தேவனுக்கே மகிமையுண்டாவதாக
சங்கீதம் 133:1-3
இதோ, சகோதரர் ஒருமித்து வாசம்பண்ணுகிறது எத்தனை நன்மையும் எத்தனை இன்பமுமானது?
அது ஆரோனுடைய சிரசின்மேல் ஊற்றப்பட்டு, அவனுடைய தாடியிலே வடிகிறதும், அவனுடைய அங்கிகளின்மேல் இறங்குகிறதுமான நல்ல தைலத்துக்கும்,
எர்மோன்மேலும் சீயோன் பர்வதங்கள்மேலும் இறங்கும் பனிக்கும் ஒப்பாயிருக்கிறது; அங்கே கர்த்தர் என்றென்றைக்கும் ஆசீர்வாதத்தையும் ஜீவனையும் கட்டளையிடுகிறார்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக,ஆமென்.
அல்லேலூயா.
ஆத்தும இரட்சிப்பு- சகோதரர் ஒருமைபடுதல்:-திருஷ்டாந்தம்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,கழிந்த நாளில் தேவன் நமக்கு தருகிற நன்மையே குறித்து தியானித்தோம்.தேவ வசனமாகிய மன்னாவை தேவன் நமக்கு நல்கிறவராக காணப்படுகிறார்.நாம் தேவனுக்கு கொடுக்க வேண்டிய தூபவர்க்கமாகிய துதி,கனம்,மகிமை, ஸ்தோத்திரம் எல்லாம் எப்போதும் நம் உள்ளத்தின் ஆழத்திலிருந்து எழும்பிக் கொண்டிருக்க வேண்டும். அப்படியிருந்தால் கர்த்தர் பார்வோனின் கடின இருதயத்தை உடைத்து, கிறிஸ்து நம்மளில் பலமும், அன்பும்,தெளிந்த புத்தியும் உடைய ஆவியுடையவராக நம்மளில் செயல்பட்டுக் கொண்டிருப்பார்.அப்படியிருப்போமானால் நாம் தேசத்தின் நன்மையை புசிக்க முடியும்.இவ்விதமாக நம் உள்ளம் தேவ அன்பால் நிறையபட்டிருக்க வேண்டும். இதற்கு தான் யோசேப்பை தேவன் பார்வோனின் அரண்மனையில் எகிப்து தேசத்தில் திருஷ்டாந்தப்படுத்துகிறார்.
பென்யமீன்,சகோதரர்கள் கூட வந்திருக்கிறதை யோசேப்பு கண்டு விசாரணைகாரனிடம் யோசேப்பின் வீட்டுக்கு அழைத்து கொண்டு போகும்படி சொன்னதை பார்க்கிறோம். அவ்விதம் அவன் அழைத்துக்கொண்டு போகும்போது யோசேப்பின் சகோதரர்கள் சாக்குகளில் இருந்த பணமுடிப்பினிமித்தம் நம்மேல் குற்றம் சுமத்தி,நம்மை பிடித்து சிறைகளாக்கி, நம்முடைய கழுதைகளை எடுத்துக்கொள்ளும்படி நம்மை கொண்டு போகிறார்கள் என்று சொல்லி வீட்டு விசாரணைகாரனிடம் நாங்கள் தானியம் கொள்ளும்படி வந்து போனோமே; ஆனால் நாங்கள் அங்கு போய் சேர்ந்து சாக்குகளை திறந்து தீவனம் எடுக்கும் போது அவரவர் பணமுடிப்பு அவரவர் சாக்குகளில் இருந்தது.இதனை எங்கள் சாக்குகளில் போட்டது யார் என்று அறியோம்.
ஆனால்,இப்போது அதனை திரும்ப கொண்டு வந்திருக்கிறோம்.மேலும், தானியம் கொள்ளும்படி வேறே பணமும் கொண்டு வந்து இருக்கிறோம்.என்று அவர்கள் விசாரணைகாரனிடம் சொல்ல,
ஆதியாகமம் 43:23
அதற்கு அவன்: உங்களுக்குச் சமாதானம்; பயப்படவேண்டாம்; உங்கள் தேவனும் உங்கள் தகப்பனுடைய தேவனுமாயிருக்கிறவர் உங்கள் சாக்குகளில் அதை உங்களுக்குப் புதையலாகக் கட்டளையிட்டார்; நீங்கள் கொடுத்த பணம் என்னிடத்தில் வந்து சேர்ந்தது என்று சொல்லி, சிமியோனை வெளியே அழைத்து வந்து, அவர்களிடத்தில் விட்டான்.
இதிலிருந்து நமக்கு தெரியவருவது என்னவென்றால்,கர்த்தர் நமக்கு தருகிற ஆசிர்வாதம் திரும்ப தேவனிடத்தில் நாம் கொண்டுவரவும் ஆசீர்வாதத்தை பெறவும், தேவனிடத்தில் நாம் வரும்போதெல்லாம் தேவனுக்கென்று காணிக்கைகளை கொண்டு வர வேண்டும் என்பதையும் தேவன் நமக்கு திருஷ்டாந்தப்படுத்துகிறார்.
விசாரணைக்காரன் யோசேப்பின் சகோதரர்களை பார்த்து சொல்கிறான், உங்களுக்கு சமாதானம் என்று, காரணமென்னவென்றால் அவர்கள் சாக்குகளில் தேவன் கொடுத்த பணம் திரும்ப தேவனிடத்தில் வந்ததை அறிந்தவுடன் அப்படி சொல்லிவிட்டு உங்கள் தேவனும்,உங்கள் தகப்பனுடைய தேவனுமாயிருக்கிறவர் சாக்குகளில் அதை புதையலாக கட்டளையிட்டார்.இது தேவன் கொடுத்த ஆசீர்வாதம், யோசேப்பு கொடுத்தது அல்ல என்று தெரிகிறது.
இவ்விதமாக தேவன் நாம் நினைக்காததை செய்கிறவர்.
1 கொரிந்தியர் 2:9, 10
எழுதியிருக்கிறபடி: தேவன் தம்மில் அன்புகூருகிறவர்களுக்கு ஆயத்தம்பண்ணினவைகளைக் கண் காணவுமில்லை, காது கேட்கவுமில்லை, அவைகள் மனுஷருடைய இருதயத்தில் தோன்றவுமில்லை;
நமக்கோ தேவன் அவைகளைத் தமது ஆவியினாலே வெளிப்படுத்தினார்; அந்த ஆவியானவர் எல்லாவற்றையும், தேவனுடைய ஆழங்களையும், ஆராய்ந்திருக்கிறார்.
இதைத்தான் தேவன்,
ஏசாயா 55:8,9
என் நினைவுகள் உங்கள் நினைவுகள் அல்ல; உங்கள் வழிகள் என் வழிகளும் அல்லவென்று கர்த்தர் சொல்லுகிறார்.
பூமியைப்பார்க்கிலும் வானங்கள் எப்படி உயர்ந்திருக்கிறதோ, அப்படியே உங்கள் வழிகளைப்பார்க்கிலும் என் வழிகளும், உங்கள் நினைவுகளைப் பார்க்கிலும் என் நினைவுகளும் உயர்ந்திருக்கிறது.
யோசேப்பின் சகோதரர்கள் இவ்விதமான ஒரு காரியம் தங்கள் வாழ்க்கையில் நடக்கும் என்று நினைத்ததில்லை, அப்படிப்பட்ட பெரியக் காரியங்கள் கர்த்தர் செய்தாரென்றால், இன்று நாம் தேவனிடத்தில் விசுவாசம் வைத்து, தேவன் சொல்கிறது போல் நாம் செய்வோமானால் நாமும் நினைக்காத அளவில், அளவில்லாத சந்தோஷத்தால் நம்மை நிறைப்பவர் என்று நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
ஆனால் அவர்களை யோசேப்பின் வீட்டிக்கு அழைத்தது போஜனம் கொடுப்பதற்காக என்று தெரிய வருகிறது. அதனால், விசாரணைகாரன் அவர்களை வீட்டுக்குள்ளே கூட்டிக்கொண்டுபோய் கால்களை கழுவும்படி தண்ணீர் கொடுத்து அவர்களுடைய கழுதைகளுக்கு தீவனம் போட்டான்.
ஆதியாகமம் 43:25
தாங்கள் அங்கே போஜனம் செய்யப்போகிறதை அவர்கள் கேள்விப்பட்டபடியால், மத்தியானத்தில் யோசேப்பு வருமளவும் காணிக்கையை ஆயத்தமாய் வைத்துக் காத்துக்கொண்டிருந்தார்கள்.
பின்பு யோசேப்பு வீட்டுக்கு வந்தவுடன் அவரவர் கையில் இருந்த காணிக்கையை அவனுடைய வீட்டுக்குள் அவனிடத்தில் கொண்டு வைத்து அவனை வணங்கினார்கள். பின்பு அவன் அவர்களிடம் நீங்கள் சொன்ன முதிர்வயதான உங்கள் தகப்பன் சுகமாயிருக்கிறாரா என்று அவன் விசாரிக்க, யோசேப்பின் சகோதரர்கள், எங்கள் தகப்பனும் உமது அடியானாகிய அவர் சுகமாயிருக்கிறார் என்று சொல்லி அவனை வணங்கினார்கள்.
பின்பு யோசேப்பு தன் கண்களை ஏறெடுத்து தன் சகோதரனாகிய பென்யமீனை கண்டு, நீங்கள் சொன்ன இளைய மகன் இவன் தானா என்று கேட்டு, மகனே;தேவன் உனக்கு கிருபை செய்யக்கடவர் என்றான்.
யோசேப்பின் உள்ளம் தன் சகோதரனுக்காக பொங்கினபடியால், சகோதரனை கண்டவுடனே சந்தோஷத்துடன் அழுகிறான், பின்பு தன் முகத்தை துடைத்துக்கொண்டு போஜனம் வையுங்கள் என்று சொல்கிறான்.
இதிலிருந்து நமக்கு தெரியவருவது என்னவென்றால் உண்மையாகவே தேவ வசனமாகிய ஆகாரம் தேவனிடத்திலிருந்து பெற்றுக்கொள்ளும் போது அதற்குரிய காணிக்கையை நாம் தேவனுக்கு கொடுக்க வேண்டும், அப்போது நாம் கொடுக்கிறதற்கு அதிகமாகவே நமக்கு தந்து நமக்குள்ளில் அதிகமாக கிரியை தேவன் நடப்பிப்பார். அப்படி தேவன் நமக்கு தருகிற ஆசீர்வாதத்தை நாம் திருப்பி தேவ சமூகத்தில் கொடுக்க முன்வரும் போது அதனை தேவன் ஆசீர்வதித்து நமக்கு அந்த ஆசீர்வாதம் பெருக தேவன் கிருபை செய்கிறார், அது மட்டுமல்லாமல் நம் வாழ்க்கையில் நம் செயல்கள் முழு இருதயமும் முழு ஆத்துமாவோடும், முழு பலத்தோடும் நாம் தேவனுக்குக் கீழ்ப்படிந்து, தேவனிடத்தில் அன்புகூருகிறோமா என்பதை தேவன் பார்த்து நமக்கு சமாதானம் அருளி நல்குகிறவராகயிருக்கிறார். மேலும் அவர் தேவனாக இருந்தும் சகோதரர் என்ற உறவுக்காக நம்மையும் அவரோடு இணைத்து சகோதர உறவை தேவன் நமக்கு மேம்படுத்துகிறார். தேவன் நம்மை அவருடைய சகோதரர் என்று காண்பிக்கும்படி,
எபிரெயர் 2:9-13
என்றாலும், தேவனுடைய கிருபையினால் ஒவ்வொருவருக்காகவும், மரணத்தை ருசிபார்க்கும்படிக்கு தேவதூதரிலும் சற்றுச் சிறியவராக்கப்பட்டிருந்த இயேசு மரணத்தை உத்தரித்ததினிமித்தம் மகிமையினாலும் கனத்தினாலும் முடிசூட்டப்பட்டதைக் காண்கிறோம்.
ஏனென்றால்,தமக்காகவும் தம்மாலேயும் சகலத்தையும் உண்டாக்கினவர், அநேகம் பிள்ளைகளை மகிமையில் கொண்டுவந்து சேர்க்கையில் அவர்களுடைய இரட்சிப்பின் அதிபதியை உபத்திரவங்களினாலே பூரணப்படுத்துகிறது அவருக்கேற்றதாயிருந்தது.
எப்படியெனில், பரிசுத்தஞ்செய்கிறவரும் பரிசுத்தஞ்செய்யப்படுகிறவர்களுமாகிய யாவரும் ஒருவராலே உண்டாயிருக்கிறார்கள்; இதினிமித்தம் அவர்களைச் சகோதரரென்று சொல்ல அவர் வெட்கப்படாமல்:
உம்முடைய நாமத்தை என் சகோதரருக்கு அறிவித்து, சபை நடுவில் உம்மைத் துதித்துப் பாடுவேன் என்றும்;
நான் அவரிடத்தில் நம்பிக்கையாயிருப்பேன் என்றும்;இதோ, நானும், தேவன் எனக்குக் கொடுத்த பிள்ளைகளும் என்று சொல்லியிருக்கிறார்.
மேற்கூறிய வார்த்தைகள் நம்முடைய தேவனாகிய கர்த்தர், தன் குமாரனாகிய கிறிஸ்துவை நமக்காக அனுப்பி சகோதரத்துவத்தை காட்டுகிறார். இந்த காரியத்தை யோசேப்பு மூலம் தேவன் நமக்கு பழைய ஏற்பாட்டின் பகுதியில் திருஷ்டாந்தபடுத்துகிறார்.
மேலும் நம்மை அவருடைய பிள்ளைகளாக்குகிறார், அதனை நாம் பார்க்கும்போது யோசேப்பு, தன் சகோதரனாகிய பென்யமீன பார்த்து மகனே தேவன் உனக்கு கிருபை செய்ய கடவர் என்றான்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,இவைகளையெல்லாம் நாம் வாசிக்கும்போது பழைய ஏற்பாடு கழிந்த நாட்கள் நடந்தது என்று தள்ளி விடாதபடி நம்முடைய கிறிஸ்து நமக்குள்ளில் வெளிப்பட்டு, தேவன் அவர் மூலமாய் நம் மத்தியில் செய்கிற காரியங்களை நமக்கு முன் வைத்து திருஷ்டாந்தப்படுத்தி நம்முடைய ஆத்தும மீட்பின் ஆசீர்வாதங்களுக்கு ஊன்றுகோலாக இருக்கிறது. என்பதை நாம் ஒவ்வொருவரும் நிதானித்து பொறுமையோடு வாசித்து,தியானித்து,சிந்தித்து, ஆராய்ந்து,செயல்பட்டு தேவனுடைய இரக்கங்களை பெற்று ஆசீர்வாதங்களை சுதந்தரித்துக் கொள்வோம்.
தேவன் யாவரையும் ஆசீர்வதிப்பாராக.
ஜெபிப்போம்.
-தொடர்ச்சி நாளை.