தேவனுக்கே மகிமையுண்டாவதாக
ஏசாயா 51:7,8
நீதியை அறிந்தவர்களே, என் வேதத்தை இருதயத்தில் பதித்திருக்கிற ஜனங்களே, எனக்குச் செவிகொடுங்கள்; மனுஷரின் நிந்தனைக்குப் பயப்படாமலும், அவர்கள் தூஷணங்களால் கலங்காமலும் இருங்கள்.
பொட்டுப்பூச்சி அவர்களை வஸ்திரத்தைப்போல் அரித்து, புழு அவர்களை ஆட்டுமயிரைப்போல் தின்னும்; என்னுடைய நீதியோ என்றென்றைக்கும் நிலைக்கும், என் இரட்சிப்பு தலைமுறை தலைமுறைதோறும் இருக்கும்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நாம் நமக்கு வருகிற சகல துன்பங்களையும், உபத்திரவத்தையும் சகித்து நன்மையை (இரட்சிப்பு) சுதந்தரிப்போம்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நம்முடைய ஆத்துமா பரிசுத்தத்திலும், உண்மையிலும், நீதியிலும் விளங்க வேண்டும் என்பதனை குறித்து தியானித்தோம்.
அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்
2 சாமுவேல் 16: 9-12
அப்பொழுது செருயாவின் குமாரன் அபிசாய் ராஜாவை நோக்கி: அந்தச் செத்தநாய் ராஜாவாகிய என் ஆண்டவனை தூஷிப்பானேன்? நான் போய் அவன் தலையை வாங்கிப்போடட்டுமே என்றான்.
அதற்கு ராஜா: செருயாவின் குமாரரே, எனக்கும் உங்களுக்கும் என்ன? அவன் என்னைத் தூஷிக்கட்டும்; தாவீதைத் தூஷிக்கவேண்டும் என்று கர்த்தர் அவனுக்குச் சொன்னார்; ஆகையால் ஏன் இப்படிச் செய்கிறாய் என்று கேட்கத்தக்கவன் யார் என்றான்.
பின்னும் தாவீது அபிசாயையும் தன் ஊழியக்காரர் எல்லாரையும் பார்த்து: இதோ, என் கர்ப்பப்பிறப்பான என் குமாரனே என் பிராணனை வாங்கத் தேடும்போது, இந்தப் பென்யமீனன் எத்தனை அதிகமாய்ச் செய்வான், அவன் தூஷிக்கட்டும்; அப்படிச் செய்ய கர்த்தர் அவனுக்குக் கட்டளையிட்டிருக்கிறார்.
ஒருவேளை கர்த்தர் என் சிறுமையைப் பார்த்து, இந்த நாளில் அவன் நிந்தித்த நிந்தனைக்குப் பதிலாக எனக்கு நன்மையைச் சரிக்கட்டுவார் என்றான்.
மேற்கூறப்பட்ட வசனங்களில் சீமேயி தாவீதை நிந்தித்து கல்லெறிந்ததை கண்ட செருயாவின் குமாரன் அபிசாய் தாவீது ராஜாவிடம்,அந்த செத்த நாய் ராஜாவாகிய என் ஆண்டவனை தூஷிப்பானேன்? நான் போய் அவன் தலையை வெட்டி போடட்டுமே என்றான். அதற்கு ராஜா செருயாவின் குமாரரே,எனக்கும் உங்களுக்கும் என்ன? அவன் என்னை தூஷிக்கட்டும்; தாவீதை தூஷிக்க வேண்டும் என்று கர்த்தர் அவனுக்கு சொன்னார்; ஆகையால் ஏன் இப்படி செய்தாய் என்று கேட்க தக்கவன் யார்? என்று சொல்லி தாவீது அபிசாயையும், தன் ஊழியக்காரரையும் பார்த்து, இதோ என் கர்ப்பப்பிறப்பான என் குமாரனே என் பிராணனை வாங்க தேடும் போது,இந்த பென்யமீனன் எத்தனை அதிகமாய் செய்வான், அவன் தூஷிக்கட்டும்; அப்படி செய்ய கர்த்தர் அவனுக்கு கட்டளையிட்டிருக்கிறார். பின்பு தாவீது சொல்வது ஒருவேளை கர்த்தர் என் சிறுமையை பார்த்து இந்நாளில் இந்த நிந்தனைக்கு் பதிலாக கர்த்தர் எனக்கு நன்மையை சரிகட்டுவார் என்றான்.
அப்படியே 2 சாமுவேல் 16:13-14
அப்படியே தாவீதும் அவன் மனுஷரும் வழியே நடந்துபோனார்கள்; சீமேயியும் மலையின் பக்கத்திலே அவனுக்கு எதிராக நடந்து தூஷித்து, அவனுக்கு எதிராகக் கற்களை எறிந்து, மண்ணைத் தூற்றிக்கொண்டே வந்தான்.
ராஜாவும் அவனோடிருந்த சகல ஜனங்களும் விடாய்த்தவர்களாய், தங்குமிடத்திலே சேர்ந்து, இளைப்பாறினார்கள்.
மேற்கூறப்பட்ட வசனங்களில் சிமேயி தாவீதுக்கும், அவன் ஜனங்களும் எதிராக நடந்து தூஷித்து, கற்களை எறிந்து மண்ணை தூற்றிக்கொண்டே வருகிறான். தாவீதும், அவனோடிந்த ஜனங்களும் விடய்த்தவர்களாய் அவர்கள் தங்கும் இடத்திற்கு வந்து இளைப்பாறினார்கள். அப்சலோமும்,இஸ்ரவேலராகிய சகல ஜனங்களும், அவனோடேக்கூட அகிதோப்பேலும் எருசலேமுக்கு வந்தார்கள். தாவீதின் சீநேதிதனாகிய ஊசாய் அப்சலோமிடத்தில் வந்த போது; ஊசாய் அப்சலோமை ராஜாவே வாழ்க, ராஜாவே வாழ்க என்றான். அப்போது அப்சலோம் ஊசாயை பார்த்து: உன் சிநேகிதன் மேல் உனக்கு இருக்கிற தயை இது தானோ உன் சிநேகிதனோடே நீ போகாதது என்ன என்றான்.
அதற்கு ஊசாய் 2 சாமுவேல் 16:18,19
அதற்கு ஊசாய் அப்சலோமை நோக்கி: அப்படி அல்ல, கர்த்தரும் இந்த ஜனங்களும் இஸ்ரவேல் மனுஷரனைவரும் தெரிந்துகொள்ளுகிறவரையே நான் சேர்ந்து அவரோடே இருப்பேன்.
இதுவும் அல்லாமல், நான் யாரிடத்தில் சேவிப்பேன்? அவருடைய குமாரனிடத்தில் அல்லவா? உம்முடைய தகப்பனிடத்தில் எப்படி சேவித்தேனோ, அப்படியே உம்மிடத்திலும் சேவிப்பேன் என்றான்.
மேற்கூறப்படுகிற வார்த்தையானது தாவீது புத்திசாலியாக ஊசாயிடம் சொல்லி வைத்திருந்த வார்த்தைகள்; இதனை ஊசாய் அப்சலோமிடம் சொல்ல, அப்சலோம் அகிதோப்பேலைப் பார்த்து, நாங்கள் செய்ய வேண்டிய காரியம் இன்னதென்று ஆலோசனை சொல்லும் என்றான்.
அப்பொழுது 2 சாமுவேல் 16 :21-23
அப்பொழுது அகித்தோப்பேல் அப்சலோமை நோக்கி: வீட்டைக்காக்க உம்முடைய தகப்பன் பின்வைத்த அவருடைய மறுமனையாட்டிகளிடத்தில் பிரவேசியும், அப்பொழுது உம்முடைய தகப்பனுக்கு நாற்றமாய்ப்போனீர் என்பதை இஸ்ரவேலர் எல்லாரும் கேள்விப்பட்டு, உம்மோடிருக்கிற எல்லாருடைய கைகளும் பலக்கும் என்றான்.
அப்படியே அப்சலோமுக்கு உப்பரிகையின்மேல் ஒரு கூடாரத்தைப் போட்டார்கள்; அங்கே அப்சலோம் சகல இஸ்ரவேலரின் கண்களுக்கு முன்பாக, தன் தகப்பனுடைய மறுமனையாட்டிகளிடத்தில் பிரவேசித்தான்.
அந்நாட்களில் அகித்தோப்பேல் சொல்லும் ஆலோசனையெல்லாம் தேவனுடைய வாக்கைப்போல இருந்தது, அப்படியே அகித்தோப்பேலின் ஆலோசனையெல்லாம் தாவீதுக்கும் இருந்தது, அப்சலோமுக்கும் அப்படியே இருந்தது.
மேற்கூறப்பட்ட வசனங்களில் அகிதோப்பேலின் ஆலோசனை தேவ வாக்கை போல இருந்தது. தாவீதுக்கும் அகிதோப்பேலின் ஆலோசனையெல்லாம் இருந்தது, அப்சலோமுக்கும் அப்படியே இருந்தது.
பிரியமானவர்களே மேற்கூறப்பட்டிருக்கிற வார்த்தைகளை நாம் தியானிக்கும் போது, கர்த்தரால் நாம் சில நேரத்தில் நெருக்கப்படலாம்; அவ்விதம் நெருக்கப்பட்டு நாம் கடும் வேதனையடைந்துக்கொண்டிருக்கும் போது சிலபேர் அத்தருணத்தை பயன்படுத்தி நம்மை பல விதத்தில் உபத்திரவிப்பார்கள். இது தான் தாவீதின் வாழ்க்கை நமக்கு திருஷ்டாந்தப்படுத்தப்படுகிறது. அதனால் நாம் தாவீது நமக்கு காட்டுகிறபடி கிறிஸ்துவின் சிங்காசனம் நீதியாலும் நியாயத்தாலும் நிறைந்திருக்க வேண்டுமானால், எப்பேற்பட்ட உபத்திரவம் நமக்கு வந்தாலும் நாம் சோர்ந்து போகாதபடி, அவர்களுக்கு விரோதமாக தீங்கு நினையாதபடி, நம்முடைய நெருக்கம் கர்த்தரால் அறிந்து மட்டும் தான் வரும் என்ற நல்ல எண்ணம் உள்ளத்தில் உள்ளவர்களாய், தாழ்மையோடு காணப்படுவோமானால், கர்த்தர் நமக்காக எல்லாவற்றையும் தாங்கிக் கொள்வார். மேலும் நாம் பார்க்கிறோம் தாவீது அகிதோப்பேலின் ஆலோசனையை, கர்த்தாவே பயித்தியமாக்குவீராக என்று கேட்டது போல் அந்த ஆலோசனை அப்சலோமை பயித்தியமாக்கி தாவீதின் மறுமனையாட்டிகளிடத்தில் பிரவேசிக்கிறான்.
ஆதலால் பிரியமானவர்களே நமக்கு விரோதமாக யார் எழும்பினாலும், நெறிதவறாதபடி, அந்நிய ஆலோசனையில் விழுந்து போகாதபடி நாம் ஜாக்கிரதையாக நம்மை காத்துக் கொள்ளவேண்டும். கர்த்தரின் சிங்காசனம்(இரட்சிப்பு) நம்மில் என்றென்றும்(தலைமுறை தலைமுறைதோறும்) பாதுகாக்க வேண்டுமென்றால் எல்லா தீமையையும் பொறுமையோடு சகித்து, பரிசுத்தத்தை காத்து நன்மையையை சுதந்தரிக்கும்படியாக ஒப்புக்கொடுப்போம்.
ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.