் நடத்தி தேவனுக்கு துரோகம் பண்ணாதபடி நம்மை காத்துக்கொள்வோம்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில் மணவாட்டி சபையாகிய நாம் பரிசுத்தமாக மிகுந்த ஜாக்கிரதையோடு பந்தி விருந்தில் பங்கு பெற வேண்டும் என்பதனை தியானித்தோம்.  

அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

2 சாமுவேல் 15:1-6

இதற்குப்பின்பு, அப்சலோம் இரதங்களையும் குதிரைகளையும், தனக்கு முன் ஓட ஐம்பது சேவகரையும் சம்பாதித்தான்.

மேலும் அப்சலோம் காலைதோறும் எழுந்திருந்து, பட்டணத்து வாசலுக்குப் போகிற வழி ஓரத்திலே நின்றுகொண்டு, எவனாகிலும் தனக்கு இருக்கிற வழக்கு முகாந்தரமாய் ராஜாவினிடத்தில் நியாயத்திற்காகப் போகும்போது, அவனை அழைத்து, நீ எந்த ஊரான் என்று கேட்பான்; அவன் உமது அடியான் இஸ்ரவேல் கோத்திரங்களில் ஒன்றுக்கடுத்த இன்ன ஊரான் என்றால்,

அப்பொழுது அப்சலோம் அவனை நோக்கி: இதோ, உன் காரியம் நேர்மையும் நியாயமுமாயிருக்கிறது; ஆனாலும் ராஜாவினிடத்திலே உன் காரியத்தை விசாரிப்பார் ஒருவரும் இல்லை என்பான்.

பின்னும் அப்சலோம்: வழக்கு வியாஜ்யமுள்ளவர்கள் எல்லாரும் என்னிடத்தில் வந்து, நான் அவர்களுக்கு நியாயஞ்செய்யும்படிக்கு, என்னை தேசத்திலே நியாயாதிபதியாக வைத்தால் நலமாயிருக்கும் என்பான்.

எவனாகிலும் ஒருவன் அவனை வணங்கவரும்போது, அவன் தன் கையை நீட்டி அவனைத் தழுவி, முத்தஞ்செய்வான்.

இந்தப்பிரகாரமாக அப்சலோம் ராஜாவினிடத்தில் நியாயத்திற்காக வரும் இஸ்ரவேலருக்கெல்லாம் செய்து, இஸ்ரவேல் மனுஷருடைய இருதயத்தைக் கவர்ந்துகொண்டான்.

மேற்கூறப்பட்ட வசனங்களில் அப்சலோம்  தன் தகப்பனாகிய தாவீது ராஜாவோடு சேர்க்கப்பட்டு, தன் தகப்பன் அவனை முத்தம் செய்கிறான்.  அதன் பின்பு அப்சலோம் இரதங்களையும், குதிரைகளையும், தனக்கு முன் ஓட ஐம்பது சேவகரையும் சம்பாதித்தான்.  மேலும் அப்சலோம் காலைதோறும் எழுந்து பட்டணத்து வாசலுக்கு போகிற வழியோரத்திலே நின்றுக்கொண்டு எவனாகிலும் தனக்கு இருக்கிற வழக்கு முகாந்தரமாய் ராஜவினிடத்தில் நியாயத்திற்காக போகும் போது, அவனை அழைத்து , நீ எந்த ஊரான் என்று கேட்டு, அவன் உமது அடியான் இஸ்ரவேல் கோத்திரங்களில் ஒன்றுக்கடுத்த இன்ன ஊரான் என்று சொன்னால்; அவர்களிடம் அப்சலோம் சொல்வது;  உன் காரியம் நேர்மையாயிருக்கிறது; ஆனாலும் ராஜாவினிடத்தில் உன் காரியம் விசாரிப்பார் ஒருவரும் இல்லை என்பான்.  பின்னும் அவன் சொல்வது வழக்கு வியாஜ்யமுள்ளவர்கள் என்னிடத்தில் வந்து, நான் அவர்களுக்கு நியாயம் செய்யும்படிக்கு, என்னை நேரத்திலே நியாயாதிபதியாக வைத்தால் நலமாயிருக்கும் என்பான். மேலும் அவன் செய்வது யாராவது அவனை வணங்க வருவார்களானால் அவன் தன் கையை நீட்டி அவர்களை தழுவி முத்தம் செய்து, இந்த பிரகாரம் அப்சலோம், ராஜாவினிடத்தில் வரும் இஸ்ரவேலருக்கெல்லாம் செய்து அவர்களுடைய மனதை கவர்ந்துக்கொண்டான்.  

பிரியமானவர்களே, அப்சலோம் தாவீது ராஜாவுக்கு துரோகம் செய்த போதிலும், ராஜா, குமாரனிடத்தில் அன்பு உண்டாயிருந்ததால் அப்சலோமை சேர்த்துக்கொள்கிறான்.  ஆனால் அப்சலோம் என்பவனிடத்தில் உள்ளதோ துர்கிரியை.  அந்த துர்கிரியைகளினால், தன் தகப்பன் அணைத்துக்கொண்டதை நினைக்காமல் மீண்டும் அவனுக்கு விரோதமாக துரோகம் செய்கிறதை வாசிக்கிறோம்.  இப்படிதான் நம்மில் அநேகர் கர்த்தர் நம் தவறுகளை எத்தனையோ தடவை மன்னித்து நம்மை சேர்த்துக்கொண்டாலும், நாமோ அப்சலோமை போல கர்த்தருக்கு விரோதமாக பொல்லாப்பு செய்து, நடந்துக்கொள்கிறோம்.  இதன் காரணம் என்னவென்றால் உள்ளமானது வேசியின் கிரியைகள் நிறைந்திருக்கிறதால் மற்ற ஆத்துமா கொல்லப்படுவதற்கும்,நம்முடைய ராஜாவாகிய கிறிஸ்துவுக்கு விரோதமாக செயல்பட்டு ஜனங்களை தன் வசப்படுத்திக் கொள்கிறதால் ஜனங்கள் சத்தியம் என்ன என்று அறியாமல், கண்கள் அடைக்கப்பட்டவர்களாய், வாழ்வில் நிர்வாணிகளாயிருக்கிறார்கள். ஆதலால் நம் உள்ளத்தில் வேசியின் ஆவிக்கு இடம் கொடாதபடி கர்த்தரின் ஆவியால் முழுமையும் நிரப்பப்பட வேண்டும்.  இவ்விதமாக அப்சலோமை போல ஜனங்களை தங்கள் வசமாக்கி அழியப்பண்ணாதபடி, கர்த்தரின் சத்திய வசனங்களை உபதேசித்து, கர்த்தரின் கிருபையால் யாவரும் நிரப்பப்படும்படியாக ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.