தேவனுக்கே மகிமையுண்டாவதாக

சங்கீதம் 38:15

கர்த்தாவே, உமக்குக் காத்திருக்கிறேன்; என் தேவனாகிய ஆண்டவரே, நீர் மறுஉத்தரவு கொடுப்பீர்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நம்மில் யெரொபெயாமின் பொல்லாத குணங்கள் வராதபடி நம் ஆத்துமாவை காத்துக்கொள்ள வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் எந்த நிலையிலும் கர்த்தரின் வழியை விட்டு விலகாமல் நம் ஆத்துமாவை காத்துக்கொள்ள வேண்டும் என்பதனை குறித்துதியானித்தோம்.  

அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

1இராஜாக்கள் 14:1- 5

அக்காலத்திலே யெரொபெயாமின் குமாரனாகிய அபியா வியாதியில் விழுந்தான்.

அப்பொழுது யெரொபெயாம் தன் மனைவியைப் பார்த்து: நீ எழுந்து, நீ யெரொபெயாமின் மனைவியென்று ஒருவரும் அறியாதபடிக்கு வேஷம்மாறி சீலோவுக்குப் போ; இந்த ஜனத்தின்மேல் நான் ராஜாவாவேன் என்று என்னோடே சொன்ன தீர்க்கதரிசியாகிய அகியா அங்கே இருக்கிறான்.

நீ உன் கையிலே பத்து அப்பங்களையும், பணியாரங்களையும், ஒரு கலசம் தேனையும் எடுத்துக்கொண்டு அவனிடத்துக்குப் போ; பிள்ளைக்குச் சம்பவிக்கப்போகிறது இன்னதென்று அவன் உனக்கு அறிவிப்பான் என்றான்.

அப்படியே யெரொபெயாமின் மனைவி செய்தாள்; அவள் எழுந்து சீலோவுக்குப் போய், அகியாவின் வீட்டிற்குள் பிரவேசித்தாள்; அகியாவோ முதிர் வயதானதினால் அவன் கண்கள் மங்கலடைந்து பார்க்கக்கூடாதிருந்தான்.

கர்த்தர் அகியாவினிடத்தில்: இதோ, யெரொபெயாமின் மனைவி வியாதியாயிருக்கிற தன் குமாரனுக்காக உன்னை ஒரு விசேஷம்கேட்க வருகிறாள்; நீ அவளுக்கு இன்ன இன்ன பிரகாரமாகச் சொல்லவேண்டும்; அவள் உட்பிரவேசிக்கிறபோது, தன்னை அந்நிய ஸ்திரீயாகக் காண்பிப்பாள் என்றார்.

மேற்கூறிய வசனங்கள் பிரகாரம் யெரொபெயாமின் குமாரனாகிய அபியா வியாதியில் விழுந்தான்.  அப்பொழுது யெரொபெயாம் தன் மனைவியைப் பார்த்து; நீ எழுந்து, நீ யெரொபெயாமின் மனைவி என்று ஒருவரும் அறியாதபடிக்கு வேஷம்மாறிச் சீலோவுக்கு போகும் போது, நான் ராஜாவாவேன் என்று சொன்ன தீர்க்கதரிசியாகிய அகியா அங்கே இருக்கிறான்.  ஆதலால் நீ உன் கையிலே பத்து அப்பங்களையும், பணியாரங்களையும், ஒரு கலசம் தேனையும் எடுத்துக்கொண்டு அவனிடத்திற்கு போ; அங்கே பிள்ளைக்கு சம்பவிக்க போகிறது இன்னதென்று அவன் உனக்கு அறிவிப்பான்.  யெரொபெயாமின் மனைவி, அவன் சொன்னதை கேட்டு, அதன் பிரகாரம் அவள் எழுந்து சீலோவுக்கு போய், அகியாவின் வீட்டிக்குள் பிரவேசித்தாள்; ஆனால் அகியாவோ முதிர் வயதுள்ளவனாயிருந்ததினால் அவன் கண்கள் மங்கலடைந்து பார்க்கக்கூடாதவனாயிருந்தான்.  கர்த்தர் அகியாவுக்கு யெரொபெயாமின் மனைவி வீட்டிற்குள் பிரவேசிக்கிற வருகிறாள் என்பதனை தெரியப்படுத்துகிறார்.  ஆனால் அவள் அந்நிய ஸ்திரீயாக காண்பிப்பாள் என்றார்.  ஆகையால் அகியா வாசற்படிக்குள் அவள் பிரவேசிக்கும் நடையின் சத்தம்  கேட்டவுடனே 

1இராஜாக்கள் 14:6-12 

ஆகையால் வாசற்படிக்குள் பிரவேசிக்கும் அவளுடைய நடையின் சத்தத்தை அகியா கேட்டவுடனே, அவன்: யெரொபெயாமின் மனைவியே, உள்ளே வா; உன்னை அந்நிய ஸ்திரீயாகக் காண்பிக்கிறதென்ன? துக்கசெய்தியை உனக்கு அறிவிக்க நான் அனுப்பப்பட்டேன்.

நீ போய் யெரொபெயாமை நோக்கி: இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: ஜனத்தினின்று உன்னை நான் உயர்த்தி, உன்னை இஸ்ரவேல் என்னும் என் ஜனத்தின்மேல் அதிபதியாக வைத்தேன்.

நான் ராஜ்யபாரத்தைத் தாவீது வம்சத்தாரின் கையிலிருந்து பிடுங்கி உனக்குக் கொடுத்தேன்; ஆனாலும் என் கற்பனைகளைக் கைக்கொண்டு, என் பார்வைக்குச் செம்மையானதையே செய்ய, தன் முழு இருதயத்தோடும் என்னைப் பின்பற்றின என் தாசனாகிய தாவீதைப்போல நீ இராமல்,

உனக்கு முன்னிருந்த எல்லாரைப்பார்க்கிலும் பொல்லாப்புச் செய்தாய்; எனக்குக் கோபம் உண்டாக்க, நீ போய் உனக்கு அந்நிய தேவர்களையும் வார்க்கப்பட்ட விக்கிரகங்களையும் உண்டுபண்ணி, உனக்குப் புறம்பே என்னைத் தள்ளிவிட்டாய்.

ஆகையால் இதோ, நான் யெரொபெயாமுடைய வீட்டின்மேல் பொல்லாப்பை வரப்பண்ணி, யெரொபெயாமுக்கு, சுவர்மேல் நீர்விடும் ஒரு நாய் முதலாயிராதபடிக்கு, இஸ்ரவேலிலே அடைபட்டவனையும் விடுபட்டவனையும் சங்காரம்பண்ணி, குப்பை கழித்துப்போடப்படுகிறதுபோல யெரொபெயாமின் பின்னடியாரை அவர்கள் கட்டோடே அற்றுப் போகுமட்டும் கழித்துப்போடுவேன் என்றார்.

யெரொபெயாமின் சந்ததியாரில் பட்டணத்திலே சாகிறவனை நாய்கள் தின்னும்; வெளியிலே சாகிறவனை ஆகாயத்தின் பறவைகள் தின்னும்; கர்த்தர் இதை உரைத்தார்.

ஆகையால் நீ எழுந்து, உன் வீட்டுக்குப்போ, உன் கால்கள் பட்டணத்திற்குள் பிரவேசிக்கையில் பிள்ளையாண்டான் செத்துப்போவான்.

மேற்கூறப்பட்டிருக்கிற வார்த்தைகள் எல்லாம் யெரொபெயாம் கர்த்தருக்கு விரோதமாய் பொல்லாப்பு செய்ததால் கர்த்தர் அகியாவை வைத்து, கர்த்தர் யெரொபெயாமுக்கு செய்த நன்மையையும், அவன் கர்த்தருக்கு விரோதமாக இஸ்ரவேல் ஜனங்கள் வழி தப்பி நடப்பதற்கேதுவாக கன்றுகுட்டிகளாகிய விக்கிரகங்களை செய்ததையும் எடுத்துக் கூறி யெரெபெயாமுடைய வீட்டாருக்கு கொடுக்கிற சாபத்தையும் பார்க்கிறோம்.  அந்த சாபத்தில் யெரொபெயாமின் சந்ததியாரில் பட்டணத்திலே சாகிறவனை நாய்கள் தின்னும்; வெளியிலே சாகிறவனை ஆகாயத்தின் பறவைகள் தின்னும் என்று கர்த்தர் உரைத்தார் என்றும்; ஆதலால் நீ எழுந்து, உன் வீட்டுக்கு போ, உன் கால்கள் பட்டணத்திற்குள் பிரவேசிக்கையில் பிள்ளையாண்டான் செத்து போவான்.  அவனுக்காக இஸ்ரவேலரெல்லாம் துக்கம் கொண்டாடி அவனை அடக்கம் பண்ணுவார்கள். ஆனால் யெரொபெயாம் குடும்பத்தாரில் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக நல்ல காரியம் காணப்படுமானால் அவன் ஒருவனே யெரொபெயாமின் சந்நிதியில் கல்லறைக்குட்படுவான்.  ஆனாலும் கர்த்தர் நமக்கு இஸ்ரவேலிலே ஒரு ராஜாவை எழும்பப்பண்ணுவார்; அவன் அந்நாளிலே யெரொபெயாமின் வீட்டாரை சங்கரிப்பான்; இப்போதே அது நடந்தேறும் என்றார். 

ஆதலால்  பிரியமானவர்களே,  முன்னோர்கள் செய்த அக்கிரமம் பின் சந்ததியாரை தொடர்ந்து பிடிக்காதபடியும், நாமும் விக்கிரகராதனை செய்து நம்முடைய பின்னடியாரை சாகடிக்காதபடிக்கும், நம்முடைய ஆத்துமாவை கர்ததருக்கு முன்பாக முழுமையும் ஒப்புக்கொடுத்து, அவர் தம்முடைய வார்த்தையினால் நம்மை உயிர்ப்பித்து, பின் கிருபையினால் நம்மிடத்தில் காணப்பட்ட யெரொபெயாமின் கிரியைகளை அழித்து நிர்மூலம் பண்ணி, மீண்டும் சுத்திகரித்து கிறிஸ்து நம்மில் எழுந்தருளும் போது யெரொபெயாமின் கிரியைகளை சங்கரித்து, கிறிஸ்துவே ராஜாதி ராஜாவாக நம்மில் சிங்காசனத்தில் வீற்றிருப்பார்.   ஆனால் யெரொபயாமை போல விக்கிரகங்களுக்கு பலியிடுவோமானால், அவர்களின் ஆத்துமா சாகும்.  ஆதலால் நாம் ஒருபோதும் யெரொபையாமின் வீட்டாரைப்போல அழிந்து போகாதபடி,எச்சரிக்கையாயிருந்து தாவீதின் சிங்காசனம் நம்மில் உறுதிபடும்படியாக கர்த்தருக்கு காத்திருந்து அதனைப் பெற்றுக்கொள்ளும்படியாக ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.