தேவனுக்கே மகிமையுண்டாவதாக
1தீமோத்தேயு1:18,19
குமாரனாகிய தீமோத்தேயுவே, உன்னைக்குறித்து முன் உண்டான தீர்க்கதரிசனங்களின்படியே, நீ அவைகளை முன்னிட்டு நல்ல போராட்டம்பண்ணும்படி, இந்தக் கட்டளையை உனக்கு ஒப்புவிக்கிறேன்; நீ விசுவாசமும் நல்மனச்சாட்சியும் உடையவனாயிரு.
இந்த நல்மனச்சாட்சியைச் சிலர் தள்ளிவிட்டு, விசுவாசமாகிய கப்பலைச் சேதப்படுத்தினார்கள்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நாம் கிறிஸ்துவோடு விசுவாசமும், பரிசுத்தவான்களின் ஐக்கியமும் காணப்படவேண்டும்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில் மணவாட்டி சபையாகிய நாம் நம்முடைய சரீரமாகிய கிறிஸ்துவின் ஆலயத்தில் அந்நிய அலங்காரங்களால் அலங்கரிக்க க் கூடாது என்பதனை குறித்து தியானித்தோம்.
அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்
1இராஜாக்கள் 9:14-16
ஈராம் ராஜாவுக்கு நூற்றிருபது தாலந்து பொன் அனுப்பியிருந்தான்.
பிடித்த அமஞ்சி ஆட்களைக்கொண்டு சாலொமோன் ராஜா தான் கர்த்தருடைய ஆலயத்தையும், தன் அரமனையையும், மில்லோவையும், எருசலேமின் மதிலையும், ஆத்சோரையும், மெகிதோவையும், கேசேரையும் கட்டினான்.
கேசேரை ஏன் கட்டினான் என்றால், எகிப்தின் ராஜாவாகிய பார்வோன் புறப்பட்டுவந்து, அந்தக் கேசேர்பட்டணத்தைப் பிடித்து, அதை அக்கினியால் சுட்டெரித்து, அதிலே குடியிருந்த கானானியரைக் கொன்றுபோட்டு, அதைச் சாலொமோனின் மனைவியாகிய தன் குமாரத்திக்குச் சீதனமாகக் கொடுத்திருந்தான்.
மேற்கூறப்பட்டிருக்கிற வசனங்களின் படி ஈராம் ராஜாவாகிய சாலொமோனுக்கு நூற்றிருபது தாலந்து பொன்னை அனுப்பியிருந்தான். மேலும் பிடித்த அமஞ்சி ஆட்களை வைத்து ராஜா தான் கர்த்தருடைய ஆலயத்தையும், தன் அரண்மனையையும், மில்லோவையும், எருசலேமின் மதிலையும், ஆத்சோரையும், கோசேரையும் கட்டினான். கோசேரை கட்டி காரணம் என்னவென்றால் எகிப்தின் ராஜாவாகிய பார்வோன் புறப்பட்டு வந்து, அந்த கேசேர் பட்டணத்தை பிடித்து, அக்கினியால் சுட்டெரித்து, அதிலே குடியிருந்த கானானியரைக் கொன்று போட்டு, அதை சாலொமோனின் மனைவியாகிய தன் குமாரத்திக்கு சீதனமாகக் கொடுத்திருந்தான். அல்லாமலும்
1இராஜாக்கள் 9:17-19
சாலொமோன் அந்தக் கேசேர்பட்டணத்தையும், கீழ்ப்பெத்தொரோனையும்,
பாலாத்தையும், வனாந்தரவெளியிலுள்ள தத்மோரையும்,
தனக்கு இருக்கிற ரஸ்துக்களை வைக்கும் சகல பட்டணங்களையும், இரதங்கள் இருக்கும் பட்டணங்களையும், குதிரை வீரர் இருக்கும் பட்டணங்களையும், எருசலேமிலும் லீபனோனிலும், தான் அரசாண்ட தேசமெங்கும் தனக்கு இஷ்டமானதையெல்லாம் கட்டினான்.
மேற்கூறப்பட்ட பட்டணங்களையெல்லாம் ராஜாவாகிய சாலொமோன் கட்டினான். பின்பு
1இராஜாக்கள் 9:20-21
இஸ்ரவேல் புத்திரர் சங்காரம் பண்ணக்கூடாமல் மீந்திருந்த இஸ்ரவேல் புத்திரரின் ஜாதியல்லாத எமோரியர், ஏத்தியர், பெரிசியர், ஏவியர், எபூசியருமான சகல ஜனத்திலும்,
அவர்களுக்குப் பிறகு தேசத்தில் மீந்திருந்த சகல ஜனங்களுடைய பிள்ளைகளையும், சாலொமோன் இந்நாள்வரைக்கும் நடக்கிறதுபோல, அமஞ்சிவேலை செய்ய அடிமைப்படுத்திக்கொண்டான்.
இந்த வசனங்களில் எழுதப்பட்டிருகிறவர்களை அமஞ்சி வேலை செய்ய அடிமைப்படுத்தினான். ஆனால் இஸ்ரவேல் புத்திரரில் யாரையும் அடிமைப்படுத்தவில்லை. அவர்கள் யுத்த மனுஷரும், அவனுக்கு பணிவிடைகாரரும், பிரபுக்களும், அவனுக்கு சேர்வைக்காரரும், இரத வீரரும், குதிரை வீரருமாயிருந்தார்கள். ஐந்நூற்றைம்பதுபேர் சாலொமோனின் வேலையை விசாரித்து, வேலையாட்களை கண்காணிக்கிறதற்குத் தலைமையான விசாரிப்புக்காரராயிருந்தார்கள். பார்வோனின் குமாரத்தி, தாவீதின் நகரத்திலிருந்து சாலொமோன் தனக்கு கட்டின தன் மாளிகையிலே குடி வந்தாள்; அப்போது மில்லோவை கட்டினான். சாலொமோன் ராஜா, கர்த்தருக்கென்று கட்டின ஆலயத்திலே பலிபீடத்தின் மேல் வருஷத்திற்கு மூன்றுமுறை சர்வாங்க தகனபலிகளையும், சமாதான பலிகளையும் இட்டு, கர்த்தரின் சந்நதியில் இருக்கிற பலிபீடத்தின் மேல் தூபம் காட்டினான். ராஜாவாகிய சாலொமோன் ஏதோம் தேசத்தில் சிவந்த சமுத்திர கரையிலே ஏலோத்துக்கு சமீபத்திலுள்ள எசியோன்கேபேரிலே கப்பல்களை செய்வித்தான். அந்த கப்பல்களில் ஈராம் சமுத்திர யாத்திரையில் பழகின கப்பலாட்களாகிய தன் வேலைக்காரரைச் வேலைக்காரரோடே அனுப்பினான். அவர்கள் ஒப்பீருக்கு போய், அவ்விடத்திலிருந்து நானூற்று இருபது தாலந்து பொன்னை ராஜாவாகிய சாலொமோனிடத்தில் கொண்டு வந்தார்கள்.
பிரியமானவர்களே, முந்தின வசனங்களை நாம் வாசிக்கும்போது, கர்த்தர் சாலொமோனுக்கு ஞானத்தைக் கொடுத்திருந்தும், அவன் தன் மனம் போன போக்கில் நடந்துக்கொள்வதை பார்க்க முடிகிறது. மேலும் கர்த்தர் அவனுக்கு ஆலோசனை கொடுத்தாலும், அவன் மனுஷரிடத்தில் போகிறதை பார்க்க முடிகிறது. அல்லாமலும் தேவ நாமத்திற்கு மாறான பொல்லாப்புகளை செய்த பார்வோனின் குமாரத்தியை மனைவியாக கொள்ளுகிறதை வாசிக்க முடிகிறது. மேலும் அவன் ஏதோம் தேசத்தில் எசியோன்கேபேரிலே கப்பல்களை ஈராமோடு சேர்ந்து கப்பல்களை செய்து ஈராமுடைய வேலைக்காரர்கள் கொண்டு வந்த பொன்னையும் வாங்கிக்கொள்கிறான். கப்பல்கள் நம்முடைய விசுவாச வாழ்க்கைக்கு திருஷ்டாந்தம்; என்னவென்றால் சாலொமோன் புறஜாதியாகிய ஈராமோடு சேர்ந்து ஏதோமில் வைத்து கப்பல்கள் செய்கிறான். ஆனால் நம்முடைய விசுவாசம் கிறிஸ்துவோடு , அதுமட்டுமல்லாமல் பரிசுத்தவான்களிடத்தில் ஐக்கியமாக இருந்து, கர்த்தருக்கு நாம் ஆராதனை செய்ய வேண்டும். இவ்விதமாக கிறிஸ்துவோடு உள்ள விசுவாமும், பரிசுத்தவான்களின் ஐக்கியத்தோடும் இருந்து கர்த்தரை ஆராதிக்கும்படியாக ஒப்புக்கொடுப்போம்.
ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.