தேவன் நன்மையை செய்கிறவர்:-

Sis. பி. கிறிஸ்டோபர் வாசினி
Jun 19, 2020

தேவனுக்கே மகிமையுண்டாவதாக

நீதிமொழிகள் 16:20

விவேகத்துடன் காரியத்தை நடப்பிக்கிறவன் நன்மைபெறுவான்; கர்த்தரை நம்புகிறவன் பாக்கியவான். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக,ஆமென்.

அல்லேலூயா.

தேவன் நன்மையை செய்கிறவர்:-

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,முந்தின நாளில் நாம் தியானித்த வேத பகுதியில் யோசேப்பு, பென்யமீனாகிய தன் சகோதரனை சகோதரர்களிடம் அழைத்து வர கானானுக்கு அனுப்பினான்.ஆனால் யாக்கோபு பென்யமீனை அனுப்பி விட மறுத்தான். ஆனால்,அது தேவசித்தம் என்று யாக்கோபு நினையாதிருந்தான். அதுபோல் அநேக காரியங்களில் நாம் தேவசித்தம் தெரியாமல் இருக்கிறோம். தேவன் நம்மை பரிசுத்த ஜாதியாகவும்,ராஜாக்களும், ஆசாரியராக்கும் படியாக தன் ஒரே குமாரனாகிய கிறிஸ்துவாகிய சந்ததியின் மூலம் நித்திய மகிமைக்கு‌ என்று அழைக்கும்படியாக யாக்கோபை தேவன் நமக்கு திருஷ்டாந்தபடுத்தி யாக்கோபின் புத்திரனாகிய யோசேப்பை தேவன் எகிப்திற்கு கொண்டு சென்று அங்கு யோசேப்பு மூலம் தேவன் நமக்கு தெளிவுப்படுத்தி காட்டுகிறதை நாம் வாசிக்க முடிகிறது.

ஆனால்,யாக்கோபு பென்யமீனை எகிப்திற்கு அனுப்ப மறுத்த பிறகு தேசத்திலே பஞ்சம் கொடியாதயிருந்தது.

எகிப்திலிருந்து கொண்டு வந்த தானியம் செலவழிந்த பின்பு யாக்கோபு மீண்டும் போய் தானியம் வாங்கிக் கொண்டு வாருங்கள் என்று சொன்னபோது,யூதா உங்கள் சகோதரன் உங்களோடே வராவிட்டால் நீங்கள் என் முகத்தை காண மாட்டீர்கள் என்று அந்த மனிதன் எங்களுக்கு சத்தியமாய் சொன்னான் என்று சொல்லி, எங்கள் சகோதரனை எங்களோடே அனுப்பினால் உமக்கு தானியம் வாங்கிக்கொண்டு வருவோம்.இல்லையென்றால் போகமாட்டோம் என்று யூதா, தகப்பனாகிய யாக்கோபிடம் சொல்கிறான்.

ஆனால்,யாக்கோபு தன்னுடைய அநேக வருத்தமான காரியங்களை எடுத்துச் சொல்கிறான் அதற்கு அவர்கள்,

ஆதியாகமம் 43:10

நாங்கள் தாமதியாதிருந்தோமானால், இதற்குள்ளே இரண்டாந்தரம்போய்த் திரும்பிவந்திருப்போமே என்றான்.

ஆதியாகமம் 43:11

அதற்கு அவர்கள் தகப்பனாகிய இஸ்ரவேல்: அப்படியானால், ஒன்று செய்யுங்கள்; இந்தத் தேசத்தின் உச்சிதமான வஸ்துக்களில் கொஞ்சம் பிசின் தைலமும், கொஞ்சம் தேனும், கந்தவர்க்கங்களும், வெள்ளைப்போளமும், தெரபிந்து கொட்டைகளும், வாதுமைக்கொட்டைகளும் உங்கள் சாக்குகளில் போட்டு, அந்த மனிதனுக்குக் காணிக்கையாகக் கொண்டுபோய்க் கொடுங்கள்.

பணத்தை இரட்டிப்பாய் உங்கள் கைகளில் கொண்டு போங்கள் சாக்குகளின் வாயிலே திரும்பக் கொண்டு வந்த பணத்தையும் கொண்டு போங்கள்;அது        கைபிசகாய் வந்திருக்கும்.

உங்கள் சகோதரனையும் கூட்டிக்கொண்டு,அந்த மனிதனிடத்துக்கு மறுபடியும் போங்கள்.

அந்த மனிதன் அங்கிருக்கிற உங்கள் மற்ற சகோதரனையும் பென்யமீனையும் உங்களுடனே அனுப்பி விடும்படிக்கு, சர்வவல்லமையுள்ள தேவன் அவன் சமூகத்தில் உங்களுக்கு இரக்கங்கிடைக்கப் பண்ணுவாராக.நானோ பிள்ளையற்று போனவனை போல் இருப்பேன் என்றான்.

அப்பொழுது அவர்கள் காணிக்கையையும் தங்கள் கைகளில் இரட்டிப்பான பணத்தையும் எடுத்துக்கொண்டு, பிரயாணப்பட்டு எகிப்துக்குப் போய் யோசேப்பின் சமுகத்தில் போய் நின்றார்கள்.

இதனை பார்க்கும்போது யாக்கோபு தன் வாழ்க்கையில் எவ்வளவோ தேவன் அவனுக்கு நன்மை செய்தாலும் இந்த நெருக்கமான நேரத்தில் தேவன் செய்த நன்மையை மறந்து விடுகிறான். இதேபோல்தான் நாமும் தேவன் நமக்கு எவ்வளவோ நன்மை செய்தும் மறந்தவர்களாக, நன்றியில்லாதவர்களாக  இருக்கிறோம்.ஒருபோதும் நாம் அவ்விதம் கர்த்தர் செய்த நன்மையை மறந்து விடக்கூடாது.அனுதினம் நாம் நினைத்து தேவனை துதிக்க வேண்டும்.அவ்விதமாக ஒரு மீட்பை நாம் இந்நாளில் தேவனிடத்திலிருந்து பெற்றுக் கொள்ள வேண்டும்.

ஏனென்றால் கர்த்தர் அனுதினம் நம்மை சோதித்து பார்க்கிறார்.ஏனென்றால்,

ரோமர் 8:28

அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்.

கர்த்தர் நமக்கு சில காரியங்கள் செய்யும்போது ஏதோ தீமையென்று நினைக்கிறோம். ஆனால் அப்படியல்ல, அதன் பின்னால் ஒரு பெரிய நன்மை உண்டாயிருக்கும் இதுதான் யோசேப்பு தன்னை முதலில் சகோதரகளிடத்தில் வெளிப்படுத்தாமல் சில காரியங்களை செய்கிறான். பின்பு தான் அவனை சகோதரர்களுக்கு வெளிப்படுத்துகிறார். எப்படியெனில் தாங்கள் செய்த ஒவ்வொரு துரோகத்தையும் நினைத்து பார்த்து

வேதனைப்படுகிறார்கள், அதனை யோசேப்பு துபாசியைக்கொண்டு பேசினதினால் அறிகிறான். மேலும் அவன் மூன்று  நாள் காவலில் வைக்கிறான், சிமியோனை பிடித்து கட்டி காவலில் வைக்கிறான். இதனை எல்லாவற்றையும் அவன் சகோதர்களுக்கு செய்யும் போது எதையும் தவறாக முணுமுணுத்து யோசேப்புக்கு விரோதமாக பேசவில்லை. இது நம் வாழ்க்கை தேவன் நாம் நடந்து கொள்ள வேண்டிய வழிமுறைகள் என்று தேவன் நமக்கு திரிஷ்டாந்த படுத்துகிறார். 

ஆதியாகமம் 43:16, 17

பென்யமீன் அவர்களோடேகூட வந்திருக்கிறதை யோசேப்பு கண்டு, தன் வீட்டு விசாரணைக்காரனை நோக்கி: நீ இந்த மனிதரை வீட்டுக்கு அழைத்துப்போய், சாப்பாட்டுக்கு வேண்டியவைகளை அடித்து, ஆயத்தம்பண்ணு, மத்தியானத்திலே இந்த மனிதர் என்னோடே சாப்பிடுவார்கள் என்றான். 

அவன் தனக்கு யோசேப்பு சொன்னபடியே செய்து, அந்த மனிதரை யோசேப்பின் வீட்டுக்கு அழைத்துக்கொண்டு போனான். 

யாக்கோபு, எகிப்துக்கு தன்னுடைய பிள்ளைகளை அனுப்பும் போது அநேக பொருட்களோடு அதிபதியினிடத்தில் இரக்கம் கிடைக்கபண்ணும்படியாக அனுப்பி விடுகிறதை பார்க்கிறோம். அந்த பொருட்கள் எல்லாம் நம் தேவனை மகிமைபடுத்தும் படியாக, தேவனிடத்தில் இரக்கம் பெற்று கொள்ளும்படியாக தேவன் நமக்கு திருஷ்டாந்தபடுத்துகிறார். 

ரோமர் 9:15, 16

அவர் மோசேயை நோக்கி: எவன்மேல் இரக்கமாயிருக்கச் சித்தமாயிருப்பேனோ அவன்மேல் இரக்கமாயிருப்பேன்,எவன்மேல் உருக்கமாயிருக்கச் சித்தமாயிருப்பேனோ அவன்மேல் உருக்கமாயிருப்பேன் என்றார். 

ஆகையால் விரும்புகிறவனாலும்அல்ல, ஓடுகிறவனாலும்அல்ல, இரங்குகிறதேவனாலேயாம். 

 ஆதலால் பிரியமானவர்களே,  தேவன் நம்முடைய வாழ்க்கையில் தேவனிடத்திலிருந்து இரக்கம் கிடைக்க வேண்டுமானால் எப்படி தேவனுடைய நாமத்தை நாம் ஒருமித்து குடும்பமாக சபையாக மகிமைப்படுத்த வேண்டும் நம்முடைய வாழ்க்கையில் நாம் தேவனை அறிந்தவுடன் நமக்கு சில நெருக்கங்கள் காணப்பட்டாலும், அது தேவன் அறியாதது அல்ல, துவக்கம்  அற்பமாயிருந்தாலும்  இருந்தாலும் அது முடிவில் சம்பூரணமாய்  விளங்கும் என்பதில் மாற்றமில்லை. அற்பமான துவக்கத்தை நாம் யாரும் அசட்டை பண்ணக்கூடாது என்பதை இதன் மூலம் நமக்கு தேவன் திருஷ்டாந்தபடுத்துகிறார். ஏனெனில், 

யோபு 8:7

 உம்முடைய துவக்கம் அற்பமாயிருந்தாலும், உம்முடைய முடிவு சம்பூரனமாயிருக்கும். என்று சொல்லப்படுகிறது அதனால் தேவன் நம்மை கடைசிவரையிலும் நித்திய நாளாக நிலைநிறுத்துவார் என்பதில் மாற்றமில்லை. நித்திய ஆசீர்வாதங்குள்ளவராக்கி நித்திய ராஜ்யத்தின்  மேன்மையை  காணச் செய்வார். ஜெபிப்போம்.         

கர்த்தர் யாவரையும்  ஆசீர்வதிப்பார்.                   

-தொடர்ச்சி நாளை.