தேவனுக்கே மகிமையுண்டாவதாக

கொலோசெயர் 1:28

எந்த மனுஷனையும் கிறிஸ்து இயேசுவுக்குள் தேறினவனாக நிறுத்தும்படிக்கு, அவரையே நாங்கள் அறிவித்து, எந்த மனுஷனுக்கும் புத்திசொல்லி, எந்த மனுஷனுக்கும் எல்லா ஞானத்தோடும் உபதேசம்பண்ணுகிறோம்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் மட்டுமல்ல நம்முடைய அயல் வீட்டுகாரர்களும் கிறிஸ்துவின் ஜீவன் பெற்றுக்கொள்ள நாம் உதவியாயிருக்க வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில் மணவாட்டி சபையாகிய நம்முடைய ஆத்துமாவின் பெருமைகளை கர்த்தர் அகற்றுவது குறித்து தியானித்தோம்.  

அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

2 இராஜாக்கள் 4:1, 2

தீர்க்கதரிசிகளுடைய புத்திரரில் ஒருவனுக்கு மனைவியாயிருந்த ஒரு ஸ்திரீ எலிசாவைப் பார்த்து: உமது அடியானாகிய என் புருஷன் இறந்து போனான்; உமது அடியான் கர்த்தருக்குப் பயந்து நடந்தான் என்பதை அறிவீர்; கடன்கொடுத்தவன் இப்போது என் இரண்டு குமாரரையும் தனக்கு அடிமைகளாக்கிக்கொள்ள வந்தான் என்றாள்.

எலிசா அவளை நோக்கி: நான் உனக்கு என்னசெய்ய வேண்டும்? வீட்டில் உன்னிடத்தில் என்ன இருக்கிறது சொல் என்றான். அதற்கு அவள்: ஒரு குடம் எண்ணெய் அல்லாமல் உமது அடியாளுடைய வீட்டில் வேறொன்றும் இல்லை என்றாள்.

மேற்கூறபட்ட வசனங்களில் தீர்க்கதரிசிகளுடைய புத்திரரில் ஒருவனுக்கு மனைவியாயிருந்த ஒரு ஸ்திரீ, எலிசாவை பார்த்து: உமது அடியானாகிய என் புருஷன் இறந்து போனான்; என் புருஷன் கர்த்தருக்கு பயந்து நடந்தான் என்பதை அறிவீர்; கடன் கொடுத்தவன் இப்போது என் இரண்டு குமாரரையும் தனக்கு அடிமைகளாக்கிக்கொண்டு வந்தான் என்றாள். அப்போது எலிசா அவளிடம் நான் உனக்கு என்ன செய்ய வேண்டும்; உன் வீட்டில் என்ன இருக்கிறதற்கு என்று கேட்டதற்கு அவள் சொன்னது: ஒரு குடம் எண்ணெயல்லாமல் உமது அடியாளுடைய வீட்டில் வேறொன்றும் இல்லை என்றாள்.  அப்பொழுது அவன் சொன்னது 

2 இராஜாக்கள்4:3, 4 

அப்பொழுது அவன்: நீ போய், உன்னுடைய அயல்வீட்டுக்காரர் எல்லாரிடத்திலும் அநேகம் வெறும்பாத்திரங்களைக் கேட்டுவாங்கி,

உள்ளே போய், உன் பிள்ளைகளுடன் உள்ளே நின்று கதவைப் பூட்டி, அந்தப் பாத்திரங்கள் எல்லாவற்றிலும் வார்த்து, நிறைந்ததை ஒரு பக்கத்தில் வை என்றான்.

மேற்கூறிய வரர்த்தைகளின் படி அவள் செய்து அவனிடத்திலிருந்து போய், தன் பிள்ளைகளுடன் கதவை பூட்டிக்கொண்டு, இவர்கள் பாத்திரங்களை அவளிடத்தில் கொடுக்க அவள் அவைகளில் வார்த்தாள். அந்த பாத்திரங்கள் நிறைந்த பின், அவள் தன் மகன் ஒருவனை நோக்கி; இன்னும் ஒரு பாத்திரம் கொண்டு வா என்றாள்.  அதற்கு அவன்; வேறே பாத்திரமும் இல்லை என்றான்; அப்பொழுது எண்ணெய் நின்று போயிற்று.  அவள் போய் தேவனுடைய மனுஷனுக்கு அதை அறிவித்தாள்.  அப்பொழுது தேவனுடைய மனுஷன் நீ போய் அந்த எண்ணெயை விற்று, உன் கடனைத் தீர்த்து, மீந்ததைக்கொண்டு நீயும் உன் பிள்ளைகளும் ஜீவனம் பண்ணுங்கள் என்றான்.

பிரியமானவர்களே மேற்கூறப்பட்டிருக்கிற வசனங்களை நாம் கவனிக்கும் போது, நம்முடைய வாழ்வில் கிறிஸ்தேசு எவ்விதம் பரிசுத்த ஆவியால் நம் வீட்டிலும், அருகாமையில் உள்ளவர்களின்ஆத்துமாவை பூரண கிருபையுள்ளவர்களாய் நிறையப்பண்ணுகிறார் என்பதனை திருஷ்டாந்தபடுத்தி விளக்குகிறார். எப்படியென்றால் நாம் பார்க்கும் போது அநேகர் கர்த்தருடைய வசனத்திற்கு பயந்து நடக்கிறார்கள்.  ஆனால் தனக்குள் கிறிஸ்துவின் ஜீவன் பெற்றுக்கொள்ளாதவர்கள் புருஷன் இல்லாதவர்களாக திருஷ்டாந்தப்படுத்துகிறார்.  அவ்விதம் உள்ளவர்களின் ஆத்துமாவை (உள்ளான மனுஷன், புறம்பான மனுஷன் என்பது இரண்டு குமாரர்கள்) சாத்தான் தனக்கு அடிமையாக்கிக் கொள்கிறான் என்பதால், அந்த ஸ்திரீயாகிய மணவாட்டி சபை அதனை கர்த்தரிடம் சொல்லும் போது; கர்த்தர் நம்மிடம் உனக்கு என்ன வேண்டும் என்கிறார்.  அப்பொழுது அவர்  நம்முடைய வீடாகிய உள்ளத்தை ஆராய்கிறார்.  அப்படி ஆராய்கிற தேவன் நம்மிடத்தில் கேட்கிறார்; உன் வீட்டில் என்ன இருக்கிறது என்று கேட்டு ஒரு குடம் எண்ணெய் இருக்கிறது என்றால், அயல் வீட்டுகாரர்களிடம் குடத்தை கேட்டு வாங்கு என்று சொல்வது; நாம் பெற்ற இரட்சிப்பு நமக்கு  மட்டும் இருந்தால் போதாது; அயல்வீட்டிலும் நாம் பெற்ற இரட்சிப்பை கொடுக்க வேண்டும் என்று சொல்லி அந்த  அயல்வீட்டு வெறும் பாத்திரங்களை கேட்டு வாங்கி அதையும் நிறைக்க சொல்கிறார். அப்படியாக அந்த ஸ்திரீ அதை கேட்டு வாங்கி, அறை கதவை பூட்டி அந்த பாத்திரங்களிலும் வார்த்தாள்.  பின்பு ஒரு பாத்திரம்கூட கொண்டுவர சொல்லும் போது, பாத்திரங்கள் இல்லையென்று சொன்னபோது  எண்ணெயும் நின்று போயிற்று.  இவற்றிலிருந்து நாம் தெரிந்துக்கொள்ள வேண்டியது என்னவென்றால், கர்த்தர் நம்மை இரடசித்திருக்க, நாம் மற்றவர்களிடம் கிறிஸ்துவின் அன்பை எடுத்துக்கூறி, அவர்களும் பாவத்திலிருந்து விடுதலையாகி இரட்சிக்கப்படுவது தேவனுடைய சித்தமாயிருக்கிறது என்பதனை அறிந்து, நாம் மற்றவர்களையும் கிறிஸ்துவின் பாதையில் நடத்தி வரும் போது நம் உள்ளான மனுஷனும், புறம்பான மனுஷனுமாகிய நம்முடைய இரண்டு குமாரர்களும் சாத்தானுடைய அடிமையினின்று விடுதலையாகும் போது, நமக்கு ஜீவனத்திற்குரிய காரியங்களையும் கர்த்தர் ஆசீர்வதிக்கிறார்.  ஆதலால் தான் கர்த்தர் சொன்னது முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள்; அப்பொழுது இவைகள் எல்லாம் கூட கொடுக்கப்படும் என்று மத்தேயு 6:33-ல் கூறப்பட்டிருக்கிறது.  ஆதலால் நாம் எல்லாரும் இவ்விதமான ஆசீர்வாதங்களை சுதந்தரிக்கும்படியாக ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.