தேவனுக்கே மகிமையுண்டாவதாக

1தீமோத்தேயு 1:5 

கற்பனையின் பொருள் என்னவெனில், சுத்தமான இருதயத்திலும் நல்மனச்சாட்சியிலும் மாயமற்ற விசுவாசத்திலும் பிறக்கும் அன்பே.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் சுத்தமான இருதயமும், நல்மனசாட்சியும், மாயமற்ற விசுவாசமும் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.   

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் நம்முடைய ஆத்துமாவின் இரட்சிப்பைக்குறித்து ஜாக்கிரதையுள்ளவர்களாக இருக்க வேண்டும் என்பதனைக் குறித்து தியானித்தோம்.  அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்

 1இராஜாக்கள் 2:28-30 

 நடந்த இந்தச் செய்தி யோவாபுக்கு வந்தபோது, அவன் கர்த்தருடைய கூடாரத்திற்கு ஓடிப்போய், பலிபீடத்தின் கொம்புகளைப் பிடித்துக்கொண்டான்; யோவாப் அப்சலோமின் பட்சம் சாயாதவனாயிருந்தும், அதோனியாவின் பட்சம் சாய்ந்திருந்தான்.

யோவாப் கர்த்தரின் கூடாரத்திற்கு ஓடிப்போனான் என்றும், இதோ, பலிபீடத்தண்டையில் நிற்கிறான் என்றும், ராஜாவாகிய சாலொமோனுக்கு அறிவிக்கப்பட்டபோது, சாலொமோன் யோய்தாவின் குமாரனாகிய பெனாயாவை அனுப்பி, நீ போய் அவன்மேல் விழு என்றான்.

பெனாயா கர்த்தரின் கூடாரத்திற்குப் போய், அவனைப் பார்த்து: வெளியே வா என்று ராஜா சொல்லுகிறார் என்றான். அதற்கு அவன்: நான் வரமாட்டேன்; இங்கேயே சாவேன் என்றான்; ஆகையால் பெனாயா ராஜாவினிடத்தில் போய், யோவாப் இன்னபடி சொல்லி, இன்னபடி எனக்கு மறுஉத்தரவு கொடுத்தான் என்று மறுசெய்தி சொன்னான்.

மேற்கூறப்பட்ட வசனங்களில் ஆசாரியனாகிய அபியத்தார் அதோனியாவுக்கு ஆலோசனை கொடுத்ததை அறிந்து, சாலொமோன் அவனை கர்த்தருடைய ஆசாரியனாயிராதபடி தள்ளிப்போட்டான்.  இந்த சங்கதிகளையெல்லாம் அறிந்த யோவாப் கர்த்தருடைய கூடாரத்திற்கு ஓடிப்போய், பலிபீடத்தின் கொம்புகளைப் பிடித்துக்கொண்டான்.  யோவாப் அப்சலோமின் பக்கம் சாயாதவனாயிருந்தும் அதோனியாவின் பட்சம் சாய்ந்திருந்தான். யோவாப் கர்த்தருடைய கூடாரத்திற்கு ஓடிப் போனான் என்றும், பலிபீடத்தண்டையில் நிற்கிறான் என்றும் சாலொமோன் அறிந்து யோய்தாவின் குமாரனாகிய பெனாயாவை அனுப்பி அவன் மேல் விழு என்றான்.  பெனாயா கர்த்தரின் கூடாரத்திற்கு போய், அவனை வெளியே அழைக்க; அவன் வரமாட்டேன் என்றும், இங்கே சாவேன் என்றும் சொன்னான்.  இந்த காரியத்தை பெனாயா, சாலொமோன் ராஜாவினிடத்தில் சொல்ல; ராஜா சொன்னது 

1இராஜாக்கள் 2:31-35

அப்பொழுது ராஜா அவனை நோக்கி: அவன் சொன்னபடியே நீ செய்து, அவனைக் கொன்று, அடக்கம்பண்ணி, இவ்விதமாய் யோவாப் முகாந்தரமில்லாமல் சிந்தின இரத்தத்தை என்னைவிட்டும் என் பிதாவின் வீட்டைவிட்டும் விலக்கிப் போடு.

அவன் தன்னைப்பார்க்கிலும் நீதியும் நற்குணமுமுள்ள இரண்டுபேராகிய நேரின் குமாரன் அப்னேர் என்னும் இஸ்ரவேலின் படைத்தலைவன்மேலும், ஏதேரின் குமாரன் அமாசா என்னும் யூதாவின் படைத்தலைவன்மேலும் விழுந்து, என் தகப்பனாகிய தாவீதுக்குத் தெரியாமல் அவர்களைப் பட்டயத்தால் கொன்ற அவனுடைய இரத்தப்பழியைக் கர்த்தர் அவனுடைய தலையின்மேல் திரும்பப்பண்ணுவாராக.

இப்படியே அவர்களுடைய இரத்தப்பழி என்றும் யோவாபுடைய தலையின்மேலும், அவன் சந்ததியாரின் தலையின்மேலும் திரும்பவும், தாவீதுக்கும் அவர் சந்ததியாருக்கும் அவர் வீட்டாருக்கும் அவர் சிங்காசனத்திற்கும் என்றென்றைக்கும் கர்த்தராலே சமாதானம் உண்டாயிருக்கவும் கடவது என்றான்.

அப்படியே யோய்தாவின் குமாரன் பெனாயா போய், அவன்மேல் விழுந்து அவனைக் கொன்றுபோட்டான்; அவன் வனாந்தரத்திலிருக்கிற தன்னுடைய வீட்டிலே அடக்கம்பண்ணப்பட்டான்.

அவனுக்குப் பதிலாக ராஜா யோய்தாவின் குமாரன் பெனாயாவை இராணுவத்தின்மேலும், ஆசாரியனாகிய சாதோக்கை அபியத்தாரின் ஸ்தானத்திலும் வைத்தான்.

  மேற்கூறப்பட்ட வசனங்கள் பிரகாரம் நாம் பார்க்கும் போது, யார் யார் உள்ளத்தில் வஞ்சனை வைத்து நன்மை செய்வது போல் தீமை செய்வார்களோ, அதனைக் குறித்து கர்த்தர் திருஷ்டாந்தப்படுத்துகிறார்.  என்னவென்றால் யோவாப், அப்னேரையும் அமாசாவையும் தாவீது ராஜாவுக்கு உதவி செய்வது போல் உள்ளத்தில் பதிவிடை வைத்து அவர்களை வஞ்சனையாய் கொல்லுகிறான். ஆனால் தாவீதோ இதனைப் புரிந்துக் கொண்டு, சாலொமோனிடம் மரிக்கும் முன்பாக பழிவாங்க சொல்கிறதை பார்க்கிறோம்.  மேலும் ராஜாவாகிய சாலொமோனும், தன் தகப்பன் வார்த்தைக்கு கீழ்ப்படிந்து அப்படியே செய்கிறதை பார்க்கிறோம்.

பிரியமானவர்களே, யாருடைய உள்ளத்தில் என்ன இருக்கிறது என்பதனை கர்த்தர் நன்றாக காண்கிறார்.  மேலும் அவருடைய கண்களுக்கு முன்பாக ஒன்றும் மறைக்க முடியாது.  அல்லாமலும் நம் உள்ளத்தில் இருக்கிற வஞ்சகமும், கபடமும் எல்லாவற்றையும், கிறிஸ்துவின் இரத்தத்தால் நிர்மூலம் பண்ணும்படி கிறிஸ்து, நம் உள்ளத்தில் மரித்துதெழும்புகிறார்.  அவ்விதம் அவர் உள்ளத்தில் ஜெயித்த கிறிஸ்துவாக எழும்புவாரானால், நம்முடைய தீய நோக்கங்கள் எல்லாம் நம்மை விட்டு மாறும்.  சுத்தமான விசுவாச வாழ்க்கை வாழ முடியும். நல்மனசாட்சி உள்ளவர்களாக இருப்போம்.  மேலும் உள்ளத்திலிருந்து அன்பு பிறக்கும்.  அயோக்கியமான எந்த குணங்களும் நம்மில் தோன்றாது, இருக்காது. இவையெல்லாம் நம் வாழ்வில் வர வேண்டுமானால் நம்முடைய ஜலஸ்நானம் கர்த்தருக்கு கீழ்படிந்து சத்திய வசனங்களின் படி உண்டாயிருக்க வேண்டும்.  அதுவே நம்முடைய வாழ்வில் அழியாத ஜீவனாயிருக்கும்.  இப்படியாக ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.