தேவனுக்கே மகிமையுண்டாவதாக
மத்தேயு 21:43
ஆகையால், தேவனுடைய ராஜ்யம் உங்களிடத்திலிருந்து நீக்கப்பட்டு, அதற்கேற்ற கனிகளைத் தருகிற ஜனங்களுக்குக் கொடுக்கப்படும்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நாம் கிறிஸ்துவின் திராட்ச தோட்டமாக (தேவனுடைய ராஜ்யம்) காணப்பட வேண்டும்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் நம்முடைய ஆத்மீக வாழ்வில் ஆத்துமாவில் சலிப்பும் விசனமுமடையாதபடி காத்துக்கொள்ளவேண்டும் என்பதனை குறித்து தியானித்தோம்.
அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்
1இராஜாக்கள் 21:1-16
இவைகளுக்குப் பின்பு, யெஸ்ரயேலனாகிய நாபோத்துக்கு யெஸ்ரயேலிலே சமாரியாவின் ராஜாவாகிய ஆகாபின் அரமனை அண்டையில் ஒரு திராட்சத்தோட்டம் இருந்தது.
ஆகாப் நாபோத்தோடே பேசி: உன் திராட்சத்தோட்டம் என் வீட்டிற்கு அடுத்திருக்கிறபடியால், அதைக் கீரைக்கொல்லையாக்கும்படி எனக்குக் கொடு, அதைப்பார்க்கிலும் நல்ல திராட்சத்தோட்டத்தை அதற்குப் பதிலாக உனக்குத் தருவேன்; அல்லது உனக்கு வேண்டுமானால், அதின் விலைக்கிரயமான பணத்தைத் தருவேன் என்றான்.
நாபோத் ஆகாபை நோக்கி: நான் என் பிதாக்களின் சுதந்தரத்தை உமக்குக் கொடாதபடி கர்த்தர் என்னைக் காப்பாராக என்றான்.
இப்படி என் பிதாக்களின் சுதந்தரத்தை உமக்குக் கொடேன் என்று யெஸ்ரயேலனாகிய நாபோத் தன்னோடே சொன்ன வார்த்தைக்காக ஆகாப் சலிப்பும் சினமுமாய், தன் வீட்டிற்கு வந்து, போஜனம்பண்ணாமல், தன் கட்டிலின் மேல் படுத்து, தன் முகத்தைத் திருப்பிக் கொண்டிருந்தான்.
அப்பொழுது அவன் மனைவியாகிய யேசபேல் அவனிடத்தில் வந்து: நீர் போஜனம்பண்ணாதபடிக்கு, உம்முடைய மனம் சலிப்பாயிருக்கிறது என்ன என்று அவனைக் கேட்டதற்கு,
அவன் அவளைப் பார்த்து: நான் யெஸ்ரயேலனாகிய நாபோத்தோடே பேசி: உன் திராட்சத்தோட்டத்தை எனக்கு விலைக்கிரயமாய்க்கொடு; அல்லது உனக்கு ராசியானால் அதற்குப் பதிலாக வேறே திராட்சத்தோட்டத்தை உனக்குத் தருவேன் என்றேன். அதற்கு அவன்: என் திராட்சத்தோட்டத்தை உமக்குக் கொடுக்கமாட்டேன் என்று சொன்னான் என்றான்.
அப்பொழுது அவன் மனைவியாகிய யேசபேல் அவனை நோக்கி: நீர் இப்போது இஸ்ரவேலின்மேல் ராஜ்யபாரம்பண்ணுகிறவர் அல்லவா? நீர் எழுந்து போஜனம்பண்ணி மனமகிழ்ச்சியாயிரும்; யெஸ்ரயேலனாகிய நாபோத்தின் திராட்சத்தோட்டத்தை நான் உமக்குக் கொடுப்பேன் என்று சொன்னாள்.
அவள் ஆகாபின் பெயரால் நிருபங்களை எழுதி, அவன் முத்திரையை அவைகளுக்குப் போட்டு, அந்த நிருபங்களை நாபோத் இருக்கும் பட்டணத்தில் அவனோடே குடியிருக்கிற மூப்பரிடத்துக்கும் பெரியோரிடத்துக்கும் அனுப்பினாள்.
அந்த நிருபங்களில் அவள் எழுதினது என்னவென்றால்: நீங்கள் உபவாசம் என்று பிரசித்தப்படுத்தி, நாபோத்தை ஜனத்தின் முன் நிறுத்தி,
தேவனையும் ராஜாவையும் தூஷித்தாய் என்று அவன்மேல் சாட்சிசொல்லுகிற பேலியாளின் மக்களாகிய இரண்டு பேரை அவனுக்கு எதிராக நிறுத்தி, அவனை வெளியே கொண்டுபோய் அவன் சாகும்படிக்கு அவனைக் கல்லெறியுங்கள் என்று எழுதினாள்.
அவன் பட்டணத்திலே குடியிருக்கிற மூப்பரும் பெரியோருமாகிய அவன் பட்டணத்து மனுஷர், யேசபேல் தங்களுக்கு அனுப்பின நிருபங்களில் எழுதிக் கட்டளையிட்டிருந்தபடியே செய்தார்கள்.
அவர்கள் உபவாசம் என்று பிரசித்தப்படுத்தி நாபோத்தை ஜனத்தின் முன்னே நிறுத்தினார்கள்.
அப்பொழுது பேலியாளின் மக்களாகிய இரண்டுபேர் வந்து, அவனுக்கு எதிராக உட்கார்ந்து: நாபோத் தேவனையும் ராஜாவையும் தூஷித்தான் என்று ஜனத்திற்கு முன்பாக அவன்மேல் சாட்சி சொன்னார்கள்; அதற்குப்பின்பு அவனைப் பட்டணத்திற்கு வெளியே கொண்டுபோய், அவன் சாகும்படிக்கு அவனைக் கல்லெறிந்து,
பிற்பாடு யேசபேலுக்கு, நாபோத் கல்லெறியுண்டு செத்தான் என்று சொல்லியனுப்பினார்கள்.
நாபோத் கல்லெறியுண்டு செத்ததை யேசபேல் கேட்டபோது, ஆகாபை நோக்கி: நீர் எழுந்திருந்து, யெஸ்ரயேலனாகிய நாபோத் உமக்கு விலைக்கிரயமாய்க் கொடுக்கமாட்டேன் என்று சொன்ன திராட்சத்தோட்டத்தைச் சொந்தமாய் எடுத்துக்கொள்ளும்; நாபோத் உயிரோடில்லை, அவன் செத்துப்போனான் என்றாள்.
நாபோத் செத்துப்போனதை ஆகாப் கேட்டபோது, அவன் யெஸ்ரயேலனாகிய நாபோத்தின் திராட்சத்தோட்டத்தைச் சொந்தமாய் எடுத்துக்கொள்ளும்படி எழுந்துபோனான்.
மேற்கூறப்பட்ட வசனங்கள் நமக்கு திருஷ்டாந்தத்திற்காகக் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதென்னவெனில் நாம் ஒவ்வொருவரும் கிறிஸ்துவின் திராட்ச தோட்டமாக காண்ப்படுகிறோம். ஆனால் அந்த திராட்ச தோட்டத்தின் அருகாமையில் ஆகாபின் அரண்மனை இருக்குமானால் அதனை கீரைக்கொல்லையாக்கும்படி கிரியைகளை நடப்பிப்பான். என்னவெனில் நம்முடைய உள்ளத்தில் ஒரு போதும் ஆகாபுடைய கிரியைகளாகிய பாகாலின் பலிபீடத்திற்கு இடம் கொடுக்கக்கூடாது. அப்படி நாம் இடம் கொடுப்பமானால் பரஸ்திரீயாகிய யேசபேல் அவனுடைய மனைவியாகிய மணவாட்டி சபையாக இருந்து நம்முடைய ஆத்மீக வாழ்வை வஞ்சித்து விடுகிறாள். அதுமட்டுமல்ல நம்முடைய ஆத்துமாவை எப்படியாயினும் தந்திரத்தோடு கொலைசெய்து விடுகிறாள். அப்படியாக ஆத்துமா கொல்லபட்டு விட்டால் நம்மில் பிசாசின்கிரியைகள் அனுதினம் வளர்ந்துக்கொண்டிருக்கும்; கரத்தருக்கேற்ற நல்ல கனிகளை கொடுக்க முடியாது. அதன் பின்பு நம்முடைய உள்ளம் முழுமையும் ஆகாப் தனக்கு சொந்தமாக சுதந்தரிப்பதற்க்காக நம்மில் எழும்புவான். ஆதலால் நம்மை சுற்றிலும் இருக்கிற பாகாலின் மேடைகள் தகர்க்கும்படியாகவும், நாம் ஒருபோதும் ஆகாபின் கிரியைகளால் விழுந்து போகாதபடிக்கும், கர்த்தருக்கேற்ற நல்ல கனிகளைக்கொடுக்கும்படியாகவும் கர்த்தரிடத்தில் நம்மை ஒப்புக்கொடுப்போம்.
ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.