தேவனுக்கே மகிமையுண்டாவதாக

1 பேதுரு 5:10,11

கிறிஸ்து இயேசுவுக்குள் நம்மைத் தமது நித்திய மகிமைக்கு அழைத்தவராயிருக்கிற சகல கிருபையும் பொருந்திய தேவன்தாமே கொஞ்சக்காலம் பாடநுபவிக்கிற உங்களைச் சீர்ப்படுத்தி, ஸ்திரப்படுத்தி, பலப்படுத்தி, நிலைநிறுத்துவாராக;

அவருக்கு மகிமையும் வல்லமையும் சதாகாலங்களிலும் உண்டாயிருப்பதாக. ஆமென்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக,ஆமென். அல்லேலூயா.

 வாக்குத்தத்தம் சுதந்தரிக்கும்படி- திருஷ்டாந்தம்:-

கர்த்தருக்குள் பிரியமானவர்களே,கழிந்த நாளில் நாம் தியானித்த வேத பகுதிகளில் கர்த்தர் நம்மை யாக்கோபினிடத்திலிருந்து பாரம்பரியத்தினின்று மீண்டெடுப்பதும், யாக்கோபினிடத்தில் சந்ததி விளங்குவதும்,அது கிறிஸ்து, அந்த சந்ததி எப்படி கர்த்தரிடத்திலிருந்து ஆசீர்வாதத்தை பெற்று கொள்ளும் என்பதும் கர்த்தரின் ஆசீர்வாதம் என்ன என்பதை குறித்தும் தேவன் நமக்கு, அந்த ஆசீர்வாதத்தை யோசேப்பை  வைத்து திருஷ்டாந்தபடுத்தியிருப்பதும் முழு குடும்பத்துக்கும் ஆத்தும ஆதாயம் செய்யும் படியாக கர்த்தர் யோசேப்பை முன் குறித்திருப்பதும்,அதற்கு ஜீவரட்சணைக்காக தேவன் திருஷ்டாந்தபடுத்தி யோசேப்பை  எகிப்துக்கு கொண்டு சென்றதும்,மேலும் எகிப்தில் தானியம் இல்லாத பஞ்சகாலம் நேரிட்டபோது எகிப்தில் தானியம் விற்று எடுத்ததும், மேலும் கானானுக்குள் கடும் பஞ்சம் வந்தபோது பத்து கோத்திரபிதாக்களையும், அவன் எகிப்தில் கண்டு தானியம் கொடுத்ததையும் மேலும் அவனுடைய நற்கிரியைகளை கழிந்த நாட்களில் தியானித்தோம்.

கர்த்தருக்குள் பிரியமானவர்களே,கழிந்த நாட்களில் யாக்கோபின் புத்திரரில் பத்து பேர் யோசேப்பினிடத்தில் வந்தபோது யோசேப்பு தன் சகோதரன் பென்யமீன் வராததை கண்டு, அவனை அவனிடத்தில் கொண்டு வரும்படியாக சிமியோனை அங்கு காவல்கிடங்கில் கட்டி வைத்து விட்டு மீதி ஒன்பது பேரையும் சாக்கு நிறையும்படி தானியத்தையும் அவரவர் கொண்டு வந்த பணத்தை அவரது சாக்கின் வாயிலே வைத்து வழிக்கு ஆகாரத்தையும்  கொடுத்து அனுப்புகிறதை தேவ வசனத்தில் வாசிக்க முடிகிறது. அவர்கள் வழியிலே போய் கொண்டிருக்கும் போது வழியில் தங்குகிற இடத்தில் கழுதைக்கு தீவனம் போட,தன் சாக்கை திறந்தபோது சாக்கின் வாயிலே தன் பணம் இருக்கிறதை கண்டு,

ஆதியாகமம் 42:28

தன் சகோதரரைப் பார்த்து, என் பணம் திரும்ப வந்திருக்கிறது; இதோ, அது என் சாக்கிலே இருக்கிறது என்றான். அப்பொழுது அவர்களுடைய இருதயம் சோர்ந்துபோய், அவர்கள் பயந்து, ஒருவரை ஒருவர் பார்த்து, தேவன் நமக்கு இப்படிச் செய்தது என்ன என்றார்கள்.

இதிலிருந்து நமக்கு தெரியவருகிறது என்னவென்றால் தேவனிடத்திலிருந்து நாம் தானியமாகிய தேவ வசனம் பெற்றுக் கொள்ள வேண்டும். மேலும் நாம் தேவசந்ததியில் போகும்போது வெறுங்கையாக போகாதபடி கர்த்தருக்கு உரியவைகளை கர்த்தருக்கென்று கையில் காணிக்கையாக கொண்டு போக வேண்டும்.அதை தான்,

உபாகமம் 16:17

ஆனாலும்,அவர்கள் கர்த்தருடைய சந்நிதியில் வெறுங்கையோடே வராமல், உன் தேவனாகிய கர்த்தர் உனக்கு அருளிய ஆசீர்வாதத்திற்குத்தக்கதாக, அவனவன் தன் தன் தகுதிக்கு ஏற்றபடி காணிக்கையைக் கொண்டுவரக்கடவன்.

மேலும்,யோசேப்பு தன் சகோதரர்கள் காணிக்கையாக கொண்டு சென்ற பணத்தை திருப்பி இரட்டிப்பான நன்மைகளை கொடுத்து அனுப்புகிறதை நாம் வாசிக்க முடிகிறது.அதுபோல் நம் தேவனும் நாம்  கொடுக்கிறதை திருப்பி இரட்டிப்பாக நமக்கு கொடுக்கிறவராக இருக்கிறார்.

எண்ணாகமம்: 15:19

தேசத்தின் ஆகாரத்தைப் புசிக்கும்போது, கர்த்தருக்கு ஏறெடுத்துப் படைக்கும் காணிக்கையைச் செலுத்தக்கடவீர்கள்.

அதனால் தான்,கர்த்தர் சொல்லுகிறார் ;

மல்கியா: 3:10

என் ஆலயத்தில் ஆகாரம் உண்டாயிருக்கும்படித் தசமபாகங்களையெல்லாம் பண்டசாலையிலே கொண்டுவாருங்கள்; அப்பொழுது நான் வானத்தின் பலகணிகளைத் திறந்து, இடங்கொள்ளாமற்போகுமட்டும் உங்கள்மேல் ஆசீர்வாதத்தை வருஷிக்கமாட்டேனோவென்று அதினால் என்னைச் சோதித்துப் பாருங்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

இவ்விதமாக யோசேப்பின் சகோதரர்கள் தங்கள் தகப்பனாகிய யாக்கோபிடத்தில் வந்து தங்களுக்கு சம்பவித்தவைகளையும், யோசேப்பு அவர்களிடத்தில் நீங்கள் தேசத்தை வேவு பார்க்க வந்தவர்கள் என்று சொன்னதையும்,அதற்கு யோசேப்பின் சகோதரர்கள் நாங்கள் வேவுகாரர் அல்ல நிஜஸ்தர் என்று சொன்னதையும்,மேலும் பன்னிரண்டு சகோதரர் ஒரு தகப்பன் புத்திரர் ஒருவன் காணாமற்போனான்.ஒருவன் இப்போது கானான் தேசத்தில் எங்கள் தகப்பனிடத்தில் இருக்கிறான் என்று சொன்னதையும் தகப்பனாகிய யாக்கோபினிடத்தில் சொன்னார்கள்.

ஆனால்,தேசத்தின் அதிபதி நீங்கள் நிஜஸ்தர் என்று நான் அறியும்படி உங்கள் சகோதரரில் ஒருவனை என்னிடத்தில் விட்டு பஞ்சத்தினால் வருந்துகிற உங்கள் குடும்பத்துக்கு தானியம் வாங்கிக்கொண்டு போய் கொடுத்து உங்கள் இளைய சகோதரனை என்னிடம் அழைத்து வாருங்கள் அப்பொழுது நீங்கள் வேவுகாரர் அல்ல நிஜஸ்தர் தான் என்று நான் அறிந்து உங்கள் சகோதரனை விடுதலை செய்வேன்.நீங்கள் இந்த தேசத்திலே வியாபாரமும் பண்ணலாம் என்றான்.

இவ்விதமாக சம்பவத்தை தகப்பனிடத்தில் சொல்லி சாக்குகளிலுள்ள தானியத்தை கொட்டுகையில் அவனவன் சாக்கிலே அவனவன் பணமுடிப்பு இருந்தது இதனை கண்டவுடனே அவர்களும் அவர்கள் தகப்பனும் பயந்தார்கள்.

தேவன் இவ்விதமான காரியங்களை நம் வாழ்க்கையிலும் செய்யும் போது நமக்கு தேவன் நன்மைக்காக செய்கிறார் என்று நாம் நினைக்க மாட்டோம்.

அப்படித்தான் யாக்கோபும் நினைத்தான்.ஆனால்,யாக்கோபு சொல்கிறான் என்னை பிள்ளையற்றவனாக்குகிறீர்கள் யோசேப்பும் இல்லை,சிமியோனும் இல்லை, பென்யமீனையும் கொண்டு போக பார்க்கிறீர்கள். இதெல்லாம் எனக்கு விரோதமாக இருக்கிறது என்று யாக்கோபு சொல்கிறான்.அவன் அப்படி சொல்ல காரணம் என்னவென்றால்,இவ்வித ஒரு சோதனை வரும்போது சோர்ந்துபோய் தேவன் கொடுத்த வாக்குதத்ததை மறந்துவிட்டான்.

இதே போல் தான் நம்மளில், அநேகம்பேர் தேவன் பரீட்சையில் கொண்டுபோய் நிறுத்தும் போது, சோர்ந்து போய் நம்முடைய வாயால் முறுமுறுக்கிறோம்.இவ்விதமாக இஸ்ரவேலின் சந்ததி விசுவாச யாத்திரையில் எகிப்திலிருந்து கானான் யாத்திரையில் அவர்கள் தேவனுக்கு விரோதமாக முறுமுறுத்தார்கள். தேவனை பரீட்சை பார்த்தார்கள், தேவனை பத்து முறை பரீட்சை பார்த்தவர்கள் செத்துப் போனார்கள் என்று பார்க்கிறோம்.இந்த இஸ்ரவேலர் தான் யாக்கோபின் புத்திரராகிய பன்னிரண்டு கோத்திர பிதாக்களின் சந்ததிகள்.

யாக்கோபு தேவன் கொடுத்த வாக்குத்தத்தத்தை நினையாமல் இருந்ததால் இவ்விதமாக பேசுகிறான்.

ஆதியாகமம் 35:9-11

யாக்கோபு பதான் அராமிலிருந்து வந்தபின்பு தேவன் அவனுக்கு மறுபடியும் தரிசனமாகி, அவனை ஆசீர்வதித்து;

இப்பொழுது உன் பேர் யாக்கோபு, இனி உன் பேர் யாக்கோபு என்னப்படாமல், இஸ்ரவேல் என்று உனக்குப் பேர் வழங்கும் என்று சொல்லி, அவனுக்கு இஸ்ரவேல் என்று பேரிட்டார்.

பின்னும் தேவன் அவனை நோக்கி: நான் சர்வவல்லமையுள்ள தேவன், நீ பலுகிப் பெருகுவாயாக; ஒரு ஜாதியும் பற்பல ஜாதிகளின் கூட்டங்களும் உன்னிடத்திலிருந்து உண்டாகும்; ராஜாக்களும் உன் சந்ததியில் பிறப்பார்கள்.

இவ்விதமாக தேவன் யாக்கோபுக்கு வாக்குத்தத்தம் கொடுத்திருந்தார்.ஆனால் அதை யாக்கோபு நினையாமல் தன் இளையமகனை, பென்யமீனை எகிப்துக்கு அனுப்ப முன்வராமல் தன் வாழ்க்கையில் நடந்த காரியங்களை தீமை என்று நினைத்து பேசுகிறதை நாம் பார்க்கிறோம்.

ஆனால்,ரூபன் தன் தகப்பனிடத்தில் இளைய சகோதரனை தான் திருப்பி உம்மிடத்தில் கொண்டுவருவேன் இல்லையென்றால் என் இரண்டு குமாரரையும் கொன்று போடும் என்று சொல்லுகிறான்.

ஆனால்,யாக்கோபு தேவனுடைய வார்த்தையை உணராமல் இருந்தபடியால்,

ஆதியாகமம் 42:38

அதற்கு அவன்: என் மகன் உங்களோடேகூடப் போவதில்லை; அவன் தமையன் இறந்துபோனான், இவன் ஒருவன் மீதியாயிருக்கிறான்; நீங்கள் போகும் வழியில் இவனுக்கு மோசம் நேரிட்டால், நீங்கள் என் நரைமயிரைச் சஞ்சலத்தோடே பாதாளத்தில் இறங்கப் பண்ணுவீர்கள் என்றான்.

ஆனால்,

உபாகமம் 33:12

பென்யமீனைக்குறித்து: கர்த்தருக்குப் பிரியமானவன், அவரோடே சுகமாய்த் தங்கியிருப்பான்; அவனை எந்நாளும் அவர் காப்பாற்றி, அவன் எல்லைக்குள்ளே வாசமாயிருப்பார் என்றான்.

இவ்விதமான வாக்குத்தத்தம் பென்யமீனை குறித்து தேவன் மோசே மூலம் கொடுத்தார். அதை தான் யாக்கோபிடத்தில் ஒரு ஜாதியும் பற்பல ஜாதிகளின் கூட்டங்களும் உன்னிடத்திலிருந்து உண்டாகும் ராஜாக்களும் உன் சந்ததியில் பிறப்பார்கள்.

இதென்னவெனில் யாக்கோபில் பரிசுத்த ஜாதி எழும்பும்,மேலும் பன்னிரண்டு கோத்திர பிதாக்களிலிருந்து பற்பல ஜாதிகளின் கூட்டங்கள் உண்டாகும்.மேலும் அவர்களின் ராஜாக்கள் உன் சந்ததியில் பிறப்பார்கள் என்று தேவன் சொன்னது நம்முடைய தேவனாகிய கர்த்தர் ராஜாக்களின் அபிஷேகத்தை இவர்களுக்குள் வைத்து ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்குகிறார்.

இவ்விதமான ஆசீர்வாதத்தை நாம் ஒவ்வொருவரும் பெற்றுக் கொள்ளும்படியாக நம்மை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கும் படியாக நமக்கு தேவன் தந்த வாக்குத்தத்தத்தை நினையாமல் அநேகர் வழியில் அழிந்துவிடுகிறார்கள்.இந்த ஆசீர்வாதத்தை சுதந்தரிக்கும் படியாக நம்முடைய தேவனாகிய கர்த்தர் நம்மை கிறிஸ்து மூலம் அழைக்கிறார். அழைப்பையும் தெரிந்தெடுத்தலையும் அறிந்து நாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். நாம் ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பாராக. 

-தொடர்ச்சி நாளை.