தேவனுக்கே மகிமையுண்டாவதாக
யாக்கோபு 4:10
கர்த்தருக்கு முன்பாகத் தாழ்மைப்படுங்கள், அப்பொழுது அவர் உங்களை உயர்த்துவார்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நம்முடைய ஆத்துமா தாழ்மை தரிக்க வேண்டும்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நம்முடைய ஆத்துமா ஒரு போதும் கோவேறு கழுதையை போல் இருக்க வேண்டாம் என்பதனை குறித்து தியானித்தோம். எப்படியெனில் கோவேறு கழுதையில் யாத்திரை செய்த அப்சலோமின் தலை கர்வாலிமரத்தில் தொங்கினது, கோவேறு கழுதை சென்ற பாதை சன்னல் பின்னலான பாதையாகயிருந்தது என்பதனை வாசிக்க முடிகிறது. இந்த செய்தியை ஒரு மனுஷன் கண்டு யோவாபிடத்தில் அறிவிக்கிறான். அடுத்தபடியாக,
11சாமுவேல் 18:11-15
அப்பொழுது யோவாப் தனக்கு அதை அறிவித்தவனை நோக்கி: நீ அதைக் கண்டாயே; பின்னை ஏன் அவனை அங்கே வெட்டி, தரையிலே தள்ளிப்போடவில்லை? நான் உனக்குப் பத்து வெள்ளிக்காசையும் ஒரு கச்சையையும் கொடுக்கக் கடமையுள்ளவனாயிருப்பேனே என்றான்.
அந்த மனுஷன் யோவாபை நோக்கி: என் கைகளில் ஆயிரம் வெள்ளிக்காசு நிறுத்துக் கொடுக்கப்பட்டாலும், நான் ராஜாவுடைய குமாரன்மேல் என் கையை நீட்டமாட்டேன்; பிள்ளையாண்டானாகிய அப்சலோமை நீங்கள் அவரவர் காப்பாற்றுங்கள் என்று ராஜா உமக்கும் அபிசாய்க்கும் ஈத்தாய்க்கும் எங்கள் காதுகள்கேட்கக் கட்டளையிட்டாரே.
ராஜாவுக்கு ஒரு காரியமும் மறைவாயிருக்கமாட்டாது; ஆதலால், நான் அதைச் செய்வேனாகில், என் பிராணனுக்கே விரோதமாகச் செய்பவனாவேன், நீரும் எனக்கு விரோதமாயிருப்பீர் என்றான்.
ஆதலால் யோவாப்: நான் இப்படி உன்னோடே பேசி, தாமதிக்கமாட்டேன் என்று சொல்லி, தன் கையிலே மூன்று வல்லயங்களை எடுத்துக்கொண்டு, அப்சலோம் இன்னும் கர்வாலிமரத்தின் நடுவிலே உயிரோடே தொங்குகையில், அவைகளை அவன் நெஞ்சிலே குத்தினான்.
அப்பொழுது யோவாபின் ஆயுததாரிகளாகிய பத்து சேவகர் அப்சலோமைச் சூழ்ந்து அவனை அடித்துக் கொன்றுபோட்டார்கள்.
மேற்கூறப்பட்ட வசனங்கள் பிரகாரம் யோவாபிடத்தில் ஒரு மனுஷன் அப்சலோமின் காரியத்தை குறித்து அறிவித்தானேயல்லாமல் அவனை கொன்று போட முன் வரவில்லை. இதன் காரணம் தாவீது ராஜாவின் குமாரனாக அப்சலோம் இருக்கிறபடியால், தன் பிராணனுக்கு ஆபத்து வரும் என்று பயந்து அவன் அப்சலோமை கொன்று போட துணியவில்லை. ஆதலால் யோவாபே போய் மூன்று வல்லயங்களை எடுத்துக்கொண்டு போய் அப்சலோம் இன்னும் கர்வாலிமரத்தில் தொங்குகையில் அவைகளை அவன் நெஞ்சில் குத்தினான். அப்போது அப்சலோமின் சேவகர் பத்து பேர் அப்சலோமை சூழ்ந்து அவனை அடித்துக்கொன்றுப் போட்டார்கள்.
பிரியமானவர்களே நம்முடைய ஆத்துமாவை குறித்ததான வசனங்களாக நமக்கு தேவன் திருஷ்டாந்தப்படுத்துகிறார். தாவீதின் குமாரன், அப்சலோம் தன்னை ராஜாவாக்கி கொள்ள வேண்டும் நினைத்ததின் காரணமாக, தாவீது ராஜாவின் சிங்காசனத்திற்கு விரோதமாக செயல்பட்டு இஸ்ரவேலரை அவனுக்கு சாதகமாக்கி வைத்திருக்கிறதை பார்க்கிறோம். ஆதலால் தாவீது தன் மகன் அப்சலோமை மெதுவாக நடத்த வேண்டும் என்று நினைத்தாலும், அப்சலோம் நடந்துக்கொண்ட பொல்லாத செயல்பாடுகளினால் கர்த்தர் அவனுடைய கழுதையை சன்னல் பின்னலாக நடத்தி சென்றதால் அவன் தலை கர்வாலி மரத்தில் மாட்டிக்கொண்டு தொங்கின. இதனை நாம் பார்க்குப் போது அவன் தலைவனாக வேண்டும் என்று நினைத்ததால் அவன் தலையினாலே அவனை கர்த்தர் காயப்படுத்தி தாவீதின் படை சேவகர் கையாலே அவன் கொல்லப்படுகிறான். இதன் கருத்துக்கள் என்னவெனில் நம்முடைய ஆத்துமா கிறிஸ்துவின் சிங்காசனத்திற்கு விரோதமாக தன்னை உயர்த்தாதபடி தாழ்த்த வேண்டும். அவ்விதம் தன்னை உயர்த்துவோமானால் கர்த்தர் நமக்கு சத்துருவாக செயல்படுவார். ஆனால் நாம் தன்னை தான் தாழ்த்துவோமானால் கர்த்தரால் உயர்த்தபட்டு, கிருபையில் வளருகிறவர்களாகுவோம். ஆதலால் நாம் ஒவ்வொருவரும் தாழ்மைப்படும்படியாக ஒப்புக்கொடுப்போம்.
ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.