தேவனுக்கே மகிமையுண்டாவதாக

அப்போஸ்தலர் 1:8

பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக,ஆமென்.

அல்லேலூயா.

தேவராஜ்யம் பெற்றுகொள்ளும் போது நம் பாவங்கள் அக்கிரமங்கள் விளங்க பண்ணுதல்:-திருஷ்டாந்தம்:

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,கழிந்த நாளில் தியானித்த வேதபகுதியில் தேவராஜ்யத்தை குறித்து நாம் தியானித்தோம். தேவராஜ்யம் எங்கு இருக்கிறது என்றால் நம்முடைய உள்ளத்தில் தான் வெளிப்படுகிறது. அந்த தேவராஜ்யம், தேவனுடைய வாயிலிருந்து புறப்பட்ட வார்த்தையினால் மனுஷன் பிழைப்பான் என்றதால்,

யோவான் 1:14

அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்பண்ணினார்; அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவுக்கு ஒரே பேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது.

இவ்விதமாக நாம் தேவனுடைய வார்த்தைகளை பேசும் போது நாம் அதை தியானித்து ஏற்றுக் கொள்ளும் போது, நம் இதய கதவை நாம் திறப்போமானால் கிறிஸ்து நம்மளில் வெளிப்படுகிறார். தேவவசனத்தை ஏற்றுக்கொண்டவர்கள் அந்த மகிமையான ஒளியைப் பெற்றுக்கொள்வார்கள். இதனை யோவான் சொல்லுகிறார். உலகத்தில் வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி.அவர் தான் கிறிஸ்து.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,நாம் எல்லோரும் இந்த ஒளியே பெற்றுக்கொள்வோமானால், இருளானது(பிசாசு)அதை பற்றிக் கொள்ளாது.

யோவான் 1:5

அந்த ஒளி இருளிலே பிரகாசிக்கிறது; இருளானது அதைப் பற்றிக்கொள்ளவில்லை.


இவ்விதமாக நம் உள்ளம் ஆசீர்வதிக்கப்படுமானால் சாத்தான் நம் இருதயத்தை விட்டுப் போய்விடுவான்.நாம் வெளிச்சத்தின் பாதையில் நடப்போம்.

இவ்விதமான,பாதையில் நடக்க தேவன் சித்தமுள்ளவராக, முதலில் யோசேப்பை எகிப்திற்கு கொண்டுபோய் எகிப்தின் ஆசீர்வாதங்களை எபிரெயருக்கு கொடுக்கும்படியாகவும், எபிரெயராகிய நம்முடைய முற்பிதாக்களாகிய மீதி பதினொரு பேரையும் எகிப்திற்க்கு அனுப்பி,சில ஆழமான காரியங்களை அவர்கள் அறிந்து கொள்ளும்படியாக, தேவன் யோசேப்பும் மூலம் அவர்களை நடத்தி வந்ததும்,மற்றும் அவர்களோடு போஜனபானம் யோசேப்பு பண்ணுவதும், போஜனபானம் பண்ணும் முன்பாக,யோசேப்பின் விசாரணைகாரன் அவர்களுக்கு கால் கழுவ தண்ணீர் கொடுப்பதையும் நாம் வாசிக்க முடிகிறது. தேவராஜ்யம் நம்மிடத்தில் தோன்ற வேண்டுமானால் நாம் இவ்வித காரியங்களில் நம் வாழ்க்கையில் தூய்மை,தாழ்மை கீழ்ப்படிதல்,மேலும் உண்மை சகலமும் நம்மிடத்தில் இருக்க வேண்டும்.

அதன்பிறகு இளையவன் சாக்கில் வெள்ளி பானபாத்திரம் இருக்கிறதை பார்க்கிறோம். மேலும் அவனுக்கு ஐந்து மடங்கு பங்கு போஜனம் மற்றவர்களை காட்டிலும் கொடுக்கப்படுகிறது. இதற்கு காரணமென்னவென்றால், தேவராஜ்யம் நம் உள்ளத்தில் வருவதற்கு தேவன் திருஷ்டாந்தபடுத்துகிற ஒரு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. அதுவரையில் யோசேப்பு தன் சகோதரர்களிடத்தில் தன்னை வெளிப்படுத்தவில்லை.

ஆனால்,பென்யமீனுக்கு  போஜனம் ஐந்து மடங்கு அதிகமாக கொடுத்தது மட்டுமல்லாமல் வெள்ளி பாத்திரமாகிய பானபாத்திரத்தையும் வைத்து அனுப்பின காரியம் என்னவென்றால்,

லூக்கா 12:47-48

தன் எஜமானுடைய சித்தத்தை அறிந்தும் ஆயத்தமாயிராமலும் அவனுடைய சித்தத்தின்படி செய்யாமலும் இருந்த ஊழியக்காரன் அநேக அடிகள் அடிக்கப்படுவான்


அறியாதவனாயிருந்து, அடிகளுக்கு ஏதுவானவைகளைச் செய்தவனோ சில அடிகள் அடிக்கப்படுவான். எவனிடத்தில் அதிகங் கொடுக்கப்படுகிறதோ அவனிடத்தில் அதிகங் கேட்கப்படும்; மனுஷர் எவனிடத்தில் அதிகமாய் ஒப்புவிக்கிறார்களோ அவனிடத்தில் அதிகமாய்க் கேட்பார்கள்

நாம் யார் யாரெல்லாம் தேவராஜ்யம் வர காத்திருந்து அவற்றை பெற்றுக் கொண்டு இருக்கிறோமோ நாம் மிகவும் கவனத்தோடு, ஜாக்கிரதையாக ஆத்தும ஆதாயம் செய்வதில் மிகவும் உற்சாகத்தோடு செய்ய வேண்டும்.முதலில் நம் ஆத்மாவை செவ்வைப்படுத்த வேண்டும். பின்பு மற்ற ஆத்துமாக்களை ஆதாயபடுத்தி கொள்ள முன் வரவேண்டும். இவையெல்லாவற்றிலும் நிர்விசாரமாக இருக்கக் கூடாது.

மேலும்,யோசேப்பு சொன்னது போல் விசாரணைக்காரன் பதினொருவரிடமும் வெள்ளி பாத்திரமாகிய பானபாத்திரத்தின் காரியத்தை சொல்ல,அவர்கள்     விசாரணைகாரனிடம் சிலக் காரியங்களைக் கூற, அவன் அதற்கு சம்மதித்து பின்பு அவர்கள் சாக்கை திறந்து பார்க்கும்போது அது இளையவன் சாக்கில் இருந்ததை பார்க்க முடிகிறது.

கர்த்தர் இளையவன் சாக்கில் அதை வைத்துக் கொடுக்க காரணம் என்னவெனில் அதிகமாய் கொடுக்கிறவனிடத்தில் அதிகமாய் கேட்கப்படும் தேவராஜ்யம் நமக்குள்ளில் தான் வரும் என்பதை திருஷ்டாந்தபடுத்துகிறார். அதை

உபாகமம் 33:18

பென்யமீனை குறித்து முந்தின நாட்களில் எழுதப்பட்டிருக்கிறது

அவனை எந்நாளும் அவர் காப்பாற்றி, அவன் எல்லைக்குள்ளே வாசமாயிருப்பார் என்றான்.

எல்லைக்குள்ளே என்று சொல்லும் பழைய ஏற்பாட்டில் அவரவருக்கு பங்கிட்டு கொடுத்த எல்கையை குறித்து நாம் வாசிக்க முடிகிறது.அது திருஷ்டாந்தம் புதிய ஏற்பாடு ஆகும் போது எல்லாம் நம் ஆவி, ஆத்துமா,சரீரம் என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.

சாக்கில் வெள்ளிப்பாத்திரமாகிய      பானபாத்திரம் கண்டவுடனே அவர்கள் தங்கள் வஸ்திரங்களை கிழித்துக்கொண்டு அவனவன் கழுதையின்மேல் பொதியை ஏற்றிக்கொண்டு பட்டணத்திற்கு போனார்கள்.

ஆதியாகமம் 44:14-15

யூதாவும் அவன் சகோதரரும் யோசேப்பின் வீட்டுக்குப் போனார்கள். யோசேப்பு அதுவரைக்கும் அங்கே இருந்தான்; அவனுக்கு முன்பாகத் தரையிலே விழுந்தார்கள்.

யோசேப்பு அவர்களை நோக்கி: நீங்கள் என்ன காரியம் செய்தீர்கள்? என்னைப்போலொத்த மனிதனுக்கு ஞானதிருஷ்டியினால் காரியம் தெரியவரும் என்று அறியாமற்போனீர்களா என்றான்.

அப்பொழுது யூதா எங்கள் நீதியை எப்படி  விளங்கபண்ணுவோம்.என்று யோசேப்பினிடத்தில் சொன்னதுமன்றி, உமது அடியாரின் அக்கிரமத்தை தேவன் விளங்கபண்ணினார் என்று சொல்லுகிறதை பார்க்கிறோம்.

இந்த வார்த்தை எதற்காக சொல்லப்படுகிறது என்னவென்றால் நாம் தேவனிடத்தில் நம்முடைய நீதி விளங்கபண்ண செய்ய வேண்டுமானால்,முதலில் தேவன் நாம் செய்த அக்கிரமத்தை நம்மளில் விளங்கபண்ணி,அதில் நாம் தேவனுடைய சமூகத்தில் நம்முடைய பாவம்,மீறுதல், அக்கிரமத்தை அறிக்கை பண்ணி ஒப்புக் கொடுப்போமானால் நமக்காக அவர் பாடுபட்டு சிந்தின இரத்தத்தால் அந்த பாவம், மீறுதல்,அக்கிரமம் எல்லாம் அவர் சுமந்து தீர்த்தார். என்று நாம் விசுவாசிப்போமானால் தேவன் நம்மிடத்தில் இரக்கம் காட்டி அவரை நமக்கு வெளிப்படுத்துவார். இவையெல்லாம் யாக்கோபின் பிள்ளைகளாக பன்னிரண்டு பேரையும் தேவன் நமக்கு எடுத்துக்காட்டுகிறது பார்க்கிறோம்.

மேலும்,யோசேப்பும் அவன் சகோதரன் யூதாவும் சில காரியங்கள் சம்பவிக்கவும், யாக்கோபு சொன்ன காரியங்களை யூதா யோசேப்பிடத்தில் சொல்லவும், அப்படியாகிலும் பென்யமீனை தகப்பனிடத்தில் கொண்டு ஒப்படைக்கும் படியாக யூதா முயற்சி செய்கிறான்.

ஆதியாகமம் 45:1

அப்பொழுது யோசேப்பு தன் அருகே நின்ற எல்லாருக்கும் முன்பாகத் தன்னை அடக்கிக்கொண்டிருக்கக் கூடாமல்: யாவரையும் என்னைவிட்டு வெளியே போகப்பண்ணுங்கள் என்று கட்டளையிட்டான். யோசேப்பு தன் சகோதரருக்குத் தன்னை வெளிப்படுத்துகையில், ஒருவரும் அவன் அருகில் நிற்கவில்லை.

பின்பு அவன் தன் தகப்பனாகிய யாக்கோபு இன்னும் உயிரோடு இருக்கிறாரா என்று விசாரித்து சகோதரர்களை பக்கத்தில் கூப்பிட்டு நீங்கள் எகிப்துக்கு போகிறவர்களிடத்தில் விற்று போட்ட உங்கள் சகோதரனாகிய யோசேப்பு நான் தான் என்று தன்னை வெளிப்படுத்துகிறான்.

ஆதியாகமம் 45:5

என்னை இவ்விடத்தில் வரும்படி விற்றுப்போட்டதினால், நீங்கள் சஞ்சலப்படவேண்டாம்; ஜீவரட்சணை செய்யும்படிக்குத் தேவன் என்னை உங்களுக்கு முன்னே அனுப்பினார்.

ஆதியாகமம் 45:6-7

தேசத்தில் இப்பொழுது இரண்டு வருஷமாகப் பஞ்சம் உண்டாயிருக்கிறது; இன்னும் ஐந்து வருஷம் உழவும் அறுப்பும் இல்லாமல் பஞ்சம் இருக்கும்.

பூமியிலே உங்கள் வம்சம் ஒழியாமலிருக்க உங்களை ஆதரிக்கிறதற்காகவும், பெரிய இரட்சிப்பினால் உங்களை உயிரோடே காப்பதற்காகவும் தேவன் என்னை உங்களுக்கு முன்னமே அனுப்பினார்.

இவ்விதமாக நம்மை கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினால் இரட்சிப்பதற்கு தேவன் யோசேப்பை திருஷ்டாந்தப்படுத்தி எகிப்திற்கு அனுப்புகிறதை பார்க்கிறோம்.ஜெபிப்போம்.கர்த்தர் யாவரையும் ஆசீர்வதிப்பார்.             

 -தொடர்ச்சி நாளை.