தேவனுக்கே மகிமையுண்டாவதாக
யாக்கோபு 1 :8
இருமனமுள்ளவன் தன் வழிகளிலெல்லாம் நிலையற்றவனாயிருக்கிறான்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நம்முடைய உள்ளம் பெருமைப்படாதபடி ஜாக்கிரதையாக காத்துக்கொள்ள வேண்டும்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில் மணவாட்டி சபையாகிய நம்முடைய ஆத்துமா கிறிஸ்துவின் தாபரஸ்தலமாக விளங்கி, நம்மில் புது பாடல் வெளிப்படுவது திருஷ்டாந்தமாக கூறப்படுகிறது என்பதனை குறித்து தியானித்தோம். அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்
1இராஜாக்கள் 5:1-2
சாலொமோனை அவனுடைய பிதாவின் ஸ்தானத்தில் ராஜாவாக அபிஷேகம்பண்ணினார்கள் என்று தீருவின் ராஜாவாகிய ஈராம் கேள்விப்பட்டு, தன் ஊழியக்காரரை அவனிடத்தில் அனுப்பினான்; ஈராம் தாவீதுக்குச் சகலநாளும் சிநேகிதனாயிருந்தான்.
அப்பொழுது சாலொமோன் ஈராமினிடத்தில் ஆட்களை அனுப்பி:
மேற்கூறப்பட்ட வசனங்கள் பிரகாரம் சாலொமோனை அவனுடைய பிதாவின் ஸ்தானத்தில் ராஜாவாக அபிஷேகம் பண்ணினார்கள் என்று தீருவின் ராஜாவாகிய ஈராம் கேள்விப்பட்டு, தன் ஊழியக்காரரை அவனிடத்தில் அனுப்பினான். ஈராம் தாவீதுக்கு சகல நாளும் சிநேகிதனாயிருந்தான். அப்பொழுது சாலொமோன் ஈராமினிடத்தில் ஆட்களை அனுப்பி,சொன்னது
1இராஜாக்கள் 5:3-6
என் தகப்பனாகிய தாவீதின் சத்துருக்களைக் கர்த்தர் அவருடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்திவிடுமளவும், அவர்கள் தம்மைச் சுற்றிலும் செய்கிற யுத்தத்தினால், அவர் தம்முடைய தேவனாகிய கர்த்தருடைய நாமத்திற்கு ஆலயத்தைக் கட்ட, அவருக்குக் கூடாதிருந்தது என்று நீர் அறிந்திருக்கிறீர்.
ஆனாலும் இப்பொழுதோ என் தேவனாகிய கர்த்தர் எங்கும் எனக்கு இளைப்பாறுதலைத் தந்தார்; விரோதியும் இல்லை, இடையூறும் இல்லை.
ஆகையால்: நான் உன் ஸ்தானத்தில் உன் சிங்காசனத்தின்மேல் வைக்கும் உன் குமாரனே என் நாமத்திற்கு ஆலயத்தைக் கட்டுவான் என்று கர்த்தர் என் தகப்பனாகிய தாவீதினிடத்தில் சொன்னபடியே, என் தேவனாகிய கர்த்தரின் நாமத்திற்கு ஆலயத்தைக் கட்டவேண்டும் என்று இருக்கிறேன்.
ஆதலால் லீபனோனில் எனக்காக கேதுருமரங்களை வெட்டக் கட்டளையிடும்; சீதோனியரைப்போல மரவெட்டு வேலை அறிந்தவர்கள் எங்களுக்குள்ளே ஒருவருமில்லை என்பது உமக்குத் தெரியும்; அதற்காக என் வேலைக்காரர் உம்முடைய வேலைக்காரரோடே இருப்பார்கள்; நீர் சொல்வதின்படியெல்லாம் உம்முடைய வேலைக்காரரின் சம்பளத்தை உமக்குக் கொடுப்பேன் என்று சொல்லச் சொன்னான்.
மேற்கூறப்பட்ட வார்த்தைகளை சாலொமோன் சொன்னதை கேள்விப்பட்ட ஈராம் மிகவும் சந்தோஷப்பட்டு, அந்த ஏராளமான ஜனங்களை ஆளும்படி, தாவீதுக்கு ஒரு ஞானமுள்ள குமாரனை கொடுத்த கர்த்தர் இன்று ஸ்தோத்தரிக்கபடுவராக என்று சொல்லி, ஈராம் சாலொமோனிடத்தில் மனுஷரை அனுப்பி: நீர் எனக்கு சொல்லியனுப்பின காரியத்தை நான் கேட்டேன்; கேதுரு மரங்களாலும், தேவதாரி விருட்சங்களுக்காகவும், உம்முடைய விருப்பத்தின்படியெல்லாம் நான் செய்வேன். அல்லாமலும் அவன் சொன்னது
1இராஜாக்கள் 5:9-10
என் வேலைக்காரர் லீபனோனில் இருந்து அவைகளை இறக்கிக் கடலிலே கொண்டுவருவார்கள்; அங்கே நான் அவைகளைத் தெப்பங்களாகக் கட்டி, நீர் நியமிக்கும் இடத்துக்குக் கடல்வழியாய் அனுப்பி, அவைகளை அவிழ்த்து ஒப்பிப்பேன்; அங்கே நீர் அவைகளை ஒப்புக்கொண்டு என் ஜனங்களுக்கு ஆகாரங்கொடுத்து, என் விருப்பத்தின்படி செய்யவேண்டும் என்று சொல்லச்சொன்னான்.
அப்படியே ஈராம் சாலொமோனுக்கு வேண்டியமட்டும் கேதுருமரங்களையும் தேவதாரி விருட்சங்களையும் கொடுத்துக் கொண்டுவந்தான்.
மேற்கூறப்பட்டிருக்கிற வசனங்களில் சாலொமோன் ஈராமிடத்தில் கேட்ட அத்தனையும் தெப்பங்களாக கட்டி கடல்வழியாய் அனுப்பி விட்டு சாலொமோனிடம் ஒப்புவிக்கிறான். ஆதலால் சாலொமோன் ஈராமின் அரமனை போஜனத்திற்காக இருபதினாயிரம் கலம் கோதுமையையும், இடித்து பிழிந்த ஒலிவ மரங்களின் இருபது கல எண்ணெயையும் கொடுத்தான். இப்படி சாலொமோன் ஈராமுக்கு வருஷாந்தரம் கொடுத்தான். கர்த்தர் சாலொமோனுக்கு சொல்லியிருந்தபடியே ஞானத்தை தந்தருளினார். அல்லாமலும் ஈராமுக்கும் சாலொமோனுக்கும் சமாதானம் உண்டாயிருந்து இருவரும் உடன்படிக்கைப் பண்ணிக்கொண்டார்கள். பிரியமானவர்களே, இதனை கர்த்தர் திருஷ்டாந்தத்திற்காக விளக்குகிறார். அதன்னவெனில் நாம் கிறிஸ்துவினால் அபிஷேகம்பண்ணபட்டால், தாவீதின் சிங்காசனம் ஆகிவிடுகிறது நம்முடைய உள்ளம் இதனை பெற்றவுடன் அதிகமானவர்களின் இருதயம் பெருமையடைகிறது; இவைதான் தீரு ராஜா. ஆனால் அவ்விதம் பெருமையோடு தான் கர்த்தரின் ஆலயமாக வேண்டும் என்ற வாஞ்சை வருகிறது. இந்த வாஞ்சையினால் தீரு அதற்குரிய சகல ஆயத்தங்களையும் செய்துக் கொடுக்கிறான். இவ்விதம் பெருமையான உள்ளம் இருக்கிறவர்களை கர்த்தர் கடலாகிய துனமார்க்கர்கள் என்று கூறுகிறார். அப்படியாக நம் உள்ளத்தை தீரு ராஜா வஞ்சிக்கும் போது நமக்குரிய போஜனம் அவனை சேருகிறது. கர்த்தர் நமக்கு ஞானத்தை தந்தருளினாலும், நாம் தாழ்மை தரிக்காமல் உள்ளத்தில் பெருமையோடு இருக்கிறதினால் நாம் கிறிஸ்துவோடு உடன்படிக்கை பண்ணாமல் ஈராமோடு உடன்படிக்கை பண்ணுகிறோம். இப்படி நாம் தாழ்மைபடாமல், பெருமையோடு காணப்படுவோமானால், நாம் தேவனிடத்தில் சேர முடியாது; தேவனும் நம்மிடத்தில் சேர மாட்டார். இப்படிப்பட்டவர்கள் இருமனமுள்ளவர்கள் என்று சொல்லப்படுகிறது. அவர்களை குறித்து
யாக்கோபு 4:8
தேவனிடத்தில் சேருங்கள், அப்பொழுது அவர் உங்களிடத்தில் சேருவார். பாவிகளே, உங்கள் கைகளைச் சுத்திகரியுங்கள்; இருமனமுள்ளவர்களே, உங்கள் இருதயங்களைப் பரிசுத்தமாக்குங்கள்.
மேற்கூறிய வசனபிரகாரம் நம்முடைய உள்ளம் பெருமையடையாதபடி கிறிஸ்துவுக்குள் தாழ்மைப்படும்படி ஒப்புக்கொடுப்போம்.
ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.