தேவனுக்கே மகிமையுண்டாவதாக
சங்கீதம் 51:14
தேவனே, என்னை இரட்சிக்குந் தேவனே, இரத்தப்பழிகளுக்கு என்னை நீங்கலாக்கிவிடும்; அப்பொழுது என் நாவு உம்முடைய நீதியைக் கெம்பீரமாய்ப் பாடும்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நாம் நம்முடைய ஆத்துமாவின் இரட்சிப்பைக்குறித்து ஜாக்கிரதையுள்ளவர்களாக இருக்க வேண்டும்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நம்முடைய ஆத்துமா கர்த்தரின் சித்தத்திற்கு அவருடைய கட்டளைகளையும், கற்பனைகளையும், நியாயங்களையும் கைக்கொள்ள வேண்டும் என்பதனை குறித்து தியானித்தோம். அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்
1இராஜாக்கள் 2:11-12
தாவீது இஸ்ரவேலை அரசாண்ட நாட்கள் நாற்பது வருஷம்; அவன் எப்ரோனில் ஏழு வருஷமும், எருசலேமில் முப்பத்துமூன்று வருஷமும் அரசாண்டான்.
சாலொமோன் தன் தகப்பனாகிய தாவீதுடைய சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்தான்; அவன் ராஜ்யபாரம் மிகவும் ஸ்திரப்பட்டது.
தாவீது ராஜா இஸ்ரவேலை அரசாண்ட நாட்கள் நாற்பது வருஷம்; அவன் எப்ரோனிலே ஏழு வருஷமும், எருசலேமிலே முப்பத்து மூன்று வருஷமும் அரசாண்டான். சாலொமோன் தன் தகப்பனுடைய சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்தான்; அவன் ராஜ்யபாரம் மிகவும் ஸ்திரப்பட்டது. பின்பு நடந்த காரியங்களை குறித்து
1இராஜாக்கள் 2:13-22
ஆகீத்தின் குமாரனாகிய அதோனியா சாலொமோனின் தாயாகிய பத்சேபாளிடத்தில் வந்தான். நீ சமாதானமாய் வருகிறாயா என்று அவள் கேட்டதற்கு: சமாதானமாய்த் தான் வருகிறேன் என்றான்.
பின்பு அவன்: உம்மோடே நான் பேசவேண்டிய ஒரு காரியம் இருக்கிறது என்றான். அதற்கு அவள்: சொல் என்றாள்.
அப்பொழுது அவன்: ராஜ்யம் என்னுடையதாயிருந்தது என்றும், நான் அரசாளுகிறதற்கு இஸ்ரவேலரெல்லாரும் என்மேல் நோக்கமாய் இருந்தார்கள் என்றும் நீர் அறிவீர்; ஆனாலும் ராஜ்யபாரம் என்னைவிட்டுத் தாண்டி, என் சகோதரனுக்கு ஆயிற்று; கர்த்தரால் அது அவருக்குக் கிடைத்தது.
இப்பொழுது நான் உம்மிடத்தில் ஒரு மன்றாட்டைக் கேட்கிறேன்; அதை எனக்கு மறுக்கவேண்டாம் என்றான். அவள்: சொல் என்றாள்.
அப்பொழுது அவன்: ராஜாவாகிய சாலொமோன் உம்முடைய சொல்லை மறுப்பதில்லை; சூனேம் ஊராளாகிய அபிஷாகை எனக்கு அவர் விவாகம்பண்ணிக்கொடுக்க, அவரோடே பேசும்படி வேண்டுகிறேன் என்றான்.
அதற்குப் பத்சேபாள்: நல்லது, நான் உனக்காக ராஜாவிடத்தில் பேசுவேன் என்றாள்.
பத்சேபாள் அதோனியாவுக்காக ராஜாவாகிய சாலொமோனிடத்தில் பேசும்படி போனாள்; அப்பொழுது ராஜா எழுந்திருந்து, அவளுக்கு எதிர்கொண்டுவந்து அவளை வணங்கி, தன் சிங்காசனத்தின்மேல் உட்கார்ந்து, ராஜாவின் தாயார் தன் வலதுபுறமாக உட்கார, அவளுக்கு ஒரு ஆசனத்தை வைத்தான்.
அப்பொழுது அவள்: நான் உம்மை ஒரு சிறிய மன்றாட்டைக் கேட்க விரும்புகிறேன்; எனக்கு அதை மறுக்கவேண்டாம் என்றாள். அதற்கு ராஜா: என் தாயாரே, கேளும்; நான் உமக்கு மறுப்பதில்லை என்றான்.
அப்பொழுது அவள்: சூனேம் ஊராளாகிய அபிஷாகை உம்முடைய சகோதரனாகிய அதோனியாவுக்கு விவாகம்பண்ணிக்கொடுக்கவேண்டும் என்றாள்.
ராஜாவாகிய சாலொமோன் தன் தாயாருக்குப் பிரதியுத்தரமாக: நீர் சூனேம் ஊராளாகிய அபிஷாகை அதோனியாவுக்குக் கேட்பானேன்? அப்படியானால் ராஜ்யபாரத்தையும் அவனுக்குக் கேளும்; அவன் எனக்கு மூத்த சகோதரன்; அவனுக்கும் ஆசாரியனாகிய அபியத்தாருக்கும் செருயாவின் குமாரன் யோவாபுக்குமே அதைக் கேளும் என்றான்.
மேற்கூறப்பட்ட வசனத்தில் அதோனியா, பத்சேபாளிடம் வந்து அபிஷாகை விவாகம்பண்ணும்படி சாலொமோனிடம் அனுமதி கேட்கும் படி வந்தான்; ஆனால் அவளும் அதற்கு சம்மதித்து சாலொமோனிடம் பேசும்படி போகிறாள். ஆனால் சாலொமோனோ தன் தாயாகிய பத்சேபாளை கண்டவுடன் எழுந்திருந்து எதிர்க்கொண்டு வந்து அவளை வணங்கி, தன் சிங்காசனத்தின் மேல் உட்கார்ந்து, தன் தாயார் உட்கார வலதுபுறமாக அவளுக்கு ஒரு ஆசனத்தை வைத்தான். பின்பு அவள் ராஜாவாகிய சாலொமோனிடம் அபிஷாகை அதோனியாவுக்கு விவாகம் பண்ணிக்கொடுக்க வேண்டும் என்று சொல்லும் போது, ராஜாவாகிய சாலொமோன் தாயாருக்கு பிரதியுத்தமாக; அப்படியானால் ராஜ்யபாரத்தையும் அவனுக்கு கேளும்; அவன் எனக்கு மூத்த சகோதரன்; அவனுக்கும், ஆசாரியனாகிய அபியத்தாருக்கும், செருயாவின் குமாரன் யோவாபுக்குமே அதை கேளும் என்றான். பின்னும் சாலோமோன் ராஜா சொன்னது அதோனியா இந்த வார்த்தையை தன் பிராணனுக்குச் சேதமாக சொல்லாதிருந்தால், தேவன் அதற்கு சரியாகவும் அதற்கு அதிகமாகவும் எனக்கு செய்யக்கடவர் என்று கர்த்தர் மேல் ஆணையிட்டு, இப்போதும் இன்றைக்கு அதோனியா கொலையுண்பான் என்று என்னை திடப்படுத்தினவரும், என்னை என் தகப்பனாகிய தாவீதின் சிங்காசனத்தில் வீற்றிருக்கப்பண்ணி, தாம் சொன்னபடி எனக்கு ஒரு வீட்டைக் கட்டுவித்தவருமாகிய கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று சொல்லி; ராஜாவாகிய சாலொமோன் யோய்தாவின் குமாரன் பெனாயாவுக்குக் கட்டளைக்கொடுத்து அவனை அனுப்பினான். இவன் அவன் மேல் விழுந்து அவனைக் கொன்றுப் போட்டான். பின்பு ராஜா ஆசாரியனாகிய அபியத்தாரிடம்; நீ உன் நிலங்கள் இருக்கிற ஆனதோத்திற்கு போய் விடு; நீ மரணத்திற்கு பாத்திரவானாயிருந்தும், நீ என் தகப்பனாகிய தாவீதுக்கு முன்பாகக் கர்த்தராகிய ஆண்டவருடைய பெட்டியை சுமந்தபடியினாலும், என் தகப்பன் அனுபவித்த உபத்திரவத்தையெல்லாம் நீயும் சேர்ந்து அனுபவித்தபடியினாலும், இன்றைய தினம் நான் உன்னை கொலை செய்ய மாட்டேன் என்றான். அப்படியே கர்த்தர் ஏலியின் வீட்டாரைக்குறித்துச் சொன்ன வார்த்தையை நிறைவேற்றும்படியாக, சாலொமோன் அபியத்தாரைக் கர்த்தருடைய ஆசாரியனாயிராதபடி தள்ளிப்போட்டான்.
பிரியமானவர்களே மேற்கூறப்பட்ட வசனங்களின் படி நம்முடைய ஆத்துமா இரட்சிப்பின் அபிஷேகம் பெற்ற பின், எந்த ஒரு காரியத்தை குறித்தாகிலும் யாராவது உதவிக்கேட்டால், மாம்சீகமாக சொந்த ஆலோசனையில் நாம் விழாதபடி காத்துக்கொள்ள வேண்டும். ஏனென்றால் நம்முடைய வீட்டுக்குள் துர் கிரியைகள் வராதபடி ஜாக்கிரதையாக காத்துக்கொள்ள வேண்டும். அது மாத்திரமல்லாமல் துர் கிரியைகள் செய்வதற்கு உடந்தையாக இருக்கிறவர்களிடம் கவனமாக நடந்துக் கொள்ள வேண்டும். மேலும் கனஈனமுள்ள ஆசாரியர்களாக நம் வாழ்க்கையில் யாருக்கும் இடம் கொடாதபடி, நம்முடைய ஆசாரியராக கிறிஸ்து நம் உள்ளத்தில் உயிர்தெழவேண்டும். அவ்விதம் அவர் நம்மில் உயிர்தெழாவிட்டால் நம் ஆத்துமா கர்த்தரை கன ஈனப்படுத்துகிறது. மேலும் உள்ளத்தில் துர் கிரியைகள் எழும்புமானால் துவக்கத்திலே அதனை அழித்து விட வேண்டும். அதுவுமட்டுமல்லாமல் அவ்விதம் துர்கிரியைகள் செய்வதற்கு யாராவது உடந்தையாக இருந்தாலோ, அவர்களை ஒரு போதும் நம் பக்கத்தில் வைத்துக்கொள்ளக்கூடாது. இவ்விதமாக நம்முடைய ஆத்துமாவின் இரட்சிப்புக்கு மாறான பொல்லாத எண்ணங்கள் அழிக்கப்படும்படியாக ஒப்புக்கொடுப்போம்.
ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.