தேவனுக்கே மகிமையுண்டாவதாக

யோவான் 6:26-27

இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: நீங்கள் அற்புதங்களைக் கண்டதினால் அல்ல, நீங்கள் அப்பம் புசித்துத் திருப்தியானதினாலேயே என்னைத் தேடுகிறீர்களென்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

அழிந்துபோகிற போஜனத்திற்காக அல்ல, நித்தியஜீவன்வரைக்கும் நிலைநிற்கிற போஜனத்திற்காகவே கிரியை நடப்பியுங்கள்; அதை மனுஷகுமாரன் உங்களுக்குக் கொடுப்பார்; அவரைப் பிதாவாகிய தேவன் முத்திரித்திருக்கிறார் என்றார்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக,ஆமென்.

அல்லேலூயா.

கிறிஸ்து நம்மோடு போஜனம் பண்ணுதல் திருஷ்டாந்தம்:- விளக்கம்:

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,கழிந்த நாட்களில் நாம் தியானித்து வந்த வேத பகுதியில் யாக்கோபின் பன்னிரண்டு குமாரரும் ஒருமித்து ஒரு இடத்தில் வாசம்பண்ணி போஜனத்துக்காக ஆயத்தம் ஆகிறதை நாம்  வாசிக்க முடிகிறது.அந்த நேரத்தில் யாக்கோபு அங்கு இல்லை.

ஆனால்,எகிப்தியர்  எபிரெயரோடே சாப்பிட மாட்டார்கள்; அப்படி செய்வது எகிப்தியருக்கு அருவருப்பாயிருக்கும்; ஆகையால் யோசேப்புக்கு தனிப்படவும், அவர்களுக்கு தனிப்படவும், அவனோடே சாப்பிடுகிற எகிப்தியருக்கு தனிப்படவும்  வைத்தார்கள். அந்நேரமும் யோசேப்பு,

தான் சகோதரன் என்று வெளிப்படுத்தவில்லை.

ஆதியாகமம் 43:33-34

அவனுக்கு முன்பாக, மூத்தவன் முதல் இளையவன்வரைக்கும் அவனவன் வயதின்படியே அவர்களை உட்காரவைத்தார்கள்; அதற்காக அவர்கள், ஒருவரை ஒருவர் பார்த்து ஆச்சரியப்பட்டார்கள்.

அவன் தனக்குமுன் வைக்கப்பட்டிருந்த போஜனத்தில் பங்கிட்டு அனுப்பினான்; அவர்கள் எல்லாருடைய பங்குகளைப் பார்க்கிலும் பென்யமீனுடைய பங்கு ஐந்துமடங்கு அதிகமாயிருந்தது; அவர்கள் பானம்பண்ணி, அவனுடனே சந்தோஷமாயிருந்தார்கள்.

மேற்கூறிய காரியங்களை தேவன் திருஷ்டாந்தப்படுத்தி கூறுவது என்னவெனில் எகிப்தின் அடிமையில் (பாவத்தின் அடிமையில்) இருந்த நாம் ஒவ்வொருவரையும் அவருடைய பரிசுத்த இரத்தத்தால் தேவன் நம்மை மீட்டுக்கொண்டு,நம்மோடு வந்து வாசம் பண்ணுகிறவராக காணப்படுகிறார்.

மேலும் யாக்கோபு தன்னுடைய குமாரர்கள் பன்னிரண்டு பேரையும் அழைத்து கடைசி நாட்களில் ஒவ்வொருவருக்கும் நேரிடும் காரியங்களை கூறுகிறான்.

ஆதியாகமம் 49:22-24

யோசேப்பு கனிதரும் செடி: அவன் நீர் ஊற்றண்டையிலுள்ள கனிதரும் செடி: அதின் கொடிகள் சுவரின்மேல் படரும்.

வில்வீரர் அவனை மனமடிவாக்கி, அவன்மேல் எய்து, அவனைப் பகைத்தார்கள்.

ஆனாலும், அவனுடைய வில் உறுதியாய் நின்றது; அவன் புயங்கள் யாக்கோபுடைய வல்லவரின் கரங்களால் பலத்தன; இதினால் அவன் மேய்ப்பனும் இஸ்ரவேலின் கன்மலையும் ஆனான்.

மற்றும் அநேக ஆசீர்வாதங்களை கொடுக்கிறதை பார்க்கிறோம். 

ஆனால்,

ஆதியாகமம் 49:27

பென்யமீன் பீறுகிற ஓநாய்; காலையில் தன் இரையைப் பட்சிப்பான், மாலையில் தான் கொள்ளையிட்டதைப் பங்கிடுவான் என்றான்.

இவ்வதமான ஆசீர்வாதங்கள் பென்யமீனை குறித்து தேவன் வைத்திருந்ததினால் யோசேப்பு பென்யமீன் வர காத்திருந்து, போஜனம் பண்ணுவதற்காக ஆயத்தமாயிருக்கிறதை பார்க்கிறோம்.

ஏனென்றால் பென்யமீன் கோத்திரத்தை குறித்து அவனை எந்நாளும் அவர் காப்பாற்றி அவன் எல்லைக்குள்ளே வாசமாயிருப்பார்.

அதை தான்,

யோவான் 14:23

இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவன் என்னில் அன்பாயிருந்தால், அவன் என் வசனத்தைக் கைக்கொள்ளுவான், அவனில் என் பிதா அன்பாயிருப்பார்; நாங்கள் அவனிடத்தில் வந்து அவனோடே வாசம்பண்ணுவோம்.

மேலும்,

வெளிப்படுத்துதல் 3:20- 22

இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக்கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம்பண்ணுவான்.

நான் ஜெயங்கொண்டு என் பிதாவினுடைய சிங்காசனத்திலே அவரோடேகூட உட்கார்ந்ததுபோல, ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனும் என்னுடைய சிங்காசனத்தில் என்னோடேகூட உட்காரும்படிக்கு அருள்செய்வேன்.

ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்றெழுது என்றார்.

இதனை வாசிக்கும் போது அன்பானவர்களே நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நம் இருதய கதவைத் திறக்கும்படி தட்டுகிறார். அவர்தான் தேவனுடைய வார்த்தை.நம் இருதயம் தேவனுடைய வார்த்தைக்கு திறப்போமானால் அந்த வார்த்தையானது மாம்சமாகி, கிருபையினாலும், சத்தியத்தினாலும், நிறைந்தவராக நமக்குள்ளே வாசம் பண்ணுகிறார்.அவர் நம் இருதயத்தில் வாசம் பண்ணி நம்மோடு கூட எப்போதும் தேவ வசனம் போஜனம் பண்ணுவார். அந்த போஜனம் என்ன என்றால்,

யோவான் 4:31-34

இப்படி நடக்கையில் சீஷர்கள் அவரை நோக்கி: ரபீ, போஜனம்பண்ணும் என்று வேண்டிக்கொண்டார்கள்.

அதற்கு அவர்: நான் புசிப்பதற்கு நீங்கள் அறியாத ஒரு போஜனம் எனக்கு உண்டு என்றார்.

அப்பொழுது சீஷர்கள் ஒருவரையொருவர் பார்த்து: யாராவது அவருக்குப் போஜனம் கொண்டுவந்திருப்பானோ என்றார்கள்.

இயேசு அவர்களை நோக்கி: நான் என்னை அனுப்பினவருடைய சித்தத்தின்படி செய்து அவருடைய கிரியையை முடிப்பதே என்னுடைய போஜனமாயிருக்கிறது.

இதனை தியானிக்கிற தேவனுடைய ஜனமே,இன்று நம்மளில் அநேகம் பேருக்கு போஜனம் என்ன என்று தெரியாதபடி இருக்கிறோம். போஜனம் என்றால் அழிந்து போகிற ஆகாரத்தை நினைக்கிறோம்.அதுவல்ல, தேவன் யோசேப்பும் அவன் சகோதரர்களும் போஜனம் பண்ணுவதை தேவன் எதற்கு திருஷ்டாந்தபடுத்துகிறார். என்றால்,நமக்குள் ஆத்தும அறுவடை கர்த்தராகிய இயேசு கிறிஸ்து செய்கிறார்.நம்முடைய ஆத்துமா,முட்செடிகளிலும், நெரிஞ்சில்களிலும், (உதாரணமாக) உலக கவலைகளினாலும், உலக சிற்றின்பங்களினாலும் சிக்கி கிடக்கிற நம்முடைய ஆத்துமாவை இரட்சித்து நித்திய ஜீவனுக்காக நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நம்மை ஆயத்தப் படுத்துகிறார்.

அதை தான் இயேசுகிறிஸ்து சொல்லுகிறார் என்னை அனுப்பினவருடைய கிரியையை செய்து முடிப்பதே என்னுடைய போஜனமாயிருக்கிறது என்கிறார்.

மேலும் அவருடைய கிரியை நம்மளில் நடப்பிக்கிறாரென்றால்,

எபிரெயர் 4:12

தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், ஆத்துமாவையும் ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக் குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது.

இவ்விதமாக தேவனுடைய வார்த்தை தான் கிறிஸ்து, நம்மளில் அவர் ஆவியாயும், ஜீவனாயும் வல்லமையுள்ளவராய், நம்முடைய பொல்லாத எண்ணங்கள்,சுபாவங்கள், பழைய பழக்க வழக்கங்கள், மாம்ச சிந்தைகள், உலக கிரியைகள் இவ்வித பலவித தேவனுக்கு பிரியமில்லாத சகல பாவ பழக்கங்களை ,மேலும் நம் ஆத்மாவில் இருக்கிற சீழ் சகலத்தையும் ஆத்மாவிலிருந்து அகற்றி அவருடைய ஜீவனை நம் ஆத்துமாவில் தந்து இருதயத்தில் எண்ணங்களையும் தந்து, தேவநீதியில் நம்மை நடத்திச் செல்வார். இவையெல்லாம் அவருடைய கிரியைகளாகிய அவருடைய போஜனமாயிருக்கிறது. 

இவ்விதமாக நம்முடைய ஆத்துமாவை அவர் தமது கோதுமை களத்தில் சேர்கிறவராக இருக்கிறார். மேலும் பதரையோ அவியாத அக்கினியில் சுட்டெரிப்பார். நித்திய ஜீவனுக்காக நம்மை அவர் சமூகத்தில் சேர்த்துக் கொள்வார்.ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் ஆசீர்வதிப்பாராக.            

-தொடர்ச்சி நாளை.